குழந்தைகளோடு வந்தாலும் நிம்மதியாக இருந்து உண்டுவிட்டுப் போவதற்கான ஏற்பாடு!
இவன் ரசனைக்காரன் மாத்திரமல்ல கைதேர்ந்த வியாபாரியும்தான். தனக்குள் முறுவலித்துக்கொண்டாள்.
எதிரில் வந்த வேலையாளிடம், “கௌசிகன் எங்க நிக்கிறார்?” என்று வினவினாள்.
அவன் கண்களில் மெல்லிய வியப்பு. முதலாளியைப் பெயர் சொல்லி விசாரிக்கும் இவர் யார்? “நீங்க?” என்று கேள்வியாக இழுத்தான் அவன்.
“மிஸஸ் கௌசிகன்!” என்றாள் முறுவலுடன்.
நொடியில் அவன் விழிகளில் வியப்பும் மரியாதையும் வந்து அமர்ந்தன. மிகுந்த பணிவுடன், “முதலாவது மாடில இடப்பக்கம் இருக்கிற முதல் ரூம்.” என்று படிக்கட்டு வரைக்கும் கூடவே வந்து, வழிகாட்டிவிட்டுப் போனான்.
ஏறுகிற படிக்கட்டுச் சுவரில் நீண்ட பெரிய மீன் தொட்டியைப் பொருத்தி, வண்ண வண்ண மீன்களை நீந்த விட்டிருந்தான். அவளால் அதிலிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை.
‘இவன், இந்த ஹோட்டலுக்கு வருகிறவர்களை வெளியே போக விடமாட்டான் போலவே…’ எண்ணம் முறுவலைத் தோற்றுவிக்கப் படிகளை ஏறி முடித்தாள்.
மேலே நீண்ட கொரிடோரின் இரு புறமும் அறைகள் தமக்கான இலக்கங்களைத் தாங்கியபடி நின்றன. சுவரில் அழகிய வண்ணப் படங்கள். நடக்கையில் மாத்திரம் ஒளிர்ந்து பின் தணியும் விளக்குகள் என்று எல்லாமே அற்புதமாகக் காட்சி அளித்தது.
மனத்தில் பெருமிதமாக உணர்ந்தபடி, அவனுடைய பெயரினைத் தாங்கி நின்ற அறையின் முன்னே சென்று நின்று கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்தாள்.
அங்கேதான் இருந்தான் அவன். யார் என்று பார்வையை உயர்த்தியவன் அவளைக் கண்டதும் பெரும் வியப்புடன் புருவங்களை உச்சி மேட்டுக்கே கொண்டுபோனான். பின், கண்களில் சிரிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தின் ஆளுகைக்குள் உட்பட்டு எதையும் யோசிக்காமல் வந்துவிட்டவளுக்கு, அவன் பாவனைகளும் சிரிப்பும் மெல்லிய தடுமாற்றத்தைத் தந்தன. முகம் முழுக்கப் பரவிய சந்தோசச் சிரிப்பை அடக்க முயன்றபடி கதவைச் சாற்றிவிட்டு அவனிடம் வந்தாள்.
கண்கள் மின்ன, மேசையின் முன்னே இருந்த இருக்கையைக் கையால் காட்டினான் அவன். அவனையும் அந்த இருக்கையையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அதில் அமராமல் மேசையைச் சுற்றிக்கொண்டுபோய், அவன் முன்னே கைகளைக் கட்டிக்கொண்டு மேசையில் சாய்ந்துகொண்டாள் பிரமிளா.
அவன் உதட்டுச் சிரிப்பு விரிந்தது. தன் இருக்கையில் வசதியாகச் சாய்ந்து அவளையே பார்த்தான்.
கள்ளன்! வாயைத் திறக்கிறானா பார்!
பார்வையில் கோபத்தைக் கொண்டுவந்து, “கதைக்க மாட்டீங்களா? ஏன் வந்திருக்கிறாய் எண்டு கேக்க மாட்டீங்களா?” என்றாள் அவள்.
அதற்குமேல் அடக்கமாட்டாமல் நகைத்தான் அவன்.
“சிரிக்காதீங்க கௌசி!” அவனைப் பாராமல் பார்வையை அறை முழுக்கச் சுழல விட்டவளுக்கும் உதட்டுச் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெட்கப்பட வைக்கிறானே!
“கேளுங்கோவன்! ஏன் வந்தனான் எண்டு.” என்றாள் மீண்டும்.
“சரி சொல்லு, ஏன் வந்தனீ?” அழகிய முறுவல் ஒன்றுடன் அவளின் இழுவைக்கே இழுபட்டான் அவன்.
“எனக்கு உங்களப் பாக்கோணும் மாதிரி இருந்தது.” தன் விரல் நகங்களைப் பார்வையிட்டபடி சொன்னாள் அவள்.
“ம்ஹூம்!” கண்கள் சிரிப்பில் மின்ன ராகம் இழுத்தான் அவன்.
“அப்பா வார்த்தைக்கு வார்த்த தன்ர மருமகன் அப்பிடி, தன்ர மருமகன் இப்பிடி எண்டு பெருமை பாடிக்கொண்டு இருக்கிறார்.”
“ம்ஹூம்.”
அவள் முறைத்தாள். “என்ன ம்ஹூம்? அதைக் கேக்க கேக்க எனக்கு உங்களைப் பாக்கோணும் மாதிரியே இருந்தது. அதுதான் வந்திட்டன்!” என்றாள் கோபமாக.
“சரி! வந்தாச்சு. பாத்தாச்சு. இனி?” அவன் குரலே நகைத்துச் சீண்டியது.
“இனி என்ன? போயிட்டு வாறன்!” முறைப்புடன் சொல்லிவிட்டு விசுக்கென்று திரும்பியவளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டான் அவன்.
“நீங்க விடுங்க! ஒண்டுமே தெரியாதவன் மாதிரி நடிப்பு!” கோபத்துடன் திமிறியவளின் உதட்டினில் அழுத்தி முத்தமிட்டான் அவன்.
“என்னட்ட வாறதுக்கு உனக்கு மூண்டு நாள் பிடிச்சிருக்கு! இதுல கோபம் வேற! திருகோணமலையில இருந்து வந்த அடுத்த நாளே எதிர்பார்த்தனான்.” என்றான் அவன்.
ஆக, அவளாக வர வேண்டும் என்று அவனும் காத்திருந்திருக்கிறான். மனம் கசிந்துபோகக் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.
மனதை மயக்கும் சிரிப்புடன் என்ன என்று புருவம் உயர்த்தியவனின் நெஞ்சுக்குள்ளும் நிறையக் காயங்கள் உண்டே! இருந்தும் அவளிடம் மறைத்து அன்பை மட்டுமே காட்டுகிறான்! விழியோரங்கள் கசிய அவன் முகத்தைப் பற்றி நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் பிரமிளா.
மேகத்திலிருந்து விழுகிற ஒற்றை நீர்த்துளிக்காகக் காத்திருக்கும் சாதகப் பட்சியைப் போல அவளின் ஒரு துளி அன்புக்காகக் காத்திருந்தவன் அவன். “என்னடி செய்றாய்?” என்றான் தன்னிலை இழந்தபடி.
“சொறி!” குரலடைக்கச் சொன்னவள் அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்துக் கோதினாள். அவனைத் தன்னிடம் இழுத்து அவன் காயங்களுக்குத் தன் இதழ்களினால் மருந்திட்டாள்.
அந்த நொடியில் உணர்வுகளின் பிழம்பானான் அவன்.
“என்னடியப்பா புதுசா பாசம் எல்லாம் காட்டுறாய்?” என்றவன் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
அவன் கைகளின் நடுக்கத்தையும், குரலின் பேதத்தையும், இதயத்தின் துடிப்பையும் உணர்ந்து அவள் அவன் முகம் பார்க்க முனைய, காட்ட மறுத்தான் அவன்.
“கௌசி!”
“…”
“கௌசி பிளீஸ்! என்னைப் பாருங்கோ!” அவனுடைய மனப்போராட்டம் கண்டு அவள் மனம் துடித்தது. இத்தனை நாட்களாக அவனைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று தவித்தாள்.
“கௌசி, என்னைப் பாக்க மாட்டீங்களா?” கெஞ்சலாகக் கேட்டாள். கை அதுபாட்டுக்கு அவன் பிடறிக் கேசத்தைக் கோதி அவனுடைய மனக்காயத்தை ஆற்ற முற்பட்டது.
நெடுநாள் காயம் அல்லவா. அப்படியும் ஆறவில்லை போலும்! வேகமாக நிமிர்ந்து, “உனக்கு இப்பதான் உன்ர கௌசின்ர நினைவு வந்ததா?” என்று, அவளின் தோள்களைப் பற்றிக் கோபத்துடன் கேட்டவனின் விழிகளில் மெல்லிய நீர் படலம்.
அவள் திகைத்துபோய்ப் பார்த்தாள்.
“போனது என்ர மகளும்தானே ரமி. கொன்றுட்டீங்க எண்டு சொன்ன? என்னால ஏலுமாடி அது? என்னைப் பாக்க அந்தளவுக்கு மிருகமா தெரிஞ்சதா உனக்கு? ஒரு பிள்ளைக்காக உன்னவிட ஆசையா காத்திருந்தவன் நான். என்னைப் பாத்து அப்பிடிசிஜி சொல்ல மனது வந்திருக்கே உனக்கு?” நினைத்து நினைத்தே தனக்குள் வெந்திருப்பான் போலும். சந்தர்ப்பம் கிடைத்ததும் குமுறித் தீர்த்தான்.