செல்வராணியின் மனம் பொறுமையற்றுப் பரபரத்துக்கொண்டிருந்தது. சின்ன மகன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடப் போகிறான். வாசலைப் பார்த்துப் பார்த்தே ஓய்ந்து போனார்.
இத்தனை நாட்களாக, ‘அவனை வரச் சொல்லம்மா’ என்று பிரமிளாவிடம் அவராகக் கேட்டதில்லை. கேட்க மனம் வந்ததில்லை. அந்தளவுக்குப் பிரமிளா அனுபவித்த துன்பத்தையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்தவர்.
முதல் குழந்தை இறந்தபிறகு இலகுவில் அவளுக்குக் கருத்தரித்துவிடவில்லை. ஒரு வருடமாக மருத்துவம் பார்த்துத்தான் மிதுனா உதித்தாள்.
அந்த ஒரு வருடத்தில் அவள் பட்டுவிட்ட பாடு பெரும்பாடு. குழந்தை என்றானதும் அதை நல்லமுறையில் பெற்று எடுக்கிற வரையில் பயந்த பயமும் பெரும் பயம். மிதுனா மட்டுமே போதும் என்று நின்ற கௌசிகனைக் கூட, பிரமிளாவின் பிடிவாதம்தான் அசைத்தது. மதுரனையும் ஈன்றெடுத்தாள்.
அப்படி இருக்கையில் எப்படிக் கேட்பார்? ஆனால், அவளோ அவரின் ஏக்கத்தை அவர் கேளாமலேயே தீர்த்துவைத்துவிட்டாள். என்றும்போல் இன்றும் அவள் மீதான பாசமும் பிரியமும் பெருகிப் போயிற்று.
யாழினியும் பெரும் குதூகலத்துடனும் எதிர்பார்ப்புடனும்தான் காத்திருந்தாள். இயல்பாகவே வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாலும், பிரமிளாவின் சிந்தனையும் எங்கே இன்னும் இவர்களைக் காணவில்லையே என்றுதான் ஓடிக்கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் கௌசிகனின் கார் வீட்டின் முன்னே வந்து நின்றது. அதுவரையில் வீட்டுப்பாடம் செய்கிறேன் என்கிற பெயரில் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த மிதுனா, அடுத்த நொடியே, “அப்பான்ர கார் வந்திட்டுது. சித்தப்பா வந்திட்டார்!” என்று கூவியபடி வெளியே ஓடி வந்தாள். அவளின் பின்னே முகம் பூரித்து மலர விரைந்து வந்தனர் பெண்கள்.
காரின் இரு புறமிருந்தும் அண்ணனும் தம்பியும் இறங்கினர்.
மோகனனைக் கண்ட செல்வராணியும் யாழினியும் அதிர்ந்து போயினர். ஓடிவந்த மிதுனாவும் பிரேக்கிட்டவள் போன்று திகைத்து நின்று, “ஆ!” என்று மீன்குஞ்சென வாயைப் பிளந்தாள். அடுத்த நொடியே கிழுக்கிச் சிரித்தபடி, “சித்தப்பாஆஆ” என்று கூவியபடி ஓடிப்போய் அவனிடம் தாவினாள்.
முகமெல்லாம் சிரிப்பில் மலர, “மிதுக்குட்டி!” என்றபடி அவனும் அவளை அப்படியே அள்ளிக்கொண்டான். அதுவரை நேரமும் தன் வீட்டினரை எப்படி எதிர்கொள்வது என்கிற மிகப்பெரிய கேள்வி ஒன்றுடன் வந்தவனை, தன் பிள்ளைச் சிரிப்பால், வெள்ளை மனத்தால் அப்படியே வாரி அணைத்திருந்தாள் மிதுனா.
கடுமையான உடற்பயிற்சியில் உரமேறிப்போயிருந்த தேகமும், நெஞ்சைத் தொட்ட தாடியும், தோள்களை உரசியபடி நின்ற நீண்ட கேசமும், மேல் உதட்டை மொத்தமாக மறைத்த மீசையுமாக நின்றவனை, என் அண்ணாதானா என்று நம்பமுடியாமல் பார்த்தாலும், யாழினிக்குச் சிரிப்பும் அழுகையும் பொங்கின. சிறு குழந்தையாகத் தானும் மாறி ஓடிப்போய் அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள்.
கண்களில் நீர் வழிய, “வாப்பு வாவா! திரும்பவும் உன்ன பாக்கவே மாட்டேனோ எண்டு பயந்தே போனன்.” என்று குரல் தழுதழுக்க வரவேற்றார் செல்வராணி. மிதுனாவை இறக்கி விட்டுவிட்டு அவரை அணைத்துக்கொண்டான் அவன்.
பெற்ற மகனின் தேகச்சூடு பட்டு, வெம்மையில் தவித்திருந்த அன்னை மனம் குளிர்ந்துவிட, அந்த நொடியில் முற்றிலுமாக உடைந்து, அவனைக் கட்டிக்கொண்டு விம்மினார் செல்வராணி.
“ஏன் அப்பு இவ்வளவு காலமும் வராம இருந்தனி? அப்பிடி என்ன கோபம் உனக்கு? நீ செய்த…” என்றவரை மேலே பேசவிடாமல் இடையில் குறுக்கிட்டு, “அதுதான் வந்திட்டான் தானே. இன்னும் என்னம்மா அழுகை? சும்மா பழசைக் கதைக்காம உள்ளுக்கு நடவுங்க எல்லாரும்!” என்றான் கௌசிகன்.
அப்போதுதான் யோசிக்காமல் மீண்டும் பழசைப் பேசப்பார்த்தோம் என்று உணர்ந்து, வேகமாகத் தன்னை மீட்டுக்கொண்டார் செல்வராணி.
மிதுனாவையும், தன் அருகண்மையை விட்டு நகரவே மாட்டேன் என்பதுபோல் நின்ற யாழினியையும் தன் இரு கையணைப்பிலேயே கொண்டு வந்த மோகனன், அங்கு நின்ற பிரமிளாவைக் கண்டதும் நின்றான். அவன் மனத்துக்குள் பெரும் பிரளயம். அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாமல் அப்படியே நின்றான்.
அவனைக் கண்டதும் பிரமிளாவின் மனத்திலும் நடந்தவை அனைத்தும் ஒரு நொடி மின்னி மறையாமல் இல்லை. ஆயினும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “வா மோகனன்! பயணம் பிரச்சனை இல்லாம இருந்ததுதானே?” என்று மலர்ந்த முகத்துடனேயே வரவேற்றாள்.
அதன் பிறகுதான் அவனும் சற்று இலகுவானான். “ஓம் அண்ணி! ஒரு பிரச்சினையும் இல்ல.” என்றவனின் விழிகள், தகப்பனை நோக்கி ஓடிவந்த தன் பெறாமகனிடம் தாவியது.
“சித்தப்பாட்ட வாறீங்களா?” என்று அவனை நோக்கிக் கையை நீட்டினான். அவனோ இவனுடைய தோற்றம் கண்டு பயந்து, வீறிட்டபடி தகப்பனிடம் தாவினான்.
மகனைத் தூக்கிக்கொண்ட கௌசிகன். “அவனுக்குச் சாப்பிட ஏதாவது குடு பிராமி. கடையிலயும் ஒண்டும் ஒழுங்கா சாப்பிடேல்ல.” என்றான் பிரமிளாவிடம்.
அப்போதுதான் அவன் முகம் சரியாக இல்லை என்று கவனித்தாள் பிரமிளா. கேள்வியோடு அவனை ஏறிட்டாள். ஒன்றும் சொல்லாமல், மகனின் அழுகையை நிறுத்த எண்ணி வெளியே நடந்தான் கௌசிகன்.
அவன் அருகில் இல்லை என்றதும் பெண்கள் மூவரும் மோகனனைச் சூழ்ந்துகொண்டனர். மோகனன் சோபாவில் அமர, மிதுனா அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள். யாழினி ஒருபக்கம், செல்வராணி இன்னொரு பக்கம் என்று அவர்களின் விசாரணையை ஆரம்பித்திருந்தனர். பிரமிளா அவனுக்கான உணவைக் கவனிக்கச் சென்றாள்.
முக்கியமாக அவனின் தோற்றம்தான் அவர்களின் கேள்விக்குள்ளாகியது. ஏன் இவ்வளவு முடி? எதற்கு இந்தத் தாடி? கழுத்தில் எதற்கு இத்தனை சில்வர் செயின்கள்? கூடவே ஒரு ருத்ராட்ச மாலை. கையில் வேறு பலவகையில் காப்புகள் என்று ஆயிரம் கேள்விகள். அவர்கள் மூவரையும் சமாளிக்கப் பெரும் பாடுபட்டான் மோகனன்.
இவன் அங்கிருக்கையில் அவர்கள் பேசுகையில் பெரும்பான்மைப் பொழுதுகளில் இவன் வேலையில் இருப்பான். வேலைக்கான பிரத்தியேக உடை, ஹெல்மெட் என்று அணிந்திருப்பதில் பெரிதாகத் தெரிவதில்லை. இவர்கள் இப்படிக் கேள்விகளாகக் கேட்டுத் தள்ளுவார்கள் என்று அவனும் கவனமெடுத்து மறைத்துக்கொள்வான்.
நேரில் அது முடியாதே!
அதற்குள் இறுகிக்கிடந்த அவனுடைய கையின் தசைக்கோளங்களைத் தன் இரண்டு பிஞ்சுக் கரங்களாலும் பிடிக்கப் பார்த்தும் முடியாமல் போக, “சித்தப்பா, நீங்க சிக்ஸ்பேக்(sixpack) வச்சிருக்கிறீங்களா?” என்றபடி அவன் அணிந்திருந்த டீ ஷர்ட்டின் கழுத்துப் பகுதிக்குள் தலையை விடப்பார்த்தாள் மிதுனா.
அவளின் செய்கையில் அவனுக்குக் கூச்சமாயிற்று. சிரிப்பையும் அடக்க முடியாமல் போகவே வாய்விட்டு நகைத்தபடி, “டேய் குட்டி, என்ன இது?” என்று தடுத்தவனை அவள் பொருட்படுத்தவே இல்லை.
வயிற்றுப் பகுதியிலிருந்து அவன் அணிந்திருந்த டீ சர்ட்டை உயர்த்திப் பார்த்துவிட்டு, “அச்சோ இருக்கு! இருக்கு! சித்தப்பாக்கு சிக்ஸ்பேக் இருக்கு.” என்று சந்தோச மிகுதியில் கூவினாள்.
இங்கே, மகனோடு வெளியே நின்ற கௌசிகனின் மனமோ மோகனனை எண்ணி அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தது.