அழகென்ற சொல்லுக்கு அவளே 18 – 1

சற்று முன்னர் அவன் எதற்கு ஏங்கினானோ அது நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான் நிலன். அவள் தன்னிடம் அழுவதும் உடைவதும் அவன் நெஞ்சினுள் தித்திப்பாய் இறங்கிற்று. இதன் அர்த்தம் அவள் அவனை நெருக்கமாக உணர்கிறாள் என்பதுதானே?

அவளின் தந்தையிடம் அவனைப் பிடிக்கும் என்று சொன்னதை விடவும், அவன் கேட்டபோது ஆம் என்று தலையசைத்ததை விடவும், இந்தக் கண்ணீரின் மூலம் அழுத்தமாகவும் ஆழமாகவும் அவள் நெஞ்சில் அவன் இருப்பதை அவள் சொன்னது போல் உணர்ந்தான் நிலன்.

அதற்கென்று எப்போதும் கம்பீரமாகவே பார்த்துப் பழகியவளை அப்படி அழ விட்டுவிட்டு நிற்கவும் முடியவில்லை.

“வஞ்சி! என்னைப் பார். இதென்ன அழுகை? உனக்கு நல்லாவா இருக்கு?” என்று அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி, கண்களைத் துடைத்துவிட்டான்.

அப்போதுதான் அவளுக்கும் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று புரிந்தது போலும். வேகமாக அவனிடமிருந்து விலகித் தானும் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டாள். “ஒரு நிமிசம் இருங்க வாறன்.” என்று அவனைப் பாராமல் சொல்லிவிட்டு, அங்கிருந்த குளியலறைக்குள் வேகமாக நுழைந்தாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு அவள் மேசையின் மீதே சாய்ந்தபடி நின்றிருந்தான் நிலன்.

சில நிமிடங்களில் அவள் திரும்பி வந்தபோது முகத்தைக் கழுவித் துடைத்திருந்தாள். பழைய இறுக்கம் மீண்டிருந்தது.

“ஏன் நிக்கிறீங்க. இருங்க.” என்றுவிட்டு ஆனந்தியை அழைத்து அவன் அருந்துவதற்கு ஏதாவது கொண்டு வரச் சொன்னாள்.

என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டவளிடம், “கொஞ்ச நேரத்துக்க தையல்நாயகியப் பழைய மாதிரியே மாத்தித் தந்தத்துக்கு நன்றி ஆனந்தி!” என்றாள் இளவஞ்சி மனத்திலிருந்து.

விசாகனை முழுமையாக நம்பியவள் இந்த ஆனந்தியைச் சந்தேகப்பட்டிருக்கிறாள். ஆனால் அந்த ஆனந்திதான் அவளாகவே இங்கே நடப்பதை எல்லாம் உடனுக்குடன் அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தாள். அப்படித் தெரியப்படுத்தியதால்தான் இத்தனை விரைவாக அவள் திரும்பவும் தையல்நாயகிக்குள் வந்திருக்கிறாள். அந்த நன்றிப் பெருக்கு அவள் வார்த்தைகளில் இருந்தது.

முகம் முழுக்க மலர்ந்த சிரிப்புடன், “அது என்ர கடமை மேம். நீங்க திரும்பி வரப்போறீங்க எண்டுற ஒரு விசயமே எங்களுக்குப் போதும். பம்பரமாச் சுழண்டு எல்லாத்தையும் முடிச்சிட்டம்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.

“ஃபேக்டரிய சுத்திப் பாக்கப் போறீங்களா? கூட்டிக்கொண்டு போய்க் காட்டவா?” அவனை நேராக நோக்கிச் சம்பிரதாயமாக வினவினாள் இளவஞ்சி.

பழைய வஞ்சி. தன் உணர்வுகளை யாரிடமும் காட்டிவிடாத, இறுக்கமான, தொழில்துறையினருக்கு மிகவுமே பழக்கமான அந்த வஞ்சி.

அவனுக்கு இந்த வஞ்சியா தேவை?

அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “எனக்கு என்ர வஞ்சி வேணும். இந்த முகமூடி எதுவுமே இல்லாத, இப்ப கொஞ்சத்துக்கு முதல் என்னட்ட அழுதாளே, அந்த வஞ்சி.” என்றான் நிலன்.

“அதுக்கு நீங்க என்னட்ட உண்மையா இருக்கோணும்.” என்றாள் அவனைப் பாராமல்.

இனியும் மறைப்பதில் அர்த்தமில்லை என்றே அவனுக்கும் தோன்றிற்று. அதை விடவும் தன் வீட்டினர் மீதான கசப்பும் வெறுப்பும் அவனையும் அழுத்திக்கொண்டிருந்ததில் அவளிடம் சொல்லிவிடவே விரும்பினான்.

அப்போது கதவைத் தட்டிவிட்டு ஆனந்தி வந்தாள். சிற்றுண்டியும் தேநீரும் கொண்டுவந்திருந்தாள். பணிவும் மரியாதையோடும் இருவருக்கும் பரிமாறிவிட்டு அவள் புறப்பட, “வஞ்சி திரும்பக் கூப்பிடுற வரைக்கும் ஆரையும் இஞ்ச வர விடாதீங்கம்மா.” என்றான் நிலன்.

இளவஞ்சியிடம் பார்வை ஒருமுறை சென்று வர, “ஓகே சேர்!” என்றுவிட்டுக் கதவைச் சாற்றிக்கொண்டு வெளியேறினாள் அவள்.

“தேத்தண்ணியை எடுத்துக் குடி. என்னைவிட உனக்குத்தான் இப்ப இது வேணும்.” என்றான் இளவஞ்சியிடம்.

“நீங்களும் எடுங்க.” என்றபடி எடுத்துப் பருகினாள். உண்மையில் அவளுக்கு அது தேவையாகத்தான் இருந்தது.

அந்தத் தேநீர்ப் பொழுதை நிலன் தொந்தரவு செய்யப் போகவில்லை. அது முடிந்ததும், “இந்தத் தையல்நாயகி இருக்கிற நிலத்தின்ர மூண்டில ஒரு பங்கு உரிமை என்னட்ட இருக்கு வஞ்சி.” என்றான் அவளையே பார்த்து.

“என்ன?” நீ என்ன லூசா என்பதுபோல் பார்த்தவள் முகத்தில் அதிர்ச்சி. அவன் மாமனைக் குறித்து ஏதாவது சொல்லப் போகிறான், நன்றாகக் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தவள் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை.

“அது எப்பிடி இருக்கும்? மூண்டில ரெண்டு பங்கு என்ர பெயர்லயும் அடுத்த பங்கு வாசவி அத்…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

அவன் ஆம் என்பதுபோல் தலையசைக்கவும் சற்று நேரத்திற்கு அவளால் பேசவே முடியவில்லை.

எப்படி இது அவளுக்குத் தெரியாமல் போனது என்று யோசிக்கையிலேயே அதை எல்லாம் அவள் ஏன் ஆராயப் போகிறாள் என்று தோன்றிற்று. நம்முடையது என்று உறுதியாகத் தெரிந்த ஒன்றை நம்முடையதுதானா என்று சும்மா சும்மா ஆராய்வோமா என்ன?

ஏன், அவளின் அப்பம்மா கூட இருக்கும் வரையில் அதை ஆராயவில்லையே என்று யோசனை ஓடுகையில்தான் அப்பம்மாவிற்கு இது தெரியுமோ என்கிற கேள்வி உண்டாயிற்று.

அவளைப் பெற்றவர் இறந்த பிறகு, அவர் பெயரில் இருந்ததை இன்னொருவர் பெயருக்கு மாற்ற முயலாமல் அவளின் அப்பம்மா இருந்திருக்கப் போவதில்லை. அப்படிப் போகையில் இப்படி ஒன்று நடந்திருப்பது தெரிய வராமல் இருந்திருக்காது.

ஆனால், இதை ஏன் அவர் யாரிடமும் சொல்லவில்லை? அல்லது அந்தக் கொப்பியில் எழுதி இருக்கிறாரோ? அவள்தான் அவளைப் பற்றி அறிந்த அதிர்ச்சி தாங்காமல் மூடி வைத்துவிட்டாளே.

நிச்சயம் இது பற்றி அந்தக் கொப்பியில் இருக்கும் என்று மனம் சொன்னாலும், “எப்பிடி இது நடந்தது? அதுவும் உங்களிட்ட எப்பிடி வந்தது?” என்றாள் பல்லைக் கடித்தபடி.

வாசவி மூலம் பாலகுமாரனிடம் போய், அவர் மூலம் இவனிடம் வந்திருக்கும் என்று புரிந்தாலும் அந்தப் பாதை அவளுக்குத் தெளிவாக இல்லை.

“எனக்கும் எப்பிடி அது எங்களிட்ட வந்தது எண்டு இப்ப வரை தெரியாது வஞ்சி. ஆனா, நாளைக்கே இதுக்கான பதில உனக்கு நான் சொல்லுறன். அதுக்கு முதல், எனக்கு நான் நல்லவன் வல்லனவன் எண்டு உன்னட்டக் காட்டுறதில விருப்பம் இல்ல வஞ்சி. ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முதல் மாமாக்கு…” என்று சொல்லிக்கொண்டு வந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

சினத்திலும் சீற்றத்திலும் கொதித்துச் சிவந்துவிட்ட முகத்துடன், “சொல்லுங்க. உங்கட மாமாக்கு…” என்றாள் பற்களுக்குள் வார்த்தைகளை அரைத்து.

“அவருக்கு ஹார்ட்ல பிரச்சினை வந்து, சீரியஸா ஆஸ்பத்திரில இருந்தவர். தான் தப்ப மாட்டன் எண்டு நினைச்சிட்டார் போல. என்னத் தனியா கூப்பிட்டு உன்னக் கட்டச் சொல்லிச் சொன்னவர். எனக்குக் கோவமும் அதிர்ச்சியும். சம்மந்தமே இல்லாம திடீரெண்டு உன்னை ஏன் கட்டச் சொல்லோணும்? எவ்வளவு கேட்டும் காரணம் சொல்லேல்ல. ‘இந்த மாமாக்கு ஏதாவது செய்ய நினைச்சா அத மட்டும் செய் தம்பி’ எண்டு நிண்டவர். அந்த நேரம் அவர் இருந்த நிலைக்கு எனக்கு என்ன சொல்லுறது எண்டு தெரியாமயே இருந்தது. அது எப்பிடிக் காரணமும் தெரியாம, பிடிக்காத ஒருத்தியக் கட்டுறது எண்டு இருந்தது.” என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock