நிலவே நீயென் சொந்தமடி 17 – 1

நிலா பெரும் பதட்டத்தில் இருந்தாள். மாமாக்குத் தெரிந்துவிட்டது என்கிற ஒற்றை வார்த்தை அவளை முற்றாக நிலைகுலையச் செய்திருந்தது. எப்படி அவரை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ன விளக்கம் சொல்லி தங்களைப்பற்றி விளங்க வைப்பாள்? மூளையே வேலை செய்யவில்லை.

கனகரட்ணத்தின் வாகன ஓசை அவர் வந்துவிட்டதை உணர்த்த கைகால்கள் எல்லாம் நடுங்கத் துவங்கிற்று.

மருமகளிடம் இதைப்பற்றிப் பேசுவதா வேண்டாமா என்கிற கேள்வியுடனேயே உள்ளே வந்தார் பீடாதிபதி. அவனோடு வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசிவிட்டார். அது இலகுவாயும் இருந்தது. இங்கேயோ அவர் ரத்தம், அவளின் கல்வி, அவளின் எதிர்காலம் பலவற்றை யோசிக்கவேண்டியிருந்தது.

இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் தான் வீட்டுக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து பயத்தோடு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மருமகளை உணர்ந்தார். ஆக செய்தி அவளை எட்டிவிட்டது. முடிச்சிட்ட புருவங்களுடன் அவள் புறமாகத் தன் விழிகளைத் திருப்பினார். அவ்வளவுதான். வேகமாய் எழுந்துகொண்டவளின் தலை தாழ்ந்தது.

“சாரி மாமா..” அவர் எதுவும் கேட்காமலேயே அவள் உதடுகள் உச்சரித்தன. அதற்குள் கண்ணீர் கன்னங்களை நனைத்துக்கொண்டு ஓடத்துவங்கின.

தன் முன்னே தலைகுனிந்து நிற்கும் மருமகளைப் பார்த்த கனகரட்ணத்துக்குள்ளும் பெரும் போராட்டம். பின்னால் கையை கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றவரின் விரைத்த தேகமே அவரது மனப்போராட்டத்தை சொல்லிற்று!

மேகலாவுக்கு நடக்கும் எதுவுமே விளங்கவில்லை. ஆனால், தமையன் நின்றகோலம் அவர் விரும்பத்தகாத ஏதோ ஒன்று நடந்துவிட்டதை உணர்த்திற்று! கவின்நிலாவின் கண்ணீர் அதைச் செய்தது அவள்தான் என்று சொல்லிற்று! என்ன அது? மகள் அப்படித் தவறுகள் செய்கிறவள் அல்லவே. கண்களில் கேள்வியோடு இருவரையும் பார்த்திருந்தார்.

செந்தூரனிடத்தில் போன்று உணர்வுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இரும்பை ஒத்த குரலில் மருமகளிடம் அழுத்தம் திருத்தமாய்ப் பேசமுடியாமல் நின்றார் கேபி. அவளின் கண்ணீர் அவரின் உயிரையே வதைக்கும் வல்லமை கொண்டதாயிற்றே!

நிற்காமல் வழிந்த கண்ணீரைக் காணவியலாமல் அருகே வந்து தலையை தடவிக்கொடுத்தாள். உடைந்துபோனவள் அவர் மார்பில் சாய்ந்துகொண்டாள். “சாரி மாமா..”

சரியோ பிழையோ அவர் மனம் நோக ஒன்றைச் செய்துவிட்டோம் என்பதே அவள் கண்ணீருக்குக் காரணமாய் போயிற்று!

“விடுடாம்மா. இதெல்லாம் இந்த வயசில வார வயசுக்கோளாறுதானே. அத விளங்கிக்கொண்டா போதும்.” மருமகள் தன் தவறை உணர்ந்து அழுகிறாள் என்றெண்ணி அவர் சொல்ல, அவள் தலை மறுப்பாக அசைந்தது.

“இல்ல மாமா. எனக்கு அவர பிடிச்சிருக்கு. அவரென்டா எனக்கு உயிர்.” என்றாள் கண்ணீரோடு.

உள்ளே அதிர்ந்தார் கனகரட்ணம். அவள் அப்படித் தன்னிடமே சொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. இது, தான் கவனமாய் கையாளவேண்டிய விசயம் என்பதை உணர்ந்தார். தன் கோபமே தனக்கெதிராய் மாறக்கூடிய ஆபத்தையும் அறிந்தவர் நிதானமாக வார்த்தைகளைக் கோர்க்கத் துவங்கினார்.

“இப்ப அப்படித்தான் தெரியும் நிலாம்மா. உயிர், உன்னதம் அது இது எண்டு. கொஞ்சக் காலம் போனா உனக்கே விளங்கும்.”

“இல்ல மாமா..”

அவளைக் கதைக்க விடவில்லை அவர். பொறுமையாக எடுத்துரைக்கத் துவங்கினார்.

“நாம சாதாரணமா பழகிறதுக்குக் கூட ஒரு தகுதி தராதரம் வேணும்மா. படிப்பின்ர அருமை தெரியாம, படிப்பை கைவிட்ட ஒருத்தன் அவன். இதெல்லாம் உனக்கு இப்ப விளங்காது.” என்கிறார் மென்மையாக.

“இப்ப உனக்கு என்னம்மா வயது? பதினெட்டு. இந்த வயசில என்ன தெரியும் சொல்லு? இப்ப எடுக்கிற முடிவெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமானது. இருபத்தஞ்சு இருபத்தாறு வயசு வரவேணும். படிச்சு முடிச்சு ஒரு தொழில் கைல இருக்கவேணும். அந்த வயசுல விளங்கும், எது சரி எது பிழை எண்டு. அப்ப எடுக்கிற முடிவுதான் சரியா இருக்கும்.” என்றார் பாசத்தோடு.

கோபத்தைக் காட்டியிருந்தால் கூட அவரை எதிர்த்திருக்க அவளால் முடிந்திராது. பாசத்தைக் காட்டுகையில்? அவரது பூரணமான அன்பில் மட்டுமே வளர்ந்த பெண்ணில்லையா? கண்ணீரோடு பார்த்திருந்தாள்.

“முதல் நல்லா படி நிலாம்மா. நாங்க எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி நல்ல இடத்துக்கு வா. எங்கட கனவை பொய்யாக்கிப்போடாத. மாமா உன்னைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறன்.” அவள் மீது அவர்கொண்ட நம்பிக்கை அவள் வாயை கட்டிப்போட்டது!

“அதுக்குப்பிறகு நீயே நினைப்பாய் இதெல்லாம் இனக்கவர்ச்சி எண்டு. இப்ப கண்ணுக்கு அழகா ஒருத்தன் வந்து நிண்டா இப்படித்தான் மனம் கண்டபடி அலைபாயும். அந்த வயசுதான் இது. இப்பதான் நீ கட்டுப்பாட்டோட இருக்கவேணும். மனம் போற போக்கிலே நாங்க போகக்கூடாது. பிறகு காலம் முழுக்க கவலைப்படவேண்டி வரும். கண்ட கண்ட விஷயத்தில எல்லாம் மனதை விட்டா அது படிக்க விடாது. உன்ர படிப்பை கெடுத்துப்போடும். உள்ளுக்கிருந்தே கொள்ளுற நஞ்சு மாதிரி இந்த வயசில வார இதெல்லாம்.”

‘இது’ என்கிறார். அதைக் காதல் என்று கூட அவர் சொல்ல விரும்பவில்லை. அதை உணர்ந்தாள் கவின்நிலா. அவளுக்குத் தெரியும் அவளுக்கும் அவனுக்குமான பந்தம் எத்தகையது என்று. அதனை அவர் இனக்கவர்ச்சி, வயசுக்கோளாறு என்றெல்லாம் சொல்கையில் அவளுக்குள் வலி பிறந்தது. அவளைக் கொள்ளும் நஞ்சாம்! அவனா? அவன் காதலா? அவளைப் பெண்ணாய் மலரச் செய்யும் மந்திரம் அவன்! அழுகையில் நடுங்கிய இதழ்களையும் கண்ணீரில் நிறைந்த கண்களையும் அழுத்தி மூடிக்கொண்டாள் ஒருமுறை. கண்ணீர் கன்னங்களில் பொலபொலவென்று வழிந்தோடியது. கனகரட்ணத்தின் உள்ளத்திலும் வலி. ஆனால், இதெல்லாம் பேசாமல் தீராதே.

“படிச்சு முடிச்சு, நல்ல உத்தியோகத்துக்கு வந்திட்டு அண்டைக்கு வந்து சொல்லு உன்ர முடிவு என்ன எண்டு. அண்டைக்கு உனக்குத் துணையா நான் இருப்பன்.” என்றார், அசைக்கமுடியாத நம்பிக்கையோடு.

அவரளவில் இது இனக்கவர்ச்சியே! வயசுக்கோளாறே! இப்போதைக்கு ஒருவரை ஒருவர் பாராமல், கதைக்காமல் பிரித்துவிட்டாலே போதும். கண்ணில் படாதது கருத்திலிருந்து மறைந்துவிடும். நல்லது கெட்டதை பிரித்தறியும் வயது வந்ததும் மருமகள் தெளிந்துவிடுவாள் என்று நம்பினார்.

அவளுக்கும் புரிந்தது. கலங்கிச் சிவந்திருந்த விழிகளால் மாமனாரைப் பார்த்துச் சரி என்று தலையாட்டிவிட்டுப் போனாள் கவின்நிலா.

“ஒரு நிமிஷம் நிலா.”

என்னவென்று அவரைப் பார்த்தாள் நிலா.

“இனி எந்தத் தொடர்பும் உங்களுக்குள்ள இருக்கக்கூடாது!”

ஒருகணம் அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன. மெல்லச் சரி என்று தலையசைத்தாள். கண்ணீர் துளிகள் இரண்டு நிலத்தில் வீழ்ந்து சிதறின அவள் உள்ளத்தைப் போலவே!

அடுத்தநாள் காலையில் அவரிடம் வந்துநின்றாள் அவள். அவர் கேள்வியாகப் பார்க்க, “அவரை ஒருக்கா பாத்திட்டு வாறன் மாமா.” என்றாள்.

அவரின் புருவங்கள் சிந்தனையின் வசமாயின. மீண்டும் நிமிர்ந்து, சரி என்று தலையசைத்தார்.

மனதில் பாரத்தோடு படியிறங்கினாள் செந்தூரனின் நிலா.

மிக இறுக்கமான சூழ்நிலை. இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. எதை எப்படிச் சொல்வது என்று அவளும் என்ன சொல்லப்போகிறாளோ என்கிற பதட்டத்தோடு அவனும் கோயில் மர நிழலின் கீழே நின்றிருந்தனர்.

ஒன்றுமட்டும் இருவருக்குமே தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. வாழ்வின் முக்கியமான புள்ளியில் வந்து நிற்கிறார்கள் என்று!

ஆண்மகனில்லையா ஆரம்பித்து வைத்தான்.

“சொல்லு!”

“மாமா உங்களிட்ட வந்து கதைச்சவரா?”

“ம்ம்.. ஓம்!” அத்தனையையும் அவளிடம் கொட்டிவிடச் சொல்லி உள்ளம் உந்தியது. அவள் மனதிலும் பாரத்தை ஏற்றிவிட வேண்டாம் என்று சுருக்கமாகப் பதிலளித்தான்.

‘பரீட்சை முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.’

“என்னோடையும் கதைச்சவர்.”

“ஓ..!” அவனின் ஒற்றைச் சொல் பதில்களுக்குப் பின்னே உள்ளுக்குள் இறுகிப்போயிருக்கிறான் என்று தெரியும் அவளுக்கு.

அன்பாய் சொன்ன வார்த்தைகளே இத்தனை துன்பத்தில் அவளை ஆழ்த்துகையில் அவனை எத்தனை தூரத்துக்கு வாட்டியிருப்பார்? ஆற்றுப்படுத்த எண்ணி அவனருகில் போனாள் அவளே உடைந்துபோவாள். அதை அவன் தங்கமாட்டான். இருவரும் இறுக்கமாக அணிந்திருந்த முகமூடியின் பின்னே மறைந்துகிடந்தது மற்றவரின் மேலான நேசம்.

“எங்கட காதல் என்ர படிப்பை குழம்பிப்போடும் எண்டு மாமா பயப்படுறார்.”

“நீ?” ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்பினான் அவன்.

“அப்படி இல்லை எண்டு காட்டவேண்டிய இடத்தில இருக்கிறன்.”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock