“நீ என்ர வாழ்க்கைல வந்தா சந்தோசம் தான். பட்… உன்னோட சந்தோசம் அவன்தான் எனும்போது..” என்றவன் தோள்களைத் தூக்கி கைகளை விரித்தான்.
“ஆனா.. இது பெரிய ஏமாற்றம்தான்..” என்றான்.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ? எனக்காக.. என்ர ஒற்றை வார்த்தைக்காக ஒரு உயிர் நிறைய நாளா காத்துக்கொண்டு இருக்கு சுரேந்தர். தன்ர குடும்பத்தோட சந்தோசமா இருந்திருக்க வேண்டியவரை பிரிச்சு எங்கயோ தனியா கஷ்டப்பட விட்டுட்டு நிக்கிறன். அவர் இல்லாம ஒரு வாழ்க்கை எனக்கென்று இல்லை. அவருக்கு நான்தான் உலகம்.” சொல்லும்போதே குரல் கரகரத்தது அவளுக்கு.
இதற்குமேல் பேசவும் என்ன இருக்கிறது? செந்தூரன் கொடுத்துவைத்தவன் என்பதை மட்டும் உணர்ந்துகொண்டான்.
“கல்யாணத்துக்கு கார்ட் அனுப்புங்கோ. கட்டாயம் வருவன்.” என்றவன் அவளிடம் விடைபெற்றான். அவளிடம் மட்டுமல்ல அவள் மாமாவிடமும்.
“இவ்வளவு வருசமாகியும் எந்த மாற்றமும் இல்ல டீன். இனியும் எவ்வளவு காலத்துக்கு காத்திருக்கோணும் எண்டும் தெரியேல்ல. அப்படியே நான் வெய்ட் பண்ணினாலும் எங்கட வீட்டுல அதுக்கு சம்மதிக்க மாட்டீனம். எனக்குப் பின்னாலையும் தம்பியாக்கள் இருக்கீனம். அதால நான் திருகோணமலைக்கே போகலாம் எண்டு இருக்கிறன்.” என்றான்.
இருவரும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ளவில்லையே தவிர, அவரின் விருப்பம் என்னவென்று அவனுக்கும், அவனது ஆசை என்னவென்று அவருக்கும் தெரிந்தே இருந்தது.
ஆயினும் இருவருமே யதார்த்த வாதிகள். சூழ்நிலையை புரிந்தும் கொண்டனர். சுரேந்திரனும் அவள் சொன்னவற்றைப் பற்றி அவரிடம் பேசவில்லை. தன் முடிவை மட்டும் தெரிவித்தான்.
அவருக்கும் விளங்கியது. அவரைப் பொறுத்த வரையில், அவரின் இரண்டு வாரிசுகளும் படிப்பில் எப்படிச் சிறந்து விளங்கினார்களோ அப்படி இல்வாழ்விலும் இணைந்து இனிமை காணவேண்டும் என்று கனவு கண்டார். இறைவனின் விருப்பு வேறாக இருந்தால் அவரால் என்ன செய்ய முடியும்?
நியாயமான சிந்தனைகள் கொண்டவர் அவர். அவனும் வாழவேண்டிய பிள்ளை. தன் மருமகளுக்காக அவன் சொன்னதுபோலவே எத்தனை காலத்துக்குத்தான் காத்திருக்கச் சொல்வார்? அவர் மனமே அவரிடம் கேள்வி எழுப்பியதில் சம்மதித்தார். வாழ்த்தியும் அனுப்பினார்.
மனதில் மட்டும் கவலை. படித்த, மதிப்பான நிலையில் இருக்கும் ஒருவனை மறுத்து வளமான வாழ்வை மருமகள் இழக்கிறாளே என்று. ஆனாலும், இத்தனை வருடங்கள் ஓடியபின்னும் உறுதியாக நிற்பவளை எப்படி அணுகுவது என்றும் புரியவில்லை.
அவள் ஒன்றும் காதல் தோல்வியில் கிடந்து வாடி வதங்கியதாகவும் தெரியவில்லை. அவனுக்காக ஏக்கத்தோடு காத்திருப்பதாகவும் தெரியவில்லை. பல மாணவர்களை லாவகமாகக் கையாளும் அவரே சொந்த மருமகளின் மனதைக் கணிக்க முடியாமல் திணறினார்.
படிப்பு படிப்பு.. இது மட்டுமே! ஒரு வெறியோடு அவள் படிப்பதாகவே தென்பட்டது. அதுவும் இதயங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் அவள் காட்டும் வேகம் அவரையே பிரமிக்க வைத்துக்கொண்டிருந்தது.
அவள் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்போம் என்று நெருங்க, “நான் படிக்கோணும் மாமா. நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே, உங்கட வாரிசு நான்தான் எண்டு. அந்தப் பெயர காப்பாத்தோணும். அது மட்டும்தான் என்ர மண்டைல இருக்கு. ப்ளீஸ் மாமா, வேற எதுவும் இப்ப வேண்டாமே.” என்றாள் கெஞ்சலாக.
அவரால் மீறமுடியவில்லை. கனத்த மனதோடு அவள் மனம் திறக்கப்போகும் நாளுக்காய் காத்திருக்கத் துவங்கினார்.
செந்தூரனின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போயிருந்தது. கனகச்சிதமாய் அவன் போட்ட திட்டங்கள் அத்தனையும் வெற்றிப்படியில் மிக வேகமாய் ஏற வைத்தன. ‘நிலாஸ்’ இன் செந்தூரன் இன்று பல விழாக்களின் சிறப்பு நாயகன். வியாபாரத் துறையில் விரல்விட்டுச் சொல்லும் நபர். இதுதானே அவனுக்கு வேண்டுமாயிருந்தது. மனதிலே ஓர் வெற்றிக்களிப்பு!
“எனக்கா தகுதி இல்ல? என்னய்யா வேண்டாம் எண்டு சொன்னீங்க?” ஆவேசமாய் அடிக்கடி அவன் கேட்டுக்கொள்ளும் கேள்வி இது! இன்றும் அதே ஆவேசம்!
இன்று அவனது முன்னேற்றம் அவனையும் மீறியது. ஆனாலும், போதும் என்று இருந்துவிடாமல் இன்னும் இன்னும் என்று ஓடிக்கொண்டேயிருந்தான். அவனுடைய மைனசை ப்ளஸ்ஸாக மாற்றும் அளவுக்கு ஓடிக்கொண்டிருந்தான்.
“நான் நல்லாருக்கிறது முக்கியமில்லை, நல்லாருக்கிறன் எண்டு காட்ட வேண்டியவருக்கு காட்டுறதுதான் முக்கியம்!” மனதில் ஓர் கோபம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தது.
அன்று மாலை அழைத்த அம்மாவிடம் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாம்மா?” என்று விசாரித்தான்.
அவர்களின் ஊர் கோவிலில் வருடாவருடம் அன்னதானம் கொடுப்பது மயில்வாகனம் ஆரம்பித்து வைத்த வழக்கம். அன்று அவர்களின் அன்னதானம்.
“ஓமப்பு. மனதுக்கு நிறைவா இருந்தது. என்ன ஒரு குறை மழை வந்து கொஞ்சம் குழப்பிப் போட்டுது.”
“ஏன்மா?”
“சின்னக் கோயில்தானே. ஆற அமர இருந்து வயித்துப்பசியாற இடமில்லாம போச்சு. வீட்டை கொண்டுபோய் சாப்பிடச்சொல்லி அப்பா எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தவர். மண்டபம் ஒண்டு கட்டவேணும் எண்டு ஐயா காசு சேத்துக்கொண்டு இருக்கிறார் தம்பி. கெதியா கட்டவேணும்.” கல்யாணி தன்போக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்.
“எவ்வளவு முடியும் எண்டு கேட்டுச் சொல்லுங்கோ அம்மா. மிச்சத்தை நான் கொடுக்கிறன்.” என்றதும் அவருக்கு அவ்வளவு சந்தோசம்.
உடனேயே, “அப்பா, தம்பி மிச்சக்காசு தானே குடுக்கிறானாம். மண்டபத்தை கட்டுங்கோ எண்டு சொல்லுறான். என்ன ஏது எண்டு கதைங்கோ.” என்றபடி கணவரிடம் கொடுத்தார் அவர்.
மயில்வாகனத்தோடும் அதைப்பற்றிக் கதைத்து, அவர் மூலம் ஐயாவோடு கதைத்து அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு ஐயா முதற்கொண்டு வீட்டினர் எல்லோரும் வரச்சொன்னபோதும் வரவில்லை அவன்.
திருமணமண்டபமாகவும் பாவிக்கக்கூடிய வகையில், ஏழைகளுக்கு இலவசமாகவும் வசதி இருக்கிறவர்கள் தங்களால் முடிந்த தொகையை கோவிலுக்கு செலுத்தக்கூடிய வகையில் கோயில் நிலத்தில் சட்டென்று எழுந்து நின்றது மண்டபம். திறப்பு விழாவுக்கான பூஜைக்குக் கூட வர மறுத்துவிட்டான் செந்தூரன்.
“டேய் அண்ணா, அவளுக்கு திமிர் எண்டா உனக்கு அதுக்கு மேலயடா!” என்று திட்டிவிட்டு விழாவை சசிரூபா வீடியோ எடுத்து அனுப்பி வைத்தாள்.
அதிலே, ஒவ்வொருவரும் பாராட்டப் பாராட்ட, சந்தோசமாய் உள்வாங்கினான். நெகிழ்ந்து வாழ்த்தியவர்களின் ஒவ்வொரு வாழ்த்தும் அவனுக்குள் சிலிர்ப்பை உண்டாக்கின. இன்னுமின்னும் உதவிசெய்ய ஆசை வந்தது.
“தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை படிக்க வச்சா என்ன?” அந்த நொடியில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கத் துவங்கினான்.
ஆரம்பித்தது என்னவோ சிறிதாகத்தான். செய்யச் செய்ய தேவைகள் அதிகரித்துக்கொண்டே போயிற்று! அப்போதுதான் எல்லா வசதிகளோடும் வாழும் நம்மருகில், நம் அயலட்டையில்தான் எத்தனையோ குழந்தைகள் அடிப்படை வசதிகூட இல்லாமல், மூன்றுநேர உணவுக்கே வழியில்லாமல் வாடுகிறார்கள் என்று உணர்ந்தான்.
அவர்களின் தேவைகளை தீர்த்து வைக்கையில் அந்தக் கண்களில் தெரியும் சந்தோசம் பெரும் போதையை கொடுத்தது. இன்னும் பலரின் கண்களில் இதே சந்தோஷத்தைக் கண்டுவிடு என்று மனம் உந்தியது. எழுத்தறிவித்தவன் இறைவன். இருக்க இல்லமமைத்து கல்விக்கு வழி செய்தபோது அவனும் அவர்கள் கண்ணுக்கு இறைவனாகவே தெரிந்தான்.
பாசத்தோடு கண்கள் கலங்க, “நன்றி அண்ணா.” என்று சொன்ன ஒவ்வொரு குழந்தைகளினதும் நெகிழ்ச்சியில் இவன் கரைந்துகொண்டிருந்தான்.
அவனே எதிர்பாராத ஒரு ஆத்ம திருப்தி. உண்மையிலேயே கனகரட்ணம் பரந்தாமனுக்கு காட்டவேண்டும் என்றுதான் ஆரம்பித்தான். ஏதாவது நல்லது செய்வோம் என்றதும் இயல்பாய் தோன்றிய எண்ணம் தான் அது. ஆனால் அதனை தொட்டது மட்டுமே அவன். பின்னரோ அவனை முழுமையாகப் பற்றிக்கொண்டது அந்தச் சேவை.
இன்னுமின்னும் லாபம் காணும்போதெல்லாம், இந்தப் பணத்தில் இன்னும் எத்தனை குழந்தைகளுக்கு எவ்வளவு செய்யலாம் என்கிற கணக்குதான் மனதில் சந்தோசமாய் ஓடியது. அவ்வளவு நிறைவு. தொழில் ஏறுமுகம் கண்டபோது வராத நிறைவு, வியாபார உத்திகள் அப்படியே பலித்தபோது வராத சந்தோசம், அவனே எதிர்பாராத அளவுக்கு செல்வம் சேரத் துவங்கியபோது உண்டாகாத நிறைவு இப்போது உண்டானது.
“அறிவுச்சோலை.” மிக வேகமாய் வளர்ந்தது. அஜந்தனை அதனைக் கவனித்துக்கொள்ள நியமித்தான். அவனோடு சேர்த்து சசிரூபாவையும் குழந்தைகளை கவனிக்கச் சொன்னான்.