பஸ் ஸ்டான்ட் விட்டு அவள் வெளியேறும் வரை பாத்திருந்தவன் மீண்டும் துஷ்யந்தனை ஒரு வழி செய்துவிட்டான் “உன்ர வீட்டுல அக்கா தங்கச்சி இல்லையாடா? அவேக்கும் இப்படித்தான் செய்வியா? ஒருத்திக்கு பிடிக்கேல்ல எண்டு தெரிஞ்சா விலகிப் போகோணும். அதைவிட்டுட்டு கேவலப் படுத்துவியா?”
செந்தூரன் போட்டுத்தாக்கவும் இனியும் தங்கமாட்டான் என்று அறிந்த அவனது நண்பர்கள் ஓடிவந்து தடுத்தார்கள். “அவன் செய்தது பிழைதான். இனி இப்படி நடக்காது. போதும் விடுங்க ப்ளீஸ்!”
“கருகிப்போன கருவாடு மாதிரி இருக்கிற உனக்கு அவள் கேக்குதா? இனி எங்கயாவது அவள் இருக்கிற இடத்தில உன்ன பாத்தன்”! என்றவன் ஆட்காட்டி விரலை ஆட்டிக்காட்டிவிட்டு வெளியேறினான்.
வண்டியெடுக்கப் போகவும் போன் அழைத்தது. எடுத்துக் பார்க்க, புது நம்பர். “ஹலோ!” என்றான் அதட்டலாக.
அந்த ஹலோ காதில் வந்து மோதிய வேகத்தில் ஃபோனை காதிலிருந்து எடுத்துவிட்டாள் கவின்நிலா. இவனுக்கு எல்லாம் யார் ஃபோன் கொடுத்தது?
“என்ர கைச்செயினைக் காணேல்ல.” கடுப்புடன் சொன்னாள்.
“அதுக்கு?” அவன் அப்போதும் உறும,
“அவன்தானே என்ர கையப் பிடிச்சவன்.” என்று அவள் சொல்லும்போதே, ஃபோனைக் கட்பண்ணிவிட்டு மீண்டும் அவனிடம் போக, அப்போதுதான் நண்பர்களின் உதவியோடு எழுந்து நாற்காலியில் அமர்ந்தவன் நடுங்கியே போனான்.
“எங்கடா அவளின்ர கைச்செயின்?”
“தெரியா.. நான் எடுக்கேல்ல..” வேகமாகச் சொன்னவனின் பார்வை அந்த இடத்தில் சுழற, அங்கே விழுந்து கிடந்தது அது.
செந்தூரனும் கண்டுவிட்டான். ‘இது அறுந்து போகிற அளவுக்கு முறுக்கி இருக்கிறான்.’ குனிந்து எடுத்தவன் விட்டான் மீண்டும் ஒரு அறை. ஏன் அறைந்தான் என்று ஒன்றுமே சொல்லாமல் தன் பாக்கெட்டுக்குள் அதை போட்டுக்கொண்டு வெளியேறினான்.
இங்கே வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த கவின்நிலாவின் மனம் ஒருவித பதட்டத்தில் இருந்தாலும் செந்தூரன்தான் அவளின் நினைவுகளை ஆட்சி செய்துகொண்டிருந்தான்.
என்ன ஆளுடா நீ? எவ்வளவு கோபம் வருது உனக்கு? நல்லமாதிரி இருக்கிறவரைக்கும் சின்னப்பிள்ளை மாதிரி சிரிச்சுக் கதைக்கிறான். கோபம் வந்தா ஆளே மாறிப் போறானே. அம்மாடி! சிலிர்த்தாள் அவன் கோபத்தை எண்ணி.
ஆயினும், அவள் கண்களில் தெரிந்த ஒற்றைத் தவிப்பில் உக்கிரம் கொண்டவனின் செய்கை நெஞ்சை அள்ளியது. அவளிடம் ஒரு கேள்விகூட கேட்காமல் விட்டானே ஒரு அறை! அதன்பிறகுதான் அவள் மனதும் அமைதியானது. அவளால் அது முடியாததால் தானே உள்ளம் கொதித்தபோதும் அடக்கிக்கொண்டு அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள். அவன் அடித்தபோது அவள் மனம் எப்படிக் குளிர்ந்து என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
செயினைக் காணவில்லை என்றதும், சசிக்கு அழைத்து செந்தூரனின் நம்பரைக் கேட்டிருந்தாள். அவளும் இருந்த பதட்டத்தில் என்ன ஏது என்று கேளாது வேகமாகக் கொடுத்திருந்தாள். புது நம்பரில் இருந்து அழைக்கிறார்களே, யாரோ என்னவோ என்று தன்மையாகக் கதைத்தானா? அவன் சொன்ன ஹலோவே காதில் அறைந்ததே! முரடன்!
கையில் வலியை உணர்ந்ததும் கோபத்தில் அவன் முகம் சிவந்த வேகம்.. இப்போதும் எரிந்தது கை. செயின் எடுத்திருப்பானா? மாமாவின் பரிசு அது.
மேகலா சொன்னால் கூடப் போடாதவள் அன்றுதான் ஏதோ ஒரு ஆசையில் எடுத்துப் போட்டுக்கொண்டாள். அன்று வெள்ளிக்கிழமை என்றபடியால், இனி வார இறுதிதானே, பள்ளிக்கூடம் இல்லை என்று கால் சலங்கையையும் கைச்செயினையும் கழுத்துக்கு ஒரு சங்கிலியையும் எடுத்துப் போட்டிருந்தாள். அது இப்படியாகிப் போனது. கிடைத்திருக்குமா?
அவனுக்கு அழைத்துக் கேட்கப் பயந்தாள். என்ன நடந்ததோ? அவனை என்ன செய்தானோ? ஒன்றுமே தெரியவில்லை.
செயின் கிடைத்தால் அழைப்பான் தானே. வீட்டில் மேகலாவும் கேட்கவில்லை. எப்போதும் அணிந்திருந்தாள் ஒன்று குறைந்தால் கண்ணில் படும். வார இறுதிகளில் மட்டும், அதுவும் ஒரு எண்ணம் வந்தால் மட்டுமே போடுகிறவளின் கையில் செயினைக் காணவில்லை என்று கண்டுபிடிக்க முடியாது தானே.
இரவாகியும் அவன் எடுக்கவில்லை. என்னவோ ஏதோ என்று பயமாகவே நடமாடிக்கொண்டிருந்தாள். அடிக்கடி ஃபோனை எடுத்துப் பார்த்துக்கொண்டாள். நம்பர் விழுந்திருக்கும் தானே. அல்லது கிடைக்கவில்லையோ.. மாமா கேட்டால் என்ன சொல்வாள்?
‘ச்சே! அவனாவது என்ர செயினை தொலைய விடுறதாவது. கண்டு பிடிச்சிருப்பான!’ உறுதியாக நம்பினாள். எது அப்படி நம்பச் சொன்னது என்பதை அறியாள். ஆனால் நம்பினாள்.
‘என்னில என்னவோ கோபம் அவனுக்கு, அதுதான் கதைக்காம இருக்கிறான்.’ என்று எண்ணும்போதே, ‘எப்பதான் கோபம் வராம இருந்திருக்கு..?’ என்கிற கேள்வி வந்து அவள் உதடுகளில் புன்னகையை பூசிப்போனது.
கோபம் வந்தா அவனும் அவன்ர கண்ணும் அவள் போடா என்றதும் கோபத்தை மீறிக்கொண்டு சிரித்த கண்களை ரசித்தாள். அதைப் பட்டென்று மறைத்துக்கொண்டு பொய்யாக முறைத்த கண்களை இன்னுமே ரசித்தாள்.
ஃபோன் அழைக்கவும் வேகமாக எடுத்துக் பார்த்தாள். சசி என்றதும் உள்ளுக்குள் ஏமாற்றம் பரவ, “சொல்லடி.” என்றாள்.
“வீட்ட போய்ட்டியா?”
“ஓ! நான் எப்பவோ வந்துட்டேன். அவர்.. உன்ர அண்ணா?”
“இப்பதான் வந்தவன்; உன்ன ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாமாம்; அவன் இனி உன்ர பக்கமும் தலைவச்சுப் படுக்கமாட்டானாம். சொல்லச் சொன்னவன்.” என்று அவள் சொன்னபோது, அதுவரை இருந்த பயம் பதட்டம் எல்லாம் அடங்க மனம் அப்படியே அமைதியாகிப் போனது.
அப்போ செயின் இருக்கு. அதுதான் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் எண்டு மறைமுகமாச் சொல்லி இருக்கிறான். ‘ஏன் அத எனக்கு எடுத்துச் சொல்லி இருக்க வேண்டியதுதானே. என்ர நம்பர் அவனிட்ட இருக்குதானே. சரியான மாங்கா மடையன்.’ குறைபட்டுக்கொண்டாள் மனதில்.
“செய்த ஹெல்ப் எல்லாத்துக்கும் நன்றியாம் எண்டு உன்ர கொண்ணாட்ட சொல்லிவிடு சசி.” கடுகடுப்போடு சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
அங்கேதான் செந்தூரனும் இருந்தான். அவன் சசியைப் பார்க்க, “நீ செய்த எல்லா ஹெல்ப்புக்கும் நன்றியாம்அண்ணா!” அவள் சொன்னதுபோலவே இவள் சொல்லிக்காட்டிவிட்டுப் போக, இவன் உதடுகளில் புன்னகை.
மெல்ல கண்களை மூடிச் சாய்ந்துகொண்டான். கண்ணீர் வழிய திரும்பிப் பார்த்தவள் தான் கண்ணுக்குள் வந்துநின்றாள். அச்சம் அப்பிக்கிடந்த அந்தக் கண்களில் அவனைக் கண்டதும் தோன்றிய ஜீவனில், அவனுக்கு வெறியே வந்ததே! எந்தப்பெண்ணாக இருந்தாலும் காப்பாற்றி இருப்பான் தான். இந்த வெறி? இந்த ஆவேசம்?
அவன் ஊதியயணைக்க நினைத்த பொறி கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறதே! அவளோடு கதைப்பதை அதனாலேயே ஒத்திவைத்தான்.
இங்கே கவின்நிலாவின் கைபேசி அழைக்கவும், அவனோ என்று ஓடிவந்து பார்த்தாள். மாமா என்றதும் ஏமாற்றத்தோடு எடுத்தாள். அவனது அழைப்புக்காக ஒரு மனம் ஏங்கினாலும், அழைப்பு வந்துவிடக் கூடாது என்றும் ஆசைப்பட்டாள்.
ஒரு பெண்ணின் நம்பர் கிடைத்ததும், “ஹாய், இது யார் நம்பர் என்று பார்க்க எடுத்தேன்” அல்லது, “கை நோ எப்படி இருக்கு. உனக்கு ஒன்று எண்டதும் துடிச்சு போய்ட்டன்.” என்றோ, “அவன் எல்லாம் ஒரு மனுசனா? இப்படியான ஆட்களை எனக்குப் பிடிக்காது.” என்று ஆயிரம் சாட்டுகளைச் சொல்லிக்கொண்டு இதுதான் சந்தர்ப்பம் என்று சும்மா சும்மா எடுத்துக் கதைக்கும் பல இளைஞர்களில் ஒருவனாக அவன் இருந்துவிடக் கூடாது என்று ஆசைப்பட்டாள்.
அவளின் நம்பிக்கைக்கு காத்திரமானவனாக மாறிக்கொண்டிருக்கும் அவன் பத்தோடு பதினொன்றாக, நீ இவ்வளவுதானா என்று மாறிவிடக் கூடாது; பொய்த்துவிடக் கூடாது என்று விரும்பினாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே, அன்றுமட்டுமல்ல, என்றுமே அவன் அழைக்கவே இல்லை. முதல்முறை ஃபோனை திருத்தக் கொடுத்தபோதுகூட அவன் எடுப்பானோ என்று அவள்தான் பயந்தாளே தவிர அவன் எடுக்கவே இல்லையே என்று நினைத்து மகிழ்ந்தாள்.