நிலவே நீயென் சொந்தமடி 14 – 3

அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் இனிமையாக இறங்க அமைதியாகிப்போனாள். சிலநொடிகள் தேநீரை மட்டுமே பருகினர். வார்த்தைகளில் வடிக்க முடியாத பரம சுகமாய் உணர்ந்தனர்.

அவளிடம் பகிர்ந்துகொள்ள, அவளோடு சேர்ந்து திட்டமிட, கதைக்க என்று நிறைய விஷயங்கள் அவனிடம் இருந்தது. அவர்களின் எதிர்காலம் குறித்து, அடுத்த கட்ட வாழ்க்கையின் நகர்த்துதல் குறித்து.. இப்படி நிறைய.

எல்லாவற்றுக்கும் முதலில் அவள் பரீட்சையை எழுதி முடிக்கட்டும் என்று எண்ணியவன் அவள் புறம் திருப்பி, “பிறகு?” என்றான்.

“என்ன பிறகு?”

“எக்ஸாமுக்கு பிறகு என்ன செய்றதா உத்தேசம்?

“காம்பஸ் போகாமல் ரெண்டு மூண்டு கோர்ஸ் முடிக்கோணும் எண்டு பிளான் பண்ணியிருக்கிறன்.”

“எங்க போறதா இருந்தாலும் சசியையும் இழுத்துக்கொண்டு போ.”

“அத நீங்க சொல்லோணுமா?” முறைத்துக்கொண்டு சொன்னாள் அவள்.

“அதுக்கு ஏனடி முறைக்கிறாய்?”

பட்டென்று அவன் கையிலேயே ஒன்று போட்டாள் அவள். “எப்ப பாத்தாலும் ‘டி’ போடுறது. திரும்பவும் சொன்னா வாயிலேயே போடுவன்.”

“அவ்வ்..” கையை தடவிக்கொண்ண்டு, “நீ மட்டும் டா போடுற.” முகத்தைச் சுருக்கிக்கொண்டு அவளிடமே முறையிட்டான் அவன்.

நான் ‘டா’ போட்டா நீங்க ‘டி’ போடுவீங்களோ? அவ்வளவு தைரியமா உங்களுக்கு? எங்க டீ போடுங்க பாப்பம்? இப்ப, இந்த இடத்துல என்ர கண்ணப் பாத்து போடுடா?” என்றபடி அவள் அவனை நெருங்க, வாயை பிளந்து பார்த்திருந்தான் அவன்.

“என்னடி இது? பக்கா ரவுடியா இருக்கிற?” படாரென்று அவன் வாயிலேயே ஒன்று போட்டாள் அவள்.

“திரும்பவும் டீயா? சொல்லுவீங்க? இனிச் சொல்லுவீங்க?” கேட்டுக் கேட்டு அடிபோட்டவளை, அதற்குமேல் தன் ஆசையை அடக்கமுடியாமல் அணைத்துக்கொண்டான் அவன்.

பதறிப்போனாள் அவள். “ஐயோ.. விடுங்க விடுங்க!” அவனிடமிருந்து விடுபட முயன்றுகொண்டே கைகள் இரண்டாலும் அவன் மார்பில் குத்த, “சித்ரவதை செய்றடி ராட்சசி!” என்றபடி விட்டான் அவன். அதற்குள் அவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டிருந்தது.

முறைக்கக் கூட முடியாமல் உடம்பெங்கும் படபடக்க, வேகமாக சைக்கிள் திறப்பை எடுத்துக்கொண்டு புறப்படப்போக, கையைப் பிடித்துத் தடுத்தான் அவன்.

விடுவித்துக்கொள்ள முனைந்தவளின் கரத்தை விட்டுவிட்டு, “தேத்தண்ணிய குடிச்சு முடிச்சிட்டுப் போ. ப்ளீஸ்!” என்றான் கெஞ்சுதலாய்.

அவளுக்கும் அவனோடான அந்தப் பொழுதினை அவ்வளவு விரைவாக முடித்துக்கொள்ள மனமில்லை. மெல்ல கப்பினை எடுத்துக்கொண்டாள்.

“பிறகு..” ஒன்றுமே நடவாவதது போன்று விட்ட இடத்திலிருந்து பேச்சு வார்த்தையை அவன் ஆரம்பிக்க சட்டெனச் சிவந்துபோனது அவள் முகம்.

“பிறகு.. மெடிசின் முடிக்க ஆறு ஏழு வசமாகும்.” இதய சத்திர சிகிச்சை நிபுணி( heart surgeon) ஆகவேண்டும் என்கிற ஆசையில் சொன்னாள்

“ம்ம்!” என்றான் அவன் யோசனையோடு.

“என்ன யோசிக்கிறீங்க? அதுவரைக்கும் வெய்ட் பண்ண மாட்டீங்களா?” அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

“அதுவரைக்கும் ஒருத்தியக் கட்டி வாழுறன். நீ படிச்சு முடிச்சதும் உன்னக் கட்டுறன்.” என்றான் அவன்.

“உங்கள வெட்டுவன் நான்.” என்று படார் என்று அவன் கையிலேயே ஒன்றை போட்டுவிட்டாள் அவள். போட்டபிறகுதான் என்ன செய்தோம் என்று உரைக்க வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். உதட்டில் உறைந்த சிரிப்புடன் அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டவளுக்கு உள்ளே குறுகுறு என்றிருந்தது.

“என்ன சத்தத்தையே காணேல்ல?” அவளை அறிந்தவன் வேண்டுமென்றே கேட்க, ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலையை அசைத்தாள். கப்பைப் பற்றியிருந்த இரண்டு கரங்களிலும் மெல்லிய நடுக்கம். மெல்ல அவளின் விரல்களை பற்றினான். அவள் திரும்பிப் பார்க்க, விழிகளோடு விழிகளைக் கலந்தபடி விரல்களோடு விரல்களைக் கோர்த்து இறுக்கப் பிணைத்து, தன் மார்போடு ஒட்டிக்கொண்டான்.

கவ்விக் கலந்துகொண்ட அவன் விழிகளிலிருந்து பார்வையை அகற்றமுடியாமல் அவள் நிற்க, “என்ர உலகத்தில நீ எனக்கு மிக மிக முக்கியமானவள். உனக்காக எத்தனை வருசமும் நான் காத்திருப்பன். நீ எந்த யோசனையும் இல்லாம நல்லா படி.” என்று அவன் சொன்னபோது, எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளின் தலை அவன் தோளில் சுகமாய் சாய்ந்துகொண்டது.

அவளுக்கு இருந்த ஒரே யோசனை அதுதான். ‘இன்னும் ஐந்தாறு வருடங்கள் காத்திருப்பானா? எப்படிக் கேட்பாள்?’ என்பதுதான். இன்றைய அவன் வார்த்தைகள் அவளின் மனச்சுமையை அகற்றிப்போட அப்படியே சுகமாய்க் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளை அரவணைத்துக்கொண்டு முதுகை வருடிக்கொடுத்தவனுக்குள் பல யோசனைகள். அவளின் வீட்டுக்கு தினமும் போய்வருக்கையில் அங்கு வந்துபோகும் மனிதர்களை; அவர்களின் தோற்றங்களை, கல்விச் செல்வம் கொடுக்கும் மிடுக்கினை, மரியாதையினைக் கண்டிருக்கிறான். அவளின் குடும்பத்துக்கு என்றே இருக்கும் மரியாதை, மதிப்பு, சிறப்பு என்று பார்க்கப் பார்க்க உள்ளே பிரமித்துக்கொண்டே போனாலும், அவர்களின் காதல் ஈடேறுவது அத்தனை இலகுவல்ல என்பதும் நன்றாகவே விளங்கிற்று.

போராடவேண்டி வரும். காத்திருக்க வேண்டி வரும், பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டி வரும். அது எவ்வளவு ஆழமாய் இருக்கும், அவர்களை எவ்வளவு தூரத்துக்குக் காயப்படுத்தும் என்றுதான் தெரியவில்லை. மென்மையான இதயம் கொண்ட அவள் எப்படித் தங்குவாள் என்றும் தெரியவில்லை. அவளுக்கு வலிக்காமல் அவன் வென்றாக வேண்டும்.

கல்வியில் சிறந்த குடும்பத்துப் பெண்ணுக்கும் படிக்காத ஒருவனுக்குமான காதல். அந்தஸ்து முதல்கொண்டு கல்வித் தரம் முதல் அனைத்திலும் பிந்தி நிற்கும் அவனை மாப்பிள்ளையாக்க அவர்கள் மறுப்பார்கள். போராடவேண்டும். ஆனால், பிரச்சனைகள் எந்த ரூபத்தில் எப்படி வரும் என்றுதான் தெரியவில்லை. ஒன்றுமட்டும் நன்றாகத் தெரியும். காதல் கைகூடியது போன்று கல்யாணம் இலகுவாய் கைகூடாது. முடிந்தவரை வேகமாக முன்னேற வேண்டும். அவள் படித்து முடிப்பதற்குள் அவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் வசதியான வாழ்க்கையை என்னால் அவளுக்குக் கொடுக்க முடியும் என்று சொல்லுமளவுக்காவது அவன் உயர்ந்தே ஆகவேண்டும்.

இது எதையும் அவளிடம் சொல்லவில்லை அவன். ‘அவள் படிக்கட்டும், வருகிற பிரச்சனைகளை நான் பாத்துக்கொள்ளுறன். எனக்குத் துணையா இப்படி என்ர தோள்ல சாஞ்சு இருந்தாள் எண்டா போதும்.’ என்றெண்ணியவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவன் கண்களில் தெரிந்த யோசனையைக் கண்டு, “என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.

“பொய் சொல்லாதீங்க. என்னவோ யோசனை தெரியுது உங்கட கண்ணுல.”

“அது.. இந்தக் கடையை பெருசாக்குவம் எண்டு இருக்கிறன். அதுதான் நீ என்ன நினைக்கிற?” என்று அவளின் கருத்தைக் கேட்டான் அவன்.

“சூப்பர் ஐடியாவா இருக்கே..” இருவருமாகச் சேர்ந்து என்னென்ன போடலாம், எப்படி வைக்கலாம் என்று திட்டமிட்டார்கள். நேரமாகவும் விடைபெற்றாள் கவின்நிலா.

“கவனமா போ. நல்லா படிக்கோணும்!” என்று அவன் சொல்ல,

“நீங்களும் கவனமா இருங்கோ. வார கிழமை பிரைவேட் எக்ஸாம் ரிசல்ஸ் வரும். கிஃட் தர ரெடியா இருங்கோ!” என்றவள் சந்தோசமாய் வெளியே வந்து தன் ஸ்கூட்டியை எடுக்க, அதே நேரம் அந்த இடத்தைக் கடந்தது கனகரட்ணத்தின் கார்.

மருமகளைக் கண்டதும், அதுவும் அவள் வாசலில் நின்ற செந்தூரனிடம் சிரித்துக்கொண்டு தலையாட்டி விடைபெறுவதைக் கண்டவரின் புருவங்கள் சுருங்கின.

சசியை இறக்க ஏற்ற வரும்போது கண்ட அவனைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து வைத்திருந்தார். அப்படி அவர் அறிந்துகொண்டவை கொஞ்சமும் திருப்பதிப் படுத்தாதவை. அப்படியான ஒருவனிடம் மருமகளுக்கு என்ன பழக்கம்? என்ன சிரிப்பு? அவரின் புருவங்கள் முடிச்சிட்டுக்கொண்டன!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock