யாழினிக்கு ரஜீவனின் மாற்றம் குழப்பத்தை உண்டாக்கிற்று. அன்று அண்ணியின் வீட்டில் வைத்து அவன் ஒன்றும் காதலைச் சொல்லிவிடவில்லைதான். என்றாலும், அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று அவள் மனது உணர்ந்ததே. அது பொய்யா?
அதன்பிறகு பலமுறை அண்ணி வீட்டில் வைத்துக் கண்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவளைப் பார்ப்பதையே முற்றிலுமாகத் தவிர்த்தவனை எண்ணி மிகவுமே கவலையுற்றாள். அதற்கிடையில் அப்படி என்ன நடந்தது?
அது தெரியாதபோதும் தன் மனத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.
என் இதயம் வந்ததா
தன் நிலமை சொன்னதா
இந்தக் காதல் புரியுதா
நான் தொலைந்தேன் மீட்டு தா
உன்னை நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உன் காதல் மட்டும் வேண்டும்மென்று யாசிக்கிறேன்
இப்படிப் புலனத்தில்(வாட்ஸ் அப்) தினமும் பாடல்களை ஏற்றிவிட்டாள். திருமணத்துக்கான வயது அவர்களுக்கு இல்லை. ஆனால், என்றைக்கும் நான் மாறமாட்டேன், உனக்காகவே காத்திருக்கிறேன் என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தாள்.
பிரமிளாவுக்கு ஐந்தாம் மாதம் தொடங்கியிருந்தது. அந்த வயிற்றோடு சேலையைக் கட்டிக்கொண்டு கல்லூரியில் எட்டு மணி நேரங்கள் பாடமெடுத்துவிட்டு வருவதற்குள் முற்றிலுமாகவே களைத்துப் போய்விடுவாள். அதற்கு இதமாகச் சத்தான உணவுகளையும் முறையான ஓய்வையும் கொடுத்து, அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வார் செல்வராணி.
தன்னோடு அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை என்று தெரிந்தும், “இப்பிடி உன்னையே வருத்திப் படிப்பிக்கோணும் எண்டு கட்டாயமில்லை பிரமி. இப்ப நிண்டுட்டு பிள்ளை பிறந்த பிறகு வேலைக்குப் போ!” என்று அவன் அழுத்திச் சொல்லியும் காதிலேயே விழுத்தவில்லை.
அன்றும் கல்லூரியால் வந்து நன்றாக உறங்கிப் போயிருந்தவளைக் கீழிருந்து வந்த குரல்கள் எழுப்பின. அதுவும் யாழினி அழுவது போல் தெரிய, எழுந்து முகம் கழுவிக்கொண்டு கீழே வந்தாள்.
கௌசிகனும் அங்கே இருப்பதைக் கண்டு ஆச்சரியமாயிற்று.
மாமியாரிடம் என்னவென்று விசாரித்தாள். கம்பஸில் யாரோ மூன்றாமாண்டு மாணவன் பிரச்சனை கொடுக்கிறானாம் என்று கலக்கத்துடன் பகிர்ந்துகொண்டார் அவர்.
“நீ ஒழுங்கா இருந்திருக்க எவனாவது வாலாட்டி இருப்பானா? ஃபிரண்ட்ஸ் எண்டு சொல்லிக்கொண்டு ஊர்சுத்துறது. கடை கடையா ஏறி மணிக்கணக்கா சாப்பிடுறன் எண்டு சொல்லிக்கொண்டு பல்லைக் காட்டுறது. இதுக்குத்தான் அண்ணா, ட்ரைவிங் இப்ப பழக்கத் தேவையில்லை எண்டு சொன்னனான். கேக்காம நீங்கதான் பழக்கிவிட்டீங்க. இவள் ஸ்கூட்டில பெட்டையலோட சேர்ந்து கூத்தடிச்சிருப்பாள். அவனுக்குக் கண்ணுக்க குத்தியிருக்கும். சொல்லு, அவன்ர பெயர் என்ன? எங்க இருக்கிறான். ஆரின்ர தங்கச்சியோட சேட்டை விட்டிருக்கிறான் எண்டு காட்டுறன்!” என்று துள்ளிக்கொண்டிருந்தான் மோகனன்.
அதிர்ந்துபோனாள் பிரமிளா. கூடப்பிறந்த தங்கை குறித்தான இவர்களின் எண்ணப்போக்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது? ஒருவிதத் திகைப்புடன் கணவனைப் பார்த்தாள். அவன்தான் மோகனனை விசாரிக்க விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று, யாழினியின் மீதே படிந்திருந்த அவனுடைய கூர் விழிகள் உணர்த்திற்று!
ஒருவித ஆத்திரம் பொங்க, “அண்ணனும் தம்பியும் அவளை நிம்மதியா படிக்க விடாமச் செய்யப் போறீங்களா?” என்று கணவனை நோக்கிக் கேட்டாள் பிரமிளா.
விசாரணை நடந்துகொண்டிருக்கையில் இடையில் தலையிட்டுப் பேசியது பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் புருவச் சுளிப்புடன் அவளைப் பார்த்தான் கௌசிகன்.
மோகனனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ஆண்களின் விசயத்தில் பெண்கள் தலையிடுவது அந்த வீட்டில் அனுமதிக்கப்படாத ஒன்று! தமையனுக்கு முன்னால் அவளிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாமல் அடக்கிக்கொண்டு நின்றான்.
“அவள் அந்தக் கம்பசில இன்னும் ரெண்டு வருசம் படிக்கோணும். இப்பவே ரெட் மார்க் ஆனா சும்மா எல்லாருக்கும் காட்சிப் பொருளாகவேண்டி வரும்.”
“வரட்டும்! இவளின்ர கையப் பிடிச்சவன்ர கையவே உடச்சு எறியிறன். அப்பதான் இனி எவனும் வாலாட்ட மாட்டான். எங்கட தங்கச்சியோட சேட்டை விட்டா என்ன நடக்கும் எண்டு தெரிய வேண்டாமா?” என்னவோ உலகத்தில் இல்லாத தங்கையை வைத்திருப்பதுபோல் துள்ளினான் மோகனன்.
பிரமிளாவுக்கு அவனின் இந்தக் கோபம் தங்கை மீதான பாசமாகப் படவில்லை. மாறாக, ஊருக்குள் தன் பலத்தைக் காட்டுவதற்குக் காத்திருந்து, சிறிதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் அதைப் பயன்படுத்துவது போல்தான் தோன்றிற்று.
கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன நடந்தது எண்டு முழுசா சொல்லு யாழி!” என்றாள் பிரமிளா.
அன்றைக்குக் காதலைச் சொன்னவன் அடிக்கடி அவளிடம் வந்து யோசித்தாயா என்று கேட்டுக்கொண்டே இருந்தான். இன்று எந்தப் பிசாசு அவனுக்குள் புகுந்ததோ, அவனைக் கடந்து ஓடிவர முயன்றவளின் கையைப் பற்றி, பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றுவிட்டான்.
பதறிப் பயந்து கையை இழுத்துக்கொண்டு ஓடிவந்தவளுக்கு அழுகையை அடக்கவே முடியாமல் போயிற்று. அன்னையிடம் சொல்லிக்கொண்டு இருக்கையில் அது மோகனனின் காதில் விழுந்திருந்தது.
“ஆக, உனக்கு இப்பவும் எங்களிட்டச் சொல்லுற எண்ணம் இருக்கேல்ல, என்ன?” என்ற பெரிய தமையனின் குரலில் அவளின் மேனி வெளிப்படையாகவே நடுங்கிற்று. வார்த்தைகள் வராமல் அன்னையையும் அண்ணியையும் பயத்துடன் பார்த்தாள்.
“அங்க என்ன பார்வை! என்னைப் பார்!”
“கடவுளே! ஏன் அவளைப் போட்டு இப்பிடி அதட்டுறீங்க? மெல்ல விசாரிங்கோவன்.” அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் பிரமிளா.
அதுவரை நேரமும் நட்டநடு ஹாலில் குற்றவாளியாகத் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவள் பிரமிளா அணைத்துக்கொண்டதும் முற்றிலுமாக உடைந்தாள்.
“எனக்குப் பயமா இருந்தது அண்ணி. ரஜீவனுக்கு மாதிரி அவனையும் அடிச்சுப்போடுவினம் எண்டு. அதுதான் சொல்ல இல்ல.” தமையனின் கேள்விக்கு அண்ணியிடம் பதில் சொன்னாள் அவள்.
ஆக, எல்லாவற்றுக்கும் தானே காரணமாக இருந்துவிட்டு அவளை அதட்டுவது! இவனை! சினம் வந்தாலும் அடக்கி யாழினியிடம் திரும்பினாள்.
“முதல் நீ என்னத்துக்கு அழுகிறாய்? அவனுக்கு முன்னாலயும் அழுதியா?” என்றாள் கண்டிக்கும் குரலில்.
எப்போதுமே அவளுக்குப் பக்கபலமாக இருப்பவள் அண்ணிதான். அந்த அண்ணியே கோபம் காட்டவும் இன்னும் கண்ணீர்தான் வந்தது.
“பயம் வந்தா அழுகை வரும்தானே அண்ணி.”
“பயம் வந்தா அழுகை வரும்தான். ஆனா பயம் ஏன் வருது? அவன் விரும்புறன் எண்டு சொன்னா எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை எண்டு சொல்லவேண்டியது தானே. நீ முதல் அதைச் சொன்னியா?”
அச்சத்துடன் பார்வை தமையனிடம் சென்றுவர இல்லை என்று தலையாட்டினாள். நொடியில் அவனின் உடல்மொழியில் உண்டான கடுமையில் பிரமிளாவின் பின்னே மறைந்தாள் சின்னவள். பார்வையாலேயே அவனை அடக்கி விட்டு, அவளை முன்னே கொண்டுவந்து, “ஏன்? உனக்கும் அவனில…” என்று இழுத்தாள் பிரமிளா.
“ஐயோ அண்ணி இல்ல இல்ல! எனக்கு அவனுக்குப் பதில் சொல்லவே பயமா இருந்தது. அதுதான் அவன் நிக்கிற பக்கமே போறேல்ல. இண்டைக்குப் பிடிச்சிட்டான். பதில் சொல்லப்போறியா இல்லையா எண்டு கேட்டு அதட்டினவன்.”
“அப்பயாவது(அப்போதாவது) சொன்னியா?”
“இல்ல. ஓடி வந்திட்டன்.” தலை தானாக நிலம் பார்க்க உள்ளே போன குரலில் சொன்னாள்.