“பெருசா எந்தப் பிளானும் இல்லை அண்ணா.” என்பதற்குள்ளேயே அவள் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.
‘அவனைப் பற்றிய பேச்சுக்கேவா’ வியப்புடன் தங்கையைப் பார்த்தான் மோகனன்.
அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “ராதுக்குக் கலியாணம் செய்து வைக்கோணும் எண்டு சொன்னவர். அவளுக்குத்தான் முதல் பாத்தவர். அவள் மாட்டனே மாட்டேன் எண்டு சொல்லிப்போட்டாள். கொஞ்சக் காலம் சிங்கிளா லைஃப என்ஜோய் பண்ணப்போறாளாம். வேற… வெட்டிங் முடிஞ்சதும் ஒரு பத்து நாள் மாதிரி கண்டில ரிசோர்ட் ஒண்டு புக் பண்ணியிருக்கிறார். அங்க…” என்றவளின் பேச்சு அப்படியே நின்று போயிற்று.
முகம், கண் எல்லாம் பூவாக மலர்ந்து மின்ன, இதழ்கள் அழகிய புன்னகையில் நெளிய அவளின் பார்வை அவனைத் தாண்டிப் போனது.
யாரைப் பார்த்து இப்படி மலர்கிறாள் என்று திரும்பிப் பார்த்தான். அங்கே, ரஜீவன் தன் பைக்கை நிறுத்திவிட்டு இவர்களை நோக்கி வருவது தெரிந்தது. மோகனனின் உடம்பும் தேகமும் காரணமற்று இறுகியது.
அவன் வருவான், நல்லமுறையில் அவனை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்துத்தான் இருந்தான். ஆனாலும் முடியாமல் பழைய நினைவுகள் வந்து அவனைச் சுனாமியாகச் சுழற்றி அடித்தன.
அன்றைக்கு என் தங்கையை நீ திரும்பியே பார்க்கக் கூடாது என்று அரை உயிராகிற வரைக்கும் அவனைப்போட்டு அடித்திருக்கிறான். இதே வீட்டின் பின்பக்கத் தோட்டத்தில் மண்ணோடு மண்ணாகப் போட்டுப் பந்தாடியிருக்கிறான்.
இன்றைக்கு அவனே தங்கைக்குக் கணவனாகப் போகிறான். அவர்கள் காதலர்கள். எந்தளவுக்கு அவனைத் தங்கைக்குப் பிடித்திருக்கிறது என்பதற்கு, அவனைப் பற்றிய பேச்சை எடுத்ததற்கே சிவந்த முகமும், தான் இருப்பதையே மறந்து இதோ அவனையே கண்களால் களவாடிக்கொண்டிருக்கும் அவளின் நிலையும் சாட்சி.
இதை மாற்ற முடியாது. இனி அவன் தங்கையின் கணவன். அவனது மச்சான். ஏற்று, மதிப்புக்கொடுத்து நடக்கவேண்டிய இடத்தில் இருப்பவன் இவன். ஆக, மாறவேண்டியவனும் இவனே. அவனைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். நலன் விசாரிக்க வேண்டும். நல்ல முறையில் பழக வேண்டும். முடியுமா?
முடிய வேண்டும்!
இல்லையோ, அவன் தங்கை வாடிப்போவாள்.
இப்படி, ரஜீவனைப் பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவதற்கே மிகப்பெரிய போராட்டம் ஒன்று அவனுக்குள் நடந்துகொண்டிருந்தது.
சாதாரணமாகக் காட்டிக்கொள்ள வேண்டும், அவனோடு நல்லமுறையில் ஒரு உறவை முன்னெடுக்க வேண்டும் என்று தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்திருந்தான்.
ரஜீவனும் கேட்டை தாண்டி உள்ளே வரும்போதே மோகனனைக் கவனித்துவிட்டான். பார்த்ததுமே மனம் கொதிக்கலனாகக் கொதிக்கத் தொடங்கியது. ஆளரவமற்ற தெருவில் மரத்தோடு மரமாகக் கட்டிவைத்து அடித்ததும், வேனுக்குள் போட்டுத் தெருநாயை அடிப்பதுபோல் செருப்புக் கால்களால் மிதித்ததும் என்று எத்தனை அவமானங்கள்.
அடித்தால் கேட்க நாதியற்றவன் என்கிற இளக்காரம்தானே. அவனும் அவர்களைப் போல் இந்த ஊரில் செல்வாக்கானவனாக இருந்திருக்கத் தொட்டிருப்பார்களா?
அன்று, அவன் உயிரே ஆட்டம் கண்டதே. நெஞ்சுக்கூடு நடுங்கிப் போகிற அளவுக்குப் பயந்தானே. கூடப்பிறந்த தங்கையின் முகம் கூடப் பார்க்க முடியாமல் அவமானத்தில் குமைந்தானே.
‘நான் எல்லாம் ஒரு ஆம்பிளையா?’ என்று தன்னைத்தானே எத்தனை நாட்கள் கேட்டிருப்பான்? இன்னுமே அந்த நாட்களை நினைத்தால் அடங்கிப்போன வலி அவனைக் கொல்லுமே. இதோ இப்போது போல்!
முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் யாழினியை மாத்திரமே பார்த்து வந்தவனை, “ஹாய் ரஜீவன், வாங்கோ!” என்று வரவேற்றான் மோகனன். கூடவே, அருகில் இருந்த இன்னொரு நாற்காலியைக் காட்டி, “இருங்கோ.” என்றான்.
அவன் முகம் பாராமலேயே, “ஹாய்!” என்றுவிட்டு, “போவமா? நேரமாச்சு யாழி. உன்ன வெளில எல்லா வந்து நிக்கச் சொன்னனான்?” என்றான் அதட்டல் குரலில்.
அதில் யாழினியின் முகம் வாடிப்போயிற்று. “அண்ணாவோட கதைச்சுக்கொண்டு இருந்ததில மறந்திட்டன் ரஜீவன்.” காரணம் சொன்னபடி அவள் எழவும் இங்கே மோகனனுக்கு உள்ளே கொதிக்க ஆரம்பித்தது.
எங்கே வந்து யாருக்கு முன்னால் யாரை அதட்டுகிறான்? திருமணம் நடக்கப்போகிறது என்பதற்காக என்னவும் செய்வானா? அவனுடைய தாடை இறுகியது. ஆத்திரத்தை அடக்கியவனின் புஜங்கள் புடைத்துக்கொண்டு நின்றன.
“சரிசரி வா! நான் பிறகு உன்னக் கொண்டுவந்து விட்டுட்டுக் கடைக்கும் போகவேணும். மாமா பாத்துக்கொண்டு நிப்பார்!” என்றபடி அவளின் கையைப் பற்றினான்.
அதைப் பார்த்த மோகனன் முகம் மாறாமல் காப்பதற்கு மிகவும் சிரமப்பட்டான். ரஜீவனை இன்னும் மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாததாலோ என்னவோ, அவன் யாழினியின் கையைப் பற்றியதும் இவனுக்குள் இருந்த முரடன் உறுமினான்.
நீ அதிகாரம் செலுத்திய இடத்தில் எனக்கான மதிப்பு என்ன, உன் நிலை என்ன என்று மறைமுகமாகக் காட்டிவிடும் வேகம் ரஜீவனிடம் இருந்தது.
இந்தத் தங்கைக்காகத்தானே அன்று என்னை அடித்தாய். இன்று, அவளே எனக்குச் சொந்தமடா என்று சொல்லிவிடும் இறுமாப்பு. அதில், “இதென்ன கழுத்தடியில இவ்வளவு பவுடர்.” என்றபடி அவளின் கழுத்தோரத்தைத் துடைத்தான்.
பதறிப்போனாள் யாழினி. “என்ன செய்றீங்க?” வேகமாக விலகி, தானே துடைத்துக்கொண்டவளுக்கு தமையனின் முகம் பாக்க முடியாமல் சங்கடமாயிற்று.
ஏற்கனவே அண்ணாவும் அவனும் நன்றாகப் பேசிக்கொள்ளவில்லையோ என்கிற எண்ணம் அவளுக்குள் உதித்திருந்தது. இதில், ரஜீவனும் இப்படி நடக்க, தமையனின் முன் அவனைக் கடியவும் முடியாமல், அவனின் செய்கையை அனுமதிக்கவும் முடியாமல் தடுமாறினாள். பதட்டத்தில் முகமெல்லாம் சிவந்து வியர்க்க ஆரம்பித்தது.
மோகனனுக்கு அவனை நொறுக்கிப்போடும் வேகம் நொடியில் எழுந்தது. அடக்கிக்கொண்டு, விழிகள் சிவக்க ரஜீவனைப் பார்த்தான்.
உதட்டோரம் மெலிதாகச் சுளிக்க, ஒரு புருவத்தை ஏற்றியும் ஏற்றாமலும் அவனை நோக்கிவிட்டு, “வா” என்று அவளின் கைப்பற்றி இழுத்துக்கொண்டு நடந்தான் ரஜீவன்.
பெரும் சங்கடத்தோடு, “அண்ணா, போயிட்டு வாறன்!” என்றபடி அவனோடு இழுபட்டாள் யாழினி.
இவன் யாழினிக்கு வேண்டும்தானா என்று யோசிக்கிற அளவுக்கு வந்திருந்தான் மோகனன். இல்லை என்று முடிவாகுமானால் அடுத்த நொடியே அவன் இருந்த தடமே தெரியாமல் அழித்துவிட அவனால் இயலும். எட்டு வருடங்கள் இங்கு இல்லை என்றதும் என்ன நினைத்துவிட்டானாம்?
கொதித்த மனத்தை அப்படியே அடக்கினான். தங்கை காதலித்துவிட்டாள் என்பதற்காகