செந்தூரனுக்கு சற்று நேரம் பிடித்தது அவளின் அந்த வெட்கத்திலிருந்து வெளிவர. மனதில் உற்சாகத்தோடு ஓடையிலிருந்து வெளியே வந்து அவள் சொன்னதுபோல வெளியே போகாமல் கபிலனைத் தேடிப் போனான்.
“இன்னும் போகேல்லையாடா நீ?”
அதற்குப் பதிலைச் சொல்லாமல், “அங்க நிக்கிறான் பார் ஒருத்தன். அவன்ர பெயர் துஷ்யந்தன். ஆளையே கவனி.” என்றவன், மாணவியர் நின்ற பக்கம் கைகாட்டி, “அந்தப்பக்கம் போனான் என்டா.. போறது என்ன யாரையாவது பாத்தான் எண்டா கையக்கால முறிச்சு அனுப்பு.” என்றான் குரலில் அழுத்தத்துடன்.
அவன் சொன்ன விதத்திலேயே அங்கிருந்த வெள்ளைப் புறாக்களின் ஒரு புறாவை தூக்கப்போகிறான் என்று தெரிந்து போயிற்று கபிலனுக்கு.
“என்ன மச்சி, விசேஷமா?” என்று அவன் கண்ணடித்துச் சிரிக்க, சின்னதாய் வெட்கம் வந்தது அவனுக்குள்.
“டேய்! எனக்கே இன்னும் வடிவா தெரியேல்ல.” என்று சிரித்துச் சமாளித்தான்.
“யாரோ ஒருத்திக்காக இந்தளவு தூரத்துக்கு போற ஆள் இல்ல நீ. டோன்ட் ஒர்ரி மச்சி! நான் கவனிக்கிறன் அவன!” என்று சொல்லும்போதே, அவன் கண்கள் துஷ்யந்தனைச் சுற்றி காம்ப் அமைத்துவிட்டிருந்தது.
பயிற்சிகளை மீண்டும் ஆரம்பித்திருந்தாலும் ஒருவித மயக்கமான நிலையிலேயே உலாவிக்கொண்டிருந்தாள் கவின்நிலா. காணும் இடமெல்லாம் அவனே நின்று கண்ணால் சிரித்து, அவள் கன்னங்களை கதகத்தக்க வைத்துக்கொண்டிருந்தான். அவனின் ஒவ்வொரு பார்வையும் செய்கையும் நெஞ்சுக்குள் நின்று இனிக்க, அதன் சுகத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சுற்றியிருந்தவர் தடுத்துக்கொண்டே இருந்தனர். எப்போதடா இதெல்லாம் முடிந்து தனிமை கிடைக்கும்.. அவனை மட்டுமே நினைத்துக்கொண்டு இந்த உலகை மறந்து கிடப்போம் என்று ஏங்கிப்போனாள்.
ஒருவழியாக வீட்டுக்கு வந்து களைப்பு நீங்க நன்றாகத் தலைக்கு குளித்து, வேகமாக உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் புகுந்தவள் அப்படியே கட்டிலில் சரிந்தாள். தனிமை கிடைத்ததும் கட்டுக்குள் இருந்த மயக்கம் விடுதலைபெற ரகசியச் சிரிப்பில் தானாகவே மலர்ந்தது அவள் இதழ்கள்.
‘கள்ளன்! வெக்கமே இல்லாம என்ன பார்வை பாக்கிறான்.. சுரேந்தரோட நான் போகக்கூடாதாம்.. ஆனா அவனோட வரலாமாம்!’
‘ம்க்கும்! நினைப்புதான் அவனுக்கு பிழைப்பை கெடுக்கும்! அவனோட நான் போறதா? போடா!’ முறுக்கிக்கொண்டாலும் அவனுடனான மோட்டார் வண்டிப்பயணம் கனவுகளில் மிதந்துவந்து ஆசையூட்டியது!
அப்படி ஒரு பயணம் அமைந்தால் எப்படி இருக்கும்? சுகமாய்.. சொர்க்கமாய் இராதா? அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு.. முதுகில் முகம் புதைத்துக்கொண்டால்.. வெட்கத்தில் உதடு கடித்தவள் தலையணையை அணைத்துக்கொண்டு புரண்டாள்.
