நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் எண்ணி எட்டு வாரங்களில் பரீட்சசை என்கிற அளவில் நெருங்கியிருந்தது.
அந்த வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் வெகு தீவிரமாகத் தங்கள் படிப்பை ஆரம்பித்திருந்தனர். சிலபஸ் முடிக்கப்பட்டிருக்க, மீட்டல்கள், பரீட்சைகள், முந்திய வருடங்களில் நடந்த ‘மாதிரி வினாத்தாள்களை’ செய்து பார்த்தல், செமினார் என்று அவர்களின் மூளைக்கு வேலை நடந்துகொண்டே இருந்தது.
டியூஷனிலோ பள்ளிக்கூடத்திலோ தினம் ஒரு பரீட்சை அவர்களை பரீட்சித்துக்கொண்டே இருந்தது.
அன்று மாலை செந்தூரன் வீட்டுக்கு வரும்போதே சசி யாருடனோ ஃபோனில் கதைத்துக்கொண்டிருந்தாள்.
‘இவள் கதைக்கிறது ஊருக்கே கேக்கும்.’ என்று இவன் எண்ணும்போதே, “எனக்கு அந்த ஆன்சர் வருதே இல்லையடி கவி.” என்று அவள் சொல்வதிலேயே யாரோடு கதைக்கிறாள் என்று தெரிய உதட்டோரம் அழகிய புன்னகை அவனிடம்.
அன்று மனங்களைப் பரிமாறிக்கொண்டதன் பிறகு அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை. ஃபோனிலும் உரையாடிக் கொண்டதில்லை. முன்னர் அவளை வெறுப்பேற்ற என்றே வெளியில் நிற்பவன் அதையும் நிறுத்திக்கொண்டான். அவள் டியூஷன் போகும் நேரங்களில் கடையின் உள்ளிருந்தே பார்த்துக்கொள்வான். அவ்வளவுதான்.
அவள் முதல் மாணவியாக வரவேண்டும் என்பது அவனுடையதும் பிரதான பிரார்த்தனை ஆகிப்போனது. இப்போது தங்கை அவளோடு கதைத்துக்கொண்டிருக்கிறாள் என்று அறிந்தபோது, வாங்கி எப்படி இருக்கிறாய் என்று கேட்க ஆவல் எழுந்தாலும் அடக்கிக்கொண்டான்.
அவர்களின் உரையாடல் கேட்கும் தூரத்தில் அமர்ந்துகொள்ள, சசியின் குரல் உடைவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. என்னவோ விளங்காமல் அவளிடம் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ப்ச்! ஒண்டும் விளங்கேல்ல! சரியடி வைக்கிறன்.” என்று சொன்னபோது, அழுகையை அடக்குகிறாள் என்று தெரிய, எழுந்து அவளின் அறைக்குச் சென்றான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, மேசையில் கவிழ்ந்துகிடந்து அழுதுகொண்டிருந்தாள்.
“இப்ப என்னத்துக்கு அழுகிறாய்?”
ஒன்றுமே சொல்லாமல் அவள் தேகம் அழுகையில் குலுங்கியது.
“என்ன விஷயம் எண்டு சொல்லு சசி. சொன்னாத்தானே ஏதாவது செய்யலாம்.” இதமாய் என்றாலும் அழுத்திக் கேட்டான்.
நிமிர்ந்து, “எனக்கு ஒண்டும் விளங்கேல்ல அண்ணா. கவியை கேட்டனான்; அவள் சொல்ல சொல்ல விளங்குதே இல்ல. பயமா இருக்கு ஃபெயிலாகிடுவேனோ எண்டு.” என்று அழுத்தவளைப் பார்க்கப் பாவமாகப் போயிற்று.
பரீட்சை நெருங்கிவிட்டதில், நல்ல பெறுபேறுகளைப் பெற்றுவிட வேண்டும் என்கிற எண்ணம், மார்க்ஸ் குறைந்துவிடுமோ என்கிற பயம் எல்லாமாகச் சேர்ந்து மனஅழுத்தம் அவளைத் தாக்குவதை அவனால் உணரமுடிந்தது.
“ஒரு சின்னப் பகுதி விளங்கேல்ல எண்டதுக்காக நீ ஃபெயிலாகிடுவியா? என்ன கதை இது?” என்றான் அவள் மனதில் பதியும் படியாக.
“பயமா இருக்கண்ணா.”
“அதுக்கு அழுதா சரியாகிடுமா? என்ன செய்தா விளங்கும் எண்டு யோசி.”
“கவிட்ட நேரா போய்க் கேட்டா விளங்கிடும் அண்ணா. இனி அவளின்ர வீட்டை போறது எண்டா ஒரு மணித்தியாலம் அநியாயம். வர ஒரு மணித்தியாலம் ஆகும். பக்கத்தில இருந்தாள் எண்டால் நாங்க சேர்ந்து படிக்கலாம். துஷியும் வருவாள். ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொடுத்துக்கொண்டு படிச்சா இன்னும் நல்லம். ஆனா மூன்றுபேரும் மூண்டு திசைல இருக்கிறோம்.”
உண்மைதான்; சேர்ந்து படித்தால் கூடுதலாய் விளங்கும் தான். என்ன செய்யலாம்?
“உன்ர பிரெண்ட்ஸ் என்ர கடைக்கு வருவீனமா? ஓம் எண்டா சொல்லு, நான் அந்த சும்மா கிடக்கிற ரூமை ஒதுக்கித் தாறன். கடை மூண்டு பேருக்கும் ஒரே அளவான தூரம் தானே.” என்றதும், அவள் முகம் பளீரென்று ஒளிர்ந்தது.
“ஓம் என்ன அண்ணா. துஷி வருவாள். கவிய.. அவளின்ர மாமா விடுவாரோ தெரியாது.”
“நீ முதல் கேளேன்!”
அவனுக்கு ஏனோ கவியும் வரமாட்டாள், தூசியும் வரமாட்டாள் என்றுதான் தோன்றியது.
சசி கவியை அழைக்கவும், “மைக்ல போடு.” என்றான்.
“ஏய் கவி, அண்ணா சொல்றானடி..” என்று ஆரம்பித்து விஷயத்தை இவள் சொல்லவும், அவளிடம் பதிலே இல்லை.
ஏன் இல்லை என்று அவனுக்குத் தெரியாதா? ‘அடி கள்ளி! என்னப் பாக்க உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கோ? போக வரேக்க கள்ள கண்ணால தேடத்தெரியும்! பாக்க வரேலாது?’ கொடுப்புக்குள் சிரிப்பை மடக்கியபடி பதிலுக்காகக் காத்திருந்தான்.
“எல்லாரும் சேந்து படிச்சா இன்னும் நல்லமெல்லாடி. கூடுதலா விளங்கும்; மனதிலையும் பதியும்!” அவள் மறுத்துவிடக் கூடாதே என்று அவசரமாகச் சொன்ன தங்கையைப் பார்க்கப் பாவமாய் இருந்தது செந்தூரனுக்கு.
“பயப்படாம வரட்டாம் எண்டு உன்ர பிரெண்டுட்ட சொல்லு; நாங்களும் மனுஷர்தான்” என்றான் இவன் சத்தமாக.
“ஏன் உன்ர அண்ணா என்ன பெரிய ரவுடியாமா? நாங்க பயப்பட.” நகைக்கும் குரலில் அவளும் பதில்கொடுத்தாள்.
“அப்ப வரவேண்டியதுதானே!”
“அப்படி உடனே வாரத்துக்கு நாங்க என்ன அவரை மாதிரி வீட்டுக்கு அடங்காத பிள்ளையாமா?”
‘நானாடி வீட்டுக்கு அடங்குறேல்ல. உனக்கு அடங்கிப்போய் நிக்கிறன் எல்லோ.. நீ இதுவும் சொல்லுவ இன்னும் சொல்லுவ!’ என்று அவன் மனதில் சிணுங்க, “என்னடி நடக்குது இங்க?” என்று வாயைப் பிளந்தாள் சசி.
“உன்ர அண்ணாட்ட சொல்லு, நான் யாருக்குச் சொந்தமோ அவேற்ற கேட்டுட்டுத்தான் முடிவு சொல்லுவனாம் எண்டு!”
சசியை சட்டையே செய்யவில்லை இருவரும். வெகு நாட்களுக்குப் பிறகு மற்றவரோடு கதைக்கக் கிடைத்ததை அனுபவித்தனர். அதில் சசியின் மனதுக்குள் சந்தேக விதை விழுந்துவிட்டிருந்தது.
“எல்லாரும் அவேன்ர வீட்டுக்குத்தான் சொந்தம்.”
“நான் எனக்குச் சொந்தமான ஆக்களுக்குத்தான் சொந்தம்!” என்றாள் அவள்.
‘பார்றா! படிப்ஸ்க்கு இருக்கிற தைரியத்தை!’ அவள் அவனுக்குச் சொந்தம் என்று சொல்லாமல் சொன்னவள் பேச்சில் உள்ளம் குளிர்ந்து அவனுக்கு.
“என்ன சசி, உன்ர பிரென்ட் யாருக்குச் சொந்தமாம்? உனக்கு ஏதாவது தெரியுமா?” வேண்டுமென்றே மாட்டிவிட்டான் செந்தூரன்.
“சசி, உன்ர கொண்ணாட்ட சொல்லு, ஆட்களை கொழுவிவிடுற அவரின்ர ரவுடித்தனத்தை எங்களிட்ட காட்ட வேணாமாம் எண்டு!”
அந்த சசியோ நடுவில் அவளை வைத்துக்கொண்டு வம்பு வளர்த்த இருவருக்கும் பதில் சொல்லாமல் அவர்களை அளவிட முயன்றுகொண்டிருந்தாள். கவின்நிலாவுக்கும் அது புரிந்துபோயிற்று.
“துஷி என்ன சொன்னவள்?” சட்டென்று பேச்சை மாற்றினாள்.
“அவளிட்ட இனித்தான் கேக்கப்போறன். ஆனா வருவாள்.”
“நீ முதல் கேள்!” என்று அவள் சொன்ன விதமே, தன்னைப் போலவே வரமாட்டாள் என்றுதான் அவளும் நினைக்கிறாள் என்று உணர்ந்துகொண்டான் செந்தூரன்.
துஷியைக் கேட்டபோது அவளும் தமையனிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகச் சொன்னாள்.
“இனி இவளவே எப்ப ஓம் எண்டு சொல்லி எப்ப என்ற சந்தேகம் தீர்ந்து..” என்று சசி சலிக்க, “சும்மா சும்மா தொட்டத்துக்கும் சினக்குறேல்ல. அவே ஓம் எண்டு சொல்லாட்டி நான் பைக்ல கூட்டிக்கொண்டுபோய் விடுறன். அவேன்ர வீட்டுல இருந்து படிச்சிட்டு வா.” என்றான் தமையன் ஆறுதலாக.
கவி தாயிடம் கேட்டபோது, “வீடு எண்டாலும் பரவாயில்ல; கடை எண்டு சொல்லுறாய் பிள்ளை, நாலு ஆம்பிளையல் போக வர இருப்பீனம். அங்க பொம்பிளைப்பிள்ளைகள் நீங்க இருக்கிறது சரியா வராதம்மா. ஒன்றில் இங்க எங்கட வீட்ட இருந்து படியுங்கோ இல்ல அவேன்ர வீட்ட படியுங்கோ. வேற எங்கயும் வேண்டாம். மாமாக்கு நேரமில்லாட்டியும் சுரேந்தர கூட்டிக்கொண்டு போகச் சொல்லுறன்.” என்றார்.
அவளுக்கும் அம்மா சொல்லுவதுதான் சரியாகப் பட்டது. எதற்கு வீண் பேச்சுக்களுக்கு இடம் கொடுப்பான். அதுவும் அந்த துஷ்யந்தனுக்கு தெரிந்தால் போதுமே.
“அவள் கேட்ட டவுட்ட மட்டும் கிளியர் பண்ணிப்போட்டு வரட்டா?” என்று வினவினாள்.