சட்டென்று அவர் விழிகளில் கண்ணீர் தேங்கிப் போயிற்று. “நடந்த எல்லாத்துக்கும் சொறியம்மா.” என்றார் அவள் கையைத் தான் பற்றிக்கொண்டு.
சட்டென்று அவள் பேச்சு நின்று போயிற்று. கொஞ்ச நேரம் அவர் கரத்தையே வருடிக்கொடுத்தாள். பின் நிமிர்ந்து, “உங்களுக்கு என்னை எப்பிடிப் பிடிக்குமோ அப்பிடியே எனக்கும் உங்களைப் பிடிக்கும். ஒரு குடும்பத்தை அனுசரிச்சு, வழிநடத்திப் போறது எண்டுறது ஈஸியான விசயமே இல்ல. அத அவ்வளவு வடிவா நீங்க செய்வீங்க. அது எனக்கு வரேல்ல. இனியும் வரும் எண்டுற நம்பிக்கை இல்ல. சோ ப்ளீஸ், பழைய பன்னீர் செல்வமா நீங்க வரோணும்.” என்றதும் தன்னை மீறிப் புன்னகைத்திருந்தார் சந்திரமதி.
அவ்வளவு நேரமாக எனக்கு ஏதும் பொல்லாத நோயோ என்று பயந்துகொண்டிருந்த பெண்மணிக்கு எனக்கு ஒன்றுமே இல்லை என்கிற தெம்பு வந்திருந்தது.
“அருமையான பிள்ளையம்மா நீங்க.” என்றார் மனத்திலிருந்து.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் முறுவலித்துவிட்டு எழுந்து, அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள்.
நிலனோ அசையக்கூட முடியாமல் நின்றிருந்தான்.
அவள் சொன்னவை எல்லாம் அவரைத் தேற்றவும் தைரியம் கொடுக்கவும் சொன்ன வார்த்தைகள். அதன் பின்னே மறைந்துகிடந்தது அவளின் இயலாமைகளும் காயப்பட்டுக் கிடக்கும் மனமும் மட்டுமே.
“தம்பி!” என்ர அன்னையிடம், “பொறுங்கம்மா வாறன்.” என்றுவிட்டு அவளிடம் நடந்தான்.
அங்கே பாலகுமாரன் இன்னுமே அவசர சிகிச்சை பிரிவில்தான் என்பதில் நிறையப் பேச வேண்டாம் என்கிற நிபந்தனையோடு ஒவ்வொருவராகத்தான் போக விட்டனர். அந்த அறையின் கதவைத் திறக்க முதல் ஒரு மூச்சை இழுத்துவிட்டுவிட்டு உள்ளே வந்தாள்.
என்னென்னவோ இயந்திரங்கள் எல்லாம் அவரைச் சுற்றியிருந்தன. செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் படுத்திருந்தார் மனிதர். இப்போதும் அவரைக் கண்டு அவளுக்குள் இரக்கம் சுரக்க மறுத்தது. ஒரு மரத்த நிலை.
சற்று நேரம் அவரையே பார்த்தபடி நின்றாள். அவர் விழிகள், மூடிக்கிடந்த இமைகளுக்குள் துடிப்பது போலொரு தோற்றம்.
ஒரு நெடிய மூச்சை எடுத்து விட்டுவிட்டு, “உங்கள உயிரா நேசிச்ச ஒரு அப்பாவிப் பொம்பிளைக்கும், என்ர அப்பம்மாக்கும் நீங்க செய்த பாவத்துக்கு உங்களைத் தண்டிக்க நினைச்சது உண்மைதான். இப்பவும் எனக்கு உங்களில் இரக்கம் வரேல்ல. ஆனா, ஒரு உயிரைப் பறிச்சுப்போட்டு அந்த உயிருக்கு மேல என்னால என்ர அமைக்கேலாது. அதால தயவு செய்து பிழைச்சு வந்துடுங்க. நான் சுமக்கிற பாரங்களே போதும்.” என்றுவிட்டு வெளியே வந்துவிட்டாள் அவள்.
வாசலிலேயே அண்ணனும் தங்கையும் அவளுக்காகக் காத்திருந்தனர். இப்போதும் அவள் நிலன் புறம் திரும்பவே இல்லை. அழுத்த முகத்துடன் நின்ற கீர்த்தனாவிடம், “ஆருக்கும் ஒண்டும் நடக்காது. தைரியமா இருக்கோணும். சரியா?” என்று அவள் சொன்னதுமே சின்னவளுக்கு பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.
அதைக் கண்டு அவளை அணைத்துக்கொண்டாள் இளவஞ்சி. “சொறி அண்ணா!” என்றாள் கீர்த்தனா. சின்னதாய் முறுவலித்தவள் ஒன்றும் சொல்லவில்லை. அவள் கண்களைத் துடைத்துத் தேற்றிவிட்டுப் புறப்பட்டாள்.
அங்கே அமர்ந்திருந்த பிரபாகரனைக் கண்டதும் நின்று, “ஆஸ்பத்திரில வச்சு இதையெல்லாம் கதைக்கக் கூடாதுதான். ஆனா இத விட்டா உங்களோட கதைக்கச் சந்தர்ப்பம் அமையாது எண்டு நினைக்கிறன். எனக்கும் அப்பிடி ஒரு சந்தர்ப்பத்தை அமைக்க விருப்பமும் இல்ல. அதால சொல்லுறன்.” என்றுவிட்டு,
“என்னவோ ஒண்டுமே தெரியா அப்பாவி மனுசர் மேல இல்லாத பொல்லாத பழியை எல்லாம் நான் போட்டு, அவேயப் படுக்க வச்ச மாதிரிக் கோவப்பட்டீங்க. நான் ஒண்டும் அவே செய்யாத பாவத்தை அம்பலப்படுத்ததில்லையே. இன்னுமே சொல்லப்போனா உண்மையைச் சொன்னது மட்டும்தான் நான். உங்கட வீட்டை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது உங்கட தங்கச்சி. அவான்ர சரியில்லாத வாய்.” என்றாள் ஜானகி மீதான வெறுப்பு நிறைந்த குரலில்.
“இப்பவும் படுத்திருக்கிற இந்த மூண்டு பேரையும் பாக்க உங்கட தங்கச்சி வந்திருக்க மாட்டாவே.” என்றதும் திகைத்து நிமிர்ந்தார் பிரபாகரன்.
அவள் சொன்ன பிறகுதான் அவருக்கும் அது கவனத்துக்கு வந்தது. ஜானகிக்குத் துணையாக மிதுன் இருக்கிறான், இனிப் பயமில்லை என்றார் நினைத்தாரே தவிர்த்து இதை யோசிக்கவில்லை.
“மூண்டு பேர் வந்து ஆஸ்பத்திரில படுத்ததுக்கே உங்களுக்கு இவ்வளவு கோவம் வருது. ‘நான் பெத்த மகள் உயிர் இல்லாம ரெத்த வெள்ளத்தில நடு ரோட்டில கிடந்தவா’ எண்டு அப்பம்மா எழுதி இருக்கிறா. அந்தத் தாய் மனம் என்ன பாடு பட்டிருக்கும் எண்டு யோசிங்க. எண்டைக்காவது அவவாள அந்தக் காட்சிய மறந்திருக்கேலுமா எண்டு சொல்லுங்க. அந்தக் குற்ற உணர்ச்சி இந்த ரெண்டு ஜென்மத்துக்கும் கொஞ்சமாவது இருந்திருக்கா? அத நீங்க பாத்திருக்கிறீங்களா?” என்றதும் பதில் சொல்ல இயலாமல் நின்றார் பிரபாகரன்.
இன்னுமே தையல்நாயகியை அழிக்க முடியவில்லையே என்றுதான் சக்திவேலர் துடித்திருக்கிறார். அவருக்கு அதை எண்ணி முகம் கன்றியது.
“தொழில் போட்டில நானோ அப்பம்மாவோ உங்கட முதுகுல குத்தப் பாத்திருக்கிறமா? போட்டி அது வேற. ஆனா உங்கட அப்பா நான் விலகினதும் தையல்நாயகில என்ன செய்தவர், செய்யப் பாத்தவர் எண்டு யோசிங்க. அந்த நிலப் பாத்திரம் பற்றிச் சொல்லேல்ல எண்டு உங்கட மச்சானை அடிக்கிறார். இந்த வயதிலயும் அந்தாளின்ர மனதில எவ்வளவு வக்கிரமும் வன்மமும் இன்னும் இருக்கு எண்டு யோசிங்க.” என்றதும் பிரபாகரனின் முகம் அப்படியே மாறிப் போயிற்று.
உங்கட அப்பாவை விட என்ர அப்பம்மாக்கு வயசு குறைவு. அவாவும் ஆரோக்கியமானவா. ஆனாலும் அந்த வயசில அந்த மனுசி போய்ச் சேந்ததுக்கு உங்கட குடும்பமும் ஒரு காரணமா இருக்கலாம். அவா இல்லாம என்ர வீடு என்ன பாடு பட்டது எண்டு எனக்குத் தெரியும். ஏன் இப்ப, இந்த நிமிசம் கூட அவான்ர மடி இல்லாம நான் எவ்வளவு துடிக்கிறன் எண்டு எனக்குத்தான் தெரியும். எந்தப் பாதிப்பையும் நீங்க அனுபவிச்சதே இல்ல. உங்கட வாழ்க்கை முழுக்க அப்பா, அப்பான்ர வழிகாட்டுதல், கூடப்பிறந்த தங்கச்சி குடும்பமே பக்கத்தில, தோளுக்கு மேல வளந்த மகன் தோள்குடுக்க எண்டு எந்தத் துன்பத்தையும் நீங்க பாக்கேல்லை. ஏன், பெத்த பிள்ளையை வாரிக் குடுத்துப்போட்டுப் பேரப்பிள்ளையக் கையில வச்சுக்கொண்டு தவிச்சுப்போய் நீங்க நீண்டதும் இல்ல. அதால மறக்கோணும் மன்னிக்கோணும் எண்டு பாடம் எடுக்கலாம். ஆனா நெருப்புக்க குளிச்சு வந்தவனுக்கு மட்டும்தான் தெரியும், காயம் எவ்வளவு, அதின்ர ஆழம் எவ்வளவு, அதின்ர வலி எவ்வளவு எண்டு விளங்கினதா?” என்று சீரியவளைக் கண்டு அவருக்கு வாயடைத்துப் போயிற்று.
“வஞ்சி…” என்று இடையில் வந்தவனை அவள் பொருட்டு கொள்ளவே இல்லை. அவள் முகமெல்லாம் சிவந்து தணலெனக் கொதித்துக்கொண்டிருந்தது.
“இதையெல்லாம் நான் செய்றதால போன உயிர்கள் திரும்பி வரப்போறதும் இல்ல, அவே பட்ட வேதனைகள் இல்லை எண்டு ஆகப் போறதும் இல்ல. ஆனா உயிரோட இருக்கிற என்ர மனம் கொஞ்சமாவது ஆறும். இல்லை எண்டு வைங்கோ என்ர அப்பம்மா எப்பிடி மனதுக்க புழுங்கிச் செத்தாவோ அப்பிடி நானுமே போகிற நிலை வந்தாலும் வந்திடும். அது எனக்கு வேண்டாம். ஆருக்கு நான் தேவையோ இல்லையோ என்ர குடும்பத்துக்கு நான் வேணும். என்ர…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திவிட்டு,
“எண்டைக்குமே என்னால உங்கட வீட்டு மனிசரை சாதாரணமா எதிர்க்கொள்ளேலாது. அப்படியே பாக்கிற நில வந்தா திரும்ப திரும்ப இதே மாதிரியான வேலைகள் என்னை மீறி நான் செய்தாலும் செய்வன். சோ உங்கட மகனுக்கும் எனக்கும் நடந்த கலியாணத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம். அதுக்கான ஏற்பாடுகளைப் பாக்கச் சொல்லுங்கோ. எனக்கு அதில எந்தத் குறையும் இல்ல. சந்தோசமாவே உங்கட குடும்பத்துக்கு நிரந்தரமான விடுதலையை நான் தாறன்.” என்றுவிட்டு நடந்தாள் அவள்.