அன்று, அந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதப்போகிற மாணவியருக்கான பிரியாவிடை நிகழ்வு நடக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பிரமிளா நியமிக்கப்பட்டிருந்தாள்.
காலையிலேயே பரபரப்புத் தொற்றிக்கொண்டவளாக மீண்டும் மீண்டும் நிகழ்ச்சி நிரலைச் சரிபார்ப்பது, மாணவியருக்கு நினைவூட்ட வேண்டியவற்றை நினைவூட்டுவது என்றிருந்தாள்.
மேடை அலங்காரங்கள் முடிந்துவிட்டதா, பூமாலைகள் வந்துவிட்டனவா, கோலம் போடவேண்டியவர்கள் கோலத்தைப் போட்டு முடித்தார்களா, பெரிய விளக்கை மாடியில் இருக்கும் மண்டபத்துக்குக் கொண்டு வந்தாயிற்றா என்று கேட்டு, எந்தக் குறையும் இல்லாமல் நிகழ்வுக்கான அத்தனை ஆயத்தங்களையும் சரிபார்ப்பது, திருநாவுக்கரசு சேருக்கு அறுவுறுத்தல் கொடுப்பது, எடுத்துவைக்க வேண்டியவற்றை எடுத்து வைப்பது என்று பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தாள்.
ஓய்வுபெற்ற அதிபர் என்கிற வகையில் தனபாலசிங்கத்துக்கும் அழைப்பிருந்தது. கூடவே, முன்னாள் ஆசிரியையாகச் சரிதாவையும் வரச் சொல்லியிருந்தாள் பிரமிளா. முதல் நாளே சென்று அவர்கள் இருவருக்குமான ஆடைகளைத் தெரிவுசெய்து கொடுத்துவிட்டு வந்திருந்தாள். இப்போது அழைத்து, அவர்களும் தயாராகிறார்களா என்று கேட்டுக்கொண்டாள்.
அதுவரை அவளையேதான் கவனித்துக்கொண்டிருந்தான் கௌசிகன்.
விழா என்பதில் அதிகமாகவும் இல்லாத குறைந்தும் தெரியாத வகையில் பச்சைக்கிளி வர்ணத்தில் மென் மஞ்சள் கலந்த சேலை ஒன்றை உடுத்தியிருந்தாள். அவளின் கொண்டை நீண்ட பின்னலாக உருமாறி இருந்தது.
பிரத்தியேகமாக எந்த நகை நட்டுக்களும் இல்லை. கையில் கருப்புபார் மணிக்கூடு, கழுத்தில் தாலிக்கொடிக்குப் பதிலாக அன்றொருநாள் அவன் வாங்கிக் கொடுத்த தாலிச்செயின், காதில் கண்ணை உறுத்தாத தோடு, நெற்றியிலும் உச்சியிலும் குங்குமம் என்று விழிகளை நிறைத்தாள் மனைவி.
கூடவே, அவளின் பெரிய வயிறும், அதனோடு அங்குமிங்குமாக நடக்கையில் விலகும் சேலையை அடிக்கடி இழுத்து விடுகிற அழகும் அவன் உதட்டினில் முறுவலைத் தோற்றுவித்தன.
நான்கு நாட்களுக்கு முதல் அவர்களுக்குள் உண்டான மெல்லிய பிணக்கிற்குப் பிறகு அவளிடம் மீண்டும் ஒரு விலகலை உணர்ந்தே இருந்தான். அவள் மகவைச் சுமக்கிற இந்த நேரத்தில் அவன் மனதும் மனைவியின் அருகாமையை வெகுவாகவே நாடிற்று. அவளோ நெருங்க விடவே மறுத்தாள். மனவருத்தம் ஒன்று அவனுக்குள் இழையோடிக்கொண்டே இருந்தது.
அவனாக நெருங்கினால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டுவிடுவாளோ என்கிற பயத்தில், அவளாகக் கோபத்தை விடுத்து அவனோடு பேசுகிற நாளுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தான்.
அவனுக்கான உடைகளையும் எடுத்து வைத்துவிட்டு, “நான் சாப்பிட்டு வாறன். என்னைக் கொண்டுவந்து விட்டுட்டு ஒன்பது மணிக்கு அங்க நிக்கிறமாதிரி வாங்கோ.” என்றுவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள்.
‘அத நிண்டு நிதானமா முகம் பாத்து சொன்னா என்னவாம்.’ முகத்தைக் கல்லுமாதிரி வைத்துக்கொண்டு சொன்னவளின் செயலில் மனம் சுருங்கிவிட எழுந்து தயாராகினான். நிர்வாகி என்பதால் பிரதம விருந்தினரோடு அவனும் சேர்த்துக்கொண்டால் போதும்.
விழாவும் இனிதே தொடங்கிற்று. பிரதான மண்டபத்தில் கூடியிருந்த கடைசி வருடத்து மாணவியர் எல்லோரும் வானவில்லின் வர்ணங்களாகச் சேலையில் ஜொலித்தனர். உயர்தரத்தில் முதலாமாண்டில் இருக்கும் மாணவியர்தான் விழாவினை ஒழுங்கு செய்பவர்கள் என்பதால் அவர்களும் வந்திருந்தனர்.
ஆசிரிய ஆசிரியைகளின் முகத்திலும் பிரத்தியேக மலர்ச்சி. நடப்பது என்னவோ பிரியாவிடை நிகழ்ச்சி. அதன் சாயலே இல்லாமல் சிரிப்பும் கனைப்புமாக அந்த மண்டபமே அல்லோலகல்லோலப்பட்டது.
பிரதம விருந்தினர் வந்துகொண்டிருக்கிறார் என்றதும் மேடையேறி மைக்கின் முன்னே சென்று நின்றுகொண்டாள் பிரமிளா.
ஆசிரியர்கள், அதிபர் எல்லோரும் இணைந்து பிரதம அதிதியோடு அந்த மணடபத்துக்குள் நுழைந்தபோது, “எங்கள் கல்லூரியின் 2021ஆம் ஆண்டின் உயர்தர மாணவியரின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு எங்களின் அழைப்பை ஏற்று வருகை தரும் மாவட்ட நீதிபதி இளம்பிரையன் அவர்களைப் பணிவன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம்!” என்று வரவேற்கத் தொடங்கியிருந்தாள் பிரமிளா.
“இந்தக் கல்லூரியின் உயர்வுக்காகப் பாடுபடும் நிர்வாகத் தலைவர் திரு கௌசிகன் அவர்களையும், அதிபர் திரு கதிரேசன், உப அதிபர் திரு திருநாவுக்கரசு ஆகியோரையும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் திரு தனபாலசிங்கம், அவரின் துணைவியார் திருமதி தனபாலசிங்கம் அவர்களையும் வருக வருக என்று மனதார வரவேற்கிறோம்!”
கூடவே, ஆசிரியர்களை, மற்றைய கல்லூரிகளிலிருந்து வந்திருந்த ஆசிரியர்களை, மாணவர்களை என்று அவள் குறிப்பிட்டு வரவேற்புரை வாசிக்க, எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர் மாணவியர்.
நடுவில் பாதை விட்டு இரு பக்கமும் மாணவியர் எழுந்து நின்றிருக்க, நீதிபதியுடன் இணைந்து நடந்து வந்துகொண்டிருந்த கௌசிகனின் விழிகள் மனைவியிடமே குவிந்திருந்தன. அவனுடைய பெயரை அவள் சொன்ன பொழுதுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதனாலோ என்னவோ தன் பெயரினை அவளின் வாயால் கேட்டபோது அவனுக்குள் என்னென்னவோ மாற்றங்கள்.
பிரமிளாவும் கணவனைக் கவனிக்காமல் இல்லை. வருகிறவர்களிலேயே இளையவன் அவன்தான். அவள் தேர்வு செய்து கொடுத்திருந்த அதே ஆடைகளை அணிந்து, கம்பீரமாக நடந்து வந்துகொண்டிருந்தான். கண்கள் அவனைக் கவனித்தாலும், விருந்தினர்களை வரவேற்று, மங்கள விளக்கினை ஏற்றவைத்து, மேடையில் அமரவைத்தாள்.
கடவுள் வணக்கம் ஆரம்பித்து, கல்லூரிக் கீதம் இசைத்து என்று ஆரம்பமான நிகழ்வு, நீதிபதியின் புத்திமதி மிகுந்த உரையோடு நகர்ந்து, உப அதிபரின் சொற்பொழிவுடன் கடந்து, அதிபர் பேசி, தனபாலசிங்கத்தின் முறை வந்து அவர் எழுந்துகொண்டபோது, மாணவியரின் கரகோசம் அடங்குவேனா என்றது.
அங்கிருந்த அன்னை, தந்தை, மகள் மூவரின் நெஞ்சமுமே விம்மிப்போயிற்று. இதுதானே வாழ்க்கை! இதன் பெயர்தானே வாழ்தல்!