அவள் கையை விட்டதும் எதையோ இழந்தது போலுணர்ந்தான் செந்தூரன். ‘திரும்பவும் என்ர கைய பிடியடி!’ மனம் கத்திச் சொல்ல, அதன் அதிர்வில் உணர்வுக்கு வந்து, “ஏன்?” என்று கேட்டான்.
“அங்க துஷ்யந்தன் நிக்கிறான்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, சினத்தில் கொதித்துப்போனான்.
“அவ்வளவு அடிச்சும் இங்க வந்திருக்கிறானா அந்த நாய்? அவனை!” என்று இவன் ஆவேசமாகப் புறப்பட, பட்டென்று அவன் கையைப் பிடித்து தன்னைநோக்கி இழுத்தாள் அவள்.
“உங்களுக்கு என்ன விசரா? எப்ப பாத்தாலும் அடிக்கிறன் குத்துறன் எண்டு போக?” என்று அவள் அதட்ட, அந்த ‘விசரா’வில் அவனே ஒருகணம் அதிர்ந்துபோனான். எவ்வளவு இயல்பாக இலகுவாக அவனை விசரனாக்கிவிட்டாள். இதுவே வேறு யாரும் சொல்லியிருக்க கொத்துப் பரோட்டாவே போட்டிருப்பான். சொன்னது அவள் அல்லவா. அவளின் அதட்டலையும், முறைப்பையும் ரசித்தான்.
“அவனுக்குப் பயந்துதான் என்ன இங்க இழுத்துக்கொண்டு வந்தனியா?” என்று முறுகிக்கொண்டு அவன் கேட்க,
ஆம் என்று சொன்னால் இன்னும் துள்ளுவான் என்று தெரிந்து, “என்னத்துக்கு பயப்படோணும்? ஏன் வீண் பிரச்சனை எண்டுதான். அந்தப்பக்கம் எங்கட பள்ளிக்கூடமே நிக்குது. அவையளுக்கு முன்னால என்ர மானத்த வாங்குவீங்களா?” என்று அவளும் முறைக்க, அதிலிருந்த உண்மையில் இப்போது நிதானத்துக்கு வந்திருந்தான் அவன்.
தானும் அவளும் தனியாக நிற்பதும் புத்தியில் பட, அதுவும் மறைவான இடத்தில் என்றதும், “சரி! நான் ஒண்டும் செய்யேல்ல. நீ போ!” என்றான் தன்மையாக.
“உங்கள நம்பேலாது. முதல் நீங்க போங்கோ!” அவள் சொன்ன விதத்தில் உதடுகளில் சிரிப்பொன்று வந்து ஒட்டிக்கொண்டது அவனிடம்.
“நீ விட்டாத்தானே போக” என்றான் கண்களில் குறும்போடு. சொல்லவே விருப்பமில்லை. அவள் கைகளில் மொத்தமாக உன்னைக் கொடுத்துவிடு என்றுதான் மனம் சொன்னது. ஆனால், இடமும் நேரமும் பிழையே!
அவன் சொன்னபிறகே உணர்ந்து, சட்டென்று கையை விட்டுவிட்டவளால் அவன் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. பதட்டம் தொற்றிக்கொண்டது. அர்த்தம் பொதிந்த பார்வையை அவள்புறம் பார்த்தபடி, அவள் பற்றியிருந்த இடத்தை மிகவும் இதமாகத் தடவிக்கொடுத்தான் அவன்.
‘கடவுளே.. என்னடி காரியம் செய்து வச்சிருக்கிறாய். சும்மாவே ஆடுவான். இனி?’ அவள் தடுமாற, ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
“இங்க என்ன பார்வை? உங்கள போகச் சொன்னனான்.” என்றாள் முறைத்துக்கொண்டு. அவள் கண்களில் தெரிந்த பொய்யும், உதட்டில் பூத்துவிட்ட சிரிப்பை மறைக்க முயன்றுகொண்டிருந்தவளின் செய்கையிலும் மனதில் உல்லாசம்.
