அழகென்ற சொல்லுக்கு அவளே 13 – 2

இப்போது கோபம், ஆதங்கம் எல்லாம் ஒரு நிலைக்கு வந்திருக்க, மனம் திரும்பவும் அவளுக்காய் யோசிக்க ஆரம்பித்தது. திரும்பி அவளைப் பார்த்தான். யன்னலின் புறம் பார்வையைப் பிடிவாதமாகத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“வேற எங்கயாவது போகோணுமா உனக்கு?” என்று பேச்சுக் கொடுத்தான்.

அவனைப் பாராமல் மறுத்துத் தலையசைத்தாள் இளவஞ்சி.

அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனாலும் நேரே வீட்டுக்குச் செல்ல மனமில்லை. அதே நேரம் அவளோடு வேறு எங்குச் செல்வது என்றும் தெரியவில்லை.

காரின் திசைமாற்றியின் மீது விரல்களினால் தாளமிட்டபடி யோசித்தவன் ஒரு ஹோட்டலின் முன்னே கொண்டு சென்று காரை நிறுத்திவிட்டு, அவளோடு உள்ளே சென்றான்.

“என்ன வேணும் உனக்கு?”

“ஒரு டீ போதும்.”

“பருப்பு வடைதானே உனக்கு விருப்பம்?” பல்கலைக் காலத்தை நினைவில் வைத்துக் கேட்டவன் அதற்கும் சேர்த்துச் சொன்னான்.

இருவருக்கும் பால் தேநீரும் பருப்பு வடைகளும் வந்தன.

“அடுத்ததா என்ன பிளான்ல இருக்கிறாய்?”

அவள் தேநீர் அருந்துவதில் கவனம் செலுத்தினாள்.

“சக்திவேலுக்கு வாறியா? நான் முத்துமாணிக்கம் அங்கிளின்ர கார்மெண்ட்ஸ் பாக்க இனி அடிக்கடி கொழும்புக்குப் போகவேண்டி வரும். நீ இஞ்ச பாத்தா எனக்குக் கொஞ்சம் ஈஸியா இருக்கும். அப்பாக்குக் கடைகளைப் பாக்கவே நேரம் சரியா இருக்கும். மாமா… அவரால இப்ப முந்தி மாதிரி ஓடியாடி வேலை செய்றது கஷ்டம்.” என்றான்.

“ஒரு உறைக்க ரெண்டு கத்தி இருக்கக் கூடாதாம். இது உங்கட அப்பப்பா சொன்னது.” என்றாள் ‘உங்கட அப்பப்பா’விற்கு அழுத்தம் கொடுத்து.

அடுத்து வந்த நாள்களில் முற்றிலுமாகத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. திருமணமான முதல் நாளே அவள் ஒரு கரையில் அவன் ஒரு கரையில் என்று என்றாலும் அவனோடு இணைந்து கட்டிலில் படுத்தவள் இப்போதெல்லாம் அவன் உறங்குகிற வரை கட்டிலுக்கே வருவதில்லை. அவன் முகம் பார்ப்பதில்லை. அவனோடு நேருக்கு நேராகப் பேசுவதில்லை.

உன் தேவைக்காகத்தான் நீ என்னை மணந்தாய் என்று அவன் சொன்னதுதான் இத்தனைக்கும் காரணம் என்று தெரியாமல் இல்லை.

ஆனால், விலகல் அவனோடு மட்டும்தானா என்றால் இல்லை.

அவன் வீட்டினரோடும் இன்னுமே ஒட்டாமலேயே இருந்தாள். எப்படியாவது அவளை இயல்பாக்கிவிட எண்ணிச் சந்திரமதி திரும்ப திரும்ப எடுக்கிற சிரத்தைகளைப் பார்க்கையில் இவனுக்குக் கோபம் கூட வந்துவிடும் போலிருந்தது.

கீர்த்தனாவைச் சொல்லவே வேண்டாம். இவள் என்றால் தள்ளியே நின்றாள். குணாளனோடும் பேசுவதில்லை.

கையாள மிகவுமே கடினமானவளாக இருந்தாள் அவள். அதனாலேயே இன்னுமின்னும் அவளைப் பிடித்தது. அதே நேரத்தில் தம் வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்கிற கேள்வியும் எழுந்தது.

ஒரு நெடிய மூச்சுடன் தானும் விலகியே இருந்தான்.

அன்று மலர்கள் இல்லத்திலிருந்து இளவஞ்சிக்கு அழைப்பு வந்தது. உயர்தரத்தில் சித்தியடையாத மாணவியர் சிலருக்கு ஏதாவது வழிவகை செய்யும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார், அந்த இல்லத்தின் பொறுப்பாளர் அன்னை சரஸ்வதி.

மலர்கள் இல்லத்தின் முக்கிய கொடையாளர்கள் இவர்கள்தான். அதே போன்று உயர்தரப் பரீட்சசையை மூன்று முறை எழுதியும் சித்தியடையாதவர்களை, பதினெட்டு வயது நிரம்பியும் படிக்க முடியாமல் அடிமட்ட நிலையில் போராடுகிறவர்களை இளவஞ்சியே பொறுப்பெடுத்துக்கொள்வாள்.

தையல்நாயகியிலேயே பயிற்சி கொடுத்து, முதலில் எடுபிடி வேலையில் அமர்த்தி, மெல்ல மெல்ல அவர்களைப் பயிற்றுவித்து, எப்படியாவது தமக்குத் தேவையானதைத் தாமே பார்த்துக்கொள்ளும் அளவிற்கு சொந்தக்காலில் நிற்பதுபோல் அவர்களை மாற்றிவிடுவாள்.

இவர்களைப் போன்று ஆதரவற்றவர்கள் தங்குவதற்காகவே விடுதியும் வைத்திருக்கிறாள். பதினைந்து அறைகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் அது.

வேறு வேலை கிடைத்தோ, திருமணமாகியோ போகிற வரைக்கும் வாடகை தந்து பாதுகாப்பாக அங்கே இருக்கலாம்.

அதேபோல் இந்த முறையும் அவள் வழிகாட்டுவாள் என்றெண்ணிக் கேட்டார் அன்னை. அதிலேயே அவருக்கு அவள் பற்றிய விடயங்கள் இன்னும் தெரியவரவில்லை என்று புரிந்தது.

அதில் பதில் சொல்லும் வகையறியாது திணறிப்போனாள் இளவஞ்சி. என்றாலும் நம்பிக்கையோடு கேட்டவரை ஏமாற்றவும் மனமில்லை.

“ஒரு ரெண்டு நாள் டைம் தாங்கம்மா. பதில் சொல்லுறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியவேயில்லை.

சுவாதியிடம் கேட்கலாமா என்று நினைத்தாள். ஆனால், எந்த வகையிலும் தையல்நாயகியோடு தொடர்புவைக்க வேண்டாம் என்றும் நினைத்தாள்.

இந்த யோசனையோடே அந்த நாள் கழிந்தது அவளுக்கு. அன்று இரவு, வேலை முடிந்து வந்தான் நிலன்.

எப்போதும் மடிக்கணணியோடு மல்லுக்கட்டுகிறவள் இன்று அதை விரித்து வைத்துவிட்டு ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கவனித்துவிட்டுப் புருவங்களைச் சுருக்கினான்.

ஏதாவது சொல்வாளா என்று அவளைப் பார்த்தபடியே அணிந்திருந்த உடைகளைக் களைந்து, குளித்து, உடை மாற்றிக்கொண்டு அவன் வந்தும் அவள் அசையவில்லை.

அதற்குமேல் அவனுக்குப் பொறுமையில்லை. கட்டிலில் அமர்ந்துகொண்டு, “என்ன?” என்றான்.

“என்ன என்ன?” இப்போது அவனை நோக்கி அவளும் புருவங்களைச் சுருக்கினாள்.

“இந்தளவுக்கு என்னத்தப் பற்றி யோசிக்கிறாய்?”

இவனிடம் சொல்லலாமா என்பதுபோல் யோசித்துவிட்டு, “ஒரு ஏழு பிள்ளைகளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யோணும். அதான்.” என்றாள்.

விபரத்தை முழுதாகக் கேட்டுக்கொண்டு, “முந்தி என்ன செய்யவாய்?” என்று விசாரித்தான்.

“தையல்நாயகில வேலை குடுக்கிறனான்.”

“ஓ!”

அவன் அந்த ‘ஓ’வை இழுத்த விதம் அவளுக்குப் பிடிபடவில்லை.

அவள் அமைதியாய் இருக்க, “என்னை உனக்கு நினைவுக்கு வரவே இல்லையா?” என்றான்.

முகத்தில் ஒரு கவனம் வந்து அமர அமைதியாக இருந்தாள் அவள்.

“சக்திவேலில வேலை போட்டுக் குடுக்கவா?”

மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டுத் தன் வேலையில் அவள் கவனமாகவும் அவனுக்குக் கோபம் வந்தது. “ஏன்?” என்றான்.

“நான் வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணுறன்.”

“அதுதான் ஏன். அதான் நான் வேலை குடுக்கிறன் எண்டு சொல்லுறேனே.”

“…”

“வஞ்சி!”

“…”

“காரணம் சொல்லு வஞ்சி!”

சட்டென்று நிமிர்ந்து, “என்ன காரணம் சொல்லச் சொல்லுறீங்க? நீங்க வேலை குடுப்பீங்க. நடுவில உங்கட அப்பப்பா வந்து எதையாவது செய்து அந்தப் பிள்ளைகளைத் துரத்திவிடுவார். அதுக்கு எதுக்கு அதுகளுக்கு ஆசை காட்டி மோசம் செய்ய? வளந்த பிள்ளைகள் எண்டாலும் பெருசா இந்த உலகத்தில அடிபடாத பிள்ளைகள். அதையெல்லாம் தாங்காயினம். அதால நானே ஏதாவது நல்ல இடமா பாத்து ஏற்பாடு செய்றன்.” என்றாள் படபடவென்று.

நல்ல இடமாகப் பார்த்துச் செய்யப்போகிறாளாம். கோபம்தான் வந்தது அவனுக்கு. இதில் திரும்பவும் அவள் மடிக்கணணியில் மூழ்கிவிட, அப்படி என்னதான் செய்கிறாள் என்றெண்ணி எட்டிப்பார்த்தான்.

படக்கென்று மடிக்கணணியை மூடிவிட்டு என்ன என்று அவனைக் கேள்வியாக ஏறிட்டாள். அவனுக்கு முகம் மாறிப்போயிற்று.

“அப்பிடி என்ன பாத்திடுவன் எண்டு இவ்வளவு வேகமா மூடுறாய்?” என்றான் இறுகிப்போன குரலில்.

“எதிர்ல இருக்கிறவன விடப் பக்கத்தில இருக்கிறவனை நம்பிடாத எண்டு எனக்குச் சொல்லித் தந்ததே நீங்கதான்.” என்றாள் அவள் அசராமல்.

திரும்பவும் அவனில் நம்பிக்கை இல்லை என்கிறாள். சில கணங்களுக்குப் பார்வையாலேயே அவளை எரித்தவன், குஷன் நாற்காலியில் அமர்ந்திருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தவளைக் குனிந்து அப்படியே அள்ளித் தூக்கினான்.

“நிலன், என்ன செய்றீங்க? விசர் வேலை பாக்காம விடுங்க!” அவள் அதட்டலை அவன் காதில் வாங்கவேயில்லை.

அவளைக் கட்டிலில் கிடத்தி, “விசர் வேலையோ? கலியாணம் முடிஞ்சு இவ்வளவு நாளாகியும் நீ நீயாவே இரு எண்டு உன்ன விட்டு வச்சிருக்கிறன் பார். அதான் உனக்கு இவ்வளவு திமிர்!” என்றான் அன்று போலவே இன்றும் அவளின் இரு புறமும் கைகளை ஊன்றி.

அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “அண்டைக்கு எனக்கு என்ர பழைய ஜூனியர் வேணும் எண்டு கேட்டதுக்கு ஆர்டர் போடுங்க தச்சுத் தாறன் எண்டு சொன்னியே, ரெண்டு பேருமா சேர்ந்து ஆர்டர் போடுவமா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

திகைப்புடன் திரும்பி அவன் முகத்தையே பார்த்தாள் இளவஞ்சி.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock