அழகென்ற சொல்லுக்கு அவளே 22 – 1

நிலனுக்கு வேலைகள் முடியவே இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு வந்தால் இளவஞ்சி இல்லை. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத்தான் இருந்தான். கூடவே அவளின் இன்றைய மனநிலைக்கு இங்கு வராமல் இருப்பதே சரி என்றும் எண்ணினான். அதே நேரத்தில் அவள் இல்லாத அந்த அறை பிடிக்கவில்லை.

அவர்கள் ஒன்றும் ஈருடல் ஓருயிர் என்று வாழ ஆரம்பிக்கவில்லைதான். ஆனால், அவளைப் பார்க்கக் கிடைப்பதும், அவளும் என்னுடனேயே இருக்கிறாள் என்கிற அந்த உணர்வுமே அவனை இதமாகத் தாலாட்டும்.

இன்று அது இல்லை என்றதும் அறைக்குள் போன வேகத்திலேயே திரும்பி வந்து, அப்படியே புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்திருந்தான்.

அங்கு அவன் மனைவி அவளின் ஆஸ்தான கூடைக்குள் பூனைக் குட்டியாகச் சுருண்டு கிடந்தாள். அந்த விழிகளில் வார்த்தைகளில் அடக்கிவிட முடியா உணர்வுகளின் குவியல்.

“என்ன வஞ்சி?” என்றான் உடனேயே

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு மடியில் கிடந்த கொப்பியை வருடிக்கொடுத்தாள். தன் மனத்தின் குமுறல்கள் அத்தனையையும் அவனிடம் சொல்ல வேண்டும் போலொரு உந்துதல். அப்படி எதையும் சொல்லிப் பழக்கமில்லாததில் சொல்ல வரவுமில்லை.

அவள் மடியில் கிடக்கும் அந்தக் கொப்பியில் ஏதோ உள்ளது என்று விளங்க, அங்கிருந்த டீப்போவை இழுத்து அவள் முன்னே போட்டுக்கொண்டு அமர்ந்தான். அவள் மடியில் கிடந்த கொப்பியை எடுத்து மேலோட்டமாகப் பிரட்டினான்.

‘என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும்’ என்று இருந்ததைக் கண்டதும் வேகமாக நிமிர்ந்து அவளை நோக்கினான். அவ்வளவு நேரமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று பார்வையை அகற்றிக்கொண்டாள்.

ஒன்றுமே கேட்கவில்லை அவன். அதை மூடிப் பக்குவமாகத் தள்ளி வைத்துவிட்டு, அவள் மடியில் கிடந்த கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்டான்.

என்னவோ சொல்லப்போகிறான். உள்ளுணர்வு சொன்னதைக் கேட்டு அவனை நோக்கினாள் இளவஞ்சி.

“இந்த நேரத்தில இதச் சொல்லுறது சரியா தெரியேல்ல வஞ்சி. ஆனா எனக்கு மூச்சு முட்டுது. உன்னட்ட சொல்லிட்டா அந்தப் பாரம் இறங்கிடும் போல…” என்றுவிட்டு பாலகுமாரனிடம் நிலத்தைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டதை அப்படியே சொன்னான்.

அதைச் சொல்கையில் அவன் விழிகளில் தெரிந்த தவிப்பை, முகத்தில் தென்பட்ட அவமானக் கன்றலை எல்லாம் கண்ணைக் கூடச் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த இளவஞ்சி, “எனக்கும் தெரியும்.” என்றாள் சுருக்கமாக.

எப்படி என்று அவன் கேட்கவில்லை. பார்வை ஒருமுறை தையல்நாயகி அம்மாவின் கொப்பியிடம் சென்று வந்தது.

“கண்மண் தெரியாத கோவம் வந்தது வஞ்சி. இவே எல்லாம் என்ன மனுசர் எண்டு வெறுத்துப்போச்சு. ஆனா என்னால அத முழுமையா அவேட்ட காட்டவும் முடியேல்ல. ஒருத்தர் வருத்தக்காரன் எண்டா இன்னொருத்தர் வயசானவர்.” என்றான் அவன்.

“இதே ஈவு இரக்கத்தை என்னட்ட எதிர்பாத்திடாதீங்க நிலன்.” என்றாள் அவள் அவனை நேராக நோக்கி.

“வஞ்சி”

“ப்ளீஸ் நிலன். எங்களுக்க இந்தப் பேச்சு வர வேண்டாம். நான் ஆசைப்பட்டது எல்லாம் அமைதியான நிம்மதியான ஒரு குடும்ப வாழ்க்கைய. அத நீங்க எனக்குத் தரோணும்.” என்றாள் அவள் இப்போது ஒரு வேண்டுதலுடன்.

பேச்சற்றுப்போனது நிலனுக்கு. இமைக்காது அவளையே பார்த்தான். ஒரு பெண்ணின் நியாயமான ஆசை இது. அதையே வேண்டுதலாக வைக்கிறாள் அவள்.

சட்டென்று அவள் முகத்தை ஏந்தி முகம் முழுக்க முத்தமிட்டான். “எனக்கும் நீயும் நானுமா சேந்து அப்பிடி ஒரு வாழ்க்கை வாழத்தான் ஆசை. ஆனா அதை நான் மட்டும் நினைச்சா நடக்கும் எண்டுறியா?” என்று அவள் விழிகளுக்குள் பார்த்துக் கேட்டான் அவன்.

நீயும் யாரோடும் சண்டை பிடித்து நம் இருவரின் நிம்மதியைக் கெடுத்துக்கொள்ள முயலாதே என்கிறான்.

மெல்லிய கோபம் உண்டாக, “இந்தக் கலியாணத்துக்கு நீங்க மட்டும்தான் நினைச்சீங்க.” என்றாள்.

அதையே நடத்திய நீ இதையும் நடத்து என்கிறாள். கோபம் வந்தது அவனுக்கு. அதில் முதல்முறை விட்டுவைத்த இதழ்களை இந்தமுறை பற்றிக்கொண்டான். தன் கோபத்தை அவளில் நிலைநாட்ட முயன்றானா, இல்லை அந்தக் கோபத்தின் வழியில் தன் நேசத்தைச் சொன்னானா அவனுக்கே தெரியாது.

இதமாய் மனைவியின் இதழ்களில் லயித்தவன் மெல்ல விலகி, அவள் பிரதிபலிப்பு என்ன என்று அவள் முகத்தில் படிக்க முயன்றான். கோபமாக அவனை முறைக்க முயன்றாலும் அந்தக் கோபத்தின் பின்னே அவன் முத்தம் உண்டாக்கிய தடுமாற்றம் தெரியவும் சின்ன சிரிப்புடன் மீண்டும் அவள் இதழ்களை மூடினான்.

அந்த முத்தத்தின் முடிவில் அவன் மடியில் அவன் கைகளுக்குள் இருந்தாள் அவள்.

அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எழுந்தான் அவன். அவள் பயந்துபோனாள். தப்பித்தவறி இருவருமாகச் சேர்ந்து விழுந்தால் என்னாகும்? இருந்த மனநிலை மொத்தமாய் மாற, “கடவுளே நிலன்! உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது, இப்பிடித் தூக்காதீங்க எண்டு.” என்று அதட்டினாள்.

“அதுக்கு நீ கொஞ்சம் பூசணிக்கா மாதிரி இருக்கோணும். கம்புக்குச்சி மாதிரி இருந்தா இப்பிடித்தான் நடக்கும்.” என்றான் அவளைக் கொண்டுபோய்க் கட்டிலில் கிடத்தி.

அவன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த டையை பிடித்து இழுத்து, “உங்களுக்கு என்னைப் பாக்க கம்புக்குச்சி மாதிரி இருக்கா?” என்றாள் கோபமாக.

இன்னுமே குனிந்து அவள் மூக்கோடு மூக்கினை உரசி, “இவ்வளவு நாளும் அப்பிடித்தான் இருந்தது. ஆனா….” என்றவனின் விழிகள், இரு தோள்களிலும் வெறும் நாடாக்கள் மட்டுமே தாங்கி நிற்க, கையில்லாத நீல நிற கொட்டன் நைட்டி அணிந்திருந்தவளை விசமத்துடன் மேய்ந்துவிட்டு வர, “ஆனா இண்டைக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிறாய்.” என்றான் கண்ணைச் சிமிட்டி.

இவன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மிஞ்சிப்போனால் ஏன் அங்கே வரவில்லை என்று கேட்டுக் கோபப்படுவான் என்றுதான் நினைத்தாள். அதனால்தான் இங்கே வந்ததும் இப்படி ஒன்றை அணிந்தாள். அதற்கு கோர்ட் போன்ற ஒன்றும் உண்டு. அறையை விட்டு வெளியே போகையில் அதைப் போட்டுக்கொள்வாள்.

இப்போது அதை எடுத்துப் போட வழியில்லை. பக்கத்தில் இருந்த போர்வையை எடுக்க அவள் முயல, அவள் கை மீதே தன் கையை வைத்துத் தடுத்துப் பிடித்தான் நிலன்.

“கண்ணியம் முக்கியம் மிஸ்டர் நிலன்!” என்று அதட்டி அவனை அடக்க முயன்றாள்.

“கட்டின மனுசிட்டியா?” என்றான் அவன் அதற்கும்.

இவனோடு பேசி முடியாது என்று விளங்க, “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் அதட்டல் போன்று.

“மாத்துறதுக்கு ஒரு உடுப்பு. நான் ஒண்டும் கொண்டு வரேல்ல.”

“நைட்டி தரவா?” என்றாள் வேண்டுமென்றே.

“நீ போட்டிருக்கிற இந்த நைட்டிக்க வரவே நான் ரெடி!” என்று கண்ணைச் சிமிட்டினான் அவன்.

“நிலன் உண்மையா அடி வாங்கப்போறீங்க. தள்ளுங்க!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்தவள் முதல் வேலையாக அவளின் கோர்ட்டை எடுத்து அணிந்துகொண்டாள்.

‘எவ்வளவு நேரத்துக்கு எண்டு நானும் பாக்கிறான்’ என்று தனக்குள் சிரித்துக்கொண்டான் நிலன். அவள் தன் அலமாரியைத் திறந்து ஒரு ஷோர்ட்ஸ், டீ ஷார்ட் எடுத்துக்கொடுத்தாள்.

“அப்பிடியே சாப்பிடவும் ஏதாவது தா வஞ்சி. வீட்டை போயும் சாப்பிடாம வந்திட்டன்.” என்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock