மேலும் விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தவளை அதற்கு விடாமல், திருநாவுக்கரசு மூலம் தனபாலசிங்கத்திடம் பேசவைத்து, பள்ளிக்கூடத்துக்கு வரவைத்தான் கௌசிகன்.
கறுத்து, பாதியாகி, தன் ஒளியை இழந்து, விட்டால் ஒடிந்து விழுந்துவிடுவாள் போன்ற தோற்றத்தில் வந்து நின்றவளைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.
ஏனடி இப்படி இருக்கிறாய் என்று அவளைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் ஆத்திரம் கிளம்பினாலும், முகத்தைக் கூட நிமிர்ந்து பாராமல், முற்றிலுமாகத் தன்னைத் தவிர்ப்பவளை ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது.
சசிகரன் மூலம் யாரும் குழந்தையைப் பற்றி அவளிடம் நேரிடையாகப் பேசவிடாமல் பார்த்துக்கொண்டான்.
அன்று, நீண்ட கொரிடோரில் எதேற்சையாகத்தான் இருவரும் எதிரெதிரே வந்துகொண்டிருந்தனர். மார்பில் புத்தகங்களை அணைத்தபடி தன்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தவளைக் கண்டதும் அவன் கால்கள் அப்படியே நின்றுவிடப் பார்த்தன.
என்னவோ காதலியை முதன் முதலில் சந்திக்கும் காதலனைப் போல அவன் இதயத்தின் துடிப்புக் கூடிப்போயிற்று. அவளையே பார்த்தபடி அவள் முன்னே தடுமாறும் தன் மனத்தைக் காட்டிக்கொள்ளாமல் நிதானமாக நடந்து வந்தான்.
தன்னைப் பார்ப்பாள் என்று அவன் பெரிதும் எதிர்பார்க்க அவளோ அவன் புறம் திரும்பாமலே அவனைக் கடந்துபோனாள். அப்படியே நின்றுவிட்டான் கௌசிகன்.
இவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவனைப் பற்றி? முகம் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு என்னவாயிற்று? சினம் பொங்க, பியூனை அழைத்து அவளை வரச் சொல்லிவிட்டான்.
நிர்வாகி அழைத்தால் எப்படி வராமல் இருக்கிறாள் என்று அவனும் பார்க்கத்தானே போகிறான்!
அவளும் வந்தாள். முன் இருக்கையைக் கையால் காட்டினான்.
அப்போதும் அமைதி. அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை. பல்லைக் கடித்தான் கௌசிகன்.
“பிறகு? எப்பிடி இருக்கிறீங்க மிஸஸ் கௌசிகன்?”
தன்னைப் பேசவைக்க முயல்கிறான் என்று விளங்காமல் இல்லை. ஆனால், அவன் முன்னிலையில் அவள் உடைந்துகொண்டிருக்கிறாள் என்று அவனிடம் யார் சொல்வது.
கீழுதட்டைப் பற்றியபடி அவள் இருக்க, “உடம்பு எப்பிடி இருக்கு எண்டு கேட்டனான். பாக்க நல்லா இல்ல மாதிரி இருக்கே?” என்றவன் மிகுந்த சினத்தில் இருக்கிறான் என்று, அவன் வார்த்தைகளை அழுத்தி உச்சரித்த விதமே சொல்லிற்று.
மனத்தில் மெல்லிய கலக்கம் சூழ அவனை நிமிர்ந்து நோக்கியவளின் விழிகள் கலங்கவும் துடித்துப்போனான் அவன்.
ஓரெட்டில் அவளருகில் வந்து, “என்னம்மா?” என்றபடி அணைத்துக்கொள்ள, அவன் வயிற்றிலேயே சத்தமற்று விசும்பினாள் அவள்.
அவனுக்குள்ளும் துக்கம் பெருகிற்று. அவளின் தலையை வருடிக்கொடுத்தான். “சும்மா சும்மா அழுறேல்ல. இதென்ன பழக்கம்? என்ர ரமி எவ்வளவு பெரிய தைரியசாலி. என்னையே இருத்தி எழுப்புவாள். இப்பிடி அழுறதா?” என்று கனிவும் கண்டிப்புமாய்த் தேற்றியவனுக்கு, எப்போதிருந்து இந்தளவுக்குப் பலகீனமானாள் என்றுதான் சிந்தனை ஓடியது.
அவர்களுக்கு உண்டானது பெரும் காயம்தான். ஆனால், கடந்துபோன இந்த மூன்று மாதங்கள் அவளைச் சற்றேனும் ஆற்றவில்லையா? இப்படித் தொட்டதற்கெல்லாம் உடைவது அவளின் இயல்பு அல்லவே!
வாழ்க்கையே சூனியமானதுபோல் இருக்கிறவளை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும்! மனதில் முடிவு கட்டிக்கொண்டவன் அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டதும் ஒரு தேநீரை வரவழைத்துப் பருகக் கொடுத்தான்.
வேறு எதுவும் பேசவில்லை. அவள் அருந்தி முடிக்கிறவரைக்கும் அமைதியாகப் பார்த்திருந்துவிட்டு அனுப்பிவைத்தான்.
என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்துக்கொண்டு இருந்தவனுக்கு நல்ல வாய்ப்பாக அந்த வருடத்தின் பள்ளிக்கூடத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி வந்து சேர்ந்தது.
ஒரு இல்லத்தின் பொறுப்பாசிரியராக அவளைப் போடவைத்தான். எல்லாவற்றிலிருந்தும் பின் வாங்க முனைந்தவளை விடவேயில்லை.
பொறுப்புகளைக் கொடுத்தான். மாணவிகள் மேற்கொள்ளும் பயிற்சிகளைப் பார்வையிட வைத்தான். இல்லத்தின் வடிவமைப்பு, மாணவியருக்கான உடைகள், இல்ல இலச்சினை தயாரித்தல், விளையாட்டுப் போட்டிக்கான ஒழுங்கமைப்பு என்று எல்லாவற்றிலும் அவளே அறியாமல் பின்னிருந்து அவளை மாட்டிவிட்டான்.
இயல்பிலேயே இதிலெல்லாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரமிளாவும் தன்னை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினாள்.
அன்று, விளையாட்டுப் போட்டியில் ஒரு மாணவி மூச்செடுக்கச் சிரமப்பட்டபடி அப்படியே நிலத்தில் சரிய, கவனித்துவிட்டவள் யாரிடம் தன் பாக்கை கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.
அவனைக் கண்டதும் ஓடிவந்து, “எங்கயும் போய்டாதீங்க. நான் வாறவரைக்கும் இதை வச்சுக்கொண்டு இங்கேயே நில்லுங்க.” என்று அவன் கையில் அவற்றைத் திணித்துவிட்டு, அவன் என்ன சொல்கிறான் என்றுகூடக் கேட்டமால் அங்கு ஓடினாள்.
ஒரு ஹாண்ட் பாக்கைக் காவிக்கொண்டு அவனா? ‘அவனும் ஹாண்ட் பாக்கும்’ அந்தக் கூட்டணியே கன்றாவியாக மனக்கண்ணில் மின்னி மறைந்தது. ஆனாலும், அது அவளின் ஹாண்ட் பாக். கீழே வைக்கவும் மனமில்லை. அது வேறு பெரிதாக இருந்தது. வழமையாக அவள் பாவிப்பது அல்ல.
‘என்ர மனுசின்ரதானே. எவன் என்ன கேக்கிறான் எண்டு நானும் பாக்கிறன்!’ என்று எண்ணியபடி மெல்ல அதற்குள் ஆராய்ந்தான். நிறையப் பேப்பர்கள். ரோலாகச் சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டு வைத்திருந்தாள். கூடவே குளுக்கோஸ் பக்கட்டுகள், பிளாஸ்டர், பாண்டேஜ்ஜுகள் என்று பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்கள்தான் இருந்தன.
அதனோடு ஒரு சிறிய தண்ணீர் பொட்டில். அருந்திய பாதியில் இருந்தது. விடாய்த்தபோது அருந்தினாளோ? என்னவோ உந்த அதன் மூடியைத் திறந்து கொஞ்சம் தானும் பருகினான். அவனுடைய வாய்க்குக் கொஞ்சமாய் நுழைந்தது பொட்டலின் அடிப்பாகம் வரை வற்றிப்போயிருந்தது.
மெல்ல ஃபோனை எடுத்துப் பார்த்தான். முகப்புத்தகப் பக்கம் போய்ப் பார்க்க அங்கே மாணவிகளுக்கான பயிற்சி பேப்பர்களைத் தான் ‘பிடிஎப்’ வடிவில் பதிவேற்றி இருந்தாள். ‘டைம் இருக்கிறபோது செய்து பாருங்கோ’ என்று வேறு எழுதியிருந்தாள்.
பார்த்தவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. முகப்புத்தகத்தில் கூடப் பயிற்சிப் பேப்பரை போட்டுவைக்கிற ஒரே ஆள் இவளாகத்தான் இருப்பாள்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்த மாணவிக்கு என்னவோ குடிக்கக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.