செந்தூரனின் நாட்களும் பெரும் துன்பத்துடனேயே நகர்ந்தன. அதுவும் அவள் முதல் மாணவியாக வந்துவிட்டாள் என்று அறிந்த கணத்தில் பறந்துபோய் அவளோடு அந்த சந்தோஷத்தைக் கொண்டாடிவிடத் துடித்தான். கைகால்கள் எல்லாம் பரபரத்தன. எத்தனையோ முறை ஃபோனை எடுத்து அவளுக்கு அழைக்க முற்பட்டான். அது முடியாத நிலையில் மொத்த வாழ்க்கையையே வெறுத்தான். ஒரு வார்த்தை.. ஒற்றை வார்த்தை கதைக்க முடியாமல் அவனைத் தள்ளி நிறுத்திவிட்டாளே.
கோபம் கூட வரமறுத்தது. அவன் வாழ்த்துக்காக அவளிதயமும் தானே கிடந்து பரிதவிக்கும். ‘ஏனடி.. ஏனடி என்னைப்போட்டு இந்தப் பாடு படுத்துறாய்?’ மனதால் அவளிடம் சண்டையிட்டான். வேகமாய் குளித்து புறப்பட்டு கோவிலுக்குச் சென்று அவள் பெயரில் பூசை ஒன்றினைச் செய்த பிறகே மனம் கொஞ்சமேனும் மட்டுப்பட்டது.
அதன் பிறகான நாட்களுக்கு ஒற்றை ஆறுதல் அவளின் அந்த சாரி ஃபோட்டோ. அழுததை மறைத்த கண்கள் அவனைக் கொன்று தின்றன. ஒருமுறை அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டால் தேறிக்கொள்ள மாட்டாளா? இரவுகளில் கண்ணுறங்கும் வரையில் அவளையே பார்த்திருந்தான். அவளை எத்தனையோ நாட்கள் கண்டிருக்கிறான் தான். ஆனால், முதன் முதலில் எப்போது பார்த்தோம் என்று யோசித்தால் நினைவில் வரும் காட்சி, அவனை முறைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் சேலை அணிந்து வந்த காட்சியே.
அதேபோல, தான் வாங்கிக்கொடுக்கும் சேலையில் அவளைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில் தான் சேலையை வாங்கினான். அதன் பிறகு சம்பவித்த சம்பவங்கள் அத்தனையும் அவன் எதிர்பாராதவை. சேலையை கொடுத்தவனால் தன் ஆசையை சொல்லமுடியாமல் போயிற்று.
ஆனால், அவள் விளங்கிக்கொண்டாள்.
எந்த அணிகலனுமே இல்லாமல் வெறும் கழுத்தோடு அந்த ஃபோட்டோவை எடுத்து அனுப்பியிருந்தாள். அவளின் சங்குக் கழுத்து அவன் அணிவிக்கப்போகும் பொன் தாலிக்காகக் காத்திருக்கிறதாம். சொல்லாமல் சொன்னவள் செய்தியை அவனும் விளங்கிக்கொண்டான்.
அதற்கும் மேலாய் அவள் எழுதிய வரிகள்..
“உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது!”
அவற்றை படிக்கும்போதெல்லாம் ஆத்திரம் தலைக்கேறியது.
சொல்வதையும் சொல்லிவிட்டு, ‘அதென்ன எந்தன் ஜீவன் நில்லாது?’
ஒரு வழியாக கொழும்பிலும் கால் ஊன்றினான் செந்தூரன். ஒரு மொபைல் ஷாப்பினை ஆரம்பித்தான். மெல்ல மெல்ல நன்றாகப் போகத் துவங்கியது. அது போதாது அவனுக்கு. போதவே போதாது. ஒருபக்கம் வீட்டுக் கடனை அடைத்துக்கொண்டு இன்னொரு பக்கம் சேமிக்கவும் செய்தான்.
அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, கபிலன் அழைத்தான். அவனும் கொழும்புக்கு வந்து, அப்பாவின் தொழிலை கம்பனியாக ஆரம்பித்து நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லியிருந்தான்.
“என்ன மச்சான்?”
“நாளைக்கு யாழ்ப்பாணம் வருவனடா? கடைக்கு வரட்டா உன்ன சந்திக்கோணும்.” என்றான்.
“நானும் இப்ப கொழும்புல தான்டா இருக்கிறன்.” என்று அவன் சொல்ல, “என்னடா சொல்லுற?” என்றவன், “எங்க இருக்கிறாய் எண்டு அட்ரஸ் மெசேஜ்ல போடு. நான் இப்ப வாறன்.” என்றவன், அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அவன் கடையில் இருந்தான்.
“ஆக, அண்டைக்கு நான் சொன்னது சரிதான்.” என்றான் கபிலன்.
ஒன்றும் சொல்லவில்லை செந்தூரன். அன்றைய நாள் நெஞ்சில் வந்து நின்றது. அவள் கையை பிடித்து இழுத்ததும், தான் உலகையே மறந்து அவளின் கைப்பிடிக்குள் கட்டுண்டு சென்றதும் என்று.. இன்றும் அப்படித்தான் கைக்குழந்தையாய் அவள் கைகளுக்குள் அடங்கிவிடத் துடித்தான். முடியாதே! கொடிய பிரிவொன்று அவர்களைப் பிரித்து நிறுத்திவிட்டதே! நெஞ்சில் வலிக்கவும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்.
அங்கே அவளும் தனிமையில் அவனை எண்ணித் துடித்துக்கொண்டுதான் இருப்பாள். யார் ஆறுதல் சொல்வார்? என் கண்ணான கண்மணி கண்ணீரில் கரைவாளோ? இல்லை அவள் அழக்கூடாது. திடமாய் நிற்கவேண்டும். மனதால் ஆறுதல் சொன்னான். உயிரின் உணர்வோடு உறவாடினான்.
காற்றாலையில் மிதந்துவந்த மனத்துக்கினியவனின் ஆறுதல் வார்த்தைகள் அவள் இதயத்தை சென்று சேர்ந்ததில் விரிவுரையில் இருந்தவள் தேகம் ஒருமுறை சிலிர்த்தது. சட்டெனக் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
‘செந்தூரன்..’ அவள் உதடுகள் ஆசையாய் உச்சரித்தன. சசிரூபா கேள்வியாக திரும்பிப் பார்க்க, கண்களை துடைத்துக்கொண்டு ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
‘நீங்களும் சுகமா இருக்கிறீங்களா?’ உள்ளத்தால் அவனிடம் நலம் விசாரித்துக்கொண்டாள். நெஞ்சிலோர் நிறைவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதிலோர் அமைதி.
“என்ன மச்சான்? திடீரென்று அமைதியாகிட்ட?” கபிலனின் குரல் இங்கே செந்தூரனை கலைத்தது.
“அத விடு மச்சி. உனக்கு என்ன பிரச்சனை?”
“என்ர கம்பெனியை அவசரமா விக்கோணும்டா. அதுதான் நீ வாங்குறியா எண்டு கேக்க வந்தனான்.”
“நல்லாத்தானேடா போகுது..”
“நல்லாத்தான் மாமா போகுது. ஆனா அவசரமா காசு வேணும். அக்காக்கு திரும்பவும் கல்யாணம் சரிவந்திருக்கடா. கொஞ்சக் காலம் கழிச்சு எண்டாலும் திரும்ப ஒரு தொழில் துவங்குவன். ஆனா அக்காட கலியாணம் அப்படி இல்லையடா. அதை எப்படியாவது முடிக்கோணும். மாட்டன் மாட்டன் எண்டு நிண்டவள் இப்பதான் ஓம் எண்டு சொல்லி இருக்கிறாள். கலியாணமும் சரி வந்திருக்கு. மாப்பிள்ளையும் நல்ல மனுஷன். அவே ஹாசினியோட பெயர்ல கொஞ்சம் காசு மட்டும் போடச் சொல்லீனம். தங்களுக்கு வேண்டாமாம். அவளின்ர பெயரிலேயே போடட்டுமாம். அது நல்லதும் தானே மச்சான். எனக்கும்.. நான் கட்டமுதல் இதெல்லாம் செய்திட்டன் எண்டா எனக்கும் நிம்மதி. அக்காவுக்கும் கொஞ்சம் போட்டுவிட்டா நல்லது தானேடா. அவளும் நினைக்கக்கூடாது தம்பி எங்கயாவது பிடிச்சு தள்ளிவிடப் பாக்கிறான் எண்டு. அதோட, நாளைக்கு ஒரு பிரச்சினை எண்டாலும் காசு இருந்தா அக்காவும் தெம்பா இருக்கும். அதுதான் செய்யிறதை முறையா குறையில்லாம செய்ய நினைக்கிறன்.” என்றவனின் நிலை நன்றாகவே புரிந்தது.
தமக்கை ஏற்கனவே கல்யாணமாகி கணவனை இழந்த பெண். ஹாசினி என்று ஒரு மகளும் உண்டு. அவள் கலியாணத்துக்கு மறுக்க, அதனாலேயே இவனும் கட்டாமல் என்று இழுபட்டுக்கொண்டிருந்தது. இப்போது திருமணம் சரிவந்திருக்கிறது என்றால்.. அவன் நினைப்பது, மாப்பிள்ளை வீட்டாரின் எதிர்பார்ப்பு இது எதையும் பிழை என்று சொல்ல முடியவில்லை. அதற்கென்று நன்றாகப் போகும் தொழிலை விற்பதா?
“எனெர்ஜி ட்ரிங்க் தானேடா? நல்லாருக்குமா?”
“என்னட்ட காருக்கையே இருக்கு.. குடிச்சுப்பார்.” என்றவன் உடனேயே கொண்டுவந்து கொடுத்தான்.
‘ப்ளாக் ஹார்ஸ்’ கறுப்புக்குதிரை என்கிற பெயரில் இருந்த டின் அது. உடைத்துப் பருகினான். வாய்க்குள் ஜில் என்று இறங்கியது.
“சூப்பரா இருக்கேடா.”
“பின்ன? நல்லா செய்தா கட்டாயம் ‘ரெட் புல்’ அளவுக்கு கொண்டுவரலாம் மச்சி. ஆனா எல்லாத்தையும் விட அக்கா கலியாணம் முக்கியம்.” என்றான் அவன்.
“எவ்வளவுக்கு விக்க போறாய்?”
“உனக்கெண்டா..” என்று அவன் ஆரம்பிக்க, “எனக்கில்லை.. என்னட்ட அந்தளவு காசும் இப்பயில்ல. வேற ஒரு ஆள் கேட்டவர் அவருக்குத்தான்.” என்று இடைமறித்தான் செந்தூரன்.
தனக்குத் தேவையானத்தைச் சொன்னான் அவன்.
அந்தளவு காசு செந்தூரனிடம் இல்லை. ஆனால், நன்றாகவே விளம்பரம் கொடுத்து இதனைப் பெருக்கினால் நன்றாகவே போகும் என்று தோன்றியது. அவன் ஒரு வியாபாரி. வியாபார மூளை நாளா பக்கமும் சுழன்று இதனை எப்படி இன்னும் எல்லா மக்களுக்கும் போய்ச்சேரும் வகையில் சந்தைப் படுத்தலாம் என்று யோசித்தது.
அதனைப் பருகிப் பருகி யோசித்தான். அதன் சுவையும் அவனைக் கவர்ந்துகொண்டிருந்தது. டின் வெறுமையானபோது திட்டமும் தயாராயிருந்தது.
“வா மச்சி, ஃபாக்டரிய பாத்துக்கொண்டு வருவம்.” என்று கபிலனோடு சென்று பார்த்தான். மிக மிகச் சின்னதுதான். ஆனால், கச்சிதமாய் ஒரு பக்கம் பானம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் டின்னில் அடைக்கப்பட, ஒரு மிஷின் டின்களை காவிச்சென்று “blackhorse” என்று பெயர் அடிக்கப்பட்ட, தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட திகதி, பானத்தில் அடங்கியிருக்கும் பொருட்கள் என்று அனைத்தும் அடங்கிய லேபிள் சுற்றி ஒட்டித் தந்தது.
பார்க்கப்பார்க்க வியாபார உத்திகள் மளமளவென்று அவனுக்குள் உருவாகின. பானத்தின் மூலக்கூறுகள் முதல்கொண்டு அது தயாரிக்கும் முறையிலிருந்து அனைத்தையும் பார்த்தான். எல்லா விஷயத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டான். ஒருவாரமாக தன் கடையை வேலையாளிடமே பொறுப்பாக ஒப்படைத்துவிட்டு, இங்கேயே இருந்து அனைத்தையும் தெரிந்துகொண்டான்.