விடமாட்டேன் பெண்ணே!
இனி உன்னை விடமாட்டேன்!
செந்தூரன் முடிவு செய்துவிட்டான்! மூளையின் அறிவுறுத்தல்களை எல்லாம் ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டான். இனி அவள்தான் அவனுக்கு! என்றென்றும்! ஏழேழு ஜென்மத்துக்கும்!
என்னிடம் வந்துவிட்ட உன்னை
உன்னிடம் கூடத் தரமாட்டேன்!
உதட்டில் உறைந்துவிட்ட சிரிப்போடு, கண்களால் தன் மனதை அவளுக்கு உணர்த்தியபடி நின்றவன் முன்னால் நிற்கமுடியாமல்,
“நான் போறன்.” என்று அவள் திரும்ப,
காதல் நெஞ்சில் பூத்தகணம் காதலியின் விலகலைத் தாங்கமாட்டாமல்,
“ஸ்போர்ட்ஸ் எப்ப முடியும்?” என்று அவசரமாகக் கேட்டான்.
“இப்ப கொஞ்சத்துல முடிஞ்சிடும். டியூஷன் போயிட்டு ஸ்கூலுக்கு போய் எங்கட இல்லத்துக்கு கொஞ்சம் ரெடி பண்ணி வச்சிட்டு போக ஏழு எட்டு மணி ஆகிடும்.” என்றாள் அவள்.
“அதுதான் இந்தக் கிழமை ஃபுல்லா உன்னக் காணவே இல்லையா?” அவனது கேள்வியிலேயே தன்னைத் தேடியிருக்கிறான் என்கிற செய்தி இருக்க, உள்ளே சந்தோசம் பொங்கத் தலையாட்டினாள்.
“எட்டுமணி எண்டா இருட்டிடுமே, எப்படி வீட்ட போவாய்?”
“மாமா வருவார், இல்லாட்டி பஸ். சிலநேரம் சுரேந்தர் வந்து கூட்டிக்கொண்டு போவார்.”
“அது யாரு.. சுரேந்தர்?” புருவங்கள் சுருங்கப் பட்டென்று கேட்டான் அவன்.
‘திரும்பக் கோபப்படப்போறான்.’ அவன் குணம் தெரிந்த உள்ளம் சொன்னபோது, அந்தக் கோபத்தை எதிர்கொள்ளத்தான் ஆசைப்பட்டாள் அவளும். “மாமாவின்ர ஸ்டூடன்ட். மெடிக்கல் செகண்ட் இயர் படிக்கிறார்”
“இனி நீ அவனோட எல்லாம் போறேல்ல!” என்றான் அவன் பட்டென்று. ‘பெரிய படிப்ஸ் குடும்பம். ஆனா ஊரானோட வீட்டு பொம்பிளை பிள்ளையை அனுப்பி வைப்பீனமாம். என்ன படிப்போ!’ சினம் பொங்கிற்று அவனுக்குள்.
“சின்ன வயதில இருந்தே அவரைத் தெரியும்.”
”எந்த வயசில இருந்து தெரிஞ்சாலும் இனிப்போறேல்ல. போறதைக் கண்டனோ?” என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க, அசந்துதான் போனாள் அவள். எவ்வளவு ஆணித்தரமாக மிரட்டுகிறான்?!
“உன்ர மாமாவோட போ. இல்ல பஸ்ஸில போ. இல்லாட்டிச் சொல்லு, நான் வந்து கூட்டிக்கொண்டு போறன்.” என்று அவன் சொன்னபோது, விழிகள் விரியப் பார்த்தாள்.
‘சுரேந்தரையாவது சின்ன வயதில இருந்து தெரியும்; உன்ன அதுகூடத் தெரியாதேடா? ஆனா உன்னோட மட்டும் நான் வரலாமா?’ என்று மனதில் மட்டுமே கேட்டாள் கவின்நிலா.
வாய்விட்டுக் கேட்டுவிட்டு அவனிடம் தப்ப முடியுமா அவள்?
“அதைவிட இந்த ஸ்போர்ட்ஸ் ஒண்டும் தேவையில்லை. ஆளும் கோலமும். கருகரு எண்டு கருத்து, தொண்டை அடைச்சு. தேவையா உனக்கு இதெல்லாம்? இன்னும் கொஞ்ச நாள்ல ஏஎல் எக்ஸாம். அதுக்குப் படிக்கிறத விட்டுட்டு என்ன இதெல்லாம்?” என்று அதட்டினான்.
“அது.. இதுதானே எங்களுக்கு கடைசி வருஷம். அதுதான்.. விட மனமில்லை. ஸ்கூல் டேய்ஸ் திரும்பி வராதே.” என்று அவள் சொல்லவும், சற்று முன்னர் கபிலனோடு அவனும் இதைத்தானே பகிர்ந்துகொண்டான். எனவே சற்றுச் சமாதானமானான்.
“சரி; போ! ஆனா, அண்டைக்கு மாதிரி திரும்ப அவன் வம்பு வளக்கிறவரைக்கும் பேசாம இருக்கிறேல்ல. நீ இருக்கிற பக்கம் அவன் திரும்பினாலே எனக்கு ஃபோன போடோணும்; விளங்கினதா?” என்று அதற்கும் அதட்டினான்.
“என்ர நம்பர் இருக்குதானே?”
அவனின் அழைப்புக்காக தான் காத்திருந்த நினைவு வர, “இருக்கு இருக்கு!” என்றாள் கடுகடுப்பாக.
“என்ன இருக்கு?” வேண்டுமென்றே அவன் கேட்க,
“ஆ… என்ர நம்பரும் உங்களிட்ட இருக்கு!” என்றாள் வெட்டும் பார்வையோடு.
“அதுக்கு?” உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியபடி கேட்டான். என்ன சொல்லுவாள்?
முறைப்பாடு, “போ…டா!” என்றுவிட்டுப் போனாள் அவள்.
அவனோ உதட்டில் உறைந்த சிரிப்போடு அவளையே ரசித்திருந்தான்.
அவர்களுக்குள் இந்த நெருக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது? எந்தக் கணத்தில்? எந்தப் புள்ளியில் தொடங்கியது? நடந்துகொண்டிருந்தவளுக்குத் தெரியவேயில்லை. ஆனால், நெருக்கம் உருவாகிப்போனது என்னவோ உண்மைதான். மனதுக்கு மிகவுமே பிடித்திருந்தது. எவ்வளவு இலகுவாக போடா என்கிறாள். அதைச் சொல்ல அவளுக்கும் பிடித்திருக்கிறது, கேட்க அவனுக்கும் பிடித்திருக்கிறது. இல்லாமல் அவளைச் சும்மா விடுவானா?
கிரவுண்ட்ஸ் நோக்கி நடந்துகொண்டிருந்தவள், திரும்பாம நட என்ற மூளையின் எச்சரிக்கையையும் மீறி அவன் பார்வையிலிருந்து மறையப் போகிறோம் என்று தெரிந்து திரும்பிப் பார்க்க அவனும் அவளையே பார்த்திருந்தான்.
இவள் திரும்பிப் பார்க்க, என்ன என்று சின்னத் தலையசைப்பில் கேட்டான். ஒருகணம் தன்னுடைய எதுவோ பிடிபட்ட உணர்வில் சிக்கி அப்படியே நின்றுவிட்டவள், ஒன்றுமில்லை என்று தலையசைக்கும்போதே அவன் கண்களில் தெரிந்த ஆசையில் சிவந்துவிட்ட முகத்தை திருப்பிக்கொண்டு ஓடியே போனாள்.