“அதுக்கு?”
“இனி நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாக்கவோ கதைக்கவோ வேண்டாம்.”
அதுவரை நேரமும் எப்போதும்போல கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, நிதானமாய் இருக்கிறேன் என்று காட்ட முயன்றபடி வண்டியில் அமர்ந்திருந்தவன் சட்டென்று எழுந்துவிட்டான். கண்களில் அனல் பறந்தது. குறுக்கும் நெடுக்குமாய் அடிபட்ட புலியென நடந்தான். அவன் தூக்கிவைத்த ஒவ்வொரு பாதடியிலும் அவளுக்குள் படபடவென்றிருந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தான்.
“என்னால உன்ர படிப்பு கெட்டுடும் எண்டு நினைக்கிறியா?” சட்டென்று நின்று கேட்டான்.
வேதனையோடு மறுத்துத் தலையசைத்தாள் கவின்நிலா.
“அப்படி மாமா நினைக்கிறார். இது வயசுக்கோளாறாம். இனக்கவர்ச்சியாம். இந்த வயசில எடுக்கிற எந்த முடிவும் சரியா இருக்காதாம். அவருக்கு அப்படியில்ல எண்டு காட்டவேணும். அவர் ஆசைப்பட்ட இடத்துக்கு நான் வரவேணும். அதுவரைக்கும்..”
அவன் வேகமாகக் குறுக்கிட்டான்.
“இதெல்லாம் பிரிஞ்சிருந்தாத்தான் நடக்குமோ? என்னோட கதைச்சுக்கொண்டு உன்னால படிக்கேலாதோ? உன்னைப் பாக்காம உன்னோட கதைக்காம என்னால இருக்கேலாது எண்டு உனக்குத் தெரியாது?” சீறினான் அவன்.
எதற்கும் அவன் தயார். எத்தனை வருடம் வேண்டுமானாலும் காத்திருக்கிறான். ஆனால் பிரிந்திருக்க வேண்டுமென்றால்? உயிரை கொல்கிறதே!
“நீ தாராளமா படி நிலா. எந்த இடத்துக்கு நீ வரவேணும் எண்டு அவர் நினைக்கிறாரோ அதுவரைக்கும் படி. அதுக்குள்ள நானும் உழைக்கிறன். படிப்பு மட்டுமே ஒருத்தன உயர்த்தும் எண்டு சொல்ற உன்ர குடும்பத்துக்கு முன்னால அயராத உழைப்பும் முன்னுக்கு கொண்டுவரும் எண்டு காட்டுவன். என்னை வேண்டாம் எண்டு சொன்னவரையே வேணும் எண்டு வரவைப்பன். ஆனா, இது எல்லாத்துக்கும் எனக்கு நீ வேணும். உன்னோட கதைக்கிற அந்தக் கொஞ்ச நிமிஷம் வேணும். தேத்தண்ணி வித் செந்தூரன் எனக்கு வேணும். எப்பவும் இல்ல மாதத்துக்கு ஒருக்கா கூட போதும். ஆனா.. அதுவும் இல்லாம.. என்னால ஏலாது நிலா.” மறுத்துத் தலையசைத்தான்.
ஆண்மகன் அவனின் கண்கள் கூடக் கலங்கிப்போயிற்று!
நிலாவின் கண்களிலும் கண்ணீர் ஆறாய் பெருகிற்று!
“நான் ஓம் எண்டு சொல்லிப்போட்டன்.” துன்பத்தோடு சொன்னாள்.
அதனை உள்வாங்கிக்கொள்ள சற்று நேரம் பிடித்தது அவனுக்கு.
“என்னோட கதைக்காம, என்ன பாக்காம உன்னால இருக்க முடியும் போல.” விரக்தியோடு சொன்னான்.
அவளால் அது முடியுமா?
“என்னை என்னதான் செய்யச் சொல்றீங்க?” ஆற்றாமையோடு கேட்டாள் அவள்.
அவனுக்கும் விளங்கியது. பாசமெனும் கயிரைக் கொண்டு கட்டியிழுக்கிறார் மனிதர் என்று!
“இல்ல நிலா. இது என்னவோ பிழையாப் படுது. யாரோ ஒரு ‘நல்ல்ல’ பெடியன் தன்னட்ட இருக்கிறான் எண்டு சொன்னவர். என்னட்ட இருந்து உன்னைப் பிரிச்சிட்டு என்னவோ செய்யப்போறார் அவர்.” உண்மையிலேயே அவரின் சாதுர்யத்தை எண்ணிப் பயந்தான். அவள் என்று வருகையில் அவன் கோழைதான்.
“உங்களுக்கு அந்தப் பயமே வேண்டாம்.” கனிவோடு சொன்னாள் அவள். “என்ர குடும்பம் ஒண்டும் கெட்ட மனுஷர் இல்ல. என்ர விருப்பத்தை மீறி நடக்கமாட்டீனம். நான் நல்லாருக்கோணும், சந்தோசமா இருக்கோணும் எண்டு நினைக்கிற மனுஷர்தான் அவர்களும். என்ர சந்தோசம் நீங்கதான் எண்டு தெரிஞ்சா அவையே கட்டித் தருவீனம். நாங்க செய்யவேண்டியது எல்லாம் பொறுமையா இருந்து எங்களை விளங்க வைக்கோணும். அவே நினைச்ச மாதிரி இது ஒண்டும் இனக்கவர்ச்சி இல்ல உண்மையான அன்புதான் எண்டு காட்டவேணும். நான் உங்களுக்குத்தான். நீங்க எந்தக் கவலையும் இல்லாம உழையுங்கோ. நீங்க சொன்ன மாதிரி என்ர குடும்பமே உங்கள விட நல்ல மாப்பிள்ளை வேற கிடைக்காது எண்டு உங்கட கைல என்னைத் தருவீனம். அண்டைக்கு வாறன் உங்களிட்ட. அதுக்குப் பிறகு சந்தோசமா நாங்க வாழலாம்.” என்றாள்.
‘அதுவரைக்கும்?’ உயிர் உள்ளே துடிக்க அவளைப் பார்த்தான்.
“அதுவரைக்கும்…” அவள் ஏற்கனவே எடுத்துவிட்டிருந்த முடிவு கண்களில் கண்ணீரைச் சேர்த்தது. “நானா உங்கள தேடி வாரவரைக்கும் நீங்களா வரக்கூடாது! அதுக்குள்ள உங்களுக்கு.. உங்களுக்கு..” அதற்குமேல் வார்த்தைகள் வராமல் திக்க, சட்டென்று உக்கிரமாகிப்போனான் செந்தூரன்.
“சொல்லு! அதுக்குள்ள எனக்கு.. சொல்லு!” இம்மியளவும் அவளிடமிருந்து விழிகளை அகற்றாமல் கூர்ந்தபடி கேட்டான்.
கோபத்துடன் அவளை எரித்த விழிகள் கூட அவள் மீது அவன் கொண்ட நேசத்தை சொல்ல, “உங்களுக்கு வேற யார் மீதாவது..” அதற்குமேல் அவள் காற்றுடன் தான் பேசிக்கொண்டிருந்தாள்.
அவளை விட்டுச் சென்றிருந்தான் அவளின் செந்தூரன்! கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. அவளுக்குத் தெரியும், இந்தக் கணத்தில் அவன் உள்ளம் படும்பாடு என்ன என்று. எப்படித் துடிப்பான் என்று! அதற்குச் சற்றும் குறைந்ததல்ல அவள் நிலை.
அவன் கோபத்தை அவளால் கையாள முடியும். காதலை நிச்சயம் முடியாது. ‘உன்ன பாக்காம என்னால இருக்கேலாது நிலா’ என்று கெஞ்சியவனை போ என்று விரட்டும் சக்தி அவளிடமில்லை. அதனால்தான் அப்படிச் சொன்னாள். அவனைக் கோபம்கொள்ள வைத்தாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு சைக்கிளை எடுக்கப் போனவள் அப்போதுதான் கண்டாள்; அவளின் சைக்கிள் ‘பாஸ்கெட்’டில் ஒரு பரிசுப்பெட்டி இருப்பதை.
‘எப்ப இத வச்சவர்?’ அவள் கவனிக்கவே இல்லையே!
உள்ளம் பரபரக்க எடுத்துக் பிரித்தாள். ஆகாய நீலத்தில் தங்கத்தை ஆங்காங்கே தூவிவிட்டதைப் போன்ற வண்ணத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வெகு அழகான சேலை ஒன்று அவளிடம் கண் சிமிட்டியது.
‘எதுக்குத் தந்தவர்..’ தேடியவளின் கண்ணில் பட்டது தன்னவனின் கோழிக்கிறுக்கல்.
“என் நிலாப்பெண்ணுக்கு, இலங்கையின் முதல் மாணவியாய் வந்ததற்கு உன் செந்தூரனின் சின்னப்பரிசு!” என்று எழுதியிருந்தான். இல்லையில்லை கிறுக்கியிருந்தான்.
“ஆமாம்! என் செந்தூரன்தான். அதேமாதிரி நான் அவரின்ர நிலாப்பெண் தான்!” வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.
தனியார் கல்வி நிறுவனம் நடாத்திய பரீட்சையில் முதல் மாணவியாக வந்துவிட்டாள் என்கிற செய்தி அவள் மூலைக்கோ மனதுக்கோ பெரிதாக எட்டவே இல்லை. அவன் சொன்ன ‘என் நிலாப்பெண்’ணும் ‘உன் செந்தூரன்’ என்பதும் மட்டுமே நெஞ்சை தொட்டுக்கொண்டு நின்றது!
அவளின் சுட்டிலக்கத்தை எப்போதோ வாங்கியிருந்தான். அந்தத் தனியார் கல்வி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பன் மூலம் கொழும்பில் கொடுத்துப் பார்க்கப் போவதாகவும் சொல்லியிருந்தான். அதுதான் உத்தியோக பூர்வமாய் இவர்களை எட்டமுதல் அவனுக்கு விஷயம் எட்டியிருக்கிறது.
பாரத்தை நெஞ்சில் சுமந்தபடி வீட்டுக்குச் சென்றவளை எல்லோரும் கைகொடுத்து வாழ்த்தினர். தமையன் வெளிநாட்டிலிருந்து எடுத்து தன் சந்தோஷத்தைச் சொன்னான். தகப்பன் கொழும்பிலிருந்து அழைத்து மகிழ்ச்சியோடு கதைத்தார். அங்கிருந்த அத்தனைபேருக்கும் பெரும் மகிழ்ச்சி! அயலட்டை மனிதர் கூட அங்கே குவிந்தனர். தொலைக்காட்சிகள் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று அவள் பெயரைச் சொல்லி மாய்ந்தன.
அவளோ, ‘முதன் முதலாய் வாழ்த்தியது என்னவன்!’ என்கிற பெரும் நிறைவோடு அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.
அவள் வந்ததிலிருந்து அவளையே கவனித்துக்கொண்டிருந்தார் கேபி. அழுது சிவந்திருந்த விழிகள் என்ன நடந்திருக்கும் என்று உணர்த்திற்று! மனம் பாரமாகிப்போனாலும், அவளுக்கு இதுதான் நல்லது என்று எண்ணினார். மற்றவர்களின் வாழ்த்துமழை சற்றே ஓய்ந்ததும், “இப்பதானம்மா சென்டர்ல இருந்து சொன்னவே. நீதானாம் ஃபெர்ஸ்ட் ரேங்க்.” என்று முகமெல்லாம் மலர வாழ்த்தினார் அவர்.
“நன்றி மாமா!” இந்தச் சந்தோசம் எதுவும் அவள் உள்ளத்தை எட்ட மறுத்தது. சிரித்த முகமாய் எல்லோரோடும் உரையாடிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
மேகலா உட்பட யாருமே எதைப்பற்றியும் அவளிடம் விசாரிக்கவில்லை. எப்போதும்போல சாதாரணமாய் இருந்தனர். இது மாமாவின் உத்தரவின் பெயரிலேயே நடக்கிறது என்பதை உணர்ந்தவள் சற்று ஆறுதலாய் உணர்ந்தாள்.
அறையின் கதவை மூடிவிட்டு கட்டிலில் அமர்ந்து அவன் தந்த சேலையை எடுத்து வருடிக் கொடுத்தாள். வெளியே கோபக்காரனாய், முரடனாய் தெரிந்தவனின் ஆழமான நேசத்தையே வருடுவது போலிருந்தது.
இனி எப்படி அவனைப் பாராமல், அவனோடு கதைக்காமல், அவன் இழுக்கும் வம்புகளை ரசிக்காமல், தேத்தண்ணி வித் செந்தூரனை அனுபவிக்காமல்.. கடவுளே கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள். கன்னங்களை நனைத்த கண்ணீர் துளிகள் அவன் தந்த சேலையில் சென்று விழுந்தபோது, வேகமாகத் துடைத்துவிட்டு சேலையை மார்போடு கட்டிக்கொண்டாள்.
அவன் ஆசை என்னவாக இருக்கும்? அவளுக்குத் தெரியாதா? வேகமாகச் சென்று தலைக்கு குளித்துவிட்டு வந்து அவன் தந்த சேலையை வெகு அழகாக அணிந்துகொண்டாள். போட்டோவுக்காகச் சிரிக்கும் உதடுகள் நடுங்க, ஒரு செல்பியை எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
அதன் கீழே
“உந்த அன்பு இல்லாது..
எந்தன் ஜீவன் நில்லாது!” என்று கண்ணீரோடு அனுப்பி வைத்தாள்.
இனி எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்! என்ன.. பிரிவுத் துயரோடு அவள் மீதான கோபத்தையும் சுமந்திருப்பான்.
அதற்குமேல் முடியாமல் கட்டிலில் விழுந்து கண்ணீரில் கரைந்தாள் செந்தூரனின் நிலாப்பெண்!