அன்று கவின்நிலா கற்ற பள்ளிக்கூடத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி. மொத்தக் குடும்பமும் போகத் தயாராகினர். அவர்களின் பள்ளிக்கூடத்துக்கு அழியாத புகழை வாங்கிக்கொடுத்த, பழையமாணவியான கவின்நிலா அதிபரால் பிரத்தியேகமாகவும் அழைக்கப்பட்டிருந்தாள்.
“அழைப்பிதழ் பாத்தனியாம்மா?” பாடசாலைக்குச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தவளை அளவிட்டபடி கேட்டார் மேகலா.
“என்னத்தம்மா பாக்க இருக்கு? எப்பவும் நடக்கிறதுதானே.”
சோம்பலாய்ச் சொன்னவளுக்கு உண்மையிலேயே அங்கு செல்லச் சற்றும் பிரியமில்லை. அங்கு போனால், அவனது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனதும், அதற்குக் கட்டுண்டு அவன் வந்ததும் நினைவில் வரும். அவள் கொண்ட வெட்கமும், அதை அவன் ஆசையாய் ரசித்த அழகும் நெஞ்சை கீறும். நினைவுகளே பாரமாய் கனத்தன.
ஆனாலும் மரியாதையின் நிமித்தம் வந்திருந்தாள். இந்த வருடம் அவர்களின் சொந்த கிரவுண்டில் விளையாட்டுப் போட்டி நடாத்தப்படப்போகிறது என்று வந்தபிறகுதான் தெரிந்தது. அதுவும் சுற்றிவர மதில் சுவர் எழுப்பப்பட்டு வாலிபால், நெட்பால் என்று அனைத்தும் விளையாடக்கூடிய வகையில் அதற்கான கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டு முழுமையான விளையாட்டு மைதானத்தைக் கண்டபோது மிகவுமே சந்தோசமாய் உணர்ந்தாள்.
ஆனாலும், அவளின் உள்ளம் யுசி கிரவுண்டுக்கு இழுக்க, எல்லோரிடமும் வந்திருக்கிறேன் என்று இன்முகமாய் முகத்தைக் காட்டிவிட்டு, மெல்ல அங்கிருந்து நழுவினாள்.
கிரவுண்ட்டின் வாசலை மிதிக்கையிலே மனதினில் பெரும் போராட்டம் ஆரம்பித்திருந்தது. அன்று விழிகளை அகற்றாமல் பார்த்தானே.. அவன் கண்கள் நேசத்தை உணர்த்தி நிற்க, அதை விளங்கிக்கொள்ளத் தெரியாமல் தடுமாறினாளே..
அதுவும் அந்த ஓடை.. அந்த இடத்தைத் தாண்டி ஓரடி கூட எடுத்துவைக்க முடியாமல், கண்களில் கண்ணீர் பொலபொலவென்று கொட்டவும் அப்படியே சரிந்து அமர்ந்தாள்.
புயலாய் எல்லோரையும் சுழற்றி அடிக்கிறவன் அவளின் ஒற்றைக் கைப்பிடிக்குள் அடங்கி நின்றானே. அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காகத்தானே தாய் தந்தையரை விட்டுப் பிரிந்து, பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுப் பிரிந்து கொழும்பில் போய் தன்னைத் தானே சிறை வைத்திருக்கிறான்.
‘என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா செந்தூரன்? பிறகேன் என்னைத் தனியா விட்டுட்டுப் போனீங்க?’
சசியின் திருமணத்துக்காக வந்தவனைக் கண்டுவிட்டு, அவனைப்பற்றி அவன் அழகைப்பற்றி வாய் ஓயாமல் துஷாந்தினி புகழ்ந்து தள்ளியபோது, அருகில் வந்தவனைப் பார்க்கும் வாய்ப்பை இழந்துபோனோமே என்கிற துன்பத்தில், “தயவுசெய்து அவரைப்பற்றி ஒன்றுமே சொல்லாதடி!” என்று சொல்லியேவிட்டாள்.
‘ஒருக்கா.. ஒரேயொருக்கா உங்களை பாக்கோணும் மாதிரி இருக்கு. கண்ணுக்கு முன்னால வந்து நிண்டுட்டு போங்கோ. இன்னும் பத்து வருசத்துக்கு உயிரோட இருப்பன்.’ மனம் பெரும் குரலெடுத்துக் கத்தியதில் தொண்டையில் பெரும் பாறாங்கல் ஒன்று அடைத்துக்கொண்டது.
‘நான் தான் என்னவோ பெரிய இவ மாதிரி வீர வசனம் பேசினா நீங்க அதையே பிடிச்சுக்கொண்டு தொங்குவீங்களா?’ சண்டை போட்டாள் அவனோடு.
ஆனால், அவனது பிடிவாதத்தை அவளைத் தவிர அறிந்தவர் வேறு யாருமில்லையே! காதலைக் கூட எவ்வளவு பிடிவாதமாக, அழுத்தமாக அவளுக்குள் விதைத்தான்?
காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் நினைவுகள் அவனைச் சுற்றிவர, அங்கே விளையாட்டுப்போட்டி ஆரம்பித்துவிட்டதற்கு அறிகுறியாக அதிபர் உரையாற்றுவது ஸ்பீக்கரின் புண்ணியத்தில் அவளின் செவிகளை எட்டிக்கொண்டிருந்தது.
“இதுநாள் வரை பொது மைதானத்தில் விளையாடிய எங்கள் பாடசாலைப் பிள்ளைகள் இனிமேல் அவர்களின் சொந்த மைதானத்தில் விளையாடுவார்கள்.”
அந்த நிலத்தை வாங்கிக்கொடுத்தவர்கள் மீது நன்றியுணர்ச்சி அவளுக்குள்ளும் பொங்கிற்று. பல பிள்ளைகள் பொதுவெளியில் பயிற்சிகளை செய்யவேண்டும் என்கிற கூச்சத்தினாலேயே விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறத் தயங்குவார்கள். உடற்பயிற்சிப் பாடம் பலநேரங்களில் நடப்பதேயில்லை. இனி அதெல்லாம் இராது. நிறைவாய் உணர்ந்துகொண்டிருந்த வேளையில், “இதனை சாத்தியமாக்கித் தந்த, பெரும் மதிப்பிற்குரிய, ‘நிலாஸ்’ இன் நிறுவனர் திரு செந்தூரன் அவர்களுக்கு எங்கள் கல்லூரியின் சார்பிலும், மாணவர்களின் சார்பிலும் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்ற அதிபரின் வார்த்தைகளில், ‘செந்தூரனா? செந்தூரன் என்றா சொன்னார்?’ அந்தப்பெயரே பனிச்சாரலாய் உருமாறி அவள் மீது பொழிந்ததைப்போல தேகமெங்கும் சிலிர்த்தது அவளுக்கு.
“என்ர செந்தூரனா?” காதைக் கூர்மையாக்கினாள். ‘நிலாஸ்’ அதை உணர்த்த முனைந்தது.
‘உண்மையாவே செந்தூரன் என்றா சொன்னார்.. இல்ல எனக்குத்தான் அப்படிக் கேக்குதா?’
“பணத்தை ஈட்டுவதை மட்டுமே குறியாகக் கொள்ளாமல் பெற்றவர்கள் இல்லாத குழந்தைகளுக்காக அறிவுச்சோலை, படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்காக உதவிக்கரம் என்று பல குழந்தைகளின் கல்விக்கண்களைத் திறந்து, நம் இளையசமுதாயத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக விளங்கும் திரு செந்தூரன் அவர்களின் சேவையைப் பாராட்டி, எங்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பார்.” என்று அறிவிக்கவும், நம்பமுடியாமல் சிலையாகிப்போனாள் அவள்.
அங்கோ முகமெல்லாம் சிரிப்புடன் கம்பீரமாய் எழுந்து நின்ற செந்தூரனின் விழிகள், அவனை நோக்கி எழுந்து வந்த பீடாதிபதியை நோக்கின.
பொன்னாடை அவரிடம் நீட்டப்பட, அதனை வாங்கி, விரித்து, அவனைச் சுற்றி போர்த்திவிடும் வரையிலும் முகமெங்கும் நிறைந்திருந்த வெற்றிச் சிரிப்புடன் அவரையே பார்த்திருந்தான் அவன்.
‘எனக்கா தகுதி இல்லை எண்டு சொன்னீங்க? நீங்களே மதிக்குமிடத்தில் இருக்கும் என்னை இனியும் வேண்டாம் என்பீர்களோ?’ அன்றைய பேச்சுக்கு இன்று பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அவன். வெற்று வார்த்தைகளால் அல்ல! செயல்களால்.
கரம் பற்றி வாழ்த்தியவரின் விழிகள் வெளிக்காட்டிய ஆச்சரியத்தில் திருப்தியுற்றான் செந்தூரன். உதட்டில் உறைந்த சிரிப்புடன் “நன்றி!” என்றான் சற்றே தலையை சரித்து.
அவனிடம் மைக் நீட்டப்பட்டது. “மேடையில் அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கும், நாளைய சமுதாயத்தின் நம்பிக்கைத் தூண்களுக்கும் அன்பான வணக்கங்கள்!” அவனது கம்பீரக் குரல் செவிகளை நிறைத்தபோதுதான் கவின்நிலா என்கிற சிலைக்கு உயிர் திரும்பியது.
“செந்தூரன்…” கன்னங்களை கண்ணீர் நனைக்க, நடுங்கிய இதழ்கள் ஆசையாய் உச்சரித்தன. அவளின் உயிர்த்துடிப்பு வெகு அருகில்தான் இருக்கிறது. வெகு வெகு அருகில்!
“முதலாவதாக, கல்விக்கே தன்னை அற்பணித்த பீடாதிபதியின் கையால் கௌரவிக்கப்பட்டதை எண்ணி மிகவுமே பெருமை கொள்கிறேன். இந்த நாள் என் வாழ்வில் மிகவுமே முக்கியமான ஒரு நாள். மீண்டும் மீண்டும் அவருக்கு என் நன்றிகள்.” திரும்பி அவரைப் பார்த்துச் சொன்னான்.
இங்கே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென, மைதானத்தை நோக்கி ஓடத்துவங்கியிருந்தாள் கவின்நிலா.
“அயராத பயிற்சியின் பின்னே, உங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளை ஈட்டக் காத்திருக்கும் மாணவச் செல்வங்களே, உங்கள் நேரத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நன்றாகப் படியுங்கள். ஊக்கமெடுத்துக் கற்றுக்கொள்ளுங்கள். நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த கல்விமான்களாக வரவேண்டும் என்று முழுமனதோடு வாழ்த்துகிறேன். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்கு எங்கள் ‘உதவிக்கரம்’ எப்போதும் தயாராக இருக்கும். ஆனால்… “ என்றவன் இடைவெளி விட்டான்.
என்ன சொல்லப்போகிறான் என்று எல்லோரும் பார்க்க, “முயற்சித்தும் படிப்பில் முன்னுக்கு வரமுடியவில்லையா, மனம் சோர்ந்துவிடாதீர்கள். கடுமையாக உழையுங்கள். உங்களுக்குப் பிடித்த துறையில் முயற்சி செய்யுங்கள். கல்வி மட்டுமில்லை, கடின உழைப்பும் உயர்வைத்தரும். அதற்கு நானே உதாரணம்! இன்று படித்தவர்களால் பாராட்டுப் பெற்ற நான் பெரிதாகப் படிக்காதவன். எனக்குப் பிடித்த விஷயத்தில் உழைத்தேன். உயர்வு தானாக வந்திருக்கிறது. ஆக, முயற்சி திருவினையாக்கும். உழைப்பு உயர்வைத்தரும் என்று சொல்லிக்கொண்டு, உங்கள் பொறுமையை சோதிக்காமல் விடைபெறுகிறேன், நன்றி!” என்றவனின் துள்ளலான பேச்சில், கரகோஷத்தால் தங்கள் சந்தோசத்தை தெரிவித்தனர் மாணவச் செல்வங்கள்.
அந்தக் கரகோஷம் அடங்கும்முன்னே எல்லோரிடமும் விடைபெற்றும் கொண்டான்.
ஒரு பாடசாலையில், கல்விமான்கள் வீற்றிருந்த மேடையில், கல்வியே மேன்மைதரும் என்று கற்பிக்கும் கல்லூரியில், மாணவர்களுக்காக ஆற்றும் உரையில், “கற்றுக்கொள்ளுங்கள், அப்படியே கற்க வராவிட்டால் கடினமாக உழையுங்கள். எதற்கும் கவலைப்படாதீர்கள்!” என்று தைரியமாகச் சொல்லிவிட்டு இறங்கி நடந்தவனையே மொய்த்தன அங்கிருந்த அத்தனை விழிகளும்!
நிதானமாக நடைபோட்டவனிடம் மட்டும் உள்ளே பெரும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.