பேப்பரும் கையில் கிடைத்துவிட்டதில், அதுவும் ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆசிரியர் கொடுத்த விளக்கங்களை சசி சிவப்புப் பேனையினால் குறித்தும் விட்டிருந்ததால் வகுப்பைத் தவறவிட்ட கவலையை அறவே விட்டிருந்தாள் கவின்நிலா. அவள் எடுத்து வைத்திருந்த நோட்ஸையும் பேப்பரையும் வைத்து நன்றாகவே படித்துக்கொண்டதில் அன்றே அவள் பரீட்சைக்குத் தயார்தான்.
அடுத்தநாள் பள்ளிக்கூடம் சென்று வந்தவள், மாலையானதும் மிகுந்த ஆவலோடு டியூஷனுக்கு ஸ்கூட்டியில் வெளிக்கிட்டாள். திடீரென்று எங்கிருந்தோ வந்து பின்தொடர்ந்தான் துஷ்யந்தன். என்றுமில்லாமல் அன்று மனம் அருவருத்துப் போனது. அதனை மறையாது முகத்தில் காட்டிவிட்டு அவள் போகவும், சலனமின்றிக் கடப்பவளின் மாற்றத்தில் இவன் முகம் கடுத்தது. ஆனாலும் விடாது அவள் பிரதான வீதிக்குள் நுழையும்வரை பின்தொடர்ந்துவிட்டு அவளை முந்திக்கொண்டு போனான்.
‘ச்சே! என்ன மனுசன் இவன். பிடிக்கேல்ல எண்டா விடவேண்டியதுதான். எப்ப பாத்தாலும் பின்னால சுத்திக்கொண்டு..’ மனதில் வெறுப்பு மண்டியது.
அவன் மறைந்ததும்தான் நிம்மதியானாள். செந்தூரனின் கடையை நெருங்கவும் துஷ்யந்தனை மறந்தே போனாள். அவன் வெளியே நின்றுவிட வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்தாள். நேற்று அவள் அனுப்பிய நன்றிக்கு ஒரு பதிலும் இல்லை. பார்த்தானா என்றும் தெரியாது.
வகுப்பையும் தவறவிட்டு, மாதிரி வினாத்தாளும் கிடைக்கவில்லை என்றதும் என்னவோ பரீட்சையே எழுத முடியாது என்பது போலத்தான் கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. எந்தப் பரீட்சைக்கும் எப்போதும் அவள் தயார்தான். அந்தளவில்தான் அவளின் கல்வித்தரம் இருந்தது. ஆனாலும் மனதளவில் முற்றாக்கத் தளர்ந்திருந்தாள். அந்த நிலையை நொடியில் மாற்றிவிட்ட அவனுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?
கடையை நெருங்கியதும் ஸ்கூட்டியின் வேகத்தைக் குறைத்தாள். கண்ணாலாவது ஒரு நன்றியைச் சொல்வோம் என்று கடைக்கண்ணால் பார்க்க, யாரையும் காணோம். மனம் கேளாமல் திரும்பியே பார்த்தாள். கடை திறந்துதானிருந்தது. அவனைக் காணவில்லை.
‘ப்ச்! ஒவ்வொரு நாளும் நிப்பான். இண்டைக்கு மட்டும் எங்க போனான்?’அதுவரை இருந்த ஆர்வம் புஸ் என்று காற்றாய் வெளியேற ஏமாற்றமாய் உணர்ந்தாள். சின்னக்கோபம் கூட உருவாக்கிற்று! உள்ளே போய் பார்ப்போமா என்று ஓடிய சிந்தனையை முளையிலேயே கிள்ளினாள்.
‘நன்றி சொல்லத்தான் வேணும். அதுக்காக கடைக்கெல்லாம் தேடித் போறது ஓவர்.’
வகுப்பில் சசியை கண்டதும் ஓடிப்போய் கட்டிக்கொண்டாள். “தேங்க்ஸ்டி. கிளாஸையும் மிஸ் பண்ணிட்டன், பேப்பரும் இல்லை எண்டதும் அழுகைதான் வந்தது.”
“அது தெரிஞ்சுதான், அண்ணாவை கெஞ்சிக் கூத்தாடி அனுப்பி வச்சனான்.”
“உன்ர அண்ணாக்கும் நான் நன்றி சொன்னேன் எண்டு சொல்லி விடடி. அவர் இல்லாட்டி இப்பதானே பேப்பர் கிடைச்சிருக்கும்.” என்றாள், இப்படியாவது சொல்ல முடிந்ததே என்கிற நிறைவோடு.
“அவனுக்கு என்னத்துக்கு? மாட்டன் எண்டு சொன்னவனை கெஞ்சி அனுப்ப வச்சது நான். முழு நன்றியும் எனக்குத்தான். அவனுக்கெல்லாம் சொல்ல முடியாது! போ!”
“நீ கெஞ்சினாலும் அவர் அனுப்பாட்டி எனக்கு வந்திருக்காது தானே. அதால சரி பாதியை நீ அவருக்குக் குடுத்தே ஆகோணும்.”
“கொடுக்கமாட்டன். என்னடி செய்வாய்?”
“அப்ப நானே நேருல பாத்துச் சொல்லுவன்!”
அப்படிச் சொன்னவளை வித்தியாசமாகப் பார்த்தாள் சசிரூபா.
“என்னடி? கதை புதுசா இருக்கு?”
என்றுமில்லாமல் இன்று இப்படிச் சொன்னால் கேட்பாள் தானே.
அப்போதுதான் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்து உள்ளே நாக்கைக் கடித்துக்கொண்டாலும், “என்ன புதுசு? உதவி செய்த மனுஷருக்கு நன்றி சொல்றது உனக்குப் புதுசா? அந்தப் பேப்பர் கிடைக்காட்டி இண்டைக்கு நான் படிச்சு இருப்பனா இல்ல இவ்வளவு சந்தோசமா உன்னோட வாயடிச்சுக்கொண்டுதான் இருப்பனா?” என்று உள்ளத்திலிருந்து அவள் கேட்க, சசிக்கோ அவள் சொன்னதில் ‘படிச்சு இருப்பனா’ தான் வேகமாக ஓடிவந்து முன்னே நின்றது.
“எனக்கு கொஞ்ச டவுட்ஸ் இருக்கு. கிளியர் பண்ணி விடுறியா?” என்று அவள் கேட்க, பிஸிக்ஸ் வாத்தியும் வரச் சரியாக இருந்தது.
“இண்டைக்கு எங்கயடி நேரம். கிளாஸ் தொடர்ந்து இருக்கே.” மெல்ல முணுமுணுத்தாள் கவின்நிலா.
“வீட்ட வாவன்.” வகுப்பில் பார்வையைப் பதித்து அவளும் முணுமுணுக்க, சேர் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டதையும் மறந்து சசிரூபாவைத் திரும்பிப் பார்த்தாள் கவின்நிலா.
பின்னே, இவள் அவள் வீட்டுக்குப் போவதேயில்லை. அவள் அழைத்ததுமில்லை.
“அண்ணா இல்லையடி. கொழும்புக்கு போய்ட்டான்.”
‘ஓ..! அதுதான் கடைக்கு வெளில ஆள் இல்லையா..’ என்று ஓடினாலும், முகம் கன்றிப்போனது கவின்நிலாவுக்கு. அவளின் தமையானால் தான் இவள் அவள் வீட்டுக்கு வருவதில்லை என்பதை சசியும் கவனித்திருக்கிறாளே.
“லேட் ஆனா அப்பா கூட்டிக்கொண்டு வந்து விடுவார். வாடி!” என்றாள் அப்போதும் கெஞ்சலாக.
தமையன் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாததால் தான் அவள் வருவதில்லை என்பதை உணர்ந்தும் தன்னோடு நட்பு பாராட்டியவளின் அன்பும், அவளின் கெஞ்சலும் சேர்ந்துகொள்ள, “நான் வாறன். நீ இப்ப வகுப்பைக் கவனி!” என்றாள்.
கெஞ்சினாலும் வருவாள் என்று எதிர்பாராததில் நம்பமுடியாமல் திரும்பிப் பார்த்தாள் சசி.
கவின்நிலா வேண்டுமென்று கையில் கிள்ளிவிட, “அம்மா!” என்று கூவிவிட்டாள் சத்தமாக.
வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த வாத்தி திரும்பி இவளை ஒரு பார்வை பார்க்க, நடுங்கிப்போனாள் சசி. “வகுப்பை கவனிக்கோணும் சசிரூபா!” என்று அதட்டிவிட்டு அவர் தொடர, கவின்நிலா உதட்டுக்குள் சிரிப்பை அடக்க, திரும்பிப் பார்த்து முறைக்கக்கூட வழியில்லாமல் திண்டாடிப்போனாள் சசி.
அன்று மாலை சசியின் அறையில் அமர்ந்திருந்து, சசி கேட்டவற்றை விளக்கிக்கொண்டிருந்தாள் கவின்நிலா. அருகே ஒரு தட்டில் பிஸ்கட்டுகளும், இரண்டு தேநீர் கப்புக்கள் வற்றிப்போயும் கிடந்தது.
“என்ன தம்பி, இண்டைக்கே வந்திட்டாய்?” திடீரென்று இந்திராணியின் குரல் கீழிருந்து கேட்கவும் கவின்நிலாவின் புலன்கள் அத்தனையும் வேகமாக அங்கே தாவின.
“வேலை முடிஞ்சுதம்மா. அதுதான் ஓடி வந்திட்டன். மனுஷன் இருப்பானா கொழும்புல. ஒரே வாகனமும், புகையும் நெருக்கமும். சே! என்னெண்டுதான் சனம் அங்க வாழுதோ தெரியா.” செந்தூரனின் குரலும் கேட்க, ‘வந்திட்டான்!’ உள்ளம் பொங்கியது அவளுக்கு.
மறுபக்கம் ஒருமாதிரி படபடப்பாகிப் போனாள். அவன் இல்லை என்கிற தைரியத்தில் தானே வந்தாள். இனி?
அவளைக் கவனித்துவிட்டு, பயப்படுகிறாள் என்று எண்ணி, “இங்க அவன் வரமாட்டான், நீ சொல்லு!” என்றாள் சசி.
அவன் வரவேண்டும் அவனைக் காணவேண்டும் என்கிற ஆவல் அவளுக்குள் அதிவேகமாக முளைத்திருந்தது. கையில் வைத்திருந்த வினாத்தாளில் கவனம் செலுத்த முடியவில்லை.
வந்துவிடுவானோ? அவனைக்கண்டால் என்ன செய்வது என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருக்க, சசிக்கு விளங்கப்படுத்த முடியாமல் திணறினாள்.
அவன் செய்த உதவிக்காக நன்றி சொல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். பிறகு ஏன் இந்தப் பதற்றம்? அவனைத் தெரியாதா? இல்லை அவனோடு கதைத்ததுதான் இல்லையா? நேற்றுத்தான் கண்டு கதைத்தாள். பிறகு என்ன? எவ்வளவு யோசித்தும் அவளுக்குள் இருந்த தடுமாற்றம் அடங்கவேயில்லை.
சற்று நேரத்தில் அவன் படியேறி வருவது கேட்க, இவளுக்கோ கைகால்கள் எல்லாம் நடுங்கும் போலாயிற்று.
“ஏய்! என்னடி? என்ர அண்ணாவ வில்லன் ரேஞ்சுக்கு நினச்சு வச்சிருக்கிறியோ? சிடு மூஞ்சிதான் எண்டாலும் பக்கா நல்லவன். பயப்படாம சொல்லு!” என்றாள் சசி.
“ஐயோ கத்தாதே! அவரின்ர காதுல விழப்போகுது!” என்று அதற்கும் பதறினாள் இவள்.
“விழாது. நீ விளங்கப்படுத்து!” இவளும் கதவு சாத்தித்தானே இருக்கிறது என்று சமாதானமானாள்.
சற்று நேரத்திலேயே மீண்டும் அவன் ஏறி வந்தது போலவே ஒருவித ரதத்தில் தடதடத்துக்கொண்டு படியிறங்குவது கேட்டது. அவள் மனதினில் போலவே கடந்துபோகும் இடங்களில் எல்லாம் தன் தடத்தை பதித்துவிட்டுப் போவான் போலும்!
அவள் கேட்டவற்றை ஒருவழியாக சொல்லிக் கொடுத்து முடிந்ததும், “உனக்கு எல்லாம் ஓகே தானே. இனி நான் போகோணும். நேரமாச்சடி.” என்று கவின்நிலா சொல்ல, கதவை யாரோ தட்டினார்கள்.
மிகுந்த ஆவலோடு திரும்பிப் பார்க்க, கதவைத் திறந்தான் செந்தூரன். இலகுவாக ஷார்ட்ஸ் அணிந்து, ஆர்ம் கட் டீ-ஷர்ட்டில் தசைக்கோலங்கள் இறுகி நிற்க, களைப்பு நீங்கக் குளித்த புத்துணர்ச்சியோடு கதவு நிலையில் கைவைத்தபடி நின்றவனின் தோற்றம் அவளுக்குள் மிக வேகமாய் ஊடுருவியது. சட்டென்று பார்வையை விலக்கிக்கொண்டாள். கூச்சமாய் போயிற்று! அதோடு தன் கண்கள் எதையாவது அவனிடம் காட்டிக்கொடுத்துவிடுமோ என்கிற பயம்வேறு முளைத்திருந்தது.
செந்தூரனும் அவளைத்தான் பார்த்தான். அவள் கையிலிருந்த பேப்பரைக் கண்டபோது உதட்டில் சிரிப்பு முளைத்துக்கொண்டது.
“ரெண்டுபேரும் உண்மையாவே படிக்கிறீங்களா இல்ல பேஸ்புக் பாக்குறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
“நாங்க என்னவும் செய்வம், உனக்கென்ன?” என்றவள், அவன் கையிலிருந்த பெட்டியை பார்த்துவிட்டு, “என்ன அண்ணா அது? ஃபோனா?” என்றாள் ஆர்வமும் ஆசையுமாக.
“ம்!இந்தா! இதவச்சு படிக்காம விளையாடினியோ, பிறகு வாங்கித் தந்த மாதிரியே பறிச்சு வச்சிடுவன்! நாளைக்கு நடக்கிற எக்ஸாம்ல நீதான் ஹயர்ஸ்ட் மார்க்ஸ் எடுக்கோணும்!” என்றபடி கொடுத்தான்.
‘நேற்று நான்தான் எடுகோனும் எண்டு என்னட்ட சொல்லிப்போட்டு இண்டைக்கு அவளிட்ட இப்படி சொல்றான்? மெகா கள்ளன்டா நீ!’ முறைப்பாடு அவள் பார்க்க அவனோ கண்களில் குறும்பு மின்னச் சிரித்தான்.