அது சக்திவேலரின் பெற்றோர் வாழ்ந்த வீடு என்று அங்கே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படங்களையும், அதில் தோற்றம், மறைவு என்று இருந்ததன் கீழ் இருந்த ஆண்டுகளையும் வைத்துக் கணித்தாள் இளவஞ்சி. அதே நேரம் நல்ல பராமரிப்பிலும் இருந்தது.
“கிழமைக்கு ஒருக்கா ஒரு அக்கா வந்து கிளீன் பண்ணிப்போட்டு போவா. இஞ்ச ஒருத்தரும் தங்கிறேல்ல. நான் மட்டும் அப்பப்ப வந்திட்டுப் போவன்.” அவளிடம் சொன்னபடி சமையற்கட்டில் நின்று தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தான் நிலன்.
அவளிடமிருந்து சத்தமே இல்லை என்றதும் அங்கிருந்தே திரும்பிப் பார்த்தான். அங்கிருந்த சின்ன சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்து, ஐபாடில் கவனமாக இருந்தாள் அவள்.
எதுவுமே நடக்கவில்லை என்று காட்ட முயல்கிறாளா, இல்லை நடந்த எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்று காட்ட நினைக்கிறாளா? எதுவாயினும் அது பொய். அவளுக்குள் நடக்கும் ஆழிப்பேரலையை வெளியே காட்டிவிடக் கூடாது என்று கவனமாயிருக்கிறாள்.
இருவருக்குமான தேநீர்க் கோப்பைகளை இரண்டு கைகளிலும் சுமந்து வந்தவன், அவள் முன்னே ஒரு கோப்பையை வைத்துவிட்டு, “சாப்பிடுறதுக்கு ஒண்டும் இல்ல. தேத்தண்ணி மட்டும்தான்.” என்றபடி தன்னுடையதோடு அவள் எதிரில் அமர்ந்தான்.
அதற்காகவே காத்துக்கொண்டிருந்தாள் போலும். செய்யவேண்டிய ஏதோ ஒன்றைச் செய்து முடித்துவிட்டு, ஐபாடை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்து, “சொல்லுங்க, என்ன கதைக்கோணும்?” என்றாள்
அவளையே பார்த்தபடி தேநீர் பருகினான் நிலன். அவளும் தன் பார்வையை அகற்றிக்கொள்வதாக இல்லை.
தன்னுடைய கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, “தேத்தண்ணி நல்லாருக்கிற மாதிரித்தான் இருக்கு. நீயும் குடிச்சுப் பார்.” என்றான் அவளுடையதைக் கண்ணால் காட்டி.
“உங்களோட இருந்து தேத்தண்ணி குடிக்க எனக்கு நேரமில்லை நிலன். வேலை நிறைய இருக்கு.”
“நீ இப்பிடி இவ்வளவு இறுக்கமா இருந்தா நான் எப்பிடிக் கதைக்க?”
“இதுதான் நான்.”
இல்லை என்பதுபோல் குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு, “இந்தக் கதையைப் போய் வேற ஆரிட்டயும் சொல்லு. இந்த வஞ்சி எப்பிடி இருப்பாள் எண்டு எனக்குத் தெரியும்.” என்றான் அவன்.
“சரி அப்பிடியே இருக்கட்டும். ஆனா அது இருவது வயது வஞ்சி. இது இருபத்தி எட்டு வயது வஞ்சி.”
இவளோடு வாதாடி ஆகாது என்று புரிந்துவிட, “மிதுன் சுவாதி கலியாணத்தோட எங்கட கலியாணத்தையும் வைப்பமா?” என்று நயமாய் வினவினான்.
“நான் சுவாதிக்கு அக்காவா வளந்தவள்.”
“ஆனா அக்கா இல்லையே!” என்றான் அவன் உடனேயே.
“சரி அப்பிடியே இருக்கட்டும். ஆனா, இன்னும் ஏன் இதையே பிடிச்சுக்கொண்டு தொங்குறீங்க? அந்த வீடோ, அந்தத் தொழிலோ, அந்த வசதி வாய்ப்போ என்ர இல்ல நிலன். இன்னுமே சொல்லப்போனா இப்ப நான் உங்கள விடப் பல படி கீழ. அட்ரஸே இல்லாத ஒருத்தி. அவேன்ர தொழிலப் பாத்துக் குடுக்கிறவள் மட்டும்தான். அப்பிடியான என்னைக் கட்டி என்ன செய்யப் போறீங்க?”
அப்படிக் கேட்டவளை உள்ளம் மருகப் பார்த்தான்.
விலாசமற்றவளா அவள்? தொழிலைப் பார்த்துக் குடுக்கிறவளாம். கோபம் கூட வரும்போலிருந்தது அவனுக்கு.
ஆனாலும் ஆரம்பித்துவிட்ட பேச்சைத் திசை திருப்ப விரும்பாமல்,
“இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் கேக்கிறதிலேயே உனக்குத் தெரியேல்லையா, உன்னை நான் உனக்காக மட்டும்தான் கேக்கிறன் எண்டு.” என்றான்.
“அதுதான் தொழில்ல கால வாரி விடுற வேலைய எல்லாம் நல்லா பாத்தீங்க போல.” என்று உதட்டை வளைத்தாள் அவள்.
அவன் ஏதோ சொல்ல வரவும் தடுத்து, “தொழில் வேற வாழ்க்கை வேற எண்டு சொல்லாதீங்க. அது தொழில்துறை ஆக்கள் வேறயாவும் சொந்த வாழ்க்கைல இருக்கிற ஆக்கள் வேறயாவும் இருக்கேக்க மட்டும்தான் பொருந்தும். அப்பவும் பொருந்துமா எண்டுறது எனக்கு டவுட்தான். சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கிறன், நாளைக்கு உங்கட தம்பியும் தனியா ஒரு கார்மெண்ட்ஸ ஆரம்பிக்கிறான் எண்டு வைங்க. அப்ப அவனுக்கும் அவனுக்குத் தெரியாம ஆள் வச்சு, அவன்ர தொழில் ரகசியங்களை அறிஞ்சு, அவனை எழும்ப விடாமச் செய்ற மாதிரியான வேலைகளப் பாப்பீங்களா? சொல்லுங்க, நீங்கதான் தொழில் வேற வாழ்க்கை வேற எண்டு பாக்கிற ஆளாச்சே!” என்று கேட்டாள் அவள்.
அவன் அமைதியாய் இருக்க, “சோ, இந்த உன்னப் பிடிச்சிருக்கு, உனக்காகத்தான் உன்னக் கேக்கிறன் எண்டு படங்கள்ல வாற டயலாக்ஸ விட்டுட்டு உண்மைக் காரணம் என்ன எண்டு சொல்லுங்க.” என்றாள் அவள்.
“விசாகனை என்ர ஆளா மாத்தினது நாலு வருசத்துக்கு முதல். உன்னைப் பிடிக்க ஆரம்பிச்சது இப்ப ரெண்டு வருசத்துக்கு முதல்.”
ஆக, இப்போதும் அவன் வெளிப்படையாகப் பேசத் தயாராயில்லை. அவளைப் பிடித்திருக்கிறது என்பதிலேயே நிற்கிறான்.
அலுப்புடன் அவனைப் பார்த்துவிட்டு அவள் எழுந்து புறப்பட, இருக்கையை விட்டு எழாமலேயே அவள் கரம் பற்றி இழுத்துத் தன்னிடம் கொண்டுவந்தான் நிலன்.
அதிர்ந்து பார்த்தாள் இளவஞ்சி. அவள் அதிர்ச்சியை உள்வாங்கினாலும் தயங்காது அவளைத் தன்னுடன் சேர்த்துப் பிடித்தபடி, “எனக்கும் உனக்குமான கலியாணம் நடந்தே ஆகோணும் வஞ்சி. எனக்கு உன்னட்டப் பொல்லாதவனா நடக்க விருப்பம் இல்ல. நீயும் என்னை அப்பிடி நடக்க வைக்காத ப்ளீஸ்.” என்று சொன்னான்.
இமைக்காது அவனையே பார்த்துவிட்டு, “அப்பம்மா… தையல்நாயகி அம்மா அடிக்கடி ஒண்டு சொல்லுவா. ராணியா வாழ ஆசைப்பட்டா ராஜாவத் தேடாத, ராஜாங்கத்தத் தேடு எண்டு. அதுல நான் அண்டைக்குச் சறுக்கினது இண்டைக்கு வரைக்கும் என்னைத் துரத்துது என்ன?” என்றாள், என்னவென்று இனம் பிரிக்க முடியா ஒரு வகைக் குரலில்.
மெல்லிய அதிர்வுடன் அவன் கைகள் தானாய் விலகின.
“ஆனா பாருங்க, நான் தேடின ராஜாங்கமும் எனக்குச் சொந்தமில்ல. நான் இஞ்ச ராணியும் இல்ல. சோ ப்ளீஸ், என்னை விட்டுடுங்க.”
அதற்கு அவன் பதில் சொல்வதற்கிடையில் நிலனுக்கு விசாகன் அழைத்தான்.
அழைப்பை ஏற்றுப் பேசிவிட்டு வைத்தவன், “உன்னை என்ன செய்றது?” என்றான் அவளிடமே.
புறப்படப்போனவள் நின்று அவனைக் கேள்வியாக ஏறிட்டாள்.
“விசாகன விட்டுடு வஞ்சி.”
உதட்டோரம் சிறு சிரிப்பொன்று தவழ, “நான் நல்லவளா எனக்குத் தெரியாது நிலன். ஆனா எனக்குத் துரோகம் செய்தவேய சும்மா விடுற அளவுக்கு நல்லவளே இல்ல.” என்றாள்.