வீட்டுக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மோகனனைக் கண்டதும் நின்றான் கௌசிகன். பளார் என்று போடத் துடித்த கையை அடக்கினான். மோசமான உதாரணமாக இருந்து, பாதித் தவறுக்கு அவனே காரணமாக இருந்துவிட்டானே!
“அறைக்கு வா! உன்னோட கதைக்கோணும்!” என்றுவிட்டு நடந்தான்.
மோகனனுக்குத் திக் என்றது. ஏன் என்று கேட்கும் தைரியமற்றுத் தமையனின் பின்னால் போனான்.
அவனும் வந்ததும் அறையின் கதவைச் சாற்றினான் கௌசிகன். அவனுடைய செய்கை ஒவ்வொன்றுமே மோகனனுக்குப் பயத்தை உண்டாக்கிற்று.
என்ன வரப்போகிறதோ என்று அச்சத்துடன் காத்திருக்க, “சொல்லு! தீபாக்கு என்ன எல்லாம் செய்தனி?” என்றான் நிதானமான குரலில்.
“அண்ணா!” திடுக்கிட்டு நிமிர்ந்தான் மோகனன்.
“தீபாக்கு என்ன எல்லாம் செய்தனி?” நிறுத்தி நிதானமாக, ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்டான் கௌசிகன்.
உள்ளுக்குள் கிலி உண்டாயிற்று அவனுக்கு. இருந்தாலும் சமாளிக்க முயன்றான்.
“அவளை எனக்குப் பிடிச்சிருந்தது. அதச் சொன்னனான்.”
“அவ்வளவுதானா?”
“வேற… ஃபோ…போன்லையும் கதைச்சிருக்கிறன்.”
“வேற?”
“அண்ணா!” அண்ணாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதோ என்று நடுக்கம் பிறந்தது மோகனனுக்கு.
“சொல்லு!”
“அண்ணா!”
“சொல்லடா! என்ர கண்ணப் பாத்துச் சொல்லு!”
“அவளைப் போய்ப் பாத்தனான், லவ் பண்ணுறன் எண்டு சொன்னனான். அவள் மாட்டன் எண்டவள். ஃபோ…போன்ல விடாம டோச்சர் குடுத்தனான்.”
போட்ட அதட்டலில் வேகமாகச் சொல்லிக்கொண்டு வந்தவன் அப்படியே நின்றான். இதற்குமேல் எப்படிச் சொல்லுவான்? செய்யும்போது கூசாதது அண்ணனின் முன் சொல்ல முடியாமல் கூசிற்று!
“வேற வேற வேற!” பல்கலைக் கடித்துக்கொண்டு உறுமினான் அண்ணன்.
“ஓம் எண்டு சொல்லாட்டி…”
“ஓம் எண்டு சொல்லாட்டி?” திருப்பிப் படித்தவனின் குரலில் இருந்த கூர்மையில் இவனுக்கு நெஞ்சு நடுங்கிற்று.
பயத்துடன் தமையனைப் பார்த்தான்.
“சொல்லு!” அணிந்திருந்த சட்டையின் கையை மடித்துவிடத் தொடங்கினான் கௌசிகன்.
அவனையும் மடித்துவிடும் கையையும் மாறிமாறிப் பார்த்தவனின் கால்கள் கிடுகிடு என்று நடுங்கத் தொடங்கின.
“சொல்லு!”
அவனுக்கு வியர்த்து வழிந்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வார்த்தைகள் தந்தியடிக்க ஆரம்பித்தன. “ஓம் எண்டு சொ…ல்லாட்டி நெட்ல ஃபோ…ட்டோ போடுவன் எண்டு சொன்னனான்.” சொல்லி முடிப்பதற்குள் பளார் என்று விழுந்தது அறை.
“அண்ணா!” நம்ப முடியாத அதிர்வில் சமைந்து நின்றான் மோகனன். தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“சொல்லு! வேற என்ன நடந்தது?”
இன்றைக்கு அண்ணா விடமாட்டார் என்று மோகனனுக்குப் புரிந்துபோயிற்று. ஈரக்குலையே நடுங்கிற்று. யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்று அறையின் வாசலைப் பார்த்தான்.
“நீ சொல்லி முடிக்கிற வரைக்கும் ஆரும் இதுக்க வரேலாது!” அதைக் கேட்டு அவனுக்குத் தலையைச் சுற்றியது. நெஞ்சு நடுங்கியது. அம்மா என்று கத்த நினைத்தான். பயத்தில் அதுவும் வரவில்லை.
“சொல்லு!”
“அவளின்ர… அவளின்ர…”
விழிகளை அசைக்காமல் நின்று அச்சமூட்டினான் பெரியவன்.
“சொல்லு அவளின்ர…”
“ஃபோட்டோவை எடிட் செய்து…”
பளார் என்று மீண்டும் விழுந்தது ஒன்று.
“அண்ணா…!” அறை விழுந்த பக்கத்து விழியிலிருந்து கண்ணீர் உருண்டு ஓடியது அவனுக்கு.
“என்னடா அண்ணா? அண்டைக்குப் பள்ளிக்கூடப் பிரச்னைக்கு என்னவாவது செய் எண்டு நான் சொன்ன ஒரு வார்த்தையைப் பிடிச்சுக்கொண்டு அவளின்ர ஃபோட்டோவை போட்ட நேரமே உனக்கு நான் இந்த அடியப் போட்டிருக்கோணும். நான் சொன்ன ஒரு சொல்லாலதானே செய்தவன் எண்டு பிழைய என்ர தலையில நானே போட்டுக்கொண்டதால தானே உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது. அண்ணா இருக்கிறான், நான் என்னவும் செய்யலாம் எண்டு நினைச்சியா?” என்றவன் மீண்டும் விசயத்துக்கு வந்தான்.
“சரி, மிச்சத்தையும் சொல்லு!”
முடிந்ததாக்கும் என்று நினைத்த மோகனனுக்கு மீண்டும் அடிவயிறு கலங்கிற்று.
“இதையெல்லாம் வெளில சொன்னா… உன்ர அக்காவை இங்க வாழவிடமாட்டன்…”
“என்ர மனுசி உனக்கு அவளின்ர அக்காவோ?”
“அண்ணா…”
“அவள் ஆர் உனக்கு?”
“அ…ண்ணி”
“கேக்கேல்லை! திரும்பச் சொல்லு!”
“அண்ணி அண்ணா.”
“சொல்லு! திரும்பத் திரும்பச் சொல்லு.”
“அண்ணி… அண்ணி அண்ணி!”
“இனி வேற வார்த்த வருமா உன்ர வாயில?”