அத்தியாயம் 29
முதலில் நிலன் இதைப் பெரிதாக நினைக்கவே இல்லை. நியாயமாக அவளுக்குச் சேரவேண்டிய நிலத்தை அவள் பெயருக்கு மாற்றுவதற்கே அவ்வளவு யோசித்தவள் அவள்.
அப்படியிருக்க பாலகுமாரனின் சொத்தின் மீதா ஆசைப்படுவாள்? அவள் எல்லாம் ரோசத்திற்கே ரோசத்தைச் சொல்லிக்கொடுக்கும் ராகம்.
அந்த நினைப்புடன்தான் அவளுக்குக் குறுந்தகவலைத் தட்டிவிட்டான். இத்தனை நாள்களாக அவனும் அவளிடமிருந்து விலகித்தானே நின்றிருந்தான். அதையும் மீறிக்கொண்டு மனைவி தன் செயலினால் அவனை ஈர்க்கவும் அந்த உற்சாகமும் சேர்ந்துகொண்டது.
“நீங்க இன்னும் உங்கட அத்தையையும் அப்பப்பாவையும் போய்ப் பாக்கேல்லை போல.” என்று அவளிடமிருந்து வந்த பதிலில்தான் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான்.
அப்போதுதான் தன் கண்ணைத் தானே தன் விரலால் குத்திக்கொள்வதைப் போல, ஜானகியை வைத்தே பாலகுமாரனுக்கும் சக்திவேலருக்கும் அடிக்கப்போகிறாள் என்று புரிந்தது. அவள் செய்த செயலின் வீரியமும் புலனாகத் துவங்க, தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
வீட்டிற்குப் போகவே யோசித்தான். போகாமல் இருக்க முடியாதே என்று இவன் நினைத்து முடிக்க முதலே, பிரபாகரன் அவனுக்கு அழைத்தார்.
“என்ன தம்பி இதெல்லாம்? உன்ர மனுசிட்ட எதையும் சொல்லி வைக்க மாட்டியா? அவா பாதிக்கப்பட்டவாதான். அதுக்காகச் சொத்தை எழுதி எடுக்கிறதெல்லாம் என்ன இது?” என்று சலிப்பும் சினமுமாய் அவர் கேட்கவும் அவன் முகம் மாறிப்போயிற்று.
“அவள் ஏதும் நியாயம் இல்லாம நடக்கிறாளா அப்பா?” என்றான் இறுகிய குரலில்.
“அதுக்காக என்ன இது? பழி வாங்கிறாவா? இதுக்கா கட்டி எங்கட வீட்டுக்கு வந்தவா? முதல் இது குடும்பமா வேற என்னவுமா? உன்ர அத்தையைப் பற்றி உனக்குத் தெரியும். உன்ர மனுசி பாத்த தேவையில்லாத வேலைக்கு எங்க எல்லாரின்ர தலையையும் போட்டு உருட்டப் போறா. இது தேவையா எங்களுக்கு?” என்று சினந்தார் அவர்.
அதற்காகத்தானே அவள் இதைச் செய்ததே. அதைச் சொல்ல முடியாமல், “நீங்க வைங்க, நான் வீட்டுக்கு வாறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவன் அங்கே சென்றபோது பாலகுமாரனைப் போட்டுப் பிளந்து கட்டிக்கொண்டிருந்தார் ஜானகி. இடிந்துபோய் அமர்ந்திருந்தார் சக்திவேலர்.
“அறிவு கெட்ட மனுசன். புத்தி என்ன பேதலிச்சுப் போச்சே? ஊமக் கோட்டான் மாதிரி இருந்துபோட்டுக் கட்டின மனுசிக்கும் பெத்த பிள்ளைக்கும் துரோகம் செய்திருக்கிறியே. நீ எல்லாம் நல்லாருப்பியா? என்ன தைரியத்தில் அவளுக்கு எழுதிக் குடுத்தனி? ஏன் எழுதிக் குடுத்தனி? அவளுக்கு எங்கட சொத்தில் என்ன உரிமை இருக்கு? சொல்லு!” என்று அவரைப் பிடித்து உலுக்கினார் ஜானகி.
தமையன், தமையன் மனைவி, தகப்பன், கீர்த்தனா இருப்பதையெல்லாம் அவர் பொருட்டில் கொள்ளவே இல்லை. விட்டால் கெட்ட வார்த்தைகளால் கூடத் திட்டிவிடுவார் போலும்.
அதுவும் அவர் அவ்வளவு கேட்டும், போட்டு உலுக்கியும் அவரை நிமிர்ந்து கூடப் பாராமல் கல்லுப்போல் அமர்ந்திருந்த மனிதரைக் கண்டு ஜானகிக்கு ஒன்றுமே புரியமாட்டேன் என்றது. புத்தி ஏதும் பேதலித்துவிட்டதா என்று கூட யோசித்தார்.
“என்னப்பா பாத்துக்கொண்டு நிக்கிறீங்க. என்ர தலைல மண்ணை அள்ளிப் போட்டுட்டுக் குத்துக்கல்லு மாதிரிக் குத்திக்கொண்டு இருக்கிறான் பாவி! என்ன எண்டு கேளுங்களன். உங்கட தங்கச்சின்ர மகன்தானே?”என்று தகப்பனிடமும் கத்தினார்.
அவருக்கும் பாலகுமாரனை இரண்டாகக் கிழித்துத் தொங்கவிட்டால் என்ன என்கிற அளவிற்கு ஆத்திரம்தான். மகளை வைத்துக்கொண்டு எதையும் கதைக்க முடியவில்லை.
அதைப் பற்றிக் கேட்கப்போனால் இளவஞ்சி பற்றிய உண்மை தெரிய வந்துவிடுமோ என்று பயந்தார்.
அதில், “காலம் முழுக்கக் கைக்கையே வச்சு உன்னப் பாத்ததுக்கு திருப்பி நல்லா செய்திட்டாய் என்ன?” என்றார் வெறுப்புடன்.
முகம் கன்றிப்போய் அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தார் பாலகுமாரன். இது என்றோ ஒரு நாள் நடக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இத்தனை விரைவில் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான்.
ஆனால், என்ன நடந்தாலும், அவரை நடு வீட்டில் போட்டுக் கொழுத்தினாலும் வாயைத் திறப்பதில்லை என்கிற முடிவில் இருந்தார். இது அவர் மகள் அவருக்குத் தரும் தண்டனை. அதை எப்படி மறுப்பார்?
“இதுக்குத்தான் அவள் இந்த வீட்டுக்கு வேண்டவே வேண்டாம் எண்டு சொன்னனான். ஆராவது கேட்டீங்களா? இப்ப சந்தோசமா அண்ணா உனக்கு? இதுக்குத்தானே ஆசைப்பட்டனி? என்ர சொத்தை எனக்குத் தரமாட்டாய். பாதி சொத்தை அவளை வச்சு வாங்கியாச்சு. இப்ப உனக்குக் குளுகுளு எண்டு இருக்குமே. இப்பிடிக் கூடப்பிறந்தவளின்ர வாழ்க்கைக்கு அள்ளி வச்சுப்போட்டு நல்லாருப்பியா? இல்ல உன்ர வம்சம் நல்லாருக்கும் எண்டு நினைக்கிறியா? நாசமாத்தான் போவீங்க. எல்லாரும் நாசமாத்தான் போவீங்க. வயிறு எரிஞ்சு சொல்லுறன். நல்லா இருக்கவே மாட்டீங்க.” என்றவரின் வார்த்தைகளில் சந்திரமதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார் என்றால் பிரபாகரனுக்கு வார்த்தைகளே வரவில்லை.