அன்று சசியின் பிறந்தநாள். ஸ்டடி ஹாலில் இருந்த அனைவருக்குமே ஒருவர் மூலம் மற்றவருக்கு என்று தெரிந்துவிட அங்கிருந்த எல்லோருமே வந்து வந்து வாழ்த்தினர்.
இப்படி நடக்கும் என்று எதிர்பாராதவள், “பார்ட்டி இல்லையா?” என்று கேட்டவர்களுக்கு கொடுக்க ஒன்றுமே கொண்டுவரவில்லையே என்று உள்ளுக்குள் ஒருமாதிரி ஆகிப்போனாள்.
எப்போதும் பிறந்தநாளுக்கு இரண்டு வாரத்துக்கு முதலே பட்டியலிடத் தொடங்கிவிடும் அவள் பரீட்சையின் பதட்டத்தில் எல்லாவற்றையுமே மறந்துபோயிருந்தாள்.
அண்ணாக்கு ஃபோன் போடுவோமா என்று நினைக்கையில் அவனே அஜந்தனோடு வந்துநின்றான். அதுவும் அவன் கொண்டுவந்த பீட்ஸா பெட்டியை கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடிப்போனாள் சசிரூபா.
“உனக்கு ஃபோன் பண்ணுவமா எண்டு நினைக்க வந்து நிக்கிறாய் அண்ணா.” சந்தோசத்தில் துள்ளிக்கொண்டு சொன்னாள்.
“பாவம் எண்டு வாங்கிக்கொண்டு வந்தனான். டாக்டர் ஆனதும் காச கணக்குப் பாத்து வைக்கிற!”
“போடா டேய்!” சந்தோசமாகத் திட்டினாள். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வான். ஆனால் பேச்சில் மட்டும் சண்டித்தனம். அரவணைப்பாக ஆதரவாகப் பேசும் நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியான முரட்டுத் தமையனை பாசத்தோடு பார்த்தாள்.
முன்னரும் அவனைப் பிடிக்கும்தான். இப்போதெல்லாம் இன்னுமின்னும் பிடித்தது. முன்னரெல்லாம் ஏதாவது கேட்டால் செய்வான் தான். அதற்குள் ஆயிரம் தடவை சீறிவிடுவான். இப்போதோ நாலு மணிக்கு அவள் டியூஷன் போகவேண்டும் என்றால் மூன்றரைக்கே ‘ரெடியா’ என்று கேட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான். கவின்நிலா வீட்டுக்கு தினமும் படிக்கப் போவதற்கு அவளைத் தனியே அனுப்புவதே இல்லை. தன் வண்டியில் தானே கூட்டிக்கொண்டுபோய் கூட்டிவந்தான். அவன் கொழும்பு செல்லும் நாட்களில் கூட ஆட்டோவினை ஏற்பாடு செய்துவிட்டான். அதிகாலையில் எழுந்து அவள் படித்துக்கொண்டு இருக்கையில் தேநீர் ஊற்றிக்கொடுப்பதும் அவன்தான்.
அவனுடைய கடையை வேறு பெரிதாக்கிக்கொண்டிருந்தான். அது இன்னும் கூடுதல் வேலையை கொடுக்க, அதற்கு இடையில் அவளை கூட்டிக்கொண்டு திரிவது என்று சிலநேரங்களில் அவன் முகத்தில் தென்படும் அதீத களைப்பைக் கண்டுவிட்டு, அவனுக்கு மிகுதியான அலைச்சல் என்று உணர்ந்து, “இண்டைக்கு நான் சைக்கிள்ல போறன் அண்ணா.” என்று சொன்னாலும் மறுத்துவிட்டுக் கூட்டிக்கொண்டுபோய் விடுவான்.
என்ன களைப்பாக இருந்தாலும் என்ன வேலையாக இருந்தாலும் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் அவளுக்காக நிற்கும் தமையன் மீது பாசம் சுரந்தது. அவளுக்குப் பரீட்சை நெருங்க நெருங்க வெயிலில் அலைந்து அலைந்து அவன்தான் கறுத்துப்போனான்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” அருகில் வந்த அஜந்தன் கையை நீட்டவும், தமையனோடு வழக்கடித்துக்கொண்டு நின்றவள் இதனை எதிர்பார்க்கவில்லை.
சற்றுத் தயங்கி செந்தூரனை ஒருமுறை பார்த்துவிட்டு மெல்லக் கையைக் கொடுத்து, “நன்றி!” என்றாள்.
“ஒரு சின்ன பரிசு.” கோல்டு கலர் பேப்பரில் சுற்றப்பட்ட, குட்டியாய் ஒரு பெட்டியினை நீட்டினான் அஜந்தன்.
“இல்ல.. இதெல்லாம் என்னத்துக்கு?” அதனை வாங்காமல் தமையனைப் பார்த்தாள் சசி.
அஜந்தனின் முகம் சட்டென்று பொலிவிழந்து போயிற்று. “பெருசா ஒண்டுமில்ல. பயப்படாம வாங்குங்கோ.” என்றான் ஒதுக்கத்தோடு.
வாங்கு என்று செந்தூரனும் சைகையில் சொல்ல, அதன்பிறகே, “நன்றி!” என்று வாங்கிக்கொண்டாள்.
“நல்லா படிச்சு டொக்டரா வரவேணும்!” மனதார வாழ்த்தினான் அஜந்தன்.
சின்னச் சிரிப்போடு தலையசைத்து ஏற்றுக்கொண்டவளுக்கு உள்ளுக்குள் மெல்லிய ஆச்சரியம். தமையனின் நண்பன்தான். என்றாலும் பெரிதாகப் பழக்கமில்லை. இன்றுதான் முதன்முறையாகக் கதைத்திருக்கிறார்கள்.
“எல்லாருக்கும் எடுத்துக்கொடு!” அங்கே மரத்துக்கு கீழே இருந்த பெஞ்சில் பீட்ஸா பெட்டியை வைத்துவிட்டுச் சொன்னான் செந்தூரன்.
“இதுக்குத்தான் கையோட ஒரு ஆளை வேலைக்கு வச்சிருக்கோணும் எண்டு சொல்லுறது.” அந்த மரத்தருகில் நின்றிருந்த கவின்நிலா, எங்கோ பார்த்தபடி காதோர முடியை ஒதுக்குவதுபோல் வாய்க்குள் மெல்ல முணுமுணுத்தாள்.
வந்ததுமே அவளைக் கண்டுவிட்டான் செந்தூரன். ஆனாலும், படிக்கிற இடத்தில் அதுவும் அவளின் மாமா வீட்டில் வைத்து எதுவும் வேண்டாமே என்றுதான் ஆவலை அடக்கிக்கொண்டு நின்றான். அவளோ அவனைச் சீண்டினாள்.
“வீட்டுக்காரனாகப் போறவனை வேலைக்காரன் எண்டு சொல்லுற ஒரே ஆள் நீதான்.”
“வீட்டுக்காரன் ஆக்குறதே வேலைக்காரன் ஆக்கத்தானே.”
“அடிப்பாவி. அப்பிராணி மாதிரி இருந்துகொண்டு என்ன போடு போடுற. வசமா மாட்டுடி என்னட்ட. அப்ப இருக்கு!”
“அத அந்தநேரம் பாப்பம்!” என்றவள் சசி வரவும் அவளோடு சேர்ந்துகொண்டாள்.
பீட்ஸாவின் வாசம் எல்லோரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட, கலகலப்பும் கேலியும் கிண்டலுமாக நகர்ந்துகொண்டிருந்தது பொழுது.
“படிக்கிற பிள்ளைகளைப் பாத்தாலே முகத்தில தெரியும் இல்ல மச்சி.”
எப்போதும்போல தன் வண்டியில் கையைக் கட்டிக்கொண்டு செந்தூரன் சாய்ந்திருக்க, அவனருகில் நின்றிருந்த அஜந்தன் சொல்லிக்கொண்டிருந்தான்.
பள்ளிப்பருவத்தினரைக் காண்பதே அழகுதான். மாமரங்கள் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துநின்று நிழல் பரப்பிக்கொண்டிருக்க, அதன்கீழே ஆண்களும் பெண்களுமாய் நின்று தங்களுக்குள் சிரித்துக் கதைத்து விளையாடுவதைப் பார்த்தால்? இன்னுமே அழகாய் இருக்கும் தானே! அவர்களை ரசித்துக்கொண்டே சொன்னான் அஜந்தன்.
“நமக்குத்தான் அது வரேல்லையே..” என்று சிரித்தான் செந்தூரன்.
“நாங்களும் கொஞ்சம் ஊக்கமெடுத்து படிச்சிருக்கலாமோ எண்டு இப்ப இருக்குடா.”
அவனுக்கும் அதேதான் தோன்றியது. ஆனால், எவ்வளவு வலிந்து அழைத்தும் வராத ஒன்றை என்ன செய்வது?
“படிப்பை மாதிரியே உழைப்பும் அழகுதான் மச்சி. நாங்க உழைக்கிறம். எங்கட குடும்பத்த பாக்கிறம். அத நினை! நமக்கு வராததையும் கைவிட்டு வாறதையும் கைவிட்டுட்டு வீட்டுக்கு சுமையா இருந்தாத்தான் பிழை!”
அங்கே நண்பர்களுக்கு ஒவ்வொரு துண்டுகளாய் பங்கிட்டுக் கொண்டிருந்த சசி திரும்பி, “அண்ணா நீயும் வா!” என்று அழைத்தாள்.
ஒருகணம் தயங்கிவிட்டு, “நீங்களும் வாங்கோ!” என்று அஜந்தனையும் அழைக்க, அவன் முகம் மலர்ந்துபோயிற்று.
“எங்களுக்கு வேண்டாம்; நீங்க சாப்பிடுங்கோ. காணாது எண்டா சொல்லு!” என்றான் செந்தூரன்; தன்னவளை விழிகளால் தழுவியபடி.
‘வாங்கோ..!’ கண்களால் அவள் அழைப்பு விடுத்தபோது, ‘நீங்க சாப்பிடுங்கோ’ என்று அவனும் சின்னத் தலையசைப்பில் சொன்னான்.
“இன்னும் பத்துப்பேர் சாப்பிடலாம். வாண்ணா!” என்று சசிரூபா மீண்டும் அழைத்தும் நகரவில்லை அவர்கள்.
அவர்கள் வரமாட்டார்கள் என்று தெரிந்துபோக, ஒரு பேப்பர் தட்டில் இரண்டு துண்டுகளை வைத்து எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தாள் கவின்நிலா.
“தேங்க்ஸ் சிஸ்!” என்று அஜந்தன் வாங்கிக்கொண்டான்.
செந்தூரனும் தனக்கானதை எடுத்துக்கொண்டு, “தேங்க்ஸ் சி..” என்று இழுக்க, சரக்கென்று நிமிர்ந்து முறைத்தாள் கவின்நிலா.