அவர் போன பிறகும் அப்படியே அமர்ந்திருந்தான். மகளின் நினைவுகளிலிருந்து மனைவி குறித்தான சிந்தனைக்குள் போவதற்கு அவனுக்கு நிறைய நேரம் பிடித்தன.
அவளைப் பற்றியும், அவளைக் குறித்து அன்னை சொன்னவற்றையும் யோசிக்க யோசிக்க உள்ளத்தில் ஒரு இதம் பரவிற்று. சின்ன சிரிப்புடன் தலையைக் கோதிக்கொண்டான். மனைவி நினைவுகளாலேயே அவனுக்குச் சுகம் சேர்த்தாள்.
இப்படி அவனை மொத்தமாகத் தலையைத் தட்டி வீழ்த்திவிட்டு விலகி நிற்கிறாளே! என்னவோ உடனேயே அவளைப் பார்க்க வேண்டும் போலிருக்க யோசிக்காமல் அவளுக்கு அழைத்தான்.
இரண்டாவது ரிங்கிலேயே எடுத்து, “கௌசி, என்ன? ஏதும் பிரச்சினையா?” என்றாள் அவள், இந்த நேரத்தில் அழைக்கமாட்டானே என்கிற பதட்டத்தோடு.
தன் மீதான அக்கறை அந்தப் பதட்டத்தில் தெரிய அதை ரசித்து உள்வாங்கினான் அவன்.
“இல்ல… ஒண்டும் இல்ல. சும்மா…” அவனுடைய தடுமாற்றம் அவனுக்கே வித்தியாசமாக்கப்பட உடனேயே நிறுத்திவிட்டான்.
அவள் கௌசி என்று அழைத்தது தனித்துத் தெரிந்தது. தன்வசமிழந்த பொழுதுகளில், அதுவும் அவன் அவளை வசமிழக்கச் செய்கிற பொழுதுகளில் மாத்திரம்தான் அவனது பெயர் அவளின் வாயில் வரும். ஆனால் இன்று?
“நித்திரையில கூட உனக்கு நான் கௌசிதான். முழிச்சிருக்கிற நேரத்தில மட்டும் வாங்கோ, போங்கோ, சொல்லுங்கோ, இருங்கோ என்ன?” என்றான்.
எந்த நேரம் எடுத்து என்ன கேட்டுக்கொண்டிருக்கிறான் இவன்? பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள் அவள். அவனுக்கு, அவளின் ‘கௌசி பிளீஸ்’ பொழுதுகள் நினைவில் வந்தன. மார்பைக் கையால் தடவிக்கொண்டான். அந்த நெருக்கம் இப்போதே வேண்டும் போலிருந்தது.
“அங்க வரவா?” என்றான் நெருக்கமான குரலில்.
அவள் சங்கடத்தில் உதடு கடித்தாள். அவனுக்கு அவளின் அமைதியில் கோபச் சூடு ஏறிற்று!
“நீ வாறியா இஞ்ச?”
என்ன சொல்லுவாள்? மாலையில் தானே இதைப் பற்றிப் பேசினார்கள். மீண்டும் ஆரம்பிக்கிறானே.
“உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது பிரமி. நான் நினைச்சா முதல் எப்பிடி உன்ன இந்த வீட்டுக்குக் கொண்டுவந்தனோ அப்படியே கொண்டு வருவன்.” என்றான் கோபத்தை அடக்கியபடி.
“செய்யவேண்டியது தானே.” என்றாள் அவள் அவனைப் பற்றிய பயமேயின்றி.
“என்ன டீச்சரம்மா? செய்யமாட்டன் எண்டு நினைக்கிறியா?” அவன் குரல் சற்றே உயர்ந்து ஒலித்தது!
“ஓம்! செய்ய மாட்டீங்கதான். செய்றது எண்டா இப்பிடிச் சொல்லிக்கொண்டு இருந்திருக்க மாட்டீங்க.”
சட்டென்று அமைதியாகிப்போனான் அவன். ‘அவள் உன்ன நல்லா விளங்கி வச்சிருக்கிறாள் தம்பி’ என்று அன்னை சொன்னதுதான் ஓடிற்று.
அவனுடைய இயல்பை அவள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்க வைக்கிறாள் என்கிற கோபத்தில், “நீ சரியான கொடுமைக்காரியடி!” என்றான்.
“சரி. அப்பிடியே இருந்திட்டுப் போறன். நீங்க முதல் இவ்வளவு நேரமும் நித்திரை கொள்ளாம என்ன செய்றீங்க?” என்று விசாரித்தாள்.
“நீயில்லாம நித்திரை வரேல்ல ரமி. என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?”
“இன்னொரு பொம்பிளை பார் எண்டு சொன்னவரெல்லாம் இதச் சொல்லக் கூடாது!” என்றாள் கோபத்துடன்.
நொடியில் அவன் மனநிலை அப்படியே மாறிப்போயிற்று. உதட்டினில் சிரிப்பு அரும்ப ஒரு முத்தத்தை மாத்திரம் அவளுக்கு அனுப்பிவைத்தான்.
“கௌசி!” அவள் அதட்ட விரிந்த சிரிப்புடன் இன்னுமொன்று பறந்தது.
அவளுக்கு அங்கே இவனை என்ன செய்வது என்று தெரியாத நிலை.
அவளின் அந்த அமைதியும் கொடுமையாகிப்போக, “இப்பிடி என்ன விசரன் மாதிரி அலையவிடுவாய் எண்டு தெரிஞ்சிருந்தா உன்னத் திரும்பியும் பாத்திருக்க மாட்டன். நரகமா இருக்கு ரமி! இதுக்கெல்லாம் ஒருநாள் அனுபவிப்பாய் எண்டு நீதானே சொன்னனீ. அதுதான் அனுபவிக்கிறன் போல.” என்றான் விரக்தியோடு.
“கௌசி பிளீஸ். நான் கொஞ்சம் டைம் தாங்கோ எண்டுதானே சொல்லி இருக்கிறன். அதுக்கு இப்பிடித்தான் என்னென்னவோ கதைப்பீங்களா?” அப்படி என்றோ ஒருநாள் அவள் சொன்னது உண்மைதான். அதற்கென்று இன்று அவன் வருந்துவதும் பிடிக்கவில்லை.
“பெரிய டைம்! போடி!”
என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறவனை என்ன செய்வது?
“நாளைக்கு எப்பிடியும் உங்களுக்கும் நிறைய வேல இருக்கும். நானும் பள்ளிக்கூடம் போகோணும். பிறகும் இப்பிடி இரவிரவா முழிச்சிருந்தா எப்பிடி?” என்றாள் அவள்.
அதில் இருந்த உண்மை புரிய ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “ம்ம்… குட்நைட்!” என்றான் அவன்.
“முழிச்சுக்கொண்டு இருக்கிறேல்ல. படுக்கோணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அவளுக்கு மனம் பாரமாயிற்று. அவன் வருந்துவது பிடிக்கவில்லை. அதற்காக மனத்தில் சிணுக்கத்துடன் அவனிடம் போகவும் முடியவில்லை.
வாழ்க்கை இனியாவது நல்லபடியாக அமைய வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். அதற்கு அவசரப்பட்டால் முடியாது. மனத்தில் தெளிவு வேண்டும்.
அவன் இப்படித்தான் என்று அவனுடைய குணநலன்களை விளங்கி, அவனைப் புரிந்துகொண்டு வாழப்போனால் மட்டுமே அவனோடு காலத்துக்கும் தன்னால் நிம்மதியா வாழ முடியும் என்று தெரிந்துகொண்டிருந்தாள்.
அப்போதுதான் அவனுக்கும் அமைதியான சந்தோசமான வாழ்க்கையை அவளாலும் கொடுக்க முடியும். மீண்டும் அள்ளித்தெளித்த கோலமாக உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு, முடிவுகளை எடுக்கப் பிரியப்படவில்லை அவள்.
அவன் இல்லாத, அவனின் இப்படியான பேச்சுகள் இல்லாத ஒரு இடத்திலிருந்து தன்னைத்தானே தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பியவள் எதிரில் வந்த பள்ளிக்கூடத் தவணை விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டாள்.
மாணவியருக்கு விடைகொடுத்து, விடுமுறையை இனிமையாகக் கழிக்கும்படி சக ஆசிரியர்களுக்கு வாழ்த்திவிட்டு ஆசிரியர் அறையை விட்டு அவள் வெளியே வந்தாள்.
அங்கே நான்கைந்து நிர்வாகக் குழு உறுப்பினர்களோடு நின்று என்னவோ மிகவும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான் கௌசிகன்.
அவனையே பார்த்தபடி அவள் கடந்துபோனாள். நிலைகுலைந்துபோனான் கௌசிகன். விடலைப்பையன் போன்று அவள் பின்னே இழுபட்டுச் செல்ல மனம் ஆவலாயிற்று.
கடவுளே என்றபடி பேசிக்கொண்டிருந்தவரின் பேச்சில் கவனம் செலுத்த முயன்றாலும் அவள்தான் நெஞ்சுக்குள் நின்று குறுகுறுப்பூட்டிக்கொண்டு இருந்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்த விடயத்தில் கவனம் சிதறிக்கொண்டே இருந்தது.
அப்போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை அவனுக்கு அனுப்பிவைத்தாள் பிரமிளா.
ஒரு நிமிசம் என்றுவிட்டுத் தனியாகத் தள்ளி வந்து, ‘ஆர் இது’ அவன் அதை எடுத்துப் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே, ‘பிடிச்சிருக்கா பாருங்க. பிடிச்சிருந்தா மேல கதைக்கலாம்’ என்று அனுப்பியிருந்தாள் அவள்.
நொடி திகைத்து வாய்விட்டுச் சிரித்தான் அவன்.
‘எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு. விருப்பம் எண்டா சொல்லு. இன்னொருக்கா தாலி கட்டுறன். அந்த மொத்தத் தாலிக்கொடி இன்னும் வீட்டுல சும்மாதான் கிடக்கு.’ என்று அனுப்பிவைத்தான்.
கோபத்துக்கு பதிலாக உதட்டோரம் மெல்லிய முறுவல் ஒன்று பிரமிளாவின் முகத்தில் பூத்துப் போயிற்று.