அவளின் பாடசாலையிலிருந்து அழைப்பு வந்தபோது, மறுப்போமா என்று எண்ணியவன், ‘உங்களுக்கான சந்தர்ப்பங்களை தவறவிடாதீங்கோ.’ என்றவளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டல்லவா வந்தான். கேபியின் கையால் கௌரவிக்கப்படப்போகிறான் என்பது அவனுடைய இத்தனை வருட ஓட்டத்துக்கான மிகச்சரியான பரிசுதான். அவரின் கேள்விகளுக்கான சரியான பதிலும் கூட! என்றாலும் அவளைக் காணலாம் என்கிற ஆசைதானே அவனை இழுத்து வந்திருந்தது. அவனைப்பார்க்க அவளுக்குமான சந்தர்ப்பம் தானே. ஆவலாய் வந்து பார்த்தால் அவளோ கண்ணிலேயே படவேயில்லை. அவன் பெயரை பெரிதாகப் போட்டிருந்த அழைப்பிதழைப் பார்க்காமல் இருந்திருக்கப் போவதில்லையே.
‘பாத்தும் வரேல்ல நீ?’ ஏமாற்றம் கோபமாய் சீறியது.
மைதானத்திலிருந்து வெளியேறி பள்ளிக்கூட வளாகத்துக்குள் வந்தான். இது அவள் கற்ற பாடசாலை. அந்தப் பாடசாலையின் மீது அவனுக்குள் ஒரு சொந்தம் உருவானது. அதனால் தானே பெரும் தொகையை கொடுத்து பக்கத்துக் காணியை வாங்கி மைதானமாக மாற்றிக்கொடுத்தான்.
இந்தக் கட்டடங்கள் அவளை ரசித்திருக்கும் அவளின் குறும்புகளைக் கண்டு சிரித்திருக்கும். ஒரு பரவசம் அவனுக்குள். காணும் இடமெங்கும் கற்பனையில் அவளைப் பொருத்திப்பார்த்தபடி நடந்தவன், நேரெதிரே மேகலாவைக் கண்டதும் நின்றுவிட்டான்.
நிமிர்விலும் தெளிவான பார்வையிலும் தன் மாமாவைக் கொண்டிருந்த அவனது நிலா உருவத்தில் தன் தாயைக் கொண்டு பிறந்திருந்தாள்.
‘என் நிலாப்பெண்ணின் அம்மா.’ அதைத்தாண்டிய சிந்தனைகள் அத்தனையும் உறைந்துவிட, அவனது விழியோரங்களில் மெல்லியதாய் கோடிட்டுவிட்ட கண்ணீரில் அவர் உறைந்து நிற்க, சிறிதாய் புன்னகைத்தான் அவன்.
“சுகமா இருக்கிறீங்களா ஆண்ட்டி?” பாசமாய் விசாரித்தான்.
ஆம் என்று தலையசைத்துவிட்டு, “நிலா கார்டியாலஜி செய்துகொண்டே, ஸ்பெஷல் ட்ரைனிங் எடுக்க ரஷ்யா போறாள்.” என்றார் தன்னைமீறி.
நலம் விசாரித்தவனிடம் மகளைப்பற்றிச் சொல்லத்தூண்டியது எது என்று அவருக்கே தெரியவில்லை.
“ஓ..!” அதனை உள்வாங்கிக்கொள்ள போராடுகிறான் என்று விளங்கியது அவருக்கு.
“எதைப்பற்றியும் யோசிக்காம நல்லா படிக்கச் சொல்லுங்கோ.” அவரிடமே சொல்லிவிட்டுச் சென்றவனை வியப்போடு பார்த்திருந்தார்.
தான் இதனை மகளிடம் சொல்வேன் என்று நினைத்தானா? அல்லது அவன் அவளுக்கு யார் அவரிடமே சொல்லிவிட்டுப் போகிறானா? எது எப்படியானாலும், அவன் கண்களில் தெரிந்த போராட்டம், பிரிவுத்துயர் அவரையும் தாக்கிவிட்டதில் நல்ல பிள்ளை என்கிற வித்து அவர் மனதில் விழுந்திருந்தது.
அவனோ அங்கே ஒரு மாணவியிடம் எதையோ விசாரித்துக்கொண்டிருந்தான். அவளும் எதையோ காட்டிச் சொல்லிவிட்டுப் போவது தெரிந்தது. பள்ளிக்கூட கட்டடம் ஒன்றை நோக்கி அவன் நடக்க, இடைவெளி விட்டுப் பின்தொடர்ந்த மேகலா, அவன் கவின்நிலா கற்ற வகுப்பறைக்குள் செல்வதைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டார்.
கரும்பலகை அருகே சென்று நின்று மெல்லத் தடவினான். அவன் விழிகள் அந்த வகுப்பறையைச் சுற்றிச் சுழன்றது.
‘எங்க இருந்திருப்பா?’
‘என்ர நிலா நல்ல கெட்டிக்காரி. பின் வாங்குக்கு கடைசிவந்தாலும் போகமாட்டாள். மேனியை வந்து தழுவும் காற்றை அவளுக்கு மிகமிகப் பிடிக்கும்.’ முதல் வரிசையில் வகுப்பறை வாசல் அருகே இருக்கும் முதலாவது மேசையில் சென்று அவன் அமரவும் திகைத்துப்போனார் மேகலா.
எந்த உள்ளுணர்வு அவனை அவளிடத்துக்கு மிகச் சரியாக அழைத்துச் சென்றது?
மெல்லத் தன்னை சமாளித்துக்கொண்டு திரும்பியவர் பார்வையில், பெரும் தவிப்பைச் சுமந்தபடி பள்ளிக்கூடத்துக்கு பின்னாலிருக்கும் மைதானத்தை நோக்கி வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்த கவின்நிலா பட்டாள். அதுவும் அவள் விழிகளில் தெரிந்த ஏக்கம், வழிந்துகொண்டிருந்த கண்ணீர்.. அவரின் நெஞ்சை உருக்கியது. செல்ல மகள், பெருமையை தவிர வேறெதையும் அவர்களுக்குத் தேடித்தராத அருமையான மகள், இதுநாள் வரை தன் விருப்பம் என்ன என்று காட்டிக்கொள்ளாதவள் இன்று ஒற்றை நிமிடத்தில் தன் மனதைச் சொல்லிவிட்டு தன் உயிரைத் தேடி ஓடிக்கொண்டிருந்தாள்.
நீ தேடிப்போகும் உன் சந்தோசம் இங்கே உன்னைத் தேடி வந்திருக்கிறது என்று எப்படிச் சொல்வார்? அவர் கண்களிலும் கண்ணீர்.
ஊமையாய் நடக்கும் காட்சிகளை பார்வையிடும் பார்வையாளராக மாறிப்போனார் மேகலா.
ஓடிப்போன நிலா கண்டது அவனற்றுக்கிடந்த மேடையையே! ‘கடவுளே எங்க போயிட்டீங்க செந்தூரன்? ஒருக்கா.. ஒரே ஒருக்கா முன்னால வந்து நில்லுங்கோ..’ மனம் ஆற்றாமையில் கதறியது.
‘நான் சொல்லாம எனக்கு முன்னால வரவே மாட்டீங்களா?’ மைதானத்தில் எங்குதேடியும் அவனில்லை. ஓடிப்போய் அவளுக்குத் தெரிந்த மாணவியிடம் விசாரித்தாள்.
“நிலாஸ் செந்தூரன்.. அவர் எங்கம்மா?”
“மேம், அவர் ஸ்பீச் முடிஞ்சதும் போய்ட்டார் மேம்.”
‘போய்ட்டானா? இவ்வளவு தூரம் வந்தும் என்ன பாக்காம போய்ட்டானா?’ ஹோ.. என்று அவள் இதயமெங்கும் ஒரே இரைச்சல்.
உன் நினைவுகளைத் தேடி
நான் போன வேளையில்தான்
நிஜமே நீ வந்துவிட்டுப் போனாயா?
அழுகையோடு மீண்டும் வாசலுக்கு ஓட்டம் பிடித்தாள். அவனைக் கண்டே ஆகவேண்டும். முகத்தை ஒருமுறை பார்த்தே தீரவேண்டும்! அங்கே அப்போதுதான் கறுப்புநிற நீண்ட ‘பி எம் டபிள்யு’ கார் ஒன்று வீதியில் வழுக்கத் துவங்கியிருந்தது.
துவண்டுபோனாள். ‘எனக்குக் கிட்ட வந்திட்டும் என்னைப் பாக்காம போறீங்களா?’ கண்களில் கண்ணீரோடு பார்த்திருக்க, காரின் வேகம் குறைந்தது. ‘இறங்கி வரப்போறான்..’ இதயம் ஆர்ப்பரிக்கத் துவங்கிய அந்த நொடியில் மீண்டும் கார் பழையபடி நகரத் துவங்க துடித்துப்போனாள். நிலாப்பெண்ணின் செந்தூரன் அவள் பார்த்திருக்கும்போதே அவளைப் பாராமல் சென்றே விட்டிருந்தான்!
‘நான் நிக்கிறன் எண்டு தெரிஞ்சும் பாக்காம போறீங்களா?’ கன்னங்களை நனைத்த கண்ணீர் மட்டுமே மிச்சமாய் போயிற்று அவளுக்கு.
அங்கே சென்று கொண்டிருந்தவனின் உள்ளத்திலும் பெரும் பாரம். அவள் பின்னால் நிற்கிறாள் என்று உள்ளுணர்வு உணர்த்திய நொடியில் அந்த இடத்தைவிட்டு விலக முடியாமல் அவன் வேகம் குறைந்ததுதான். ஆனாலும், பின் கண்ணாடி வழியாகவேனும் அவளைப் பாராமல் வந்துவிட்டிருந்தான்.
அவனை அவள் காணாதபோது, அவனால் அவளைக் காணமுடியாது. ‘நாம் இருவருமே நம்மைக் காணும் நேரம் வரும்! அன்று பார்த்துக்கொள்வோம், பேசிக்கொள்வோம்! அன்றைக்குப்பிறகு பிரிவென்பதே நமக்கில்லை!’ கொழும்பை நோக்கி அவன் கார் சீறிப்பாயத் துவங்கியிருந்தது!
அன்றைய நாளுக்குப் பிறகு அந்த ஊருக்கே அவன் நாயகனாகிப் போனான். பத்திரிகைகள் அவன் பெயரைச் சுமந்து வந்தன. பல தொலைக்காட்சிகள் அவனைப் பேட்டி கண்டன.
எங்கும் அவன் அழுத்திச் சொன்ன வார்த்தைகள், “கட்டாயம் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள். முயன்றும் முடியவில்லையா? கடுமையாக உழையுங்கள். கல்வி மட்டுமில்லை ஒருவனை நேர்மையான கடின உழைப்பும் உயர்த்தும். அதற்கு நானே உதாரணம்!” என்பதுதான்.
நிலாவின் நெஞ்சம் பெருமையிலும் பூரிப்பிலும் விம்மித்துடித்தது. அவளின் செந்தூரன்! இவை அத்தனையையும் நடாத்திக் காட்டியவன் அவளின் செந்தூரன். அற்புதமான ஆண்மகனின் காதலுக்குக்குச் சொந்தக்காரியாக வாழ்வதை கர்வமாய் உணர்ந்தாள்.
காலச்சக்கரம் கடகடவென்று சுழலத் துவங்கியிருந்தது. கவின்நிலாவும் ரஷ்யா சென்றிருந்தாள். உதவிக்கரத்தை கபிலன் பொறுப்பேற்றுக் கொண்டான். செந்தூரன் உதவிகளை ஆசையாசையாக தேடித்தேடி செய்தான். உளமாரச் செய்தான். உள்ளன்போடு செய்தான்.
மாலைகளும் மரியாதைகளும் அவனைத் தேடி வந்தன. அவனே எண்ணியிராத உயரங்களை எட்டியபோதும் அவன் அதியுயர் உச்சமாய் அவள்தான் இருந்தாள். அவளை எட்டுவதே அவன் இலக்கு. தன் இலக்கை எட்டுவதற்காகக் காத்திருந்தான்.