அவன் கடைக்குள் காலடி எடுத்துவைத்த கவின்நிலா அங்கு நின்ற கதிரைக் கண்டு தயங்கினாள்.
“ஏன் அங்கேயே நிக்கிற; உள்ளுக்கு வா!” என்று அழைத்துச் சென்றான் அவன்.
இருவரும் இயல்பாய் இல்லை. அதை இருவருமே உணர்ந்திருந்தனர். உதட்டில் உறைந்திருந்த புன்னகையோடு ஆவலாய் அவன் பார்ப்பதும், அவள் கூச்சத்தோடு பார்வையை வேறெங்கோ வைத்திருப்பதும் என்று ரகசிய நாடகமொன்று அவர்களுக்குள் அரங்கேறிக் கொண்டிருந்தது.
உணர்வுகளின் உந்துதலில் ஒருவரின் மனதை மற்றவரிடம் பகிர்ந்துகொண்டது என்னவோ தைரியமாகத்தான். நேரம் செல்லச்செல்ல புதிதாக உருவாகிப்போன பந்தம் மனதுக்குள் பரவசத்தை அலையலையாய் பரப்பிக்கொண்டிருக்க இயல்பைத் தொலைத்திருந்தனர்.
கதிர் என்ன நினைப்பானோ என்று தயங்க, “வாங்கக்கா!” என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் சிரித்த முகமாக வரவேற்றான் அவன்.
செந்தூரன் வந்துவிட்டதால் கதிர் விடைபெற்றுக்கொள்ளவே, தனிமை இருவரையுமே இனிமையாக ஆழத்துவங்கியது. மெல்லச் சென்று அன்று அமர்ந்த இடத்திலேயே இன்றும் அமர்ந்துகொண்டாள். அன்று அவன் யாரோ அவள் யாரோ. இன்று.. உள்ளத்தால் உனக்கு நான் எனக்கு நீ என்று ஒன்றுபட்டிருக்கிறார்கள். அந்த நினைவே ஒரு படபடப்பை உருவாக்கிக்கொண்டிருந்தாலும், அவனுடனான இந்தத் தனிமை இப்படியே நீளவேண்டும் என்றும் ஆசைகொண்டாள்.
அவன் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும், ‘தேத்தண்ணி வித் செந்தூரனை’ அவன் கேட்ட அழகில் உதட்டினில் புன்னகைப்பூ பூத்தது.
தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தவன் முகத்திலும் சிரிப்புத்தான். திரும்பிப் பார்த்தவன் இவளைக் கண்டுகொண்டான்.
“என்ன சிரிப்பு?” பொய் முறைப்பாடு கேட்டான்.
“ஏன் சிரிக்கக் கூடாதா?” அவன் கண்களைச் சந்திக்க வெட்கி எங்கோ பார்த்துக்கொண்டு கேட்டாள்.
“என்னைப் பாத்து சிரிக்கக்கூடாது!”
“நான் எங்க உங்களப் பாத்துச் சிரிச்சனான்?”
“என்ர கண்ணப் பாத்துச் சொல்லு; நீ என்னைப்பாத்து சிரிக்கேல்ல எண்டு.” தேநீர் கரண்டியை அவள்முன்னால் ஆட்டியாட்டிக் கேட்டான் அவன்.
“இல்ல! உங்களப் பாத்து சிரிக்கேல்ல.” அதைச் சொல்லி முடிக்க முடியாமல் அவள் சிரிக்க, “பொய்!” என்றபடி கையிலிருந்த கரண்டியால் அவளின் தலையில் செல்லமாகத் தட்டினான் அவன்.
அந்தக் கணத்திலிருந்து அதுவரை அவர்களுக்குள் இழையோடிக்கொண்டிருந்த மெல்லிய தயக்கம் தானாய் வெளியேறிப் போயிருந்தது.
அன்றுபோலவே இன்றும் தேநீரும் பிஸ்கெட்டும் கொண்டுவந்து வைத்துவிட்டு தானும் அமர்ந்தான் செந்தூரன். இருவர் கண்களும் சந்தித்துக்கொண்டன. இனிய வெட்கம் அவளுக்குள். அதை ரசித்தான் அவன். “குடி!” என்று ஒரு கப்பை அவளிடம் கொடுக்க, மெல்ல வாங்கிப் பருகினாள். யாரோ கடைக்கு வரவும் எழுந்து சென்றவனையே தொடர்ந்தது அவள் விழிகள்.
வந்தவரிடம் சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருந்தான். வாடிக்கையாளர்களிடம் நட்பைக் காட்டுகிறான்; அவளிடம் அதீத காதலைக் காட்டுகிறான்; எதிராளியிடம் முரட்டுத்தனமான கோபத்தைக் காட்டுகிறான். அவனின் அத்தனை பரிமாணங்களும் அவளை வசீகரித்தன.
வந்தவரும் ஏதோ வாங்கிக்கொண்டு போனார். அவள் பார்த்த வரையில் அவன் கடைக்கு வந்தவர் யாரும் வெறுங்கையோடு திரும்பிப் போனதே இல்லை. குறைந்தது ஆடராவது குடுத்துவிட்டுத்தான் போனார்கள்.
“பிறகு சொல்லு; ஸ்போர்ட்ஸ் எல்லாம் முடிஞ்சுதா?”
“ஓ..! முடிஞ்சுது.”
“எப்பவுமே அந்த கிரவுண்ட்டுக்குத்தான் வருவீங்களா?”
“ம்! எங்கட ஸ்கூலுக்கு கிரவுண்ட் இல்லையே. ரோட்டுல போறவாற ஆட்கள் பாக்கிறது ஒருமாதிரி இருக்கும். ஆனா, வேற வழியும் இல்ல தானே.”
“இனி?” உதட்டுக்குள் ஒளிந்துகொண்ட சிரிப்புடன் அவன் கேட்க, என்ன இனி என்று நிமிர்ந்தவளின் முகம் சட்டென்று கதகதத்தது.
தேநீரைப் பருகிக்கொண்டே நகைக்கும் கண்களால் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
மேசையில் விழுந்திருந்த ஒற்றை நீர்த்துளியில் புள்ளியிட்டுக்கொண்டே, “படிக்கோணும்.” என்றாள் அவள்.
“படி!” நகைக்கும் குரலில் அவன் சொல்ல, அந்தப் ‘படி’, படிச்சுக்கொண்டே என்னையும் காதலி என்று சொல்வது போலவே இருக்க, இவளுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.
அவனோ கப்பை வைத்துவிட்டு, “இங்க பார்” என்று மேசையில் ஒரு வட்டம் வரைந்தான். “இது உன்ர மூளை. இத மூண்டா பிரி. ஒரு மூலையில பிஸிக்ஸ பிச்சு பிச்சுப் போடு. கெமிஸ்ட்ரிய இந்தப்பக்கம் கிழிச்சு கிழிச்சு போடு. இங்க சயன்ஸ நல்லா சப்பிப்போட்டு சக்கையா துப்பு. படிப்பு ஓவர்! இனி இதயத்துக்கு வா.” என்றான்.
இப்போது வெற்றிலை வடிவில் இதயத்தை வரைந்தான்.
“இந்த இதயம் முழுக்க செந்தூரனைத் தூக்கி வை. இதுக்கால அங்கையும் இங்கயும் எண்டு நாலஞ்சு வயர் ஓடும் எல்லோ?” என்று தாறுமாறாக நாலைந்து வயர்களைக் கீறினான்.
“அந்த வயருக்க உன்ர அம்மா, அப்பா, அண்ணா, தங்கச்சி, ஆட்டுக்குட்டி மாட்டுக்குட்டி, நாய், பூனை எண்டு இருக்கிற சொந்தம் எல்லாத்தையும் தூக்கிப் போடு. இப்ப காதலும் ஓவர்!”
சிரிப்பை அடக்கமுடியவில்லை அவளால்.
“அவேக்கு மூச்சு முட்டாதா?”
“சே சே!” என்றான் வெகு தீவிரமாக. “நான் அப்பப்ப சுருங்கி விரியேக்க அவே மேலேபோய் கீழ வருவீனம். அப்ப மூச்சு எடுத்து விடுவீனம். அவே நிம்மதியா வாழுறதுக்கு நான் பொறுப்பு. நீ என்ன மட்டும் இதயம் முழுக்க வச்சிரு.” என்றான்.
அவள் சிரிப்போடு அவனையே பார்த்திருக்க அவளின் கரத்தைப் பற்றினான். “விளையாட்டா சொன்னாலும் இதுதான் உண்மை. இனி நீ என்ர சொந்தம். உனக்கு எப்பவும் துணையா நான் இருப்பன். கடைசிவரைக்கும்.” என்றான் ஆத்மார்த்தமான குரலில்.
சட்டென்று கண்கள் கலங்கிப்போயிற்று அவளுக்கு. இவனையும் இவன் நேசத்தையும் தானே விலக்கி வைத்தாள். அவன் மீதான நேசம் அவளின் எதிர்காலத்துக்கு தடைக்கல்லாக அமைந்துவிடுமோ என்று அவள் அஞ்ச, அவனோ என் நேசத்தோடு உனக்குத் துணையாக நான் வருகிறேன் என்கிறான். ஒருமுறை அவன் மார்பில் சாய்ந்து அழுதுவிட வேண்டும் போலாயிற்று.
அவளை உணர்ந்தவனாக அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தான் இதமாக. விரல்களை ஆசையாசையாக வருடினான். கூச்சத்தில் இழுத்துக்கொள்ளப் பார்த்தவள் விடாமல், தன் பாக்கெட்டில் இருந்த கைச்செயினை எடுத்து அவள் கரத்தில் அணிவித்தான். அவள் தேகமெங்கும் சிலிர்த்தோடியது. அறுந்துபோயிருந்த செயினை ஓட்டியிருந்தான். அதனோடு கூடவே தொங்கிக்கொண்டிருந்த பிறை ‘நிலா’ ஒன்றை, பக்குவமாய் ‘எஸ்’ ஒன்று தாங்கியிருந்தது.
கவிதைபோல அவளைத் தன் சொந்தமென்று சொல்லாமல் சொன்னவனின் நேசத்தில் கரைந்து உருகிக்கொண்டிருந்தாள் கவின்நிலா. மனக்கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல ஆட்டம் காணத்துவங்கியது.