அந்தநேரம் மெசேஜ் வந்த சத்தம் கேட்கவும் ‘கொஞ்சநேரம் நிம்மதியா விடமாட்டாங்களே.’ என்று அலுப்புடன் எடுத்துப்பார்த்தாள்.
“வீட்ட போயாச்சா?” என்று செந்தூரன்தான் கேட்டிருந்தான். இனிமையாக அதிர்ந்தாள்.
அன்று அவ்வளவு பிரச்சனை நடந்தும் ஒருவார்த்தை எடுத்துக் கதைக்காதவன் இன்று என்ன உரிமையில் மெசேஜ் அனுப்புகிறானாம்? கள்ளச் சிரிப்பில் மலர்ந்த உதட்டைக் கடித்துக்கொண்டு, “எஸ்!” என்று சிரிக்கும் ஸ்மைலியோடு அனுப்பி வைத்தாள்.
உடனேயே அடுத்த கேள்வி பறந்து வந்தது.
“யாரோட?”
டேய்!! என்ன ஆளடா நீ? என்ன உரிமைல இதையெல்லாம் கேக்கிறாய்? சிரிப்புப் பொங்க மல்லாந்து கட்டிலில் விழுந்தவள் ஃபோனை தன் முகத்தின் மீது போட்டுக்கொண்டாள்.
என்ன சொல்லலாம்? மாமாவோட எண்டு சொன்னா ஓகே எண்டு வச்சுடுவான். அவனுடன் வம்பு வளர்க்க பேராசை எழுந்தது.
“சுரேந்தரோட” என்று அனுப்பி வைத்தாள்.
‘கத்தப்போறான்..’ என்று ஆவலோடு காத்திருக்க அவனிடமிருந்து பதிலே இல்லை.
‘ஆகா.. மச்சானுக்கு நல்ல கோபம் போல.’ அவனின் கோபத்தை எண்ணி எண்ணிச் சிரித்தாள்.
மனதின் துள்ளலும் சந்தோஷமும் அடங்காமல் இருக்க அப்படியே படுத்துக்கொண்டாள். உடல் களைத்துப் போகுமளவுக்கு செய்த உடல் பயிற்சிகள், அதற்கு இதமாக தலைக்கு நன்றாக அள்ளிக் குளித்தது தேகத்தில் பராமசுகத்தை சேர்த்தது என்றால் அவன் நினைவுகள் நெஞ்சுக்குள் நின்று புதுவிதமான பரவசத்தை ஊட்டியது.
ஒரு வாரத்துக்குப்பிறகு அவனைக் கண்டது.. அவன் பார்த்த பார்வை, அவளிடம் கண்ணாலேயே எதையோ கேட்டது.. அவளின் இழுப்புக்கு இழுபட்டு வந்தது.
‘அடிப்பாவி! இவ்வளவு நாளும் ஒன்றுமே தெரியாதவள் மாதிரி இருந்திட்டு அவனுக்கு ஒண்டு எண்டதும் எவ்வளவு வேகமா அவன் கைய பிடிச்ச.’ அவளே அவளைக் கேலி செய்து சிரித்துக்கொண்டாள்.
அப்போது உணராத அவனின் தேகச் சூட்டை இப்போது அவளின் உள்ளங்கை உணர்வது போலிருக்க, சரிந்து படுத்து அந்தக் கையை கன்னத்துக்கு கீழே வைத்துக்கொண்டாள். அவனது அந்தச் சூடு உள்ளங்கையில் இருந்து கன்னத்துக்கு பரவுவது போலிருந்தது.
‘ஒண்டும் மனம் விட்டு கதைக்கவே இல்ல. இதுல அவரிட்ட சொல்லட்டாம் அவர் வந்து கூட்டிக்கொண்டு போவாராம். டேய் லூசா? நீ யாரடா எனக்கு? அத சொன்னியா? சொல்ல வேண்டியதை சொல்லேல்ல.. இதுல இனி நான் சுரேந்தரோட போக கூடாது எண்டு மிரட்டல். கோபம் வார அளவுக்கு மண்டைக்க ஒண்டும் இல்ல. இவர் அதட்டுவாராம். நாங்க அடங்கி நிக்கோனுமாம். போடா விசரா!’
அவனிடம் கூட ‘உங்களுக்கு விசரா?’ என்று கேட்டது நினைவில் வந்தது. ‘தைரியம் தான்டி உனக்கு. பளார் எண்டு கன்னத்தில தந்திருந்தான் என்றா தெரிஞ்சிருக்கும்.’
‘அடிப்பானாமா என்னை? அவ்வளவு தைரியம் இருக்கா அவனுக்கு! முடிஞ்சா அடிடா பாப்பம்?’ நினைவுகளில் அவனிடம் மல்லுக்கட்டினாள்.
கண்களை மூடிக்கொண்டு இதழோரம் மலர்ந்திருந்த சிரிப்புடன் அவன் நினைவுகளில் மிதந்து கிடந்த அந்தத் தனிமை வெகு வெகு அழகாக இருந்தது. இப்படியே நீண்டுவிடாதா அவளின் தனிமையும் அந்த இனிமையும். வேறு ஒன்றுமே வேண்டாம்! எதுவும் வேண்டாம்! அவனும் அவளும்! அவர்கள் சந்தித்துக்கொண்ட அற்புதமான தருணங்கள்.. அப்போது கண்ணால் பேசிக்கொண்ட ஆயிரமாயிரம் இனிமையான பேச்சுக்கள்.. அவர்களுக்குள்ளான அந்த அழகான நினைவுகள் மட்டுமே போதும்! காலம் முழுமைக்கும் வாழ்ந்துவிடுவேன். சுகமான மயக்கத்தில் உடல் அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது.
அப்போ படிப்பு? திடீரென்று கேள்வி வர, ‘படிப்பும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். அவன் நினைவுகளே போதும்!’ தலையணையை கட்டிக்கொண்டு உதட்டில் மலர்ந்திருந்த சிரிப்போடு புரண்டவள் அப்படியே உறைந்தாள்.
‘இப்ப என்ன நினைத்தோம்?’ பட்டென்று விழிகளைத் திறந்தவள், பதறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நிலா? படிப்பு வேண்டாமா உனக்கு? அகில இலங்கையின் முதல் ரேங்க் வேண்டாமா? உன் கனவுகள் ஒன்றுமே உனக்கு வேண்டாமா?
ஒருவன் மீது மனம் சாயத் தொடங்கிய அன்றே கல்வி கசக்கத் தொடங்கிவிட்டதே! இதை இன்னும் அனுமதித்தால்? அனைத்தையும் மறந்துவிடுவாளோ? பயந்துபோனாள்.
இந்த யோசனைக்கு மத்தியிலும் கை தன்பாட்டுக்கு ஃபோனை எடுத்துப் பார்த்தது. அவனிடமிருந்து பதிலே இல்லை. மனதில் கவலை அப்பிக்கொண்டது. மாமாவோடுதான் வந்தேன் என்று அனுப்பி சமாதானப்படுத்துவோமா? என்று யோசித்தாள்.
சமாதானப்படுத்தி?
இந்தக் கவலை, தடுமாற்றம், சலனம் இதெல்லாம் தேவையா உனக்கு? என்று மூளை மீண்டும் கேட்டது.
ஏற்கனவே அவனுக்கு இடம் கொடுத்துவிட்டாள் என்றுதான் இன்றைய மாலைச் சம்பவம் உறுதிப்படுத்திவிட்டது. இப்போதைய கோபம் கூட அவள் அவனிடம் எடுத்துக்கொண்ட அதீத உரிமையால் உண்டானது! அவள் அவளின் எல்லையில் நின்றிருக்க அவனும் தன் எல்லையில் நின்றிருப்பான். ஆனால், அவள் மனம் அவனிடம் வீழ்ந்ததும் சாய்ந்ததும் அவளை மீறி நடந்துவிட்டவை. காப்பாற்ற முதலே களவுபோயிற்று! இனி என்ன செய்வாள்?
மீண்டும் அவள் வசப்படுமா இதயம்? இல்லை மாட்டேன் என்று மறுத்துக் கத்தியது உள்ளம்!