வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்பவே வரச் சொல்லுறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ. அதுக்குப் பிறகு அவரோட கதைக்கலாம் சரியா.” என்று, குழந்தைக்குச் சொல்வதுபோல் அவரைத் தேற்றி, உறங்க வைத்துவிட்டு வெளியே வந்தாள்.
அவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நெஞ்சுக்குள் நின்று வலித்துக்கொண்டு இருக்கையில் அவனுக்கு எப்படி அழைப்பது?
“என்னவாம்மா அப்பா?”
அன்னையின் கவலை தோய்ந்த குரலில் அவரைக் கவனித்தாள்.
“நித்திரை கொள்ளுறார் அம்மா. நீங்க வீட்டுக்குப் போங்கோ. கொஞ்சம் படுத்து எழும்புங்கோ. தீபா அம்மாவைக் கூட்டிக்கொண்டு நீ போ.”
“நீங்க அம்மாவோட போங்கோவன் அக்கா. நான் அப்பாவைப் பாத்துக்கொள்ளுறன். உங்களுக்கும் ரெஸ்ட் வேணும் எல்லா.” அவளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சொன்னாள் தீபா.
“இல்லை, அது சரிவராது. உன்ர அத்தானோட கதைக்கோணும் எண்டு அப்பா சொன்னவர். அவர் வரேக்க நான் நிக்கோணும். நீ கூட்டிக்கொண்டு போ.” என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, கணவனுக்கு அழைத்துப் பேச ஒரு ஒதுக்கமான இடம் தேடினாள்.
வைத்தியசாலையின் ஒரு பக்கமாகக் குட்டிப் பிள்ளையார் கோவிலின் அருகில் இருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டு அவனுக்கு அழைத்தாள்.
“கௌசிகன்!” அழுத்தமாய் ஒலித்தது அவன் குரல்.
அழைப்பது அவள் என்று தெரியாமல் இருக்கப் போவதில்லை. இருந்தும் யாரோவுக்குப் போன்று கௌசிகனாம். இவனை!
“ஓ! நீங்க கௌசிகனா? நான் அவரின்ர வைஃப் கதைக்கிறன்.” என்றாள் பிரமிளா வேண்டுமென்றே.
அதற்கு அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. அழுத்தக்காரன். வீட்டுக்கு வராதே என்று சொன்ன கோபத்தை இப்போது காட்டுகிறான்.
“அப்பா உங்களைப் பாக்கோணுமாம்.”
“என்ன அலுவலாம்?”
“இந்தக் கேள்வியை நீங்க அவரைத்தான் கேக்கோணும்.”
“ஓகே! டைம் இருக்கேக்க வீட்டை வாறன் எண்டு சொல்லு.” வேண்டுமென்றே அலட்சியம் காட்டினான் அவன்.
இப்போது அவளுக்கும் கோபம் வந்துவிட்டது. “நீங்க நல்ல மனுசனாத்தான் நடக்கேல்ல எண்டு பாத்தன். நல்ல மருமகனாவும் நடக்கமாட்டீங்க போல. வயசான மனுசன். தன்ர மருமகனை உடனே பாக்கோணும் எண்டு சொல்லுறார். நீங்க நேரமிருக்கேக்க வாறன் எண்டு சொல்லுறீங்க.” என்று படபடத்தாள்.
“அதுக்கு முதல் நீ நல்ல மனுசியா, நல்ல மருமகளா நடந்திருக்கோணும்.”
ஒரு நொடி அமைதி காத்தாள் பிரமிளா. மாமாவிடம் பேசிய முறை தவறு என்பது தெரியாமல் இல்லை. அந்த உறுத்தல் இருக்கப்போய்த்தான் அவனிடம் கூட முழுமையான கோபத்தைக் கட்டமுடியாமல் நிற்கிறாள். ஆனால், அவன் பேசியவைகள்?
“அதுக்கு என்ர மனுசன் என்னை நல்லமாதிரி நடத்தோணும். அவர் அப்பிடி இல்ல. தான் பிடிச்ச முயலுக்கு முப்பது கால் எண்டு நிக்கிற ரகம்.”
அந்தப் பக்கம் அவன் பல்லைக் கடிப்பது நன்றாகவே கேட்டது. அப்படியும் அடக்க மாட்டாமல், “நீ முதல் பிள்ளையைப் பெத்து முடி. அதுக்குப் பிறகு உன்னோட கதைக்கிறன்!” என்றுவிட்டு, “மாமாட்ட ஃபோன குடு!” என்றான் அவன்.
“அவர் நித்திரை. டொக்டரும் இப்போதைக்கு டிஸ்டப் செய்ய வேண்டாம் எண்டு சொன்னவர். நீங்க இஞ்ச வந்து நேரா கதைங்கோ.”
அவன் புருவங்களைச் சுருக்கினான். “ஏன் அவருக்கு என்ன? நல்லாத்தானே இருந்தவர்.”
‘நீ என்னைப் போட்டுப் படுத்துகிற பாட்டுக்கு அவர் நல்லா இருந்திட்டாலும்’ என்று மனம் நொடித்துக்கொண்டாலும், “இப்ப நல்லா இல்ல.” என்றுவிட்டு நடந்ததைச் சொன்னாள்.
“இப்ப நீ எங்க நிக்கிறாய்?” அவசரமாகக் கேட்டான் அவன்.
“ஆஸ்பத்திரில.”
அவனுக்கு நொடியில் கண்மண் தெரியாத கோபம் வந்தது. அவளுக்கே உடல்நிலை சரியில்லை. குழந்தை வேறு. இதில் ஆஸ்பத்திரியில் நிற்கிறாளாம்! சுள் என்று கோபம் ஏறிவிட, “இதக் கூட உனக்கு என்னட்டச் சொல்ல ஏலாது என்ன?” என்றான் அவன்.
“தம்பிக்காக என்னைக் கட்டினவரிட்ட நான் ஏன் சொல்லோணும்?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“நானும் நீயும் கிட்டத்தட்ட ஒரு வருசமா வாழ்ந்து இருக்கிறோம். அப்பிடித்தான் உனக்குத் தெரிஞ்சதா?”
அவள் உதட்டைக் கடித்தாள். பின், “சொன்னது நீங்க.” என்றாள் உள்ளே போன குரலில்.
“சொன்னா? நான் சொல்லுற எல்லாத்தையும் அப்பிடியே கேக்கிற ஆளா நீ? கோபத்தில் என்னவோ சொல்லிட்டான் எண்டு விடமாட்டியா?”
இப்போது அது புரிகிறதுதான். ஆனால் அந்த நொடியில் அவள் காயப்பட்டது மெய்தானே.
அவனுக்கு மனது ஆறவே இல்லை. “ஏன் பிரமி இப்பிடி இருக்கிறாய்? உனக்கு ஒரு பிரச்சனை எண்டு வந்தா என்னட்ட வரமாட்டியா? அந்தளவுக்கு நான் ஆரோவா உனக்கு?”
காதோரமாகக் கேட்ட கணவனின் வருத்தம் தோய்ந்த குரல் அவளை என்னவோ செய்தது. “எப்பிடி வருவன்?” என்றாள் அடைத்த குரலில். “நீங்கதான் அந்த நம்பிக்கையை எனக்குத் தரவே இல்லையே. ஃபோட்டோ போட்டது மோகனன்தான் எண்டு எனக்கு எப்பவோ தெரியும். ஆனாலும் அத நீங்களா என்னட்டச் சொல்லோணும் எண்டுதான் அண்டைக்கும் கேட்டனான். அப்பவும் உங்கட தம்பிக்காக நிண்டு என்னைக் கை விட்டுட்டீங்க நீங்க.”
“கை விட்டுட்டன் அது இது எண்டு கதைச்சாய் எண்டு வை, வந்து மற்றப் பக்கமும் போட்டு விட்டுடுவன்!” என்று சீறினான் அவன்.
அவளுக்கு முகம் சுருங்கிப் போயிற்று. “இதுதான் நீங்க. உங்களிட்ட ஒண்டும் கதைக்கேலாது. உடன மூக்குக்கு மேல கோபம் வந்திடும்.” என்று குறை பட்டாள் அவள்.
“ஓமோம்! நான்தான் அப்பிடி. நீ மட்டும் நல்ல ஒழுங்கு! தேவை இல்லாம கதைக்காம சொல்ல வந்தத சொல்லி முடி!” என்றான் அப்போதும் தணியாத கோபத்தோடு.
அவள் மனச்சுணக்கத்தோடு பேசாமல் இருந்தாள். சற்று அமைதியாக இருந்துவிட்டு, “சரி நான் கோவப்படேல்ல. நீ சொல்லு!” என்றான் தன்னைத் தணித்துக்கொண்டு.
“எனக்கும் அந்த நேரம் உங்கட தம்பி என்ன செய்வாரோ, என்ன நடக்குமோ எண்டு சரியான பயமா இருந்தது. அப்ப நீங்க துணைக்கு நிண்டா எவ்வளவு நல்லாருக்கும் எண்டு நினைச்சன். ஆனா, என்னை நம்பி தன்ர தம்பியப் பற்றிச் சொல்லாத மனுசன், எனக்காக நிண்டு தன்ர தம்பியக் கேள்வி கேப்பார் எண்டு எனக்கு எப்பிடித் தெரியும்?” என்று கேட்டாள் அவள்.
இவள் எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறாள் என்று திகைத்தான் அவன். அதைவிட அவள் மனத்தளவில் இந்தளவுக்குத் தன் துணையைத் தேடியதை உணராமல் போனோமே என்று பரிதவித்துப் போனான்.
அந்தக் கோபத்தில், “எடியேய் விசரி! ஃபோட்டோ விசயம் சொல்லாததுக்குக் காரணம் வேற, இது வேற.” என்றான் அவன்.
“என்ன வேற? எல்லாம் எனக்குத் தெரியும். பள்ளிக்கூட நிர்வாகி எண்டா மாமாக்கு ஊருக்க இன்னும் கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் கிட்டும். உங்களுக்கு அதுலயும் உழைக்கலாம் எண்டு ஒரு நினைப்பு. அதால பள்ளிக்கூடத்தைப் பிடிக்க நினைச்சீங்க. அதுலதான் ஃபோட்டோ பிரச்சனை, அந்தப் போலீஸ் கேஸ் எல்லாம் வந்தது. இதுல எது வெளில வந்தாலும் மாமான்ர பெயர் கெட்டுடும். குடும்ப மானம் மரியாதை போயிடும். உங்கள்ள நான் நிறையக் கோவத்தோட இருக்கிறது தெரிஞ்சும், அது உங்களுக்குச் சரியான கவலைய தந்தாலும் வாய மூடிக்கொண்டு நீங்க இருந்ததுக்கும் காரணம் இதுதான் எண்டு எனக்குத் தெரியும்.” என்று அவள் சொன்னபோது, அவன் வாயடைத்துப் போனான்.
தன் நெஞ்சைக் கிழித்துப் பார்த்ததுபோல் சொல்கிறாளே!
“இப்பிடி உங்கட குடும்பத்துக்காக, குடும்ப மானத்துக்காக இவ்வளவு செய்த நீங்க, உங்கட தம்பிக்காகத் தீபாவையே கடத்திக்கொண்டு போய் அவனுக்குக் கட்டி வைக்க மாட்டீங்க எண்டு என்ன நிச்சயம்? எனக்கு மோகனனை விட உங்களை நினைச்சுத்தான் நடுங்கினது.”
அன்றைக்குத் தன்னைக் கண்டதும் பேயைக் கண்டதுபோல் அவள் அரண்டது இதற்காகத்தான் என்று இன்று புரிந்தது. ஆனால் தீபாவுக்கு அவன் அப்படிச் செய்வானா?
அதையே அவன் கேட்டபோது, “உங்கட மனுசின்ர தங்கச்சி தீபா எண்டா செய்ய மாட்டீங்க. ஆனா, ஆரோ ஒரு தனபாலசிங்கத்தின்ர மகளுக்கு என்னவும் செய்வீங்களா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
இன்றைய நிலையில் தனபாலசிங்கத்தின் மகளுக்கும் அப்படி ஒரு காரியத்தை அவனால் செய்ய முடியாது. அவனுக்குள் அந்த மாற்றத்தை உண்டாக்கியவள் அவள்தான்.
ஆனால், அன்று அவன் அதை எந்த யோசனையும் இல்லாமல் செய்தான் என்பது மெய்தானே. என்ன, அன்றைக்கும் இன்றைக்குமான கால இடைவெளியில் அவன் கற்றுக்கொண்டவை நிறைய. அவள் கற்பித்தவை இன்னும் நிறைய.
நான் இழைத்தது தவறு என்று உணர்ந்த பிறகும் தம்பியையும் அதே காரியத்தைச் செய்ய எப்படி விடுவான்? இதையெல்லாம் அவளிடம் யார் சொல்வது? சொன்னால் நம்புவாளா?
“நல்லா யோசிச்சுப் பாருங்க. இதையே தானே நீங்க எனக்குச் செய்தீங்க. பள்ளிக்கூடத்தைக் காட்டி, ரஜீவனக் காட்டி, அதுக்கும் மசியாட்டி ரஜீவன்ர தங்கச்சியத் தூக்குவன் எண்டு நீங்க சொல்ல இல்லையா? அப்ப சரியா தெரிஞ்ச விசயம் இப்ப அவன் செய்ததும் உங்களுக்குக் கோவம் வருதோ? உங்களப் பாத்து வளந்தவன் உங்களை மாதிரித்தானே இருப்பான்.”
அவனையும் மோகனனையும் ஒரே தராசில் சமமாகப் போட்டுவிட்டாளே! பேச வார்த்தைகள் எழாமல் அப்படியே நின்றான். தீபா பேசியபோது கூடச் சிறு பெண் கோபத்தில் கதைக்கிறாள் என்று ஒதுக்க முடிந்தவனுக்கு அதையே மனைவி சொன்னபோது தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“நான் உயிரும் உணர்வுகளும் உள்ள ஒரு மனுசி. உங்களை எனக்குப் பிடிக்கேல்ல, அடி மனதில இருந்து வெறுக்கிறன் எண்டு அவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாம கட்டி, குடும்பம் நடத்தினீங்களே. ஆரம்ப நாட்கள்ல மனதளவில் நான் என்ன பாடு பட்டிருப்பன் எண்டு கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தீங்களா? நேற்றுக் கூட, இவள் என்ன சொல்ல வாறாள் எண்டு காது குடுத்துக் கேக்கக் கூட உங்களுக்கு ஏலாம போயிற்றே. பிறகும் எப்பிடி உங்களிட்ட நான் வருவன்? எனக்கு எப்ப அந்த நம்பிக்கையை நீங்க தந்தீங்க?”
அவள் ஒன்றும் கோபப்படவில்லை. குமுறவில்லை. தன்மையாகத்தான் எடுத்துச் சொன்னாள். ஆனால் அவன் தனக்குள் நொறுங்கிக்கொண்டிருந்தான்.
“முதல், எல்லாத்தையும் உன்னிப்பா கவனிக்கிற நீங்க, யாழி கொஞ்சம் அசைஞ்சா கூட உத்துப் பாக்கிற நீங்க, மோகனன மட்டும் எப்பிடி இந்தளவுக்குக் கவனிக்காம விட்டீங்க? எங்கட தீபா எண்டபடியா நடந்தது எல்லாம் வெளில வந்திருக்கு. இதுவே வேற ஒரு பொம்பிளைப் பிள்ளை எண்டா? உங்கட உயரத்தப் பாத்துப் பயந்து, மோதினா தன்ர மானம்தான் இன்னும் போகும் எண்டு நினைச்சு, ஏதாவது பிழையான முடிவை எடுத்திருந்தா? அந்தப் பாவம் எங்களைத்தானே வந்து சேரும். இப்பிடி இன்னும் எத்தனை பிள்ளைகளுக்கு என்ன செய்தானோ ஆருக்குத் தெரியும்?”
அப்படியே நின்றுவிட்டான் கௌசிகன். மோகனனைச் சொல்கிறாளா, அவனைச் சொல்கிறாளா? உன்னைப் போல்தான் உன் தம்பியும் என்று வேறு சொன்னாளே.
அதுநாள் வரை நான், என் செயல்கள், எனக்கான நியாயங்கள் என்று இறுமாந்து இருந்தவனைச் சத்தமே இல்லாமல் தன் வார்த்தைகளால் வெட்டிச் சாய்த்திருந்தாள் பிரமிளா.