“அது காசு மெத்தின குணம். அந்தக் குடும்பத்துக்கே படிச்சுப் படிச்சு மறை கழண்டுட்டுது. இல்லாட்டி இந்த வயசுல இதெல்லாம் தேவையா? ஒரு ஃபோன் காணாது?” என்று கடிந்தான் அவன்.
“அந்தக் குடும்பத்தை எப்படிக் குறை சொல்லலாம் எண்டு ரூம் போட்டு யோசிப்பியா நீ. நானும் தெரியாம அவளைப் பற்றி கதைச்சிட்டன். எல்லாப் பாடத்திலையும் எப்பவும் அவள்தான் பெர்ஸ்ட் அண்ணா. அதுதான் வாங்கி குடுத்திருக்கீனம். ஆனா, நானும் விழுந்து விழுந்துதான்டா படிக்கிறன். தெரியாதத அவளிட்ட கேட்டும் படிக்கிறன். ஒருக்காலாவது அவளை விட மார்க்ஸ் கூட எடுக்கோணும் எண்டு பாக்கிறன். நடக்குதே இல்ல. என்னெண்டு படிக்கிறாளோ தெரியாது.”
“அவளின்ர மாமா தானே பெரிய ஆள். அந்தாள் பேப்பரை முதலே கொண்டுவந்து குடுக்குது போல.” என்றான் தமையன்.
“போடா டேய்! போயும் போயும் உன்னட்ட சொன்னன் பார். சும்மா அவளையும் அவளின்ர மாமாவையும் இழுத்துக்கொண்டு.” என்று அவள் சீற,
“இங்க பார். நீயும் தான் கெட்டிக்காரி. நீயும் தான் நல்லா படிக்கிறாய். அவளை மாதிரி நீ இருக்கோணும் எண்டு நினைக்காத. நீ நீயா இரு. உனக்கு என்ன வருமோ அதைச் செய். நீ ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும். சும்மா மற்றவையோட உன்னை ஒப்பிடாத.” என்று அழுத்திச் சொன்னான் தமையன்.
“சரியண்ணா. ஆனா நான் மெடிக்கல் எடுபட்டா எனக்கு நீயும் மேக்புக் வாங்கியே தரோணும் சொல்லிப்போட்டேன்!.” உத்தரவு போட்டாள் அவள்.
“நீ முதல் செலெக்ட் ஆகு. பிறகு நான் வாங்கித் தாறன்.” என்று அவனும் வாக்குக் கொடுக்க, கோயிலும் வந்திருந்தது.
“டேய் மச்சி!” எங்கிருந்தோ ஒரு குரல் வரவும் இருவருமே திரும்பிப் பார்த்தனர். செந்தூரனின் நண்பன் அஜந்தன் வந்துகொண்டிருந்தான்.
வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தி, “நீ இறங்கிப்போ!” என்றான் செந்தூரன் அவளிடம்.
தலையை ஆட்டிவிட்டு கோயிலுக்குள் நுழைந்தாள் அவள். துஷாந்தினியோடு மற்ற தோழியரும் ஏற்கனவே வந்துவிட்டிருக்க அவளோடு சேர்ந்துகொண்டாள்.
போகிறவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “நீ கேட்ட லாப்டாப் பார்ட் வந்திட்டுதாம் எண்டு ஜான்சன் எலக்ட்ரிக்கல்ல இருந்து ஃபோன் பண்ணினவே. நீயும் வந்தா, அங்கேயே சரியா எண்டு பாத்து எடுத்துக்கொண்டு அப்படியே விளையாடப் போகலாம்.” என்றான் அஜந்தன்.
“சரி வா போவம்.” என்று வண்டியை திருப்ப அஜந்தன் தான் கண்டுவிட்டு கேட்டான், “என்னடா இது? பூவா?”
பல்லைக் கடித்தான் செந்தூரன். இவளுக்கு இதே வேலையா போச்சு!
“சசி மறந்திட்டாள்.”
“தா! கொண்டுபோய்க் குடுத்திட்டு வாறன்.” என்று அவன் கேட்க,
“நீ உன்ர பைக்கை எடு. நான் இப்ப வாறன். அவளுக்கு ரெண்டு பேச்சும் குடுத்தாத்தான் சரியா வரும்.” என்றவன், இறங்கி எடுத்துக்கொண்டு போனான்.
கையிலிருந்த பூக்கள் அன்று நடந்தவைகளை நினைவூட்ட சட்டென்று அந்தப் பையை திறந்து ஒரு ரோஜாவை மட்டும் வெளியில் எடுத்துக்கொண்டு மற்றவற்றைக் கொண்டுபோய் தங்கையிடம் கொடுத்தான்.
“தேங்க்ஸ் அண்ணா!” தன் மறதியை மழுப்பிச் சிரித்தபடி அவள் சொல்ல, மற்றவர் அறியாமல் முறைத்துவிட்டுத் திரும்பினான்.
அவன் நினைப்பது சரியாக இருந்தால் கடைசியாக வருகிறவள் அவளாகத்தான் இருப்பாள். கையில் அந்த ரோஜாவை வைத்துச் சுழற்றியபடி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவன், அங்கே கால்களைக் கழுவிட்டு பச்சையும் சிவப்பும் கலந்த சுடிதாரில் வந்தவளைக் கண்டதும் நின்றான்.
அவளும் இவனை எதிர்பார்க்கவில்லை. அதுவும் கையில் பூவைக் கண்டதும் அன்று நடந்தவை மின்னலென மின்னி மறையவும் கொஞ்சம் படபடத்துத்தான் போனாள்.
அவனோ பூவையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான். உதடுகள் ஒரு பக்கமாக வளைய கோணலாய் சிரித்தான். அந்த ரோஜாவை லாவகமாகத் தூக்கிக் குப்பை வாளிக்குள் போட்டுவிட்டு விசிலடித்தபடி அவளைக் கடந்து சென்றான்.
சுர்ர்ர்ர் என்று வந்தது அவளுக்கு. ‘அண்டைக்கு நான் இண்டைக்கு நீயா?’ அவனின் முதுகை நன்றாக முறைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.
‘எளியவன்! வடிவான ரோஜாவை தூக்கி எறிஞ்சிட்டுப் போறான். ஆ ஊ எண்டா பூவை தூக்கி ஏறியிறதே இவனுக்கு வேலையா போச்சு!’ மனதிலேயே அவனை வறுத்து எடுத்தாள்.
‘இப்ப நான் கேட்டனாடா எனக்கு பூ வேணும் எண்டு. நீயா சீன போட்டுட்டு போறாய். இண்டைக்கு உனக்கு பதில் தராட்டி நான் தயாபரனுக்கு மகளும் இல்ல கனகரட்ணத்துக்கு மருமகளும் இல்ல! பாப்பம் நீயா நானா எண்டு?!’
மனதில் சவால் விட்டபடி தோழிகளிடம் விரைந்தாள்.
இருந்த ரோஜாக்களை எல்லோருக்கும் பகிர்ந்துவிட்டு கடைசியாக இருந்த ஒன்றை வைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருந்தாள் சசி. “எல்லாருக்கும் சரியாத்தான் எடுத்துக்கொண்டு வந்தனான். ஒண்டு குறையுதே..”
“சரியா கொண்டுவந்தா ஏனடி குறையப்போகுது? நீ கொண்டுவராதது உன்ர பிழை!” என்றவள், வேகமாக அவள் கையிலிருந்த பூவைப் பறித்துத் தன் தலையில் காதோரமாகச் சூடிக்கொண்டாள்.
“அடிப்பாவி!” கணத்தில் நடந்துவிட்டதைக் கண்டு அதிர்ந்தாள் சசி. “அப்ப எனக்கு?” என்றாள் பரிதாபமாக.
தாயிடம் திட்டுவாங்கி, தமையனோடு மல்லுக்கட்டிக் கொண்டுவந்தவளுக்கே பூ இல்லை என்றால் எப்படி? கலகலத்துச் சிரித்தனர் தோழியர்.
“பல்ல காட்டாதிங்கடி! செம கடுப்பில இருக்கிறன்!” என்றவளிடம், “என்ன கடுப்பு? அண்டைக்கு நானும் தான் பூ இல்லாம இருந்தனான். இண்டைக்கு நீ இரு!” என்றாள் கவின்நிலா.
“இதெல்லாம் அநியாயமடி!”
“இதுதான் என்ர நியாயம்! பேசாம கும்பிடு!” என்றவளுக்கு அதற்கு பிறகுதான் மனம் ஆறியது.
‘உன்ர பாசமலர கூப்பிட வருவ தானே. அப்ப பாருடா!’ மனதில் கருவிக்கொண்டாள்.
பூசை முடிந்து வெளியே வருகையிலேயே அங்கே பார்க்கிங்கில் எப்போதும் போல பைக்கை பார்க் பண்ணிவிட்டு அதன்மேலே சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த செந்தூரனைக் கண்டுவிட்டாள் கவின்நிலா.
மனதில் ஒரு குதூகலம். ‘பாருடி.. நல்லா பாருடி..! உன்ர தொங்கச்சிதான் பூ இல்லாம நிக்கிறாள்!’ மனதில் அவனிடம் கெக்கலித்தாள்.
எல்லோருமாக தங்களது பாதணிகளை மாட்ட, இவளோ காதோரமாக இருந்த பூவை தடவிக் கொடுத்தபடி கண்களால் சவால் விட்டாள் அவனிடம்.
‘என்னவோ பெரிய புத்திசாலி மாதிரி பூவை தூக்கி எறிஞ்சாய். இப்ப யாரு பூ இல்லாம நிக்கிறது!’
பொங்கிய சிரிப்பை அடக்கியபடி அவளையே பார்த்திருந்தான் அவன். சினப்பான்.. சீறுவான்.. பார்வையால் முறைப்பான் என்று அவள் நினைத்திருக்க அவனோ வெகு சாதாரணமாய் நின்றிருந்தான்.
கவின்நிலாதான் குழம்பிப் போனாள்.
‘என்னடா இது? அவன் கோபப்படுவான் எண்டு பாத்தா சிரிச்சுக்கொண்டு நிக்குறான். சீரியஸா செய்றதா நினச்சு நான் ஏதும் காமெடி செய்திட்டேனா? குழம்பினாலும் காட்டிக்கொள்ளாது நிமிர்ந்து ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.
இவள் தன் ஸ்கூட்டியில் ஏற, அவன் வண்டியை அவளருகில் கொண்டுவந்து நிறுத்தினான்.
“என்ன.. சசின்ர பூவ வச்சிருக்கிறன் எண்டு எனக்குக் காட்டுறியா? உன்ர தலைல இருக்கிற பூவை பிடுங்க எவ்வளவு நேரமாகும்? என்ன பிடுங்கவா?” என்று கேட்டவனின் குரலே அவள் தேகத்துக்குள் புகுந்து மிரட்டியது.
அதிர்ந்தவள் அரண்டுபோய் பார்க்க, “அது! அந்தப்பயம் எப்பவும் இருக்கோணும்!” என்றுவிட்டுப் போனவனின் கண்ணில் சின்னதாய் சிரிப்பு ஒன்று வந்து போனது போலிருந்தது.
‘இவன் சீரியஸா மிரட்டுறானா இல்ல சிரிப்பா மிரட்டுறானா?’ போகிறவனையே பார்த்திருந்தாள். கைகால்களில் அன்றுபோல் இன்றும் நடுக்கம் பரவிற்று! காற்று முகத்தில் மோதி கேசம் கலைக்க போய்க்கொண்டு இருந்தவன், போகிற போக்கில் திரும்பிப் பார்த்து குறும்புச் சிரிப்புடன் கண்ணடித்துவிட்டுப் போனான்.
‘போடா டேய்!’ அத்தனை பதட்டமும் வடிய அவள் இதழ்களிலும் அழகான புன்னகைப்பூ மலர்ந்தது.