“உன்ர தங்கச்சி முதல் ரேங்க் வரோணும் என்றால் அவளுக்கு நீயும் சொல்லிக்கொடுத்து வரவை. அதவிட்டுட்டு இன்னொரு பொம்பிளை பிள்ளையின்ர மனதை குழப்பி அவளின்ர படிப்பை குழப்பி, லட்ச்சியத்தை நசுக்கி எதிர்காலத்தை நாசமாக்கி அவளின்ர பாவத்தை ஏன்டா வாங்குறாய்? அவளை நிம்மதியா படிக்கவிடு. இங்கபார், நான் வாயால சொல்லுறது இதுதான் கடைசிமுறை. திரும்பவும் உனக்கு அடிச்சு உன்ர வன்மத்தை வளத்துவிடுறதுல அர்த்தமில்லை எண்டு விடுறன். இனியும் நீ ஏதாவது செய்த எண்டு வை; அதுக்குப்பிறகு காலம் முழுக்க அழுவ! அழ வைப்பன். உனக்கும் குடும்பம், தங்கச்சி எல்லாம் இருக்கு. மறந்திடாத! உண்மையான ஆம்பிளையா இருந்தா சாலஞ்ச் பண்ணு. அவளும் படிக்கட்டும். நீ உன்ர தங்கச்சிய படிக்க வை. பாப்பம், யாரு முதல் ரேங்க் எண்டு. மனுசனா இருந்தா இந்த சவாலுக்கு வா. இல்ல முதுகுல குத்துற வேலைதான் பாப்பன் என்டா இனி முடிஞ்சா குத்திப்பார்! உனக்கு முதுகே இல்லாம செய்றன்!” என்று அவன் சொல்லக் சொல்ல,
அவளுக்காக இத்தனை தூரம் யோசித்தானா? அவளின் எதிர்காலம் மீது, லட்சியம் மீது இவனுக்கு இத்தனை அக்கறையா? விழிகள் விரிய செந்தூரனையே பார்த்திருந்தாள் கவின்நிலா.
“நான் ரெடி இந்த சவாலுக்கு; பாப்பம் அவளா என்ர தங்கச்சியா எண்டு.” என்றான் அவனும்.
“அது!” என்றான் செந்தூரன். “இப்பதான் நீ மனுஷன்!” என்று சொன்னவன், அவன் சட்டைப் பையிலிருந்த ஃபோனைத் தானே எடுத்தான்.
“அது என்ர ஃபோன்!” சினத்துடன் பறிக்க அவன் முயல, விடாமல் தடுத்துவிட்டு, “நாளைக்கு கடைல வந்து வாங்கு!” என்றான் அவன்.
“விளையாடாத. இதுல முக்கியமான நம்பர்ஸ் எல்லாம் இருக்கு.”
“டோன்ட் ஒர்ரி மச்சி. உனக்கு முக்கியமானது எல்லாம் இருக்கும். அதே மாதிரி உனக்கு முக்கியமில்லாத ஒண்டும் இருக்காது. ஓகே!” என்றான் இலகுவாக.
ஒன்றும் செய்ய இயலாமல் துஷ்யந்தன் நடையை கட்ட, “நீயும் நட! இனி இந்தப் பிரச்சனையும் வராது.” என்றான் துஷ்யந்தனின் ஃபோனிலேயே பார்வையை பதித்து.
ஆசையா ஒரு வார்த்தை கதைக்கமாட்டானாமா? மனம் ஏங்கிப்போயிற்று அவளுக்கு! போ எண்டு துரத்துறான். ஏக்கத்தோடு அவனைப் பார்க்க, அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான் அவன்.
அப்போதுதான், அவ்வளவு நேரமும் அவன் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்தாள். ஆத்திரத்தில் கையைப் பிடித்து முன்னுக்கு இழுத்தத்தைத் தவிர அவள் புறமே அவன் திரும்பவில்லை. கண்ணோடு கண் பார்க்கவே இல்லை. அது உரைத்தக்கணம் கண்களில் நீர் கோர்த்தது.
அவள்தான் அவனை விலக்கிவைத்தாள். ஆயினும் அவனின் விலகல் உயிரை வதைத்தது.
மெல்ல நடந்துவந்து அவன் காரத்தைப் பற்றினாள். ஒருகணம் அசைவுகள் எதுவுமற்று நின்றுவிட்டு கையை இழுத்துக்கொண்டான் செந்தூரன்.
“ஏன்?” சுருக்கென்று நெஞ்சை தைத்துவிட்ட வலியோடு அவன் முன்னால் வந்துநின்று கேட்டாள்.
சரக்கென்று திரும்பியவனின் கண்களில் அத்தனை சீற்றம். “கண்ணுக்கு முன்னால பாக்கேக்க கைய பிடிக்கிறதும் பிறகு ஓடி ஒளியிறதும் எண்டா பிடிக்காத. இப்ப நீ பிடிச்சா சாகிற வரைக்கும் நான் உன்ன விடமாட்டன். நல்லா யோசிச்சு முடிவு செய்திட்டுப் பிடி!”
அவனது கடுமையில் அவள் இதழ்கள் அழுகையில் துடித்தது.
“உன்ர பாதைல என்ர ஆசை தடைக்கல்லா வந்திடக்கூடாது, உன்னைவிட்டு முழுசா விலகோணும் எண்டு நானே முடிவு செய்த நேரம் நீயாத்தான் வந்து என்ர கைய பிடிச்சனி. மனசுக்கு நெருக்கமா வந்து என்ன விட்டுப் போகாதீங்கோ என்று சொன்னமாதிரி இருந்தது. இனி விடமாட்டன் எண்டு நான் முடிவு செய்த நேரம் கண்ணுல கூட படாம ஓடி ஒளிஞ்சுபோய்ட்டாய். ஏன் இந்த விலகல் என்று காரணம் கூட நீ சொல்லேல்ல. ஓகே! பக்கத்தில பாத்ததும் மனம் சலனப்பட்டிருக்கும். தூரத்துல போயிருந்து நிதானமா யோசிக்கேக்க படிக்காதவன், பழைய ஃபோன் திருத்திறவன் எல்லாம் எனக்குத் தகுதியானவன் இல்லை எண்டு நினைச்சிருப்பாய். அதுதான் ஓடி ஒளிஞ்சிட்டாய் போல எண்டு நானும் முடிவு செய்து விட்டுட்டன். இப்ப திரும்ப வந்து கையைப் பிடிக்கிற. நான் என்னெண்டு இதுக்கு அர்த்தம் எடுக்கிறது? ஒவ்வொரு முறையும் நான் எடுக்கிற முடிவை நீ மாத்திக்கொண்டே இருக்கிறாய். உனக்கு எப்படியோ எனக்கு இது சரிவராது. இதுதான் எண்டு மனம் சொன்னா சாகிற வரைக்கும் மாறமாட்டன்!” என்றான் அவன் தெளிவாக.
துடித்துப்போனாள் கவின்நிலா. என்னவெல்லாம் சொல்கிறான் அவளைப்பற்றி. ஓடினாளாம், ஒளிந்தாளாம். ஒன்றை முடிவு செய்தால் அவன் மாறமாட்டானாம். அப்போ அவள் மாறுவாளாமா? அப்படித்தானே சொல்கிறான். பொலபொல என்று கண்ணீர் கொட்டியது. உள்மனம் வேறு, நேசம் இருந்தும் விலகினாய் தானே என்று சந்தர்ப்பம் பார்த்துக் குத்தியது.
“எவ்வளவு மோசமா என்னைப்பற்றி நினச்சு இருக்கிறீங்க?”
கண்ணீரோடு கேட்க, பதில் எதுவும் சொல்லாது முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்.
“என்ர மனசுக்கு உங்கள பிடிச்சிருந்தது உண்மைதான். நான் விலகிப்போனதும் உண்மைதான். ஆனா, நீங்க சொன்னமாதிரி நீங்க வேண்டாம்; நீங்க படிக்கேல்ல எண்டு இல்ல. இந்தக் காதல் இப்ப எனக்கு வேண்டாம் எண்டுதான் விலகினான். உங்களைப் பிடிச்ச அந்த ஒரு நாளிலையே என்னால படிக்க முடியேல்ல. உண்மைய சொன்னா படிக்கப் பிடிக்கேல்ல. உங்களையே நினைச்சுக்கொண்டு கண்ண மூடிக்கொண்டு கனவுல மிதக்கத்தான் ஆசையா இருந்தது. கனவுல என்னென்னவோ அழகான கற்பனைகள். அப்படியே கிட எண்டுதான் மனம் சொன்னது. அப்படிக் கிடந்தா என்ர படிப்பு? என்னை நம்பிக்கொண்டு இருக்கிறவேக்கு என்ன பதிலைச் சொல்லுவன் நான்? தப்பித்தவறி ரேங்க் பின்னுக்குப்போனா என்னால அதத் தாங்கவே முடியாது. அந்தப் பயத்திலதான் இந்தக் காதலே வேண்டாம் எண்டு முடிவு செய்தனான். அதுக்குப்போய்.. எவ்வளவு சொல்லீட்டிங்க.?”
அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை அவன்.
ஆனால், அலைபாய்ந்துகொண்டிருந்த அவள் உள்ளம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது! அத்தனை நாட்களும் மனதை மூளை வென்றுகொண்டிருந்தது. இன்று அத்தனைநாள் கோபத்தையும் தீர்த்துக்கொள்வது போல் மூளையின் அத்தனை கட்டளைகளையும் தூக்கி எறிந்துவிட்டு மனம் வென்றது. அதுதான் காதல் என்றானது. சாதாரணக் காதல் அல்ல! இனிமேல் மிகுதி வாழ்க்கை அத்தனைக்கும் அவன்தான் என்று அடித்துச் சொல்லிய காதல். ‘உன்னை மட்டும் பிடுங்கிக்கொள்வதல்ல காதல். உன் லட்சியங்களை நிறைவேற்றி உன் எதிர்பார்ப்புக்களை பூர்த்தியாக்கி உன்னையும் என் சொந்தமாக்கிக் கொள்ளும் காதல் தான் என்னுடையது’ என்று அவன் காட்டிய காதல். அந்தக் காதல் தந்த அபரிமிதமான நம்பிக்கையினால் மூளையின் முடிவுகளைத் தூக்கி எறிந்தாள் கவின்நிலா. கன்னங்களை நினைத்திருந்த கண்ணீரைக் கரங்கள் இரண்டையும் கொண்டு துடைத்துவிட்டு நிமிர்ந்து சொன்னாள்.
“நீங்க என்ன நினைச்சாலும் சரிதான். எனக்கு உங்களப் பிடிச்சுத்தான் இருக்கு. இன்றைக்கு இல்ல அன்றைக்கே. இதுல மூழ்கி படிப்பை விட்டுடுவேனோ எண்டு பயமா இருந்தது. அந்தப் பயம் அனாவசியம் எண்டு நீங்க காட்டிட்டீங்க. என்ர கனவு நிறைவேற நீங்களும் எனக்குத் துணையா இருப்பீங்க என்ற நம்பிக்கை இண்டைக்கு வந்திருக்கு. அந்த நம்பிக்கைல சொல்லுறன், நீங்க கைவிட்டாலும் இந்தக் கையைத் தவிர வேற எந்தக் கையையும் நான் பிடிக்கமாட்டன்.” அவன் கரத்தை அழுத்தமாகப் பற்றிச் சொல்லிவிட்டு அவள் விலகி நடக்க, அசந்துபோய் நின்றுவிட்டான் செந்தூரன்.
எத்தனை அழுத்தமாய் ஆணித்தரமாய் தன் மனதைச் சொல்லிவிட்டாள்!
பிறகுதான் அவள் போகிறாள் என்பது உரைக்க, வேகமாய் வந்து அவள் முன்னால் நின்றிருந்தான். அதுவும் முகம் முழுக்கச் சிரிப்போடு.
அப்போதும் அவனை சுற்றிக்கொண்டு நடக்க முனைய, அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
“ஒரு.. தேத்தண்ணி வித் செந்தூரன்?” உதடுகள் சிரிப்பைச் சிந்த துள்ளளோடு கேட்டான்.
விளங்காமல் அவள் பார்க்க, பட்டெனக் கண்ணடித்தான் அவன்.
‘கடவுளே.. கோபத்தைக் கூட கொஞ்சநேரம் வச்சிருக்க விடமாட்டான்…!’
“காபி வித் டிடி எண்டு சொன்னாத்தான் உங்களுக்கு எல்லாம் விளங்குமா?” அவன் கேட்ட அழகில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
‘கள்ளன்! இவனுக்கு சிரிக்கக்கூடாது!’ அடக்க முடியவில்லை அவளால்.
‘இவ்வளவு நேரமும் அவளைப்பற்றி எவ்வளவு கதைச்சான். கடுகடு பூனை மாதிரி நிண்டுட்டு புன்னகை அரசனா மாறினதும் நானும் பல்ல காட்டோணுமோ? போடா மாட்டன்!’
முகத்தை திருப்பிக்கொண்டு, “கைய விடுங்கோ!” என்றாள் கோபமாக.
“தேத்தண்ணி வித் செந்தூரனுக்கு ஓம் எண்டு சொல்லு விடுறன். அண்டைக்கு மாதிரி பிஸ்கெட்டும் தருவன். நானே ஊத்தியும் தருவன். என்னோட வந்திருந்து குடிச்சிட்டு போறது மட்டும்தான் உன்ர வேல.” பலவிதமாய் ஆசைகாட்டினான்.
அப்போதும் அவள் அசையவில்லை.
“கப்பையும் நானே கழுவுறன். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்!” அதற்குமேல் முடியாமல் சட்டெனச் சிரித்துவிட்டாள் கவின்நிலா.
துஷ்யந்தனிடம் சிங்கம்போல் கர்ஜித்தவன் தன்னிடம் சின்னக்கண்ணனாய் மாறிக் கெஞ்சியது நெஞ்சை அள்ளியது.