பஸ் ஸ்டான்டின் அருகே அமைந்திருந்த புத்தகக் கடைக்கு வந்திருந்தாள் கவின்நிலா. ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த புத்தகத்தை அவள் கேட்க, அங்கே உள்ளிருந்து வந்தான் துஷ்யந்தன். அவனது நண்பனின் டிஸ்பென்சரியும் பார்மஸியும் அருகேதான் இருக்கிறது. அவளுக்கும் தெரியும். சிலநேரங்களில் இங்கேயும் அவன் சுற்றிக்கொண்டு நிற்பதைக் கவனித்தும் இருக்கிறாள். எனவே எப்போதும்போல அவனைப் பொருட்படுத்தாமல் புத்தகத்தை வாங்கிக்கொண்டு புறப்பட, “கொஞ்சம் நில்லு!” என்றான் அவன்.
உள்ளுக்குள்ளே திக் என்றது. காட்டிக்கொள்ளாமல் திரும்பிப் பார்த்தாள். “அண்டைக்கு என்னவோ உன்ர மாமாட்ட கேக்கச்சொல்லி சொன்ன; உனக்கு விருப்பம் எண்டா அவரும் மறுக்க மாட்டார் தானே.” என்றான் அவன்.
அந்தக் கடையில் வேலை செய்பவர்களுக்கு முன்னால் இப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தவர்களின் பார்வையில் வேறு சுவாரசியம் தோன்ற, கன்றும் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே, “எனக்கு விருப்பம் இல்லை எண்டு எண்டைக்கோ நானும் உங்களுக்கு சொல்லீட்டன்!” என்றாள் தெளிவாக.
இப்போது முகம் கன்றிச் சிறுத்துப் போயிற்று அவனுக்கு. எல்லோர் முன்னும் அப்படிச் சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. உன் மாமாவை வைத்தா என்னை மிரட்டுற? உனக்கு படிப்பிக்கிறன் பாடம் என்று கருவிக்கொண்டுதான் கேட்டான். அத்தனைபேர் முன்னும் வாயைத் திறக்கமாட்டாள் என்று அவன் நினைக்க, தன் நிராகரிப்பை தெளிவாகச் சொல்லி அவனை தட்டிக்கழித்திருந்தாள் அவள்.
இனியும் அங்கே தாமதிக்க வேண்டாம் என்று எண்ணி அவள் திரும்ப, சட்டென்று எட்டிக் கையைப் பிடித்தான்.
“ஹே.. என்ன செய்றீங்க?” அதிர்ந்துபோய் கையை உருவ முயன்றாள் அவள்.
“தெரியேல்ல? கையை பிடிக்கிறன்! இத போறவன் வாறவன் எல்லாம் பாக்கட்டும். உனக்கு விருப்பம் இல்லாட்டியும் என்னத்தான் நீ கட்டியாகோணும்!” என்று அவன் சொல்ல, அவமானத்தில் முகமெல்லாம் சிவந்துபோயிற்று!
“விளையாடம விடுங்க. பாக்கிறவே பிழையா நினைக்கப்போயீனம்.”
“நினைக்கட்டும்! அப்படியாவது நீ வழிக்கு வரோணும்!”
அப்போது மற்றக் கையிலிருந்த அவளது செல் இசைத்தது. சசி என்று தெரிந்ததும், வேகமாக காதுக்கு கொடுத்து, “சசி, இந்த துஷ்யந்தன்.. கையை பிடிச்சு இழு..” என்று சொல்லும்போதே செல்லை பறித்துவிட்டான் அவன்.
“என்னடி? மெசேஜ் குடுக்கிறியா?” என்று அவன் அதட்ட, அவனின் ஒவ்வொரு செய்கைகளும் அவளுக்குள் திகிலை மூட்டியது. இதில் கைச் செயினோடு சேர்த்து அவன் பற்றியிருந்ததில் கை நன்றாக வலித்தது.
“ப்ளீஸ் கையை விடுங்கோ..!” எல்லோர் முன்னும் அழவும் முடியாமல் அவமானத்தை தாங்கவும் முடியாமல் குன்றிக்கொண்டு அவள் தவிக்க, “துஷி! இது ஆக ஓவர். அந்த பிள்ளையை விடு!” என்றனர் அருகில் இருந்தவர்கள்.
நண்பர்களான அவர்களுக்கே புரிந்தது; அவன் செய்வது அதிகம் என்று. அதை துஷ்யந்தன் உணரமறுத்தான்.
இங்கே சசி என்ன செய்வது என்று தெரியாது திகைத்தாள்.
துஷ்யந்தன் பின்தொடர்வது அவளுக்குத் தெரியும். தோழியர் வேறு யாருக்குமே சொன்னதில்லை. ‘ஐயோ என்ன செய்றது? சயன்ஸ் புக் வாங்க போகோணும் எண்டு சொன்னாளே.. பஸ் சத்தமும் கேட்டதே..’ வேகமாக தமையனுக்கு அழைத்தாள்.
“அண்ணா, கவியை ஒருத்தன் லவ் பண்ண சொல்லிக் கேட்டவன். அவளின்ர அண்ணாட பிரெண்ட். நெடுக பின்னால வாறான் எண்டு சொல்லுறவள். இண்டைக்கு கையை பிடிச்சு இழுத்திட்டான் போல.. அவள் சொல்லிக்கொண்டு இருக்க அவன் ஃபோன பறிச்சிட்டான் எண்டு நினைக்கிறன். கட்டாயிட்டுது. எனக்கு என்ன செய்ய எண்டு தெரியேல்ல. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கிற புத்தகக் கடைக்கு போகோணும் எண்டு சொன்னவள்.” கடகடவென்று பதட்டத்தோடு அவள் சொல்ல, சுர்ர்ர்ர் என்று உள்ளங்காலில் இருந்து உச்சிக்கு ஏறிய கோபத்தோடு பஸ் ஸ்டாண்டுக்கு பறந்தான் செந்தூரன்.
புயலென பைக் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைய அதைவிட வேகமாய் அவன் விழிகள் சுழன்று அவளைத் தேடியது. அவளைக் காணாதபோதும் ஸ்கூட்டியை கண்டுகொண்டான். மின்னலாய் அதனருகில் தன் வண்டியை விடும்போதே முன்னிருப்பது புத்தகக் கடை என்று தெரிந்து, புயலென உள்ளே நுழைந்தான்.
அங்கே கடையின் உள்பக்கத்துக்கு அவன் இழுத்துக்கொண்டு இருப்பதும், இவள் கன்றிச் சிவந்துவிட்ட முகத்தோடும் பயத்தோடும் மறுப்பதும் தெரிந்தது. துஷ்யந்தனின் பார்வை அவளுக்குப் பின்னால் பாய, யார் என்று திரும்பிப் பார்த்தவளின் கண்களுக்குள் அதுவரை நேரமும் கட்டுண்டு நின்ற கண்ணீர் அவனைக் கண்டதும் உடைப்பெடுத்தது. நிராதரவாக நின்றவள் கண்களில் அப்போதுதான் உயிரே வந்தது. இவனை ஏதாவது செய்யேன்! தன் இயலாமையில் அவனிடம் கெஞ்சின அவள் விழிகள்! அந்தக் கணத்தில் மிச்சம் சொச்சமாய் இருந்த தன் கட்டுப்பாட்டையும் மொத்தமாய் இழந்தான் செந்தூரன். ஒரே பாய்ச்சலில் அவர்களை நெருங்கி துஷ்யந்தனுக்கு விட்ட அறையில் இவள் கை தானாக விடுபட அவன் கடையின் உள்ளே சுழன்றுபோய் போய் விழுந்தான்.
கைச்செயினினால் உண்டான காயத்தில், “ஸ்ஸ்..” என்றபடி கையை தடவிக்கொடுக்க அவளின் வலியில் இவனுக்குள் ஆவேசம் கிளம்பிற்று! துஷ்யந்தனை அடித்துத் துவைத்து எடுத்துவிட்டான். விலக்குப்பிடிக்க நெருங்கிய எல்லோரையும் ஒற்றைப் பார்வையிலேயே தடுத்து நிறுத்தினான்.
துஷ்யந்தனும் சற்று எல்லை மீறித்தான் போனான் என்று ஏற்கனவே உணர்ந்த அவர்களும் தம் மனச்சாட்ச்சியை மீறிக்கொண்டு எதுவும் செய்ய இயலாமல் நின்றுவிட்டனர்.
செந்தூரனை அடக்குவோர் யாரும் இல்லாமல் போக, “ஒரு பொம்பிளை பிள்ளையின்ர கைய பிடிப்பியாடா?” என்று கையை முறுக்க வலியில் துடித்தான் அவன்.
“பிடிப்பியா? சொல்லு! பிடிப்பியா?” கேட்டுக்கேட்டு முறுக்க, வலியில் அவன் துடிக்க பயந்தேபோனாள் கவின்நிலா.
ஓடிப்போய், “ஐயோ விடுங்கோ! போதும் விடுங்கோ!” என்று செந்தூரனின் கையைப் பிடித்து இழுத்தாள்.
“நீ வீட்ட போ!” உறுமினான் அவன்.
“நீங்களும் வாங்கோ!” செந்தூரனின் கண்களில் தெறித்த உக்கிரமே இன்று துஷ்யந்தன் சரி என்று தெரிய, எப்படியாவது பிரச்சனை இல்லாமல் இவனை கூட்டிப் போய்விட வேண்டும் என்பதே குறியாகிப் போனது அவளுக்கு.
“உன்ன போ எண்டு சொன்னனான்.!”
அந்தக் குரலே சிலீர் என்று நடுக்கத்தை உண்டாக்கினாலும், “நீங்களும் வந்தாத்தான் போவன்!” என்றாள் தைரியத்தை திரட்டிக்கொண்டு.
அவன் இருக்கும் நிலைக்கு விட்டுவிட்டுப் போனால் துஷ்யந்தனை என்னவாவது செய்துவிடுவான். அவனுக்கு என்ன ஆனாலும் அவளுக்கு ஒன்றுமில்லைதான். அதைக்கொண்டு ஏதாவது இவனுக்குப் பிரச்சனைகள் வந்தால்?
“ஒருக்கா சொன்னா கேக்கமாட்ட நீ?” உறுமியவன், அவளின் கையைப் பிடித்து வெளியே இழுத்துவந்து, “நீ எல்லாம் பெரிய படிப்ஸ்தான். இவனை மாதிரி படிச்ச ஆக்களோட தான் சேருவ எண்டும் தெரியும். ஆனா, படிக்காதவன் உதவியும் ஒருநாளைக்குத் தேவைப்படும். அப்ப வாய மூடிக்கொண்டு அத வாங்கோணும். இப்ப நான் சொல்றத கேட்டு போ!” என்றான் அவன்.
‘டேய்! இப்ப படிச்சவன் படிக்காதவன் பேச்சு எங்கடா வந்தது?’ அவள் அங்கேயே நிற்க, “இன்னும் என்ன?” என்று அதற்கும் அதட்டினான் அவன்.
“என்ர ஃபோன பறிச்சு வச்சிருக்கிறான்.” என்றாள் மெல்ல.
“ராஸ்கல்! அவனை..!” என்று திரும்ப, “ப்ளீஸ்! அடிக்காதீங்கோ அவனை.” என்று கெஞ்சினாள் அவள்.
“அங்க அடிச்சா இங்க வலிக்குதா! அவ்வளவு பாசம்!”
அவனின் நாட்களில் பற்றிக்கொண்டு வந்தது.
“உங்களுக்கு..! மண்டேக்க ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல!”
“அவனுக்கு அடிச்சு உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்தாலும் எண்டுதான் சொன்னனான்.”
“வர்ற பிரச்னையைப் பாக்க எனக்குத் தெரியும்! நீ போ!” என்றவன், துஷ்யந்தனின் பாக்கெட்டில் இருந்த ஃபோனை தானே எடுத்துவந்து அவளிடம் நீட்டினான்.
‘என்ன மட்டும் துரத்துறானே.. என்ன பிரச்னையை இழுத்து வைக்கப்போறானோ தெரியா..’ கவலையோடு அவள் ஸ்கூட்டியை எடுக்க, “கவனமாப் போவியா?” என்று கேட்டான்.
பார்வையால் அவனை வெட்டிவிட்டு பார்க்கிங்கில் இருந்து அவள் புறப்பட, “கைகால் நடுங்காம பயப்படாம ஓடு!” என்றான் அவன். அன்றைக்கு நடுங்கி அவள் நிறுத்தியதைச் சொல்கிறான் என்றதும் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பி அவனை முறைத்தாள்.
சட்டென்று உதட்டோரம் சின்னச் சிரிப்பொன்று உதித்தது செந்தூரனிடம். அதைக் கண்டதும், “போடா!” என்றுவிட்டுப் போனாள் அவள்.