தன்னைத் தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தான் கௌசிகன். அவளைப் பார்த்து இரண்டு நாட்களாயிற்று. அன்று, அடிபட்ட மானாகக் கதறியவளை கண்ணீருடன் அணைத்தபோது ஒரே உதறலில் உதறித் தள்ளியிருந்தாள் அவள்.
அதிர்ந்துபோனான் அவன். அவளுக்குள் அப்படியொரு பலம் உண்டு என்று அன்றுதான் அறிந்துகொண்டான். மனத்தைப் பயம் கவ்வ, “ரமி!” என்று, மீண்டும் அவளின் தோளைத் தொட முயன்றபோதும் அவனை விட வேகமாகத் தட்டிவிட்டாள் அவள்.
அவன் முகமே பார்க்கப் பிடிக்காதவளாகத் திரும்பிக்கொண்டு குமுறிக் குமுறி அழுதவளை, அவனால் பார்த்துக்கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது.
அவன் பயந்தது போலவே அவளின் கோபம் அவன்மீது திரும்பிவிட்டதே! ஆனால் இழப்பு அவனுக்கும்தானே? ஒற்றை நாளில் தலைகீழாக மாறிவிட்ட தன் உலகத்தை இனி எப்படிக் கையாள்வது என்று தெரியாது திகைத்தான் கௌசிகன்.
அவன் தோளில் மெதுவாகத் தட்டிய வைத்தியர் வெளியே வரும்படி சொல்லிவிட்டு நடந்தார். தனியாகச் சென்றதும், “கொஞ்ச நாளைக்கு நீங்க இஞ்ச வாறதத் தவிர்த்தா நல்லம் கௌசிகன்.” என்றார் அவர்.
அடிபட்ட பார்வை பார்த்தான் அவன். எங்குச் சுற்றினாலும் மாலையில் கூடு வந்து அடையும் பறவையைப் போல அவனுடைய தஞ்சம் அவள் தானே.
அவளைப் பாராமல், அவளின் அருகண்மையில் தன் மனத்தை ஆற்றாமல் எப்படி?
“சொறி கௌசிகன். உங்கட மனது எனக்கு விளங்குது. ஆனா அவா மனதாலையும் உடம்பாலையும் மிக மோசமா காயப்பட்டு இருக்கிறா. வயித்தில தையல் போட்டிருக்கு. ப்ளட் நிறைய வெளியேறி இருக்கு. இந்த நேரம் இப்பிடி அழுகிறது கூடாது. அவவின்ர உடம்பும் மனசும் தேறுற வரைக்கும் நீங்க கொஞ்சம் விலகி நிண்டா நல்லம். அதுக்குப் பிறகு ஆற அமர இருந்து கதையுங்கோ. சில காயங்களுக்குக் காலம் மட்டும் தான் மருந்து.”
அவனுக்கும் புரிந்தது. அதனால்தான் வலிக்க வலிக்க விலகி நிற்கிறான். ஆனால் அவன்? அவனின் காயத்துக்கு அவளைத் தவிர யாரால் மருந்திட முடியும்?
விசயம் அறிந்ததும் தீபா ஓடி வந்தாள். தான் பிரமித்துப் பார்த்த அந்தப் பெரிய வயிறு காணாமல் போயிருக்க, பிடுங்கி எறிந்த கொடியைப் போல் கட்டிலில் கிடந்த தமக்கையைக் கண்டதும் வாயைப் பொத்திக்கொண்டு கதறித் தீர்த்தாள்.
சரிதாவும் தனபாலசிங்கமும் தம் வேதனையை விழுங்கவும் முடியாமல், பெண் படுகிற பாட்டைத் தாங்கவும் முடியாமல் துடியாகத் துடித்துக் கொண்டிருந்தனர்.
ரஜீவனோ பிரமிளாவின் முகத்தையே பார்க்க மறுத்தான். எல்லாம் அவனால். அவன் அழைக்காமல் இருந்திருக்க வந்திருக்க மாட்டாளே. குழந்தை தப்பியிருக்குமே. தன்னையே மன்னிக்க இயலாதவனாக நின்றவனோடு சென்று தீபனைப் பார்த்தாள் தீபா.
தலையில், கையில், காலில் என்று கட்டுப்போட்டு கிட்டத்தட்ட ஒரு மம்மியைப் போல் கிடந்தவனைக் கண்டு மௌனமாகக் கண்ணீர் உகுக்க மட்டுமே முடிந்தது அவளுக்கு.
எல்லோருக்குமே எதற்கென்று அழுது தீர்ப்பது என்று தெரியாத நிலை! தமையனின் முகத்தில் முழிக்கப் பயந்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் தலைவிதியை நொந்தபடி புகையிரதம் ஏறியிருந்தான் மோகனன்.
உடலின் வலி ஒன்றுமே இல்லை என்பதுபோல் நெஞ்சு முழுக்கப் புண்ணாகிக் கிடந்தது பிரமிளாவுக்கு. ஐயோ ஐயோ என்று ஒரு பரிதவிப்பு நிரந்தரமாகவே தங்கிப் போயிற்று. ஒன்பது நீண்ட நெடிய மாதங்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கனவுகளோடும் கற்பனையோடும் அவளுக்குள் வளர்ந்த குழந்தை. இன்று இல்லையாம்! இதை எப்படி நம்புவது?
பொக்கை வாய் சிரிப்பை, பால் வடியும் முகத்தை, கற்கண்டு கண்களை, செப்பு இதழ்களை எல்லாம் பார்க்கவே முடியாதா?
முத்து நகைக்காய், மழலைச் சொல்லுக்காய், தத்தித் தாவும் அழகுக்காய்க் காத்திருந்தாளே.
தந்தையின் தலை வருடலில் மெல்ல விழிகளைத் திறந்தாள். “அழாத அம்மாச்சி. ஏற்கனவே புண்ணா இருக்கிற உடம்பம்மா.” அவரின் வார்த்தைகளில் விழிகளில் தன்னிச்சையாக நீர் கோர்க்க விம்மினாள் அவள்.
“கடவுள் போடுற கணக்கெல்லாம் எங்களுக்கு விளங்குறேல்ல செல்லம். இந்தக் குழந்தை எங்களிட்ட இருக்கிறத விடத் தன்னட்ட இருக்கிறதுதான் நல்லம் எண்டு அந்த நல்லூரான் நினைச்சிருக்கிறான் போல. அதுதான் அவனே கொண்டு போய்ட்டான். நீ அழாத!”
எத்தனை அன்பு வார்த்தைகளைப் பகிர்ந்தாலும் சுமந்தவளின் துன்பத்தை யாரால் வாங்கிக்கொள்ள முடியும்?
அவர் வெளியே வந்தபோது செல்வராணி கணவரோடு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தார். கண்டவரின் முகம் வாழ்வில் முதன் முறையாகக் கடுத்தது. பிரமிளாவைப் பார்க்கச் செல்லவிடாமல் தடுத்தபடி, “எங்க வந்தனீங்க?” என்றார் இறுக்கமான குரலில்.
“அண்ணா… பிரமிய ஒருக்கா எண்டாலும் பாக்க விடுங்கோவன்?” மகனின் உத்தரவின் பெயரில் எட்டிப் பார்க்காமல் இருந்தவர், கணவர் கொழும்பிலிருந்து வந்ததும் அவரையும் கூட்டிக்கொண்டு அதற்குமேல் முடியாமல் ஓடி வந்திருந்தார்.
முற்றிலுமாக மறுத்தார் தனபாலசிங்கம்.
“இதுவரைக்கும் நீங்க பாத்ததும் போதும். உங்கட வீட்டுக்கு என்ர பிள்ளையைத் தந்திட்டு நான் பட்ட பாடும் போதும். இனியும் ஏலாது! வேணாம் இது சரிவராது எண்டு படிச்சுப் படிச்சு சொன்னனே. கேட்டீங்களா? வாயும் வயிறுமா இருந்தவளை இப்படிச் சிதைச்சுப் போட்டீங்களே. நீங்கள் எல்லாம்… தயவு செய்து போய்டுங்க. எதையாவது சொல்லித் திட்டப்போறன்.” எவ்வளவு கெஞ்சியும் இறங்கி வராமல் அவர்களைத் துரத்திவிட்டார் தனபாலசிங்கம்.
கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் பிரமிளாவின் உடல்நிலை சற்றே தேறியிருந்தது. வீட்டுக்குப் போகலாம் என்று அனுமதியளித்தார் வைத்தியர்.
இத்தனை நாட்களும் ஓய்விலேயே இருந்துவிட்டு இறங்குவதற்கு வைத்தியசாலையின் படிகளில் கால் வைத்தபோது அவளுக்குச் சற்றே தள்ளாடியது. துணைக்கு அப்பாவின் கையைத் தேடியவளை இரண்டு கரங்கள் அப்படியே அள்ளிக்கொண்டன.
திகைத்துத் திரும்பினால் கௌசிகன். பாறை முகத்துடன் அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன சொல்வது என்று தெரியாது திகைப்புடன் பார்த்தவளை அப்படியே தூக்கிக்கொண்டுபோய், அவர்கள் வரவழைத்திருந்த காரின் பின் பக்கம் அமர வைத்தான்.
நிமிரும் முன் அவளின் விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்துவிட்டு நிமிர்ந்து, “பாத்துக் கொள்ளுங்கோ!” என்று, தனபாலசிங்கத்திடம் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான்.
நாட்கள் ஒருவித மௌனத்திலேயே கரைந்தன. வீட்டில் இருந்த மூவருமே ஒருவர் மற்றவரோடு மனம் விட்டுப் பேச, தம் மனதின் துயரைப் பகிர்ந்து கொள்ளவே பயந்தனர்.