அதைவிட மனதின் உந்துதலில் அங்கே வந்தவனிடம், மூளை சராமாரியாக கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருந்தது.
‘அவளிட்ட என்ன எதிர்பார்க்கிறாய்? உனக்கு வராத கல்வி அவளுக்கு வரப்பிரசாதமே கிடைச்சிருக்கு. உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லி அத கெடுக்கப் போறியா? அவள் போற பாதைல உன் எண்ணங்களை தடைக்கல்லா போடப் போறியா?’ என்று மூளை கேட்ட கேள்விகளில் தடுமாறிப்போனான் செந்தூரன்.
அவளைப் பாத்தது போதும்! எழும்பு, எழும்பிப் போ! இங்க இருந்து மட்டுமில்ல உனக்குள் ஓடும் அவளின் நினைவுகளில் இருந்தும்! மூளை அவனைத் துறத்துகையில் வந்த மாணவியர் அணிவகுப்பு அப்படியே திரும்பி அவர்கள் இருந்த இடத்துக்கே போய் முடிந்தது.
‘இண்டைக்கு மட்டும் பாத்திட்டு போவம்.’ மனம் ஏங்கிக் கேட்டதை தட்ட முடியாமல் அமர்ந்திருந்தான். கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த விசிலை எடுத்து ஊதி, எல்லோருக்கும் சின்ன இடைவேளை விட்டாள். எல்லோருமே களைத்துப்போய் அப்படியே கிரவுண்ட்ஸ் தரையிலேயே அமர்ந்துகொண்டனர். வெள்ளைப்பூக்களை தரைமுழுக்க தூவி விட்டதைப்போல பரந்து விரிந்து கிளைபரப்பி நின்ற மரத்தின் நிழலில் அமரம்ந்திருந்தனர். அவளும் கைக்குட்டையால் நெற்றி முகம் எங்கும் துடைத்துக்கொள்ள, “இந்த வெயிலுக்கு இதெல்லாம் தேவையாடி விசரி!” என்று வாய்விட்டே முனகினான்.
‘குரல் வேற அடச்சிருக்கு. பின்ன, இந்தக் கத்துக் கத்தினா?’
“என்ன மச்சி? பார்வையெல்லாம் பலமா இருக்கு..” என்று கேட்ட குரலில் திடுக்கிட்டுத் திரும்பினான்.
இவனோடு ஒன்றாகப் படித்த கபிலன். அவன் ஆர்வமாக இவனைப் பார்க்க, “எங்கட பள்ளிக்கூடக் காலம் நினைவு வந்ததுடா. விளையாட்டுப்போட்டி வந்தா காணுமே, வகுப்பை கட் அடிக்க.” என்று வேகமாகச் சமாளித்தான் செந்தூரன்.
அதைக்கேட்டுச் சிரித்தான் அவன். “இப்பவும் நாங்க எல்லாரும் டச்சுல தான் இருக்கிறம். எண்டாலும் பள்ளிக்கூடக் காலம் மாதிரி வராது மச்சி!” என்றுவிட்டு, “இதுவரைக்கும் ஓட்டப்போட்டி எதுலயும் நீ என்ன வெல்ல விட்டதே இல்ல. வாறியா, இப்ப ஓடிப் பாப்போம்?” என்று கேட்டான் அவன்.
அந்தப் பசுமையான நாட்கள் நினைவலைகளில் மிதக்க வாய்விட்டுச் சிரித்தான் செந்தூரன். உருண்டு பிரண்டு விளையாடும் நட்புதான். என்றாலும் விளையாட்டுப் போட்டி என்று வருகையில், இவன் முதலிடத்தை தட்டிக்கொள்வான். அவன் அந்தக் கோபத்தைப் படிப்பில் காட்டுவான். இவனுக்கும் படிப்புக்கும் தான் எட்டாப் பொருத்தமாயிற்றே. காத்திருந்து அடுத்த வருட விளையாட்டுப் போட்டியில் அதற்குப் பதில் சொல்வதும் என்று எல்லாம் எவ்வளவு அழகிய நினைவுகள்.
“இப்ப மட்டும் வெல்லுவாய் எண்டு நினைக்கிறியா?” இறுக்கிக்கிடந்த கைத்தசையை முறுக்கிக்கொண்டு கேட்டான்.
தானும் அதைப் பார்த்துவிட்டு, “ம்ஹூம்! சான்ஸ் இல்லப் போலத்தான் கிடக்கு! சரி வா, ஒரு மேட்ச் விளையாடுவோம்.” என்று கூப்பிட்டான்.
“இல்லடா! இண்டைக்கு நேரமில்லை. அஜந்தன் ‘வாறன்; நில்லு’ எண்டான். வெயிலுக்க நிக்காம இங்க வந்து இருப்போமே எண்டுதான் வந்தனான். அவனைக் காணேல்ல; அங்க கடைல கதிர் மட்டும் தான். நான் போகோணும். இன்னொருநாள் விளையாடுவம் .” பொருத்தமான பதில் ஒன்றைச் சொல்லிவிட்டு விடைபெற்றான்.
நடக்கும்போது அவள் இன்னும் இருக்கிறாளா என்று பார்க்க, காணவில்லை. எங்கே என்று தேடிச் சுழற முயன்ற விழிகளை அடக்கி, ‘இனி அவளைப் பாக்கிறேல்ல!’ என்று கசந்துவழிந்த முடிவை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வர, அங்கே பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பெரிய பாக்கில் எதையோ காவிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள் அவள். அப்படியே நின்றுவிட்டான். நேருக்கு நேரே கண்டபிறகு அடுத்த அடியை எடுத்துவைத்து, அவளைக் கடந்து சென்றுவிட கால்கள் மறுத்தன.
சற்று முன் எடுத்த முடிவுகள் அத்தனையும் அவளின் முன்னே பொடிப்பொடியாக உதிர்வதைக் கண்டான். அவளை விட்டுத் தள்ளியிரு என்ற மூளையின் எச்சரிக்கையே அவனை அங்கேயே பிடித்துவைக்க அப்படியே நின்றுவிட்டான். முன்னுக்கு பாடசாலை, மற்ற மாணவர்கள் போக வர இருப்பார்கள். ஆசிரியர்களும் இருப்பார்கள். யாரின் கண்ணிலாவது பட்டால் நன்றாயிராது, பேசாமல் இங்கிருந்து போடா என்று மூளை எச்சரித்தபோதும், நகரவே முடியவில்லை.
அவனைக் கண்டவளும் அப்படியே நின்று முகம் மலர்ந்தாள். அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனிடம் அதன் எதிரொலி இல்லாமல் போக, புருவங்களைச் சுருக்கி கண்ணால் என்ன என்று கேட்டாள்.
ஆனால், அவன் கண்களை எதிர்கொள்ள முடியவில்லை. எதையோ தேடிக்கொண்டிருந்தான் அவளிடம். எதனையோ கேட்டுக்கொண்டிருந்தான் அவளிடம். இத்தனை நாட்களாய் இல்லாத ஒன்று.
‘என்ன வேணுமாம் இவனுக்கு?’ மனம் படபடக்கத் தொடங்கிற்று. அவன் பார்வை அவளை விட்டு அசைய மறுக்க, தடுமாறி விழிகளை அவனிடமிருந்து அகற்றிக்கொண்டாள்.
‘விசரி! அவனை நேரா பாரடி. உன்ர தடுமாற்றத்தை அவனுக்கு காட்டாத. பூனைக்கண்ணன் எல்லாத்தையும் கவனிப்பான்.’ உள்மனம் எச்சரிக்க, தன் சலனத்தை மறைத்துக்கொண்டு மீண்டும் பார்க்க அவன் பார்வை அவளிடமேதான் இருந்தது.
‘கண் வெட்டாம என்னையே பாத்தா எப்படிப் பாக்கிறதாம்?’ முடியாமல் மீண்டும் அவள்தான் அகற்றினாள். அகற்றியவளின் பார்வையில் வண்டியில் வந்துகொண்டிருந்த துஷ்யந்தன் பட்டான்.
இவன் எங்க இங்க? துணுக்குற்றுப் போனாள்.
அவனது பார்வையும் அவளிடம் ஆத்திரத்தோடு பாய, அவள் மூளையோ நான்கு நண்பர்களோடு மோட்டார் வண்டிகளில் வந்து இறங்குவதைக் குறிப்பெடுத்தது. செந்தூரன் தனியாளாய் நிற்கிறான் என்பது முதன்மையாக மனதில் பட, அவன் நண்பனிடம் திரும்பி என்னவோ சொன்ன அந்தப் பொழுதில், என்ன செய்கிறோம் என்பதை மறந்து, வேகமாக செந்தூரனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அருகருகே இருந்த கட்டிடங்களின் தாழ்வாரம் போன்ற ஓடைக்குள் விரைந்து மறைந்தாள் கவின்நிலா.
இவளை விட்டு விலகியே ஆகவேண்டுமா? என்னால் முடியவில்லையே என்று அவன் உள்ளம் தவித்துக்கொண்டிருந்த அந்தக் கணத்தில், அதுவும் அவளைவிட்டு விலகிவிடு என்று மூளை அச்சுறுத்திய நேரத்தில் அவளே அவன் கையைப் பற்றி இழுத்ததில் தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் அவள் மேலிருந்த விழிகளை அகற்றாமல் அவளின் இழுப்புக்கு இழுப்பட்டான் செந்தூரன்.
அவனைக் கவனிக்கும் நிலையில்லை அவள். ஏன், தான் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதும் கருத்திலில்லை. ‘கடவுளே அவர்களின் கண்ணில் இவன் பட்டுவிடக் கூடாது’ என்கிற பயத்தோடு மெல்ல எட்டிப்பார்க்க துஷ்யந்தன் ஆக்ரோஷத்தோடு விழிகளைச் சுழற்றி அவளைத் தேடுவது பட்டது. சட்டென்று அவனையும் இழுத்துக்கொண்டு இன்னும் உள்ளுக்குள் வந்துநின்றாள். செந்தூரனின் விழிகள் ஒருமுறை அவள் கைக்குச் சென்றுவிட்டு வந்து அவளைக் கேள்வி கேட்டது.
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று புரிகிறதா பெண்ணே?
விலக நினைக்கும் நேரத்தில்
விலகாதே என்று சொல்கிறதே உன் செய்கை!
என்ன செய்ய நான்?
அதையும் நீயே சொல்லிவிடு!
கவின்நிலாவோ பதட்டத்தின் உச்சியில் இருந்தாள். எப்படியாவது அவனை அவர்களின் கண்ணில் படாமல் அனுப்பிவிடவேண்டும் என்பது மட்டுமே அவள் கவனத்தில் இருந்தது. அருகில் நிற்பவன் முரடன் தான்; வந்தவன் கோபத்தோடு தன்னை முறைத்தான் என்று தெரிந்தாலே அடித்துத் துவைத்துவிடுவான் தான்; என்றாலும் வந்திருப்பது ஐந்துபேர். ஐந்துபேரை அடித்து வீழ்த்த அவனால் முடியாதே. அவர்கள் அவனுக்கு ஏதாவது செய்துவிட்டால்? அந்த நினைப்பிலேயே நெஞ்சு நடுங்கியது. அவனுக்கு ஒன்று என்பதை நினைவில் கூட மனம் ஏற்க மறுக்க, அவனைக் காப்பதே முதன்மையாக இருக்க, என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து அவனை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றிவிடுவதில் குறியாக இருந்தாள்.
அவர்கள் வாசலைக் கடந்து உள்ளே போகவும் உட்பக்கமாக எட்டிப்பார்த்தாள். துஷ்யந்தன் நண்பர்களோடு கிரவுண்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்ததும், இவனிடம் திரும்பி, அவன் கையை விட்டு, “கெதியா இங்க இருந்து போங்கோ!” என்றாள்.