நொடியில் உங்கள் கணவர்தான் அவள் தந்தை என்று அவனால் சொல்லியிருக்க முடியும். அது அதோடு மட்டுமே நிற்காதே. நடந்து முடிந்த அனைத்தையும் தோண்டித் துருவும் நிலை வரும். வீடு இன்னும் நரகமாகும்.
இதற்கே இந்த ஆட்டம் ஆடுகிறவர் பாலகுமாரனை என்ன பாடு படுத்துவார்? என்ன செய்யவும் தயங்கமாட்டாரே என்கிற பயத்தில்தான் வாயை மூடிக்கொண்டான். ஆனாலும் இளவஞ்சி மீது அவனுக்கு அத்தனை ஆத்திரம்.
அவள் எல்லாம் எவ்வளவு உயரத்தில் இருப்பவள். அவளுக்கு இப்படியான பேச்சை எல்லாம் கேட்க வேண்டும் என்று கட்டாயமா என்ன?
கோபத்தில் அவன் அவளுக்கு அழைக்கவில்லை. முதலில் அவள் போன பயிற்சியை முடித்துக்கொண்டு வரட்டும் என்று நினைத்தான். இப்போது அவள் இங்கு இல்லாததே நல்லதற்குத்தான் என்றும் நினைத்தான்.
ஆனால், அவன் எண்ணியதற்கு மாறாக, இரண்டாம் நாளே நேராக அவன் வீட்டுக்கே வந்து நின்றாள் இளவஞ்சி.
அவளைக் கண்டதும் என்ன செய்வது என்று தெரியாது கையைப் பிசைந்தார் சந்திரமதி. அவருக்குப் பெரும் பயம் பிடித்துக்கொண்டது. அன்று வீட்டில் நடந்த கலவரத்திலிருந்தே அவரும் அந்த வீடும் இன்னும் முழுமையாக வெளியில் வரவில்லை.
அது போதாது என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க வந்திருக்கிறவளாகத்தான் அவள் அவர் கண்ணுக்குத் தெரிந்தாள்.
“அம்மாச்சி…” வீட்டு நிலை சரியில்லை, நீ போய்விட்டு பிறிதொரு நாளில் வா என்று சொல்ல நினைத்தாலும் முடியவில்லை.
“என்ன மாமி? பேயைக் கண்ட மாதிரி என்னைப் பாத்து முழிக்கிறீங்க?” இவ்வளவு காலமும் அவரிடமும் ஒதுக்கம் காட்டியவள் இன்று உரிமையாக அழைத்து, சகஜமாகக் கேள்வி வேறு கேட்டாள்.
அவருக்கு அதற்கும் பதறியது. அவள் காட்டிய நிதானமும், பேசிய பங்கும் அவள் எதற்கோ தயாராகவே வந்திருப்பதாகச் சொல்லிற்று.
ஜானகி வந்துவிடக் கூடாதே என்று அவர் கடவுளை வேண்டி முடிக்கவில்லை, “கேடுகெட்டவளே! செய்றதை எல்லாம் செய்துபோட்டு எவ்வளவு தைரியமா என்ர வீட்டுக்கையே வந்து இருக்கிறாய்!” என்று ஆவேசத்துடன் கத்திக்கொண்டு வந்தார் ஜானகி.
அவர் வருகிற வேகத்துக்கு அடித்துவிடுவாரோ என்று பயந்து, “மச்சாள், கொஞ்சம் நிதானமா இருங்க.” என்று நடுவில் புகுந்து தடுக்க முயன்றார் சந்திரமதி.
ஆனால், இளவஞ்சி அசரவில்லை. “நிதானம் வேணும் ஜானகி அம்மா. நான் உங்கட மருமகன் நிலனோ, இல்ல உங்கட மகன் மிதுனோ இல்ல. தாறதுதான் கிடைக்கும். அதால ஒழுங்கா தள்ளி நிண்டு வாயால மட்டும் கதைங்க!” என்றாள் எச்சரிக்கும் விதமாக.
“இல்லாட்டி என்னடி செய்வாய்? நீ என்ன அவ்வளவு பெரிய இவளா? என்ன சொல்லி ஏமாத்தி என்ர மனுசனிட்ட இருந்து சொத்தைப் பறிச்சனி? சொல்லு!”
“எனக்குச் சேரவேண்டியத நான் வாங்கினதுக்கு நீங்க ஏன் துடிக்கிறீங்க?” உதட்டோரம் வளைந்த சிறு ஏளனச் சிரிப்புடன் கேட்டாள் அவள்.
இந்தச் சத்தத்தில் ஓய்விற்காகச் சற்றுச் சரிந்திருந்த சக்திவேலர் விழுந்தடித்துக்கொண்டு எழுந்து வந்தார். அவருக்கும் அவளைக் கண்டதும் ஆத்திரம் உச்சிக்கு ஏறிற்று. அதே நேரத்தில் ஒரு பதற்றமும். இப்போது தொழிலிலாகட்டும் வீட்டிலாகட்டும் அவர் பிடி அவளிடம். அவர் நிதானமாகத்தான் நடக்க வேண்டும். இதையறியாத அவர் மகள், “என்னது உனக்குச் சேர வேண்டியதோ? ஆருக்கு காதில பூ சுத்துறாய்?” என்று சீறினார்.
“காதுல பூவா? உங்கட அப்பா உங்களிட்ட ஒண்டுமே சொல்லேல்லையா?” பொய்யாய் வியப்புக் காட்டி வினவினாள் அவள்.
சந்திரமத்திக்கு அடி வயிற்றையே கலக்கிற்று. “அம்மாச்சி வஞ்சி வேணாம்மா. தயவு செய்து இஞ்ச இருந்து போங்கோம்மா. வீண் பிரச்சினைகள் வேண்டாம்.” என்று கெஞ்சினார்.
நிலன், பிரபாகரன், பாலகுமாரன் என்று யாருமில்லாத நேரத்தில் எந்த அசம்பாவிதங்களும் வேண்டாம் என்று நினைத்தார் அவர்.
“ஒண்டும் நடக்காது மாமி. பயப்பிடாதீங்க.” என்று அவரைத் தேற்றிவிட்டு, “ஒண்டையும் நீங்க உங்கட மகளிட்ட சொல்லேல்லையா? இவ்வளவு நாளும்தான் மறைச்சீங்க சரி. நான் சொத்தை வாங்கின பிறகாவது சொல்லியிருக்கலாமே.” என்றாள் சக்திவேலரிடம்.
சக்திவேலருக்கு இரத்தம் கொதித்தது. தன்னால் முடிந்தால் பார்வையாலேயே அவளை எரித்துச் சாம்பலாக்கிவிடுவார். முடியாமல் போனதில் இரத்தம் கொதிக்க, “எழும்பி வெளில போ!” என்றார் கட்டளையாக.
“போறதுக்கு முதல் வாங்கின சொத்தை எல்லாம் திருப்பி எழுதித் தந்திட்டுப் போ. அப்பன் ஆர் எண்டு தெரியாம பிறந்த கழிசடை நீ. உனக்கு என்ர வீட்டுச் சொத்தில் உரிமை இருக்கா. ஆருக்குக் கதை சொல்லுறாய்? உன்னையெல்லாம் வீட்டுக்கு விட்டதே பிழையடி!”
முகத்தில் இருந்த சிரிப்பு மறைய, எழுந்து வந்து அவர் முன்னே நின்றாள் இளவஞ்சி.
“அப்பா ஆர் எண்டு தெரியாதவளா? ஆர் நானா? நான் பிறக்கக் காரணமா இருந்த அந்த மனுசன் ஆர் எண்டு உங்கட அப்பாக்குத் தெரியும். ஓமா இல்லையா எண்டு கேளுங்க.” என்கிறாள் சக்திவேலரைக் காட்டி.
“வஞ்சி!” இதற்குள் வந்துவிட்ட நிலன் உறுமினான். பாலகுமாரனுக்கு நாளுக்கு நாள் முடியாமல் போனதில் வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டு வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.
வந்த இடத்தில் அவன் வஞ்சி நிற்கிறாள். சும்மா இல்லை. அடுத்த பிரளயத்தைக் கிளப்பியபடி.
ஆனால், அவன் உறுமலுக்கு அவள் அடங்க வேண்டுமே.
“என்னோட என்னத்துக்கு நிலன் கோவப்படுறீங்க? அப்பன் ஆர் எண்டு தெரியாம வந்து பிறந்தவளாம். அது உண்மை இல்லை எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறன். என்னைச் சொல்ல விடுங்க.” என்றாள் அவனிடமும்.
அவனுக்கு அதைக் கேட்டு ஒருமுறை சுருக்கென்றது. பார்வை ஒருமுறை ஜானகியிடம் வெறுப்புடன் போய் வந்தாலும், “நீ ஒண்டுமே சொல்ல வேண்டாம். பேசாம இரு!” என்று அவளை அடக்க முயன்றான்.
“அப்பிடி எப்பிடிப் பேசாம இருப்பன்? உங்கட அத்த எடுத்து என்ர அப்பாவைக் கேளாத கேள்வி எல்லாம் கேட்டாவாமே. அப்ப அவாவை நீங்க அடக்கேல்லையா?” என்றவள் அங்கிருந்த சோபாவில் தொய்ந்துபோய் அமர்ந்திருந்த பாலகுமாரனை கண்கள் பளபளக்க பார்த்துவிட்டு, “நான் பிறக்கக் காரணமா இருந்த மனுசன் ஆர் தெரியுமா? இந்தா நிக்கிறாரே இந்த ஆள்தான்.” என்று உண்மையைப் போட்டுடைத்தாள்.
“வஞ்சி, வாய மூடு!” என்று நிலன் கத்தியதை எல்லாம் அவள் காதில் விழுத்தவேயில்லை.
ஜானகிக்கு மூச்சுப் பேச்செல்லாம் நின்றுபோயிற்று. கணவரையும் தகப்பனாரையும் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் மாறி மாறிப் பார்த்தார்.
சக்திவேலருக்கு அதற்குமேல் முடியவேயில்லை. தேகம் நடுங்க, “நான் கொலைகாரனாகிறதுக்கு முதல் இவளை இஞ்ச இருந்து போகச் சொல்லு பேரா.” என்று கத்தினார்.
நிலனின் முகம் கறுத்தது. அவள் மீது அவனுக்கும் கோபம்தான். ஆனால், இன்னொருவர் வீட்டை விட்டு வெளியே செல் என்று சொல்லுகிற இடத்திற்கு தன்னைத் தானே கொண்டுவந்துவிட்டாளே.
ஆனால், அப்படியெல்லாம் அவளுக்கு இல்லை போலும். “மிஸ்டர் சக்திவேலர், அவசரப்படாதீங்க. இன்னும் ஒரேயொரு விசயம், தையல்நாயகி இருக்கிற நிலத்தின்ர பாதி உறுதிப் பத்திரம் நான் பிறக்கிறதுக்கு முதல் இருந்தே உங்கட மருமகனிட்ட இருந்தது. இப்பதான் எனக்கு மாத்தித் தந்தவர். அது தெரியுமா உங்களுக்கு?” என்றதும் சக்திவேலருக்கு விழிகள் இரண்டும் வெளியில் வந்துவிடும் போலாயிற்று.
தையல்நாயகியை அழிக்க வேண்டும் என்று முப்பது வருடங்களுக்கும் மேலாகப் போராடுகிறார். அதன் அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு அவர் உயிரே ஆடுகிறது. அப்படியிருக்க அதை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய மிகப்பெரிய ஆயுதத்தையே தன் கையில் வைத்துக்கொண்டும் மூச்சும் விடவில்லையே அவர் மருமகன். எவ்வளவு பெரிய அநியாயத்தை அவருக்கு இளைத்துவிட்டான்?
“மனுசனாடா நீ? ஒண்டுக்கும் உதவாத உன்ன என்ர மகளுக்குக் கட்டி வச்சு வாழ விட்டா, திண்ட வீட்டுக்கே துரோகம் செஞ்சுபோட்டியேடா!” ஆத்திர மிகுதியில் தன் ஊன்றுகோலால் பாலகுமாரனைப் போட்டு அடித்தார். “உன்ர அம்மா நகையை மட்டும்தான் தந்தவள். அதுக்குப் பதிலா நான் தந்திருக்கிறது அவ்வளவு பெரிய தொழில். ஆனா நீ நன்றிகெட்ட நாய்…” என்றவரை சந்திரமதியும் நிலனுமாகச் சேர்ந்து சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாயிற்று.
அவருக்கும் சுவாசிக்க முடியாமல் மூச்சிரைத்தது. எதையும் ஜீரணிக்கவே முடியவில்லை. உடல் நடுங்கிற்று. கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது. முதல் வேலையாக அவரை இருத்தி, அருந்தத் தண்ணி கொடுத்தான் நிலன்.
இதையெல்லாம் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளவஞ்சியைக் கண்டதும் நிலனுக்கு வெறுத்தே போயிற்று.
விடுவிடு என்று வந்து அவளை இழுத்துக்கொண்டு போய் வீட்டின் வெளியே விட்டான். “போதும்! உன்னக் கட்டினதும் போதும். உன்னால இந்த வீடு படுற பாடும் போதும். போ முதல் இஞ்ச இருந்து. நீ பாதிக்கப்பட்டவள்தான். உன்ர இழப்புப் பெருசுதான். அதுக்காக இந்த வீட்டைச் சுடுகாடாக்கிப்போட்டு என்ன செய்யப்போறாய்? அதுக்குப் பிறகு உன்னால சந்தோசமா இருக்கேலுமா? ஒரு நிமிசம் கூட இந்த வீட்டில நீ நிக்கக் கூடாது. போ!” என்றவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தாள் இளவஞ்சி.
“இதைத்தானே நிலன் ஆரம்பத்தில இருந்து நான் சொன்னனான். நீங்க கேக்கவே இல்லையே.”
“உண்மைதான். நான் செய்தது பிழைதான். தெரியாம உன்னைக் கட்டிட்டன். இந்தளவுக்கு நயவஞ்சகமா பிளான் போட்டு நடப்பாய் எண்டு தெரியாம போச்சே.” என்றவனின் பேச்சில் இலேசாகக் கண்ணில் நீர் அரும்பிற்று.
ஆனாலும் கூட, “என்ன செய்றது நிலன்? ஏதோ ஒரு வகையில உங்கட வீட்டு ரத்தமும் என்ர உடம்பில ஓடும் தானே. உங்கட மாமா ஏமாத்தி நிலத்த வாங்கின மாதிரி, நான் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லாட்டி அந்த நிலத்தைக் காட்டியாவது என்னைக் கட்டோணும் எண்டு நீங்க நினைச்ச மாதிரி நானும் எல்லாத்தையும் செய்திருக்கிறன்.” என்றவள் அவன் திகைத்து நிற்பதை பொருட்டில் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினாள்.