கடைசி வருடம் என்பதில் தீபா பல்கலைக்குத் திரும்பியே ஆகவேண்டிய கட்டாயம். ரஜீவன்தான் கூடவே இருந்து தேவையானவற்றைப் பார்த்துக் கொண்டான்.
“நீ வேலைக்குப் போகேல்லையா?” என்று ஒரு நாள் தனபாலசிங்கம் கேட்டபோது, கௌசிகனின் ஏற்பாட்டில்தான் நிற்கிறேன் என்று சொல்லாமல் ஏதோ சொல்லி மழுப்பினான்.
தீபனும் சற்றே நடமாடும் நிலைக்கு வந்ததும் பிரமிளாவிடம் தான் ஓடிவந்தான். தன் கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, கல்வியில் கவனம் செலுத்தும்படி சொல்லி அனுப்பிவைத்தாள் பிரமிளா.
ஒரு நாள் அங்கு வந்தான் கௌசிகன். அவனைப் பார்த்த சரிதாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது.
அதே நிமிர்வு. அதே ஆஜானுபாகுவான தோற்றம். கண்களின் கூர்மை, நடையின் வேகம் என்று அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவரின் மகள் பாதியாகிப் போனாளே.
உடம்பையாவது அவர் மெல்ல மெல்லத் தேற்றிவிடுவார். மனத்தை? வெளியே காட்டிக்கொள்ளாமல் தனக்குள்ளேயே போட்டு மருகுவதும் கண்ணீர் உகுப்பதுமாக இருப்பவளை என்ன செய்வார்?
ரஜீவன் மூலம் வீட்டின் பின்னால் அவள் இருப்பதை அறிந்து அங்கு நடந்தவனைத் தனபாலசிங்கத்தின் பேச்சு தடுத்து நிறுத்தியது.
“திரும்பவும் அவளைச் சிதைச்சுப் போடாதீங்கோ! எங்களுக்கு எங்கட மகளாவது வேணும்!” என்றார் அவனின் முகம் பாராது.
ஒரு முறை விழிகளை இறுக்கி மூடித் திறந்துவிட்டு, “சரி!” என்றுவிட்டுப் போனான் அவன்.
வீட்டின் பின்னால் ஒரு மரத்தின் கீழே தகப்பனின் சாய்மனைக் கதிரையில் சுருண்டிருந்தாள் பிரமிளா. போர்வை ஒன்றினால் தன்னைப் போர்த்திக்கொண்டு, மரத்தில் தலை சாய்த்திருந்தவளின் விழிகள் இலக்கற்று எங்கோ வெறித்திருந்தன.
அங்கிருந்த இன்னொரு நாற்காலியை அவளுக்கு முன்பாகப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் கௌசிகன். அப்போதும் அவளின் மோனம் கலையக் காணோம்.
“ம்க்கும்…”
அவனுடைய செருமலில் திரும்பினாள் பிரமிளா. கண்முன்னே அமர்ந்திருப்பவன் அவளின் இத்தனை வேதனைகளுக்கும் சொந்தக்காரன். அவளின் நிம்மதி, சந்தோசம், அமைதியான வாழ்க்கை அனைத்தையும் பறித்துக்கொண்ட பொல்லாதவன்.
அதற்குமேல் அவனைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவ்வளவு நேரமாய் அடக்கிக்கொண்டிருந்த துக்கமெல்லாம் அவன் முன்னிலையில் பலமடங்காகப் பெருகித் தொண்டையை அடைத்தது.
கௌசிகனும் அவளைத்தான் பார்த்தான். கசங்கிய நைட்டி, வாரப்படாத தலை, காய்ந்த முகம், வறண்ட உதடுகள் என்று அவன் நெஞ்சிலும் துக்கம் பெருகிற்று. அவன் பார்த்து பார்த்து ரசித்த மணிவயிறு வற்றிப் போயிருந்தது. அவனுடைய குழந்தை உதிரமாய்க் கரைந்தோடிய காட்சி நெஞ்சுக்குள் வந்துநின்று மூச்சுக்காற்றை அடைத்தது.
மெல்ல நடுங்கிக்கொண்டிருந்த அவளின் கரத்தைப் பற்றப் போனான்.
“என்ன தொடாதீங்க!” சினத்துடன் சீறியவளின் குரலில் நடுக்கம். வெடித்த அழுகையை அடக்கியதில் விரிந்த நாசியையும், அழுத்தி மூடியதால் நடுங்கிய உதடுகளையும் கண்டுவிட்டு, வலுக்கட்டாயமாக அவளை இழுத்துத் தன் மார்பில் சாய்த்துக் கட்டிக்கொண்டான் அவன்.
அந்தக் கணத்தில் உடைந்து கதறினாள் பிரமிளா.
“என்ர பிள்ளையைக் கொன்றுட்டிங்களே…” ஒற்றை வரிதான். மொத்தமாய் அவனைச் சாய்த்தாள் அவள். அதை ஜீரணிக்க முடியாமல் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான் கௌசிகன். கண்ணோரம் கசிந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அவளின் உச்சியில் தன் உதடுகளைப் பதித்தான்.
பதறிக்கொண்டு ஓடிவந்த பெற்றவர்கள், இத்தனை நாட்களாக ஊமையாகவே இருந்தவள் இன்று அவன் கைகளில்தான் உடைந்து அழுகிறாள் என்கிற உண்மை புலப்பட, கண்ணீரும் அதிர்வுமாக ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
அவளை அழவிட்டான் கௌசிகன். தன் துக்கத்தை அப்படியே விழுங்கிக்கொண்டு அவளின் முதுகை, தலையை என்று வருடி விட்டுக்கொண்டே இருந்தான். மெல்ல மெல்ல அவள் ஓய்ந்தாள். தான் இருக்கும் நிலை உணர்ந்து விலக முயன்றபோது தடுக்காமல், “தவறினது என்ர பிள்ளையும் தான்.” என்றான் அவன் மனத்தாங்கலோடு.
அதற்குப் பதிலிறுக்கவில்லை அவள். அழுது தீர்த்ததாலோ என்னவோ ஓய்ந்துபோய் இருந்தாள். அவள் அழுதுவிட்டாள். அவன்?
நேரமானது. அவன் புறப்பட வேண்டும். நிறையப் பேச நினைத்தான். ஆனால், வாயைத் திறக்கவே பயந்தான்.
வேறு வழியற்றுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். அடுத்த நாளும் வந்தான். மெல்லிய தெளிவு இருந்தது அவளிடம். தனபாலசிங்கம் இன்று ஒன்றும் சொல்லவில்லை.
சாப்பிட்டியா, மருந்து போட்டியா போன்ற சாதாரணக் கேள்விகள்தான். ஆனால், அவளைப் பார்த்தபடி, வலுக்கட்டாயமாக அவளைத் தன்னோடு பேச வைத்தபடி கழியும் அந்தப் பொழுது, அத்தனை நாட்களாக ஆறாமலேயே கிடந்த அவன் மனதுக்குப் பெரும் மருந்து தடவிற்று.
அன்றும் நேரமானதும் புறப்பட அவன் எழுந்துகொண்டபோது, “தயவு செய்து என்னை விட்டுடுங்க. இன்னும் என்னால எதையும் இழக்க ஏலாது.” என்றாள் அவன் முகம் பாராது.
அவன் அப்படியே நின்றான். அவளின் வார்த்தைகளால் புண்ணாகிப்போன மனத்தை நிலைப்படுத்தச் சற்று நேரம் தேவைப்பட்டது அவனுக்கு.
“விட்டுடுங்க எண்டா என்ன அர்த்தம்?” வரவழைத்துக்கொண்ட நிதானத்துடன் கேட்டான் அவன்.
“நீங்க என்ன அர்த்தம் எடுத்தாலும் சரிதான். என்னை விட்டுடுங்க.”
“அப்பிடியெல்லாம் விடேலாது!” பட்டென்று சொன்னான் அவன்.
வேகமாகத் திரும்பியவளின் விழிகளில் பெரும் சீற்றம். “விடாம? கூடவே வச்சுக் கொஞ்சம் கொஞ்சமா என்னையும் கொல்லப் போறீங்களா?” என்றவளைத் துடித்துப்போய்ப் பார்த்தான் அவன்.
மீண்டும் அமர்ந்துகொண்டு பேசினான் கௌசிகன். “ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறாய் பிரமி? எனக்கும்தான் கவலை இருக்கு. நானும்தான் தினம் தினம் துடிக்கிறன். முதல், நடந்ததில என்ர பிழை என்ன எண்டு சொல்லு?” என்று தன்மையாகவே கேட்டான்.
“என்ன பிழையா? நடந்தது எல்லாத்துக்கும் நீங்கதான்… நீங்க மட்டும்தான் காரணம். நீங்க செய்த பாவமும் பழியும்தான் என்ர தலையில வந்து விடிஞ்சிருக்கு. ரஜீவனுக்கு நீங்க செய்த கொடுமை எல்லாம் பாத்திட்டு இதுக்கு நீங்க நல்லா அனுபவிக்கோணும் எண்டு நிறையத்தரம் நினைச்சிருக்கிறன். ஆனா, அந்தக் கண் கெட்ட கடவுள் என்னையும் சேர்த்துத் தண்டிப்பார் எண்டு நினைக்கவே இல்லை! இனியும் என்னால உங்கட பாவம் பழி எல்லாத்தையும் சுமக்கேலாது. என்னை விட்டுடுங்க!” என்றாள் முடிவாக.
சற்று நேரம் அவனிடம் பேச்சே இல்லை. அவளும் அவனைப் பொருட்படுத்துவதாக இல்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
சற்றுப் பொறுத்து அவளின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான். “இந்த ஜென்மத்தில உனக்கு வேற வழி இல்ல. சாகிற வரைக்கும்… அது நானோ நீயோ. என்ர பாவம் பழி எல்லாத்தையும் என்னோட சேர்ந்து நீதான் சுமக்கோணும்.” என்றுவிட்டு எழுந்து போனான் அவன்.