நிலவே நீயென் சொந்தமடி 2 – 1

வீட்டுக்கு வரும்போது வாடி வதங்கிப்போய் வந்தாள் கவின்நிலா. “என்னம்மா? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் அன்னை மேகலா.

“லைட்டா தலை வலிக்குதம்மா.” சோர்வுடன் அமர்ந்தவளை தன் மடியில் ஏந்திக்கொண்டது சோபா.

“ஏன் பிள்ள? மழைல ஏதும் நனைந்தியா? இல்லையே.. இண்டைக்கு மழை பெய்யேல்லையே!” என்றபடி அவளருகில் வந்தமர்ந்து நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப் பார்த்தார். “காய்ச்சலும் இல்ல”

உடலில் அல்ல வருத்தம் மனதில் தான் என்று சொல்லவா முடியும்!

“விக்ஸ் கொஞ்சம் தேய்த்து விடவா?” மகளின் மனதை அறியாமல் மேகலா கேட்க,

“வேண்டாம்மா. கொஞ்சநேரம் இப்படியே படுத்திருக்கிறன்.” என்றவள் அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்துகொண்டாள்.

தாயின் வாசமும் தோளும் மனதுக்கு அமைதி சேர்ப்பது போலிருந்தது.

மேகலாவுக்கோ சிரிப்புத்தான் வந்தது. “இன்னும் குழந்தைப்பிள்ளை மாதிரி விக்ஸ் பூசப் பயம்! இதுல டாக்டருக்கு படிக்கப் போறாளாம்!”

அவள் இதழ்களிலும் புன்னகை. “டாக்டர் மற்ற ஆட்களுக்கு தானேம்மா மருந்து கொடுப்பார். தனக்கில்லையே. அதால பிரச்சினையில்ல.” என்றாள் அவளும் குறும்புடன்.

“உனக்கு வருத்தம் வந்தா?”

“நல்ல டாக்டரா பாத்துப் போறதுதான்.” அடக்கிய சிரிப்புடன் சொன்னாள் அவள்.

“நல்லா கதைக்க மட்டும் பழகி வச்சிருக்கிற. என்னைக் கொஞ்சம் விடு விக்ஸ் எடுத்துக்கொண்டு வாறன். கண்ணில படாம கொஞ்சமா பூசி விட்டா சுகமா இருக்கும்!” என்று எழ முயன்றவரை அவள் விடவேயில்லை.

இன்னுமே இறுக்கிக்கொள்ளவும், “என்னம்மா? விடேன்.” என்றார் அவர்.

“இப்படியே கொஞ்ச நேரம் பேசாம இருங்கம்மா. போதும்!” என்று தாயின் மடியிலேயே படுத்துக்கொண்டாள் அவள்.

கண்ணை மூடியதுமே கண்களுக்குள் வந்துநின்று உறுத்து விழித்தான் அவன். ‘அம்மாடி!’ படக்கென்று கண்களைத் திறந்துகொண்டாள். அதையெல்லாம் நினைக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறாள், மறக்கவிடாமல் கண்ணுக்குள் வந்துநின்று முறைப்பவனை என்ன செய்வது?

‘எவ்வளவு கோபம் தெரிஞ்சது அந்தக் கண்ணுல.. அம்மாடி!’ நடுங்கியது அவளுக்கு. மேகலாவின் இடுப்பை இன்னுமே இறுக்கிக்கொண்டாள்.

“இதுக்குத்தான் மச்சமில்லாம மட்டும் இரு பிள்ளை எண்டு சொன்னனான். கேட்டாத்தானே? விரதத்துக்கு ரெண்டு நேரம் சாப்பிடாம இருந்தா பலகீனமாத்தான் இருக்கும். அதாலதான் தலைவலியும் வந்திருக்கு.?” என்று கடிந்துகொண்டார் அவர்.

படிக்கிற பிள்ளை, அதுவும் ஏஎல் கடைசி வருடம் விஞ்ஞானப்பிரிவில் இருப்பவள் தங்கமாட்டாள் என்று சொன்னதை அவள் காதில் விழுத்தவே இல்லை என்கிற ஆதங்கம் அவருக்கு.

அவளோ ஒன்றுமே சொல்லாமல் தாய்மடியின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவரும் இதமாக அவளின் தலையை வருடிக்கொடுத்தார்.

அவருக்கும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு செல்வங்கள்தான். மூத்தவன் கதிர்நிலவன்; வைத்தியன். மேற்படிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தான். தமையனின் வழியிலேயே அவளும். அப்படியும் சொல்ல முடியாது. விஞ்ஞானம், அது அவர்களின் இரத்தத்தில் ஊறியது.

“சாப்பிட்டுட்டு படேன்.” விரதத்தை முடித்தாலாவது கொஞ்சம் தெம்பாக இருப்பாள் என்பது அவருக்கு.

“ம்ம்..”

உண்மையிலேயே அவளுக்கு சாப்பிடவேண்டும் போலவே இல்லை. மனதும் வயிறும் செந்தூரனின் புண்ணியத்தில் மந்தித்துப் போயிருந்தது. அதைச் சொன்னால் அன்னை கோபப்படுவார் என்று அறிந்தவள், “போடுங்கம்மா வாறன்.” என்றுவிட்டு எழுந்து உடைமாற்றச் சென்றாள்.

இதமாக உணவு பரிமாறினார் மேகலா. அவரின் கைப்பக்குவம் எப்போதுமே மேலதிகமாக இரண்டு வாயை உண்ணவைக்கும் அளவில் அற்புதமாக இருக்கும். இன்றோ விரதத்தையாவது முடித்துவைப்போம் என்றால், அவன்தான் அங்கும் வந்து நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தான்.

விட்டால் அவளுக்கே அறைந்திருப்பான். இன்று அவள் தப்பியது பெரும் தப்புத்தான். எவ்வளவு ஆத்திரமா பூவை சுழற்றி எறிந்தான். அவளை உண்ணவிடாமல் நடந்த சம்பவமே சுற்றிச் சுற்றி வந்தது.

முடிந்தவரை கொஞ்சமாகக் கொரித்துவிட்டு முடியாமல் எழுந்துவிட்டாள்.

“என்ன நிலா?” ஒன்றும் விளங்காமல் கேட்டார் மேகலா.

“போதும்மா!”

“என்ன விளையாடுறியா நீ? நாள் முழுக்க வயித்துக்க ஒண்டுமில்ல. இதுல இனி நாளைக்கு இரவுதான் சாப்பாடு. முழுநாளும் சாப்பிடாம இருந்தா தொண்டைக்க இறங்காதுதான். கொஞ்சம் தண்ணிய குடிச்சிட்டு மெல்ல மெல்ல சாப்பிடு நிலா.” மனம் தாளாமல் சொன்னார்.

அவள் வேறு விரதம் முடித்தாயிற்று தானே என்று உணவுக்குப்பிறகு கண்டதையும் சாப்பிடுகிறவளும் அல்ல. எதையும் நேர்த்தியாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் செய்கிற பெண்.

அதனால்தான் யாரோ ஒருவனின் நியாயமற்ற கோபத்தைக் கூட போகிறது என்று புறம் தள்ளமுடியாமல் தவித்தாள்.

“காணும்மா பசிக்கேல்ல.” சோர்வோடு சொல்லிவிட்டுச் சென்று கை கழுவியவளை இயலாமையோடு பார்த்தார் அவர்.

“படிக்கிற பிள்ளைக்கு என்னத்த காணும்? சொன்னாலும் கேக்கிறேல்ல. இதுல விசரி மாதிரி பிள்ளை பாவம் பசியோட வருவாள் எண்டு பாத்துப் பாத்து சமைச்சனான்.” தன்பாட்டுக்கு புலம்பினார் அவர்.

“கொஞ்சத்துல பால் கொண்டு வருவன். அத இத சொல்லாம குடிக்கோணும் சொல்லிப்போட்டன். இல்லாட்டி எனக்கு பொல்லாத கோபம் வந்துடும்!”

“அய்யோம்மா.! இனி எனக்கு ஒண்டும் வேண்டாம். நான் படுக்கப்போறன். மாமா கேட்டா சொல்லிவிடுங்கோ.” என்றபடி அறைக்குள் போகவும், மகளுக்கு உண்மையிலேயே முடியவில்லை என்று உணர்ந்துகொண்டார் மேகலா.

எந்தக் காரணத்துக்காகவும், ஏன் காய்ச்சல் என்றாலும் கூட ஒன்றுக்கு இரண்டாக பராசிட்டமோலை விழுங்கிவிட்டு படிக்கப் போகிறவள் அவள். இன்று அதைக்கூட செய்யவில்லை என்றால்?

நன்றாகப் படிக்கவேண்டும், டாக்டராகவேண்டும் என்பது அவளின் லட்சியம் என்பதைத் தாண்டி, கற்பது என்பது அவளுக்கு வாய்த்த கலை என்றுதான் சொல்லவேண்டும். படிப்பது அவ்வளவு பிடிக்கும். அவளின் பொழுதுபோக்கு, அவள் விரும்பிச் செய்யும் விஷயம், அவளுக்கு மிகப் பிடித்த ஒன்று எல்லாமே கற்பதுதான்.

அந்தளவுக்கு விரும்பிச் செய்வதைக்கூட அன்று செய்யாமல் போகிறாள் என்றால் உண்மையிலேயே அவளுக்கு நல்ல தலைவலிதான் என்று உணர்ந்துகொண்டார் மேகலா.

செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, விக்ஸை எடுத்துக்கொண்டு வேகமாக அவளின் அறைக்குள் சென்றார்.

“கொஞ்சநேரம் படுத்தாலே போதும். விக்ஸ் வேண்டாம்மா.” தாயின் கையில் கிடந்ததைக் கண்டுவிட்டு அப்போதும் அவள் சொல்ல,

“பேச்சு வாங்காம பேசாம கண்ண மூடு. நான் கண்ணுக்க படாம கொஞ்சமா தேய்ச்சு விடுறன்.” என்றவர், அவளருகில் அமர்ந்து தேய்த்தும் விட்டார்.

தாயின் விரல்களில் ஏதோ மாயாஜால வித்தை இருந்திருக்கவேண்டும். அவ்வளவு இதமாக இருக்கவே, கண்களை மூடிக்கொண்டாள் அவளும். “இண்டைக்கு விட்டத விடியக்காலம எழும்பிப் படிக்கிறன் எண்டு எழும்பி நிக்காம நல்லா நித்திரை கொண்டு எழும்பு. நாளைக்கு சேர்த்துப் படிக்கலாம் சரியா!” என்றார் அதட்டலும் கரிசனமுமாக.

அவள் இதழ்களில் குறும்புப் புன்னகை மலர்ந்தது. “படிக்கிற பிள்ளைய படிக்காத எண்டு சொல்ற டீச்சரை இண்டைக்குத்தான் பாக்கிறன்.”

“நானெல்லாம் என்ர ஸ்டுடென்ட்ஸ் மனமறிஞ்சு நடக்கிற டீச்சர்! உன்ர கௌரி மிஸ் மாதிரி இல்ல.” என்றார் அவரும்.

கௌரி அவரின் பள்ளிக்கால வகுப்புத் தோழி, அதோடு அவர்களது பாடசாலையின் சக ஆசிரியையும் கூட. அவர்தான் இவளின் வகுப்பாசிரியை. சற்றே கண்டிப்பானவர் என்றாலும் பாசமானவரும் கூட. அவர் என்றால் இவளுக்கு மிகவுமே பிடிக்கும் என்று தெரிந்து சீண்டினார் மேகலா.

அவர் எண்ணியதுபோலவே படக்கென்று கண்களைத் திறந்து முறைத்தாள் மகள். “உங்களுக்கு என்ர மிஸ்ஸ இழுக்காட்டி செமிக்காதே! அவா ஒண்டும் உங்களை மாதிரி சிரிப்பு மிஸ் இல்ல சீரியஸ் மிஸ். அதாலதான் உங்கட மகள் இவ்வளவு கெட்டிக்காரியா இருக்கிறாள்.” என்று அறிவித்தாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock