விசாகன் எந்த செக்கியூரிட்டி நிறுவனத்திலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டானோ அந்த நிறுவனத்திற்குப் புகாரளித்து, அவன் வேலையைத் தாற்காலிகமாகப் பறித்திருந்தாள் இளவஞ்சி. அது மட்டுமல்லாது அவளின் தொழில் இரகசியங்களை விற்றிருக்கிறான் என்கிற பெயரில் காவல்துறையில் புகாரானதில் அவனாகவே காவல்நிலையம் செல்ல வேண்டும், இல்லையானால் தேடி வந்து கைது செய்வார்கள் என்கிற நிலைக்கு இருந்த இடத்திலிருந்தே அவனைக் கொண்டுவந்திருந்தாள்.
ஆனந்திக்கு அனுப்பிய ஒற்றை மெயில் அத்தனையையும் முடித்திருந்தது.
“வஞ்சி, இது நடந்தா அவன்ர மொத்த எதிர்காலமும் பாழாகிடும்.”
“அத அவர் யோசிச்சிருக்கோணும்.”
ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நேரம் இரு. சிலது உன்னட்டச் சொல்லோணும்.” என்றான் அவன்.
சரி என்று அவளும் சென்று பழையபடி அமர்ந்துகொண்டாள்.
“தையல்நாயகி எண்டுற பிராண்ட எங்கட இண்டஸ்ட்ரில இருக்கிற எல்லாருக்கும் தெரியிற அளவுக்குக் கொண்டுவந்தது தையல்நாயகி அம்மா எண்டா, அதைப் பாத்துக்கொண்டிருக்க வளத்துக்கொண்டு போனது நீ. ஒண்டுக்கு நாலு ஆம்பிளைகள் முயற்சி செய்தும் உன்ர வளர்ச்சியைத் தடுக்கேலாம இருந்தது. தரம், சரியான விலைய நிர்ணயிக்கிறது, சொன்ன திகதில டெலிவரி பண்ணுறது, நல்ல நல்ல ஆர்டர்ஸ பிடிக்கிறது எண்டு நீ வளந்துகொண்டே போனாய்.” என்றுவிட்டு நிறுத்தினான்.
தான் சொல்வதைச் சரியான விதத்தில் புரிந்துகொள்வாளா என்று பார்க்க, அவள் முகத்திலிருந்து அவனால் எதையும் படிக்க முடியவில்லை.
“உனக்கு விளங்குமா தெரியாது, காலம் காலமா இந்தத் துறையில நம்பர் வன் நாங்கதான் எண்டு இருந்த ஆக்களால அத அவ்வளவு ஈஸியா ஏற்றுக்கொள்ளவே ஏலாது வஞ்சி. அதுதான் எங்களுக்கும் நடந்தது. நாங்க என்ன பிழை விடுறம் எண்டும் தெரியேல்ல, நீ அப்பிடி என்ன எங்களை விட எக்ஸ்ட்ராவா செய்றாய் எண்டும் தெரியேல்ல. அதுவும் எனக்கு…” என்றவன் திரும்பவும் அவளைப் பார்த்தான்.
சொல்லி முடி என்பதுபோல் அமர்ந்திருந்தாள் அவள்.
“எனக்குப் பின்னால சுத்திக்கொண்டு திரிஞ்ச ஒருத்தி, நான் திரும்பியே பாக்காத ஒருத்தி என்னால அசைக்கவே ஏலாத அளவுக்கு வளந்து நிக்கிறாளே எண்டு ஒரு ஈகோ. உன்னை எப்பிடி விழுத்திறது எண்டு யோசிச்சிட்டுத்தான் விசாகனைப் பிடிச்சனான். போட்டியா நினைக்கிற நிறுவனத்தில ஒரு ஸ்பை வைக்கிறது எங்கயும் நடக்கிறதுதான். ஏன், நீ கூட எங்கட ஒபீஸ்ல ஆரையும் வச்சிருக்கலாம். அதத்தான் நானும் செய்தனான். அதுவும் நாலு வருசத்துக்கு முதல். அப்ப உண்மையாவே உன்னக் கட்டுற பிளான் இல்ல. அதே மாதிரி அவனை என்ர ஆளா மாத்தினதுக்கும், இப்ப உன்னை நான் கட்ட நினைக்கிறதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல வஞ்சி.”
அவன் சொல்வது சரிதான். அவர்களின் அலுவலகத்தில் அவளுக்கும் ஆள்கள் உண்டுதான். அதெல்லாம் தொழிலில் சாதாரணம்தான்.
ஆனால், விசாகனை அவள் ஒரு வேலைக்காரனாகப் பார்த்ததும் இல்லை, நடத்தியதும் இல்லை. அதுதான் இங்கே அவள் ஏமாற்றத்துக்குக் காரணமாயிற்று.
அவன் ஒரு ஆண், அவள் ஒரு பெண். யாராவது தவறாக ஒரு வார்த்தை சொல்லும் இடத்தில் தன்னையோ அவனையோ நிறுத்திவிடக் கூடாது என்கிற தூரத்தில் அவனை வைத்திருந்தாளே தவிர மிகவுமே நம்பினாள்.
அதுவும் தையல்நாயகி அம்மாவால் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அவர் இருந்த காலத்திலிருந்தே தன்னோடு இருப்பவன் என்பதாலோ என்னவோ அவனைச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாகத்தான் நினைத்திருந்தாள்.
ஆனால், எதிரில் இருப்பவர்களை விடவும் கூடவே இருப்பவர்கள்தான் துரோகமிழைப்பார்கள் என்பதை மறந்துதான் போனாள்.
அந்தவகையில் இதில் அவள் தவறும் உண்டு என்பதில் விசாகன் குறித்து அவள் எதுவும் சொல்லப்போகவில்லை.
“அவனை விட்டுடன் வஞ்சி. என்னால அவன்ர வாழ்க்கை மோசமாக வேண்டாம்.”
“என்ர முடிவுகள்ல இன்னொருத்தர் தலையிடுறத நான் விரும்பிறேல்ல.” என்று சொன்னவளைத் தன்னை மீறிய ரசனையுடன் பார்த்தான் நிலன்.
அவள் போட்ட கேஸை ஒன்றுமில்லாமல் ஆக்க அவனால் முடியும். அப்படிச் செய்து அவள் கோபத்தை இன்னும் சம்பாதிக்க விருப்பமில்லை. அதனால்தான் அவளிடமே கேட்டுக்கொண்டிருக்கிறான்.
அதற்கு அவள் பதில் சொன்ன பாங்கு?
“எவன் சொன்னவன் ராணியா இருக்க ராஜாவோ ராஜாங்கமோ வேணுமெண்டு? அது எதுவும் இல்லாமயே நீ ராணிதான்!” என்றான் அவள் நிமிர்வை ரசித்தபடி.
அவனையே பார்த்துவிட்டு, “இன்னும் ஏதாவது கதைக்க இருக்கா?” என்றாள் அவள்.
அதற்குப் பதில் சொல்லாமல் சில நொடிகளுக்கு அவள் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “நீ இப்ப ஓகேயா?” என்று இதமாய் வினவினான்.
அவளிடத்தில் மெல்லிய திடுக்கிடல். ஆனாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டாள். “எனக்கு என்ன?” என்றாள் தன் கைப்பேசியில் மெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று கவனிப்பதுபோல் பாவனை காட்டி.
சில நொடிகளுக்கு அமைதியாக இருந்தவன் மெல்ல மேசையில் இருந்த அவள் கரம் பற்றி, “உனக்கு நான் இருக்கிறன் வஞ்சி. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்காக இருப்பன். நீ தனி இல்ல.” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
ஒரு நொடி அப்படியே உறைந்தாலும் அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு, “எனக்கு நானே போதும்!” என்றாள் கண்ணை எட்டாத ஒரு முறுவலோடு.
இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “உள்ளுக்க என்ன பாடு படுவாய் எண்டு எனக்குத் தெரியும். பக்கத்தில வந்து உனக்கு நான் இருக்கிறனடி எண்டு சொல்லத்தான் ஆசையா இருக்கு. நீ விடமாட்டாய் எண்டுதான் தள்ளி நிக்கிறன்.” என்றவன், “அண்டைக்கும் இதைச் சொல்லத்தான் ஓடி வந்தனான். ஆனா நீ, உன்னைப் பாக்க விடவே இல்ல.” என்றான் சின்ன முறைப்போடு.
சொந்தம் என்று இருந்தவர்களே இல்லை என்றானபிறகு யாரையும் புதிதாகச் சொந்தமாய்ச் சேர்த்துக்கொள்ள அவள் தயாராய் இல்லை. அதை அவனிடம் சொல்லப் பிடிக்காமல் அமைதி காத்தாள்.
“எங்கட கலியாணம்?” திரும்பவும் அவன் அந்தப் பேச்சை எடுக்கவும் அவளுக்குச் சினம் வந்தது.
“உங்களுக்கு என்ன கலியாண விசர் பிடிச்சிருக்கா? போய் எவளையாவது கட்டுங்க போங்க!” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள,
“எனக்கு இப்ப கொஞ்ச நாளா இந்த வஞ்சி விசர்தான் பிடிச்சிருக்கு. அதுவும் இத்தனைக்குப் பிறகும் உடையாம நிக்கிறாள் பார். அவளை இன்னுமின்னும் பிடிச்சிருக்கு.” என்றான் அவனும் எழுந்து.
“விசாகனக் கூப்பிடவா?”
“…”
“நான் வரட்டா?”
அவன் கேள்விகளுக்குப் பதில்போல் அவளே அவள் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.