வேகவேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தாள் கவின்நிலா. டியூஷனுக்கு வெளிக்கிடும் நேரத்தில் ஸ்கூட்டி தன் வேலையை காட்டியதால் வந்த விளைவு. ஸ்பெஷல் கிளாஸ் வேறு. மேகமோ இருட்டிக்கொண்டு வந்தது.
‘ராமா ராமா இப்ப மழை வந்திடக் கூடாது. குடையும் கொண்டுவரேல்ல..’ வாய்க்குள் முணுமுணுத்தபடி சைக்கிளின் வேகத்தைக் கூட்டினாள்.
அந்த மழைக்குளிருக்கு கம்பளியைப் போர்த்திக்கொண்டு சோபாவுக்குள் முடங்கிக்கொண்ட ராமரின் காதில் இவளின் வேண்டுதல் விழவில்லை போலும், சடசட என்று மழைத்துளிகள் இவள்மேல் விழத்தொடங்கிற்று! காற்று வேறு எதிர்திசையில் புயலாய் வீச, முழங்கால்களைத் தாண்டிக்கொண்டு பறக்கத் துடித்த சட்டையை ஒரு கையால் தடுத்தபடி மறுகையால் ஹாண்டிலைப் பற்றிக்கொண்டு சைக்கிளை மிதிக்கமுடியாமல் திணறியே போனாள். இதில் மின்னல் வேறு கண்ணைக் குருடாக்கிவிடுவேன் என்று பயமுறுத்தியது.
‘மழை அடிச்சுக்கொட்டப் போகுது. எங்கயாவது நிண்டுட்டுத்தான் போகோணும். இதுக்குமேல ஓடவே ஏலாது.’ என்று விழிகளைச் சுழற்ற கண்ணில் பட்டது செந்தூரனின் கடைதான்.
‘இங்கேயா ஒதுங்கிறது..?’ கொஞ்சமும் பிடிக்காமல் பார்க்க அந்த வானரக் கூட்டத்தைக் காணோம். ‘விளையாடப் போய்ட்டான் போல, அப்ப பரவாயில்ல.’ என்று அங்கு ஓடிப்போய் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கடையின் வெளித் தாவாரத்திலேயே ஒரு ஓரமாக ஒதுங்கினாள்.
‘இப்படியே நிண்டுட்டு ஓடிடுவம்.’ கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தாள்.
‘ஐயோ கிளாசுக்கு லேட்டாகுதே, செமினார் தொடங்கப்போகுது. பேப்பர் கரெக்ஷன் எல்லாருமா சேர்ந்து செய்வோம் என்று சேர் சொன்னவர்.’ என்று எண்ணியபடி திரும்பியவள், அங்கே வெளியே வந்த செந்தூரனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.
யார் என்று எட்டிப்பார்த்த அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை. புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தினான்.
‘கடவுளே போயும் போயும் இவனிட்ட வந்தா மாட்டினன். எப்பவும் வெளில நிக்கிற மாதிரி நிண்டிருக்க வந்தே இருக்க மாட்டனே..’ உள்ளுக்குள் நொந்தே போனாள் கவின்நிலா.
‘போவமா…’ என்று வீதியைப் பார்த்தாள். காற்று நாலாபக்கமும் சுழன்று வீச, மழை கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கியிருந்தது.
அவளின் எண்ணவோட்டத்தை அறிந்தவனின் உதட்டோரம் சிரிப்பில் விரிந்தது. ‘போகப்போறீங்களா மே..டம்?’ கண்களாலேயே கேலிபேசிச் சிரித்தான். பார்வையால் அவனை வெட்டிவிட்டு முகத்தைத் திருப்பிய கவின்நிலா வீசிய ஊதல் காற்றிலும் அது தெளித்த மழை நீரிலும் நிற்கமுடியாமல் தடுமாறினாள்.
வெடவெட என்று தேகம் நடுங்க, தன் நடுக்கத்தை அவனுக்குக் காட்டாமல் மறைக்க, மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு குளிரில் நடுங்கியவளைப் பார்த்தான் செந்தூரன்.
ஒற்றைப் பூவொன்று பனியில் நனைந்தாடினால் எப்படியிருக்கும்?
நிமிர்ந்த கவின்நிலா அவன் விழிகளில் தெறித்த ரசனையைக் கண்டு சட்டென்று திரும்பிக்கொண்டாள். அப்போதுதான், தானும் அவளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவனும் முகம் சிவக்க பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
ஆகாயநீலத்தில் சின்னச்சின்ன வெள்ளைப்பூக்கள் பூத்திருந்த ஸ்லீவ்லெஸ் ‘கௌன்’ முழங்கால் வரை நிற்க, அதற்குமேல் வெள்ளை லேஸ் துணியாலான கோர்ட் போன்ற ஒன்றை அணிந்து அதன் நுனிகளை நெஞ்சுக்கு கீழே அழகான ‘போ’வாக முடித்திருந்தவளின் நனைந்த மேனியை அவன் கண்களும் நனைத்துவிட்டு வந்துவிட்டதில் செந்தூரனும் திணறித்தான் போனான்.
பார்க்கவேண்டும் என்று பார்க்காத போதும் பார்க்கிறோம் என்று உணருமுன்னே பார்த்துவிட்டிருந்தான்.
சட்டையெல்லாம் தூறலில் நனைந்திருக்க, கூச்சத்தோடு நின்றவளை, “உள்ள வா!” என்று அழைத்துக்கொண்டு தான் முதலில் சென்றான்.
உள்ளுக்குள் போக சற்றும் மனமில்லை. வெளியே நின்றால் இன்னுமே மோசமாக நனைந்துபோவாள். வேறு வழியில்லாமல் தயக்கத்துடன் பாதம் வைத்து நடந்து, அப்படியே ஒதுங்கி கடையின் ஒரு மூலையிலே அவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டாள்.
சற்று நேரத்தில் ஒரு துவாலையை கொண்டுவந்து நீட்டினான் அவன்.
அவனின் டவல் என்று மூளை எடுத்துரைத்தாலும் வேறு வழியில்லாமல் வாங்கி முகம், கைகளைத் துடைத்துக்கொண்டு, தன்னைச் சுற்றிப் போர்த்திக்கொண்டாள்.
“அங்க வா.” என்று கடைக்கு நேரே பின்னுக்கிருந்த அறையைக் காட்டிவிட்டு அவன் நடக்க, மெல்ல அவனோடு நடந்தாள்.
ஒரு கதிரையை அவளுக்கு இழுத்துப் போட்டுவிட்டு, தண்ணீரை ஏற்கனவே கொதிக்க வைத்திருப்பான் போலும், இரண்டு கப்புகளை எடுத்துவைத்தான்.
‘இதெல்லாம் தெரியுமா இவனுக்கு? எனக்குக்கூட தெரியாது.’ அமர்ந்தபடி யோசிக்க, அவள் பக்கமாக ஃபேனை போட்டுத் திருப்பிவிட்டான்.
ஒரு குட்டியான மாம்பழ வடிவ ‘ட்ரே’ ஒன்றை எடுத்து, பிஸ்கெட் பாக்கெட்டினை உடைத்து தட்டிலே அவற்றை அடுக்கி அவள் முன்னால் வைத்து, “சாப்பிடு!” என்றான்.
அவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் மெல்லிய ஆச்சரியத்தை அவளுக்குள் பரப்பிக் கொண்டிருக்க, அப்படியே அமர்ந்திருந்தாள்.
கப்புகளில் சீனியைப் போட்டு தேயிலைப் பைகளை இட்டு லாவகமாக தேநீர் தயாரித்த முறையில் அது அவனுக்குப் பழக்கமே என்று தெரிந்தது. அதைவிட அங்கு ஒரு ரைஸ் குக்கர், சின்னச் சின்ன சட்டிகள் என்றெல்லாம் இருக்க சமையலுமா என்று ஓடியது சிந்தனை.
‘ஆனா இவன் அப்படியான ஆள் இல்லையே. விளையாடவும் ரோட்டுல போற பெட்டையள பாக்கவுமே இவனுக்கு நேரமிருக்காது.’
உண்மையிலேயே அவள் கொடுத்து வைத்திருந்த வடிவத்துக்கும் இன்று காணும் செந்தூரனுக்கும் நிறைய வித்தியாசம்.
பொறுமையே இல்லாமல் பூவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஆக்ரோஷமாய் வண்டியை அப்படி உதைத்துக்கொண்டு போனவனையும், இன்று தனியே நிற்கும் பெண்ணிடம் பண்போடு நடந்துகொள்ளும் இவனையும் இணைக்க முடியாமல் திணறினாள்.
அவனைப் பற்றிய தன் சிந்தனைகளை மாற்றுவதற்காக விழிகளை அந்த அறையை சுற்றிச் சுழற்றினாள். எல்லாச் சுவர்களிலும் ஷெல்ப் அமைக்கப்பட்டு அந்தக்காலத்து டிவிக்கள், சற்றே பழைய வகையான செல்போன்கள், ரேடியோக்கள், லாப்டாப்புகள் என்று நிறைந்து கிடந்தன! டெக், டிவிடி பிளேயர், மிக்ஸர், கிரைண்டர் கூட இருந்தது. அங்கிருந்தே கடைக்குள் நோட்டம் விட்டவள், உச்சபட்ச ஆச்சரியத்தில் விழிகளை விரித்தாள். அந்தளவில் ஒரு ஷோ ரூமையே உருவாக்கியிருந்தான் அவன்.
அவளின் ஃபோன் ஒருமுறை ஸ்டக் ஆனபோது, “தாடி! அண்ணா திருத்துவான்!” என்று வாங்கிக்கொண்டுபோய் திருத்திக்கொண்டுவந்து தந்திருக்கிறாள் சசிரூபா. அந்தநேரம் அவளிடம் கொடுத்துவிட்ட பிறகு, ‘யோசிக்காமல் குடுத்திட்டேனே, நம்பரை நோட் பண்ணி வைத்து ஏதும் வம்புக்கு வருவானோ, பிரெண்ட்ஸ் எல்லோரினதும் நம்பர் வேறு இருக்கே’ என்று பயந்திருக்கிறாள்.
சசியின் அண்ணாதான் என்றாலும் அவளின் உருவகத்தில் அவன் ‘சரியில்லாதவன் ’ ஆயிற்றே.
அவள் திருத்திக்கொண்டுவந்து தந்த பிறகும் கொஞ்சநாட்கள் பயத்துடனேயே ஃபோன் ரிங் பண்ணுகையில் பார்த்திருக்கிறாள். அந்தப்பயம் நாளடைவில் மெல்ல மெல்ல மறந்து, மறைந்து போனாலும், அப்போதிலிருந்து என்னவோ பழுதான ஃபோன்களை திருத்திக்கொடுக்கிறான் போல என்றுதான் எண்ணியிருக்கிறாள். இதில், படிக்காதவனால் வேறு என்னதான் செய்ய முடியும் என்கிற எண்ணம் கூட இளக்காரமாக அவளுக்குள் ஓடியிருக்கிறது. இன்று அதையெண்ணி வெட்கிப்போனாள். அந்தளவில் இருந்தது அவனது கடை.
பெரிதென்று இல்லைதான். ஆனால், ஒரு இடத்தைக் கூட வீணாக்காமல் கடை முழுக்க பொருட்களை அழகாக காட்சிப் படுத்தியிருந்தான்.
ஒருபக்கச் சுவர் முழுக்க பிளாஸ்மா டிவிக்கள் பல வகைகளிலும் தொங்கியது. அதிலே ஒரே மாதிரியான வீடியோவை போட்டுவிட்டு பாக்கிறவர்களுக்கு அதன் தரங்களை அந்த வீடியோ முலமே பிரித்தறிந்துகொள்ள வைத்திருந்தான்.