அழகென்ற சொல்லுக்கு அவளே 34 – 1

சீனாவில் இருந்த நாள்களில் கணவனிடம் சொல்லாமல் வந்தது, அவனிடமிருந்து விலகி நிற்பது, அவன் கோபம், அவள் செய்துவிட்டு வந்த காரியம் என்று ஒருவித அழுத்தத்தில்தான் இருந்தாள் இளவஞ்சி.

அதில் தன் மாதவிடாய் குறித்து அவள் யோசிக்கவில்லை. ஒரு நாள் கொண்டு சென்ற பெட்டியில் இருந்த உடைகளைப் பிரித்து அடுக்குகையில்தான் அதற்குள் இருந்த பேடுகளை(Pads) கண்டுவிட்டு அதைப் பற்றியே யோசித்தாள்.

அப்போதுதான் அந்த மாதம் அவளுக்கு மாதவிடாய் வரவில்லை என்றே உறைத்தது. அதிர்ச்சியா ஆனந்தமா அழுகையா என்று பிரித்தறிய முடியா ஒரு உணர்வில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அந்த நொடியே மனம் கணவனின் அண்மையையும் அவன் வலுமிக்க தோள்களையும் அதீதமாக நாடிற்று. ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்துகொள்ள முடிந்தால்? அவன் தரும் ஆழ் முத்தங்களை அனுபவித்தபடியே இதைப் பகிர்ந்தால் எப்படி இருக்கும் என்று ஓராயிரம் கற்பனைகள்.

ஆனாலும் அவள் அதனை உறுதி செய்துகொள்ளப் போகவில்லை. குழந்தைக்காக அதிகம் ஆசைப்பட்ட அவன் இல்லாமல், அந்தக் குழந்தை குறித்த எந்தவொரு விடயத்தையும் அறிந்துகொள்ள மனமில்லை. கூடவே குழந்தைதானா என்கிற கேள்வியும்.

திடீரென்று நாடு திரும்ப வேண்டிய அவசியம் உண்டானபோது விமானப் பயணம், பிறகு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வாகனப் பயணம் என்று அவள் உள்ளம் கலங்காமல் இல்லை.

ஆனால் வேறு வழியில்லையே. அவள் அந்தப் பயணத்தை என்றானாலும் மேற்கொண்டுதானே ஆக வேண்டும். தன் அப்பம்மாவையும் அந்த நல்லூரானையும் வேண்டியபடிதான் பயணத்தை முடித்தாள்.

கணவன் இல்லாமல் குழந்தைதானா என்பதையே உறுதிப்படுத்த விரும்பாதவள் அதைக் கணவனிடம் தெரிவிக்க அவசரப்படவில்லை. தான் செய்யப்போகிற காரியத்திற்கு அவனது எதிர்வினை என்று தெரிந்தாகவேண்டியிருந்தது.

அன்று அவன் விட்ட வார்த்தைகளும், அதனால் அவள் எடுத்த முடிவும் அதன் பிறகும் அதைக் குறித்து அவனிடம் பேச விடவில்லை.

பிரபாகரனிடம் தன்னை மீறிச் சொல்ல வந்துவிட்டு சட்டென்று நிறுத்திவிட்டாள். ஆனாலும் கணவன் கண்டுபிடித்துவிட்டானே. உள்ளே ஒரு ஆனந்தமும் அழுகையும் சேர்ந்தே பொங்கிற்று.

அதே நேரத்தில் விடுதலைக்கான காரியங்களை நீயே பார் என்று சொல்லி, அவளைத் தன் வழிக்குக் கொண்டு வரப் பார்க்கிறானா என்கிற கோபமும் வந்தது.

இங்கே குணாளன் ஜெயந்தியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்ட நிலன், சற்றுத் தள்ளி வந்ததும் காரை நிறுத்திவிட்டான்.

ஒன்றுக்கு நான்கு பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டவன் அவன். குழந்தைகள் என்றால் அவ்வளவு விருப்பம். கடைசியில் முதன் முதலாக அவன் பெயர் சொல்ல ஒரு குழந்தை வரப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பையும் பூரிப்பையும் கொண்டாடும் நிலையில் அவன் இல்லை.

இத்தனை காலமும் பிரச்சனைகள் வருகிற பொழுதுகளில் எல்லாம் அவனை மணந்திருக்கவே கூடாது என்பவள் இன்று அதன் உச்சக்கட்டத்தைத் தொடுகிறவளாக விடுதலை தருகிறேன் என்றுவிட்டாள். அது அவனை மொத்தமாக அசைத்திருந்தது. அந்தளவுதானா அவன் அவளுக்கு? அல்லது அவர்கள் இருவருமாக வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவுதானா?

அவள் வார்த்தைகளை விடுகிற ஒவ்வொரு முறையும் காயப்பட்டுப்போவான். ஆனாலும் அவளுடைய மனக்காயத்தை எண்ணி, அதைக் காட்டிக்கொள்ளாமல் அவளைச் சமாதானப்படுத்துவான். இந்த முறை அது சரியாக வரும் என்று அவன் நினைக்கவில்லை.

குழந்தையோ என்கிற சந்தேகத்தைக் கூட அவனிடம் சொல்ல விடாத அளவில் அவள் கோபம் இருக்கிறது என்கையில் இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று நினைத்தான்.

அவனுக்கும் அவளுக்குமிடையில் எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லை. இது இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிணக்கு.

என்றைக்கும் நடந்தவற்றுக்காகச் சக்திவேலர் திருந்தி மன்னிப்புக் கேட்கப் போவதும் இல்லை. பாலகுமாரன் செய்த பாவங்கள் இல்லை என்று ஆகப்போவதும் இல்லை. இளவஞ்சி அவர்களை மன்னித்து மறக்கப்போவதும் இல்லை.

ஆக இது என்றைக்கும் தீரும் என்கிற நம்பிக்கை இல்லை.
இதற்குத் தீர்வு, என்ன நடந்தாலும் எனக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன வேண்டும் என்கிற தெளிவு.

அது இல்லாமல் சமாதானமாகிப் பிரயோசனமில்லை. அது தற்காலிகமானது. மீண்டுமொருமுறை பிரச்சனை வருகையில் இருவரும் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு, ஒருவர் மற்றவரை மாறி மாறிக் காயப்படுத்திக்கொள்வார்கள். பிறகு வாழ்க்கை நரகமாகிவிடாதா?

அதனால்தான் அவள் அன்னையாகி இருக்கிறாள் போலும் என்று தோன்றியுமே மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கடினமாகப் பேசிவிட்டு வந்தான். அது இலகுவாய் இல்லைதான். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து கடக்க வேண்டிய ஒரு கடினமான கட்டம் இது. கடந்தேயாக வேண்டும்!

முதல் வேலையாக விசாகனுக்கு அழைத்தான். அவளின் ஒன்றரை மாத சீனா பயணத்தை ஒட்டி, அவனுக்கும் அவள் ஒன்றரை மாதத்துக்குச் சம்பளத்தோடான விடுமுறையைக் கொடுத்திருப்பதைச் சொன்னான் விசாகன்.

அவள் நாடு திரும்பிவிட்டதைச் சொல்லி உடனேயே அவனைத் திரும்பி வரச் சொல்லிவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock