“அவன் ஒருக்காத்தாண்டி சொன்னவன். ஆனா நீ?” அழுவாரைப்போலச் சொன்னான் அவளின் அப்பாவிக் கணவன்.
சிரிப்பை அடக்கவே முடியவில்லை அவளால். விழுந்து விழுந்து சிரித்தவளைப் புன்னகையோடு ரசித்தனர் ஆண்கள் இருவருமே.
தான் சிந்திய ஒருதுளிக் கண்ணீரைக் கூடத் தாங்காமல் சிரிக்க வைத்த தமையன் மீதும் கணவன் மீதும் பாசம் பொங்கிற்று அவளுக்கு.
“தேங்க்ஸ்டா அண்ணா!” உள்ளம் நெகிழச் சொன்னாள். சொல்லி முடிக்க முதலே கண்ணீரும் பொங்கிற்று! “சாரிடா அண்ணா.” என்றவள் அவன் தோளிலேயே சாய்ந்து விம்மினாள்.
“சசி என்ன இது? நல்ல நாள் அதுவுமா.. எல்லாரும் பாத்துக்கொண்டு இருக்கீனம். தொட்டதுக்கும் என்னத்துக்கு அழுகிறாய்?”
தமையனின் அதட்டலில் கண்களைத் துடைத்துக்கொண்டாலும், உள்ளம் நெகிழ்ந்திருந்ததில் கண்ணீரும் சட்டு சட்டென்று பொங்கிக்கொண்டுதான் வந்தது.
“கவிய வராத எண்டு நானே சொல்லிப்போட்டன் அண்ணா. உன்னைப்பாக்காம அவளும் அவளை பாக்காம நீயும் படுற கஷ்டம் தெரிஞ்சும் கோபத்தில சொல்லிப்போட்டனடா. இல்லாட்டி வந்திருப்பாள், நீயும் பாத்திருப்பாய். எல்லாம் என்னால..”
கலங்கிய கண்களோடு சொன்னவளிடம் மறுத்துத் தலையசைத்தான் செந்தூரன். “நாங்க சந்திக்கிற நாள் இது கிடையாது. நீ சும்மா கண்டதையும் நினச்சு கவலைப்படாத. இண்டைக்கு நீ சந்தோசமா இருக்கவேண்டிய நாள். பக்கத்தில இருக்கிறவனை பார், விட்டா அழுதுடுவான் போல!” தன்னவளின் நிலையை எண்ணி மனம் கனத்துப்போனாலும் தங்கையை தேற்றினான்.
கணவனைப் பார்த்தவளுக்கு புன்னகை அரும்பியது. அவள் அழுதால் அவனுக்குப் பிடிக்காது. தமையனுக்குத் தெரியாமல் முறைத்துக்கொண்டிருந்தான்.
“என்னோட வாங்கோ! அண்ணா நீயும் வா!” என்று இருவரையும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அவள் போய் நின்றது கனகரட்ணம் பரந்தாமனின் முன்னே!
தன் திருமணத்துக்கு அஜந்தனோடு சென்று அழைத்திருந்தாள் சசிரூபா. “கட்டாயம் வரவேணும் சேர். நீங்களும் நின்றுதான் எங்கட கலியாணத்தை நடத்தித் தரவேணும்.” என்று அவரிடமிருந்து ‘நிச்சயம் வருவேன்’ என்கிற வாக்கைப் பெற்றுக்கொண்டே வந்திருந்தாள்.
சொன்னதுபோலவே சரியான நேரத்துக்கு வந்தவர், தன்னைக் கண்டுவிட்டு வேகநடை போட்டு வந்தவனைக் கண்டு திகைத்துத்தான் போனார்.
காற்றிலாடிய அடர்ந்த கேசமும், கிளீன்ஷேவ் செய்து பளபளத்த முகமும், நெற்றியில் திருநீறின் மேலே சந்தனப்பொட்டும் வைத்து, அசாத்திய உயரத்தில் திடகாத்திரமான தேகத்தோடு, வலுவான கரமொன்றில் வேட்டியின் நுனியைப் பற்றியபடி, தன்னைக் கண்டுவிட்டு வேகநடை போட்டு வந்தவனின் கம்பீரத்தில் தடுமாறித்தான் போனார் கனகரட்ணம்.
அன்று பணிவு தெரிந்தவனிடம் இன்று நிமிர்வு இருந்தது. லட்சணமான ஆண்மகனாய் மாறியிருந்தான். கண்கள் நிறையப் பார்த்தவரின் ஆழ்மனது, அவரின் அனுமதி இல்லாமலேயே மருமகளின் அருகே அவனை நிறுத்திப் பார்த்து வியப்பெய்தியிருந்தது.
‘அந்தநாள்.. அவள் படிப்பால உயர்ந்து நிண்டால் நான் உழைப்பாள உயர்ந்து அவளுக்குச் சமனா நிற்பன் அங்கிள்!’ அன்றொருநாள் ஆணித்தரமாய் உரைத்தவனின் கூற்று காதுகளுக்குள் எதிரொலிக்கக் கண்டார்.
“வாங்க அங்கிள்! வாங்கோ..” என்று அழைத்துச் சென்று முன்னிருக்கையில் அமர்த்தியிருந்தான்.
பல விழாக்களுக்குச் சென்றிருக்கிறார் அவர். சொன்ன நேரத்தைத் தாண்டி பிந்தி நடப்பதும், எப்போதடா முடியும் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி காத்திருப்பதும், அந்த நேரத்தில் தான் அதைச் செய்வதா இதைச் செய்வதா என்று தடுமாறுவதும், வாய் சலசலப்புகள் என்று பலவகை அனுபவங்கள் உண்டு. ஆனால், இங்கோ அப்படி அல்லாமல் நேரா நேரத்துக்கு அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. உணவைக் கவனிக்க ஒரு குழு, வருவோரை கவனித்து அவர்களுக்கான இடம் பார்த்து அமர்த்த இன்னோர் குழு, தேவையானவற்றை ஓடியோடி எடுத்துக்கொடுக்க இன்னோர் குழு என்று சற்று நேரத்திலேயே தன் நண்பர்களை குழுக்களாகப் பிரித்து அனைத்தையும் கச்சிதமாக நடத்திக் கொண்டிருக்கிறான் என்று கண்டுகொண்டார் கேபி. அவன் மேடையில் நிற்க அவனது கண்ணசைவில் அனைத்தும் நிறைவேறிக் கொண்டிருந்தது. யாரையாவது தேடி அவன் விழிகளை சுழற்றினாலே, “என்னடா வேணும்?” என்று கேட்டுக்கொண்டு அடுத்த நொடியே வந்து நின்றார்கள் நண்பர்கள்.
அவனது அப்பாவும் அம்மாவும் எந்தவிதமான பதற்றமுமின்றி நின்றிருந்தனர். அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, கச்சிதமாக நாடாத்திக்கொண்டிருந்தவன் அவர்களை அப்படி நிற்க வைத்திருக்கிறான் என்று உணரமுடிந்தது அவரால். அவனது ஆளுமையை கண்டு மெச்சாமல் இருக்க முடியவில்லை. அதோடு, அறிந்தவர் தெரிந்தவர் அன்றி பெரும் முதலாளிகள் கூட அமர்ந்திருக்கக் கண்டார்.
மணமகளாய் அமர்ந்திருந்த சசி அணிந்திருந்த ஆடை ஆபரணங்கள் முதற்கொண்டு, அவன் பிடித்திருந்த மண்டபம் தொடங்கி, மண்டப அலங்காரம் அனைத்துமே அவனுடைய இன்றைய செல்வ நிலையை எடுத்துரைக்க, அன்றைக்குச் சொன்னதை நிறைவேற்றியிருக்கிறான் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொண்டிருந்தார்.
அவனுக்கிருந்த பொறுப்புணர்வில் அசந்துபோனார் கனகரட்ணம். என்ன முயன்றும் முடியாமல் அவர் கண்கள் அவனையே சுற்றிச் சுற்றி வந்தது. இப்போதும் அப்படித்தான் சசி கண்கள் கலங்கியதும் மேடையை நோக்கி விரைந்தவனை கவனித்தபடியிருக்க, சற்று நேரத்தில் சசி அவர்களை அழைத்துக்கொண்டு அவரிடம் வந்தாள்.
“நீங்க வந்தது எங்களுக்கு நிறைய சந்தோசம் சேர். தேங்க்ஸ் சேர்.” என்று முகம் மலர்ச் சொன்னாள் சசி.
“எனக்கும் சந்தோசம் சசி. எல்லாமே சிறப்பா அருமையா இருந்தது.” மனதிலிருந்து சொன்னார்.
“தேங்க்ஸ் சேர். இதுக்கு எல்லாம் காரணம் என்ர அண்ணா. ‘நிலாஸ் பிரைவேட் லிமிடெட்’ கம்பெனி முதலாளி.” தமையனின் கையை பிடித்து அவருக்கு ‘அறிமுகம்’ செய்து வைத்தாள் சசி.
அவர் விழிகளில் ஆச்சரியம் பரவியது. ‘நிலாஸ்’ பற்றியும் அதன் தரமான தயாரிப்புக்களைப் பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், அது இவனுடையது என்பதை அவர் அறியவே இல்லை. அதோடு, ‘நிலா எஸ்’ என்பதன் சுருக்கம்தான் ‘நிலாஸ்’ என்று கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சியும் தேவையாயிருக்கவில்லை.
“அண்ணா படிப்பு வரேல்ல எண்டு ‘ஏஎல்’லோட நிண்டுட்டான். ஆனா, நான் இண்டைக்கு உங்கட ஸ்டூடெண்ட்டா இருந்து டாக்டரா வந்ததுக்கு அவன்தான் காரணம் சேர்.” பெருமையாகச் சொன்னாள் அவன் தங்கை.
‘அவரின்ர ஸ்டூடன்ட்டா வந்து, டாக்டராகி, படிக்காத செந்தூரன்ர தங்கச்சி நான் எண்டு அவருக்கே காட்டுறன் பார்!’ என்று அன்று சவால் விட்டவள் இன்று அதை நினைவு வைத்து நிறைவேற்றுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை செந்தூரன். ரிசல்ஸ் வந்தபிறகுதான் கல்யாணம் என்றும் ஏன் சொன்னாள் என்றும் தெளிவானது.
சசி கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவதாயில்லை. “என்ர ஹஸ்பண்ட்டும் அண்ணாவும் கிளாஸ்மேட்ஸ் சேர். அவரும் அண்ணாவை மாதிரியே ஏஎல்லோட நிப்பாட்டிட்டார். நிலாஸ் யாழ்ப்பாண பிராஞ்ச்க்கு இவர் பொறுப்பு. கொழும்பு பிராஞ்ச் அண்ணா பாக்கிறான். வவுனியாப்பக்கம் அண்ணாட இன்னொரு பிரெண்ட் பாக்கிறார்.” என்று பெருமையாகவே சொன்னபோது கனகரட்ணத்தின் விழிகள் செந்தூரனின் விழிகளைச் சந்தித்தது.
‘படிப்பை மட்டுமே தகுதியா பாக்கிற ஆள் நானில்லை. எனக்குத் தேவை அவன் நல்லவனா, நல்ல உழைப்பாளியா என்றது மட்டும் தான். ஏன் எண்டா கடின உழைப்பும் ஒருத்தன உயர்த்தும் எண்டு தெரிஞ்சவன் நான்.’ பெயருக்காக அன்றி செயலிலும் சொன்னதுபோலவே செய்து காட்டியவனை அவரது விழிகள் மெச்சின!
“வாழ்த்துகள் தம்பி! உங்கட தயாரிப்பு எல்லாமே தரமானது எண்டு நானும் கேள்விப்பட்டிருக்கிறன். இன்னுமின்னும் முன்னேறவேணும்.” என்று கைகொடுத்து வாழ்த்தியவர், மணமக்களுக்கும் தன் வாழ்த்துகளை மீண்டுமொருமுறை வழங்கிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.
அவர் மறைந்ததும், “கலக்குற பெண்டாட்டி!” என்றான் அஜந்தன் ஆனந்தமாய். செந்தூரனுக்கும் சிரிப்புத்தான். அவரின் கண்களில் கண்ட மெச்சுதலை அவனால் மறக்கவேமுடியவில்லை. திருப்தியாய் உணர்ந்தான்.