அநாதை குழந்தைகளுக்காக மட்டுமன்றி, மேலே படிக்க முடியாத ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் ‘உதவிக்கரம்’ நீட்டத் துவங்கியிருந்தான் செந்தூரன். உதவிக்கரத்தை கபிலன் பொறுப்பேற்றுக் கொண்டான்.
படித்துக்கொண்டு அறிவுச்சோலையில் வேலையும் செய்யத் துவங்கினாள் சசிரூபா. அன்றும் குழந்தைகளை கவனித்துவிட்டு, ‘இனி வீட்ட போவம்.’ என்று எண்ணிக்கொண்டு வந்தவளிடம், “அக்கா, உங்களை அஜந்தன் அண்ணா வந்து பாத்திட்டு போகட்டாம் எண்டு சொன்னவர்.” என்று வந்து சொன்னாள் அங்கு வேலை செய்யும் மேரி.
என்னவாக இருக்கும்? ஏதும் முக்கியமாகக் கதைக்கவேண்டுமானால் இப்படி அவன் சொல்லி அனுப்புவது வழக்கம் தான். எனவே அவனது அறைக்குச் சென்றாள்.
“வரச் சொன்னீங்களாம்.”
“நீயா வார மாதிரி இல்ல. அதுதான்!” எப்போதும்போல ரசனையோடு அவளை ஒருமுறை வருடிக்கொண்டே சில்மிஷக் குரலில் சொன்னான்.
உதடுகளில் சிரிப்பொன்று படக்கென்று வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு. இத்தனை நாட்களாய் கண்களால் மட்டுமே உணர்த்தியதை இன்று பேச்சிலும் காட்ட முற்பட்டவனைக் கண்டுகொண்டாள்.
“சொல்லுங்கோ.” ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் வந்து அமர, அவனோ எழுந்துபோய் கதைவடைத்துவிட்டு வந்தான். அவளுக்குப் புரிந்துபோயிற்று. வெட்கச் சிவப்பை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்ன சொல்லச் சொல்ற? எனக்கு உன்னை பிடிச்சிருக்கு எண்டு சொல்லுறதா இல்ல இப்ப இல்ல ஆறேழு வருசத்துக்கு முதலே இருந்தே காத்திருக்கிறன் எண்டு சொல்லுறதா? அல்லது பக்கத்திலையே வச்சுக்கொண்டு யாரோ மாதிரி இனியும் என்னால இருக்கேலாது என்றதை சொல்லக் சொல்லுறியா? இல்ல நாளைக்கே கலியாணம் என்ற முடிவை நான் எடுத்ததை பற்றிச் சொல்லுறதா?”
சட்டென்று அவன் சீறவும் சிரிப்பை அடக்கமுடியவில்லை அவளுக்கு.
“எத சொல்லுறதா இருந்தாலும் அண்ணாட்ட சொல்லுங்கோ.”
“தாலி என்னமாதிரி? அதையாவது உன்ர கழுத்தில கட்டவோ இல்ல அதையும் உன்ர கொண்ணா கழுத்திலதான் கட்டவேணுமா? ஆனா என்ன அவனோட குடும்பம் நடத்திறது எல்லாம் பெரும் கஷ்டம்.” வெகு நக்கலாய் அவன் சொல்ல சிரிப்பை அடக்கமுடியவில்லை அவளால்.
“கவி வந்து உங்கட கழுத்தை நெரிப்பாள். ஓகே எண்டா எனக்கு பிரச்சனை இல்ல.”
“அப்ப உனக்கு நான் யாரை காட்டினாலும் பிரச்சனை இல்ல?”
‘என்னைத் தவிர வேறு எவளையாவது காட்டுவீங்களா நீங்க?’ வாயால் கேட்காமல் கண்ணால் கேட்டாள் இதழ்களில் பூத்திருந்த சின்னச் சிரிப்போடு. அவன் முகம் சட்டென்று மலர்ந்தது.
“அவனோட கட்டாயம் கதைப்பன். அதுக்கு முதல் உன்ர விருப்பத்தை நீ வெளிப்படையா சொல்லு.” இத்தனை வருடங்களாய் கனவில் மட்டுமே கற்பனைகளை வளர்த்தவன் கொக்குக்கு ஒன்றே மதி என்று நின்றான்.
“அதுதான் அண்ணாட்ட கதைங்கோ எண்டு சொல்லீட்டேனே.” என்றாள் வெட்கச் சிரிப்போடு.
“ஹேய் உண்மையாவா?” சட்டென்று அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான் அஜந்தன்.
“என்ன செய்றீங்க?” அதிர்ந்து கெட்டவள் அருகே வேகமாய் எழுந்து வந்து உரசிக்கொண்டு அமர்ந்துகொண்டான்.
“தள்ளி இருங்கோ.. இல்லாட்டி அந்நாட்டை சொல்லிக்கொடுப்பன்.” மிரட்டலாகச் சொல்ல நினைத்தாலும் குலைந்துகொண்டு வந்தது குரல். அவன் முகம் பார்க்கமுடியாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள்.
“வெக்கத்தில எவ்வளவு வடிவா இருக்கிறாய் தெரியுமா?” ஆசையோடு அவன் சொல்லவும் கன்னங்கள் வேகமாக சிவப்பை பூசிக்கொண்டன.
“பேசாம அந்தப்பக்கம் போய் இருங்கோ. யாரும் வந்தாலும்.. பயமாயிருக்கு.”
“பாத்தா பாக்கட்டும்! எத்தனை வருஷம் சொல்லுபாப்பம் மூச்சே விடாம இருந்திருக்கிறன்?”
“அப்ப என்னெண்டு எனக்கு தெரிஞ்சதாம்?”
“அதுதானே?”
“நீங்க ஒரு அறிவுக்கொழுந்து!” என்றாள் அவள் செல்ல முறைப்போடு.
“ஹாஹா..!” அதைக்கேட்டுச் சந்தோசமாகச் சிரித்தான் அவன். அவனை மூளை இல்லாதவன் என்கிறாள். அவனோ பாராட்டு கிடைத்ததுபோன்ற சந்தோசத்தோடு சிரிக்கிறான். அந்தக் கணத்தில் மனதுக்கு மிகவுமே ப்ரியமானவனாய் அவனை உணர்ந்தாள் சசிரூபா.
“என்ர பிறந்தநாளுக்கு கிஃட் தந்த அண்டே எனக்குத் தெரியும்.” என்று அவள் சொல்ல,
“பாத்தியா! தெரிஞ்சும் மூச்சு விடேல்ல நீ!” என்றான் அவன் கோபம்போல்.
“நீங்களே அண்ணாக்கு பயந்துகொண்டு சொல்லேல்ல. பிறகு நான் ஏன் மூச்சு விட? நீங்களா சொல்லட்டும் எண்டு வெய்ட் பண்ணினான்.”
“செந்தூரனுக்கு ஏன் பயப்பட? உனக்கு முதலே அவனுக்குத்தான் என்ர விருப்பம் தெரிஞ்சிருக்கும். அப்ப எல்லாம் உன்னோட கதைக்க விடவே மாட்டான். ஆனா, அதுக்காக சொல்லாம இருக்கேல்ல. நீ படிக்கோணும். படிச்சு முடிக்கிற வரைக்கும் குழப்பக்கூடாது எண்டுதான் பேசாம இருந்தனான். செந்தூரன் உனக்கு அண்ணா எண்டா எனக்கு பெஸ்ட் பிரென்ட். என்ர மனம் அவனுக்கும் தெரியும். அவன்ர மனம் எனக்கும் தெரியும். அவனுக்கு விருப்பமில்லாம உன்னையும் என்னையும் ஒரே இடத்தில வேலைக்கு போட்டிருக்க மாட்டான்.”
தமையனின் மனதை அச்சொட்டாய் படித்து வைத்திருந்தவனை பிரியத்தோடு பார்த்தாள். அவனோ அவள் கரத்தோடு ஆசையாக விளையாடிக்கொண்டிருந்தான்.
“அண்ணாட கல்யாணம் நடந்தபிறகுதான் எங்கட நடக்கவேணும்.”
“எங்கட நடந்தபிறகுதான் அவன் கட்டுவான்.” சிரித்துக்கொண்டு சொன்னான் அவன்.
“நான் அதுக்கு சம்மதிக்கவே மாட்டன்!”
“இப்ப நீதான் அறிவுக்கொழுந்து.” என்றான் அவன். “வயதுக்கு வந்த தங்கச்சிய வச்சுக்கொண்டு அவன் கட்டுவானா?” அவன் கேள்வியிலிருந்து நியாயம் அவளுக்குப் புரியாமலில்லை.
“தப்பித்தவறி அண்ணா கல்யாணம் நடக்காட்டி!” அவளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்துச் செய்யும் அண்ணாவின் வாழ்வில் சிக்கல் வந்துவிடுமோ என்கிற பயத்துடன் கேட்டாள்.
“கட்டாயம் நடக்கும்! உன்ர அண்ணாவை நம்பு. அதோட என்னையும் நம்பு. அவனை அப்படியே விட்டுட மாட்டன்!” என்றான் அஜந்தன்.
“அவன் பாவம்..”
“மேடம், உங்களுக்கு பக்கத்தில இருக்கிறவனும் பாவம் தான். அவனையும் கொஞ்சம் கவனிங்க.”
“இன்னும் ரெண்டு.. ரெண்டரை வருஷம் பொறுக்க மாட்டீங்களா?” விழிகளில் எதிர்பார்ப்பைத் தேக்கிக் கேட்டவளை இதமாக அணைத்துக்கொண்டான் அவன்.
“ஐஞ்சு வருஷம் பொறுத்தவனுக்கு ரெண்டு வருஷமெல்லாம் ஒரு விஷயமா? நீ அந்தப்பக்கம் படி. அப்பப்ப இந்தப்பக்கம் என்னையும் கவனி.”
ஆசையாக கன்னத்தில் முத்தமொன்றை பதித்து எடுத்தவளை முறைத்துவிட்டு அடுத்தகணம் இதழ்களைச் சிறை செய்திருந்தான் அவன்.