அத்தியாயம் 55
கடந்த சில நாட்களாகத் தன் மனநிம்மதியைத் தொலைத்திருந்தார் ராஜநாயகம். காரணம், திடீரென்று வீட்டில் நிகழ்ந்துவிட்ட பல விரும்பத்தகாத நிகழ்வுகள். செல்வம், செல்வாக்குடன் கூடவே தோளுக்கு மேலே வளர்ந்து நின்ற மகன்கள், அவர்களின் ஆளுமை, போகிற இடமெங்கும் தமக்கான அடையாளங்களை அவர்கள் பொறித்துவிட்டு வருவது என்று சற்றே அதிகமான கர்வத்துடன் வாழ்பவர்தான் அவர்.
பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டு, அடங்கி, அவனுக்குத் தேவையானவற்றைக் கவனித்துக்கொண்டு, சத்தமே இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.
அதை அவர்கள் மீறுகிறபோது இடம், பொருள், ஏவல் பாராது தன் கோபத்தை அப்படியே வெளிப்படுத்துவார். அதற்கென்று அவளின் மானத்தோடு விளையாடுவதை அவரால் சிந்தித்தே பார்க்க முடியாது.
அப்படியிருக்க அவரின் மகன் பெண் எடுத்த வீட்டிலேயே அதைச் செய்திருக்கிறான்! அந்த இடத்தில்தான் அவரின் கர்வமும், தலைக்கனமும் படுமோசமாக அடிவாங்கிற்று!
பிள்ளைகளைக் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்க வேண்டுமோ? மனைவியின் சொல்லையும் கேட்டிருக்க வேண்டுமோ? அதையெல்லாம் செய்திருக்க அவரின் பேரக்குழந்தையை இழந்திருக்க மாட்டாரே.
அன்று, தற்பெருமை பாராது தானாகவே அழைத்து மன்னிப்புக் கேட்டது, பிரமிளாவை அவருக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணமாயிற்று. தலையே போனாலும் மன்னிப்பு என்கிற ஒன்றை யாரிடமும் கேட்கவே கேட்காத மனிதர் அவர்.
இதோ, இப்போதுகூட மனைவியிடம் இதற்கெல்லாம் நான்தான் காரணமோ என்று கூடச் சொல்ல முடியவில்லை. அப்படியிருக்க அவளின் அந்தப் பண்பட்ட குணம் இன்னொரு மகளாகத்தான் பார்க்க வைத்தது. அவளுக்கு இப்படி ஒன்று நடந்திருக்க வேண்டாம்.
அதனால்தான் கோபப்பட்ட தனபாலசிங்கத்திடம் கூட எதையும் பேசமுடியாமல் திரும்பி வந்தார். இதுவே அந்த இடத்தில் அவர் இருந்து, அவரின் பெண்ணுக்கு இப்படி ஒன்று நடந்திருக்க நிச்சயம் இதைவிடப் பலமடங்கு மோசமாகத்தான் நடந்துகொண்டிருப்பார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்து விறுவிறு என்று படியேறினான் கௌசிகன். பார்க்கிறவர்களைத் தள்ளி நிறுத்துகிற இறுகிய தோற்றம். அந்த இறுக்கத்தின் பின்னே மறைந்து கிடப்பது புண்ணாகிப்போன மனது அல்லவா.
அவருக்கே இத்தனை நாட்களாகியும் மனதைப் பிசையும் இந்த உணர்வு போகமாட்டேன் என்கிறது. அப்படியிருக்க அப்பன் அவன் நிலை?
அறையைத் திறந்தவனுக்கு வெறுமைதான் முகத்தில் அறைந்தது. அவள் இருந்தது, நடந்தது, புதிராக அவனைப் பார்த்தது, அவனிடம் திமிறியது, சண்டையிட்டது என்று அவனுடைய அறை முழுக்க அவளின் அடையாளங்களே! அத்தி பூத்தாற்போல் அவனோடு சிரித்துப் பேசியும் இருக்கிறாள். பேப்பர் திருத்துவது, சில நேரங்களில் பள்ளி மாணவியைப்போலவே பேனையை உதட்டில் வைத்தபடி எதையாவது தீவிரமாக யோசிப்பது, மாணவிகள் யாராவது கேட்கும் சந்தேகத்துக்குப் புத்தகத்தைப் பிரட்டாமலேயே சரளமாக விளக்குவது என்று காட்சிகள் அனைத்தும் மனக்கண்ணில் வந்து போயின.
அறைக்குள் இருக்கும் பொழுதுகளில் என்ன வேலையாக இருந்தாலும் அவளும் இருந்தால் அவனுடைய கவனம் சிதறிக்கொண்டே தான் இருக்கும். அவளையேதான் அவள் அறியா வண்ணம் பார்த்துக்கொண்டே இருப்பான். கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை என்ன செய்கிறாள் என்று அவன் விழிகள் அவளிடம் ஓடிவிட்டுத்தான் வரும். அப்படியிருக்க, இன்று அத்தனை துன்பங்களையும் தனித்துக் கிடந்து அனுபவியடா என்று விட்டுவிட்டாளே!
அவன் இறுமாந்தவன் தான்! இறுக்கமானவன் தான். அதெல்லாம் அவளைக் காணும்வரை. இப்போதெல்லாம் அதைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டு நடமாடுகிறான்.
மனதின் புழுக்கம் தாங்காமல் பால்கனியில் சென்று நின்றான். கையில் ஏந்திய குழந்தை கற்பூரமாகக் கரைந்துபோன காயமே நெஞ்சில் ஆறாத ரணமாகக் கிடக்கிறது. இதில் அவள் தன்னையும் விட்டுவிடட்டுமாம். விட்டுவிட்டு?
தோப்பாக மாறியிருக்க வேண்டிய நொடியில் மீண்டும் தனிமரமாக்கப் பட்டிருக்கிறான். இந்த நேரத்தில், குழந்தையாக அவளுக்குள் சுருண்டுவிட அவன் ஏக்கம் கொண்டிருக்கத் தள்ளிப்போ என்று எட்டி உதைத்துவிட்டாளே!
உண்மையிலேயே அவள்தான் கல் நெஞ்சுக்காரி!
இழப்பு அவனுக்கு இல்லையா? இல்லை வலியும் வேதனையும் தான் இல்லையா? அவள் அழுதுவிட்டாள். கோபத்தை வார்த்தைகளாக அவனிடம் கொட்டிவிட்டாள். அவன்? இதோ வெடிக்கப்போகிறேன் என்று கனத்துக்கொண்டு நிற்கும் மனதைச் சுமக்க முடியாமல் திணறுகிறான்.
ஒரு நொடி ஒரேயொரு நொடி மடி சாய்த்து தலை கோதிவிட்டாளானால் அவன் தேறிக்கொள்ள மாட்டானா? அவளின் கைகளுக்குள் ஒரு முறை அடக்கிக்கொள்வாளாக இருந்தால் காயங்கள் எல்லாம் ஆறிவிடாதா!
அவள் ஏன் செய்யப் போகிறாள்! இதெல்லாம் அவனுக்கு வாய்க்கவேண்டும் என்று சாபமிட்டவளே அவள் அல்லவோ!
அதுதான், அவனுடைய மகளே சுவாமி தரிசனம் போல் காட்சி தந்துவிட்டு உனக்கு மகளாக வாழ விருப்பமில்லை அப்பா என்று சொல்லிவிட்டுப் போனாளோ.
கண்ணோரம் கரித்துவிட அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று. உயிரற்ற உடலாகத் தன் கையில் கிடந்த மகளின் பால்வண்ண மேனி கண்ணில் வந்து போயிற்று.
குவா குவா சத்தம் நிறைத்திருக்க வேண்டிய அறை குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் மயானமாகிப் போயிற்றே!
எல்லாத் துன்பத்தையும் சேர்ந்து கடப்போம் வா என்றால் மாட்டேன் என்றுவிட்டாளே!
பிடிக்காத திருமணம் தான். என்றாலும் பிறகு பிறகு அதுவும் குழந்தை வந்தபிறகு அவனோடு இணக்கமாகப் பழகத்தானே ஆரம்பித்தாள். அதுவும் கடைசி நாட்களில் அவனோடு பேசிச் சிரித்திருக்கிறாள், அவனையே கேலி செய்து மடக்கியிருக்கிறாள், அவனுடைய விருப்பங்களுக்கு இணங்கி இருக்கிறாள், அவன் கைகளில் மயங்கி இருக்கிறாள். பிறகும் எங்கே சறுக்கியது? எல்லாமே சரியாகப்போகிறது என்று அவன் நினைத்திருக்க அப்படியே கவிழ்த்துக் கொட்டியதுபோல் ஆகிப்போயிற்றே! இதை எப்படிச் சரிக்கட்டுவது என்றும் விளங்கவில்லை.
இப்படித் தன்னைத் தவிக்கவிடுவாள் என்று தெரிந்திருக்க, திருமணம் என்கிற பெயரில் அவளை நெருங்கியே இருக்கமாட்டான். எப்போதும்போலத் தனிக்காட்டு ராஜாவாகக் கர்ஜித்துக்கொண்டு இருந்திருப்பான். இப்போதெல்லாம் நடிக்கிறான் எப்போதும்போல இருப்பதாக.
அதன்பிறகு அவளிடம் அவன் போகவில்லை. கோபம் என்கிற பிறவிக்குணம் அவனை விட்டுப் போகப்போவதில்லை. அவள் எதையாவது சொல்ல அதற்கு அவன் திருப்பிச் சொல்ல காயம் இருவருக்குமே. காலம் காயத்தை ஆற்றும்வரை காத்திருக்க முடிவு செய்தான்.
யாழினிக்குக் கண்ணீர் நிற்கவே மாட்டேன் என்றது. அவள் முத்தமிட்டால் போதும். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரண்டு விளையாடிய குட்டிப் பூ இப்போது இல்லையாம். அண்ணியும் அவளுமாக எத்தனை விளையாட்டு விளையாடி இருப்பார்கள். குழந்தையைப் பற்றிக் கதை கதையாகக் கதைத்துத் தள்ளினார்கள். அந்த அண்ணியின் முகம் பார்க்கவே தைரியமற்று வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.
வந்த ஆத்திரத்துக்கு எல்லாம் உன்னால் தான் என்று ரஜீவனுக்கு எடுத்துக் கத்தியும் மனம் ஆறவில்லை. இப்படி இருக்கையில் தான் மோகனன் அவளுக்கு அழைத்தான். எரிச்சலிலும் சினத்திலும் இரண்டு நாட்களாக அழைப்பை ஏற்கவே இல்லை.
அவ்வளவு கோபம். அந்தளவுக்கு ஆத்திரம். அவளை அங்குப் போகாதே இங்குப் போகாதே என்று கட்டுப்பாடுகள் விதித்தவன் இன்னோர் பெண்ணுக்கு செய்தது எல்லாம் என்ன? இவனால் தானே அவளின் குட்டி பேபி இன்று இல்லாமல் போய்விட்டாள்.
“யாழி! எனக்குத் தெரியும், நான் செய்தது எல்லாம் பிழைதான். உனக்கு என்னோட கதைக்க வெறுப்பா இருக்கும் எண்டும் தெரியும். ஆனா ஒருக்கா.. ஒரே ஒருக்கா எனக்கு எடு. உன்னோட கதைக்கோணும்.” என்று மெசேஜ் வந்து விழுந்தது.
அதைப் பார்த்தும் கண்ணீர் உகுத்தாள் யாழினி. அப்போதும் அழைக்கப் பிடிக்காமல் இருந்துவிட்டவளை, “பிளீஸ் மா. எடு!” என்ற, அவனின் கெஞ்சல் அசைத்துப் பார்த்தது.
அவனுக்கு அழைத்துவிட்டு, அவன் எடுத்துவிட்டான் என்று தெரிந்தும் வாயைத் திறக்காமல் பேசாமல் இருந்தாள்.
“எப்பிடி இருக்கிறாய் யாழி?” அவனுக்கும் இலகுவாகப் பேசமுடியவில்லை என்று கனத்துக் கேட்ட குரல் சொல்லிற்று.
ஆத்திரமும் அழுகையும் பொங்க, “மொத்தக் குடும்பமும் அழுதுகொண்டு இருக்கிறம். எல்லாம் உங்களால. நீங்க செய்த கேவலமான வேலையால.” என்று வெடித்தாள் அவள்.
சற்று நேரம் அந்தப்பக்கம் சத்தமே இல்ல. “அ..அண்ணி எப்பிடி இருக்கிறா?”
“ஆருக்கு தெரியும்? நான் போகேல்ல. எப்பிடி அண்ணின்ர முகம் பாப்பன்? அவாவோட என்ன கதைப்பன்? பாக்க போன அம்மா அப்பாவையே துரத்தி விட்டுட்டினம்.”
“அதுக்காக நீ போகாம இருப்பியா? உனக்குப் பிரச்சினை வந்த நேரமெல்லாம் அவா உனக்காக நிண்டவா எல்லா. நீ போ. அம்மா அப்பா வேற நீ வேற. அவா பேசினாலும் பரவாயில்ல. நேரம் கிடைக்கிற நேரம் திரும்பத் திரும்பப் போ. உனக்காக மட்டும் இல்ல எனக்காகவும் செய். அண்ணா பாவம். அவா அ..அண்ணியும் பாவம்.” தயங்கித் தயங்கிச் சொன்னான்.
என்ன இது இரண்டு மாதத்தில் இத்தனை நல்லவனாக மாறிவிட்டானா என்று திகைத்தாள் அவள்.
அது புரிந்தாற்போல், ஒரு கசந்த சிரிப்புடன், “தனிமை, படுற சிரமங்கள், முதுகு ஒடியிற அளவுக்குச் செய்ற வேலை, வாய்க்கு ருசி இல்லாத சாப்பாடு, எல்லாரையும் விட்டு தள்ளி வந்து நிக்கேக்க நடக்கிற சுய அலசல்கள் எல்லாம் எந்தக் கெட்டவனையும் மாத்தும் யாழி.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
தமையன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கி அவள் வெளியே வருவதற்கு நீண்ட நேரமாயிற்று.
அன்னையிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். செல்வராணிக்கு மிகுந்த சந்தோசம். அங்குப் போனால் மருமகள் தன்னை ஏதும் சொல்லி விடுவாளோ என்பதை விட, தன்னைப் பார்க்கையில் அவள் இன்னும் காயப்பட்டு விடுவாளோ என்று பயந்துதான் பேசாமல் இருந்தார். இதில் மூத்தவன் வேறு போகவேண்டாம் என்று உத்தரவே இட்டிருந்தான்.
அங்குச் சென்றபோது, அவள் பயந்தது போல அவர்கள் அவளை விரட்டி அடிக்கவில்லை. “வாம்மா!” என்று தனபாலசிங்கம் அழைக்கவேறு செய்தார் தான். ஆனால் வழமையான மலர்ச்சியோ முகம் நிறைந்த சிரிப்போ இல்லை. சரிதாவின் முகத்தில் படிந்த இருளைக் கண்டுவிட்டு அழுதுவிடாமல் இருக்கப் பெரும் பாடுபட்டுப்போனாள் யாழினி.
அறைக்குள் இருந்த பிரமிளாவின் முன்னால் சென்று நின்றவளுக்குப் பேச்சே வரவில்லை. இவளைக் கண்டுவிட்டு உதட்டால் மாத்திரம் முறுவலிக்க முயன்ற பிரமிளாவும் முடியாமல் மளுக்கென்று இரு துளி கண்ணீரை உருண்டோட விட்டிருந்தாள். அவள், யாழினி, குழந்தை மூவருக்குமான பந்தம் நுண்ணிய இழை ஒன்றினால் பிணைக்கப்பட்டது. இன்றைக்கு அது அறுந்து போயிற்று. யாழினியைக் கண்டதும் அதன் துக்கம் பெருகித் தெரிந்தது. அவளின் உதடுகள் நடுங்கத் தொடங்கவும், “சொறி அண்ணி!” என்றபடி அப்படியே அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு விம்மினாள் சின்னவள். பெரியவளின் விழிகளிலும் கண்ணீர் பொங்கி வழிந்தது.
“உங்கள பாக்க வரவேணும் மாதிரி இருந்தது. நீங்க பேசிப் போடுவீங்களோ எண்டுற பயத்தில வரேல்ல. சொறி அண்ணி.. சொறி அண்ணி. என்ர குட்டி பேபி என்ன விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது.” என்றவளுக்குப் பதில் சொல்ல பிரமிளாவுக்கு முடியவில்லை.
அவள் பெரியவளாகிப் போனதில் சின்னவளைத் தேற்றும் கடமை நினைவு வர தன்னைத் தேற்றிக்கொண்டு அவளையும் தேற்றினாள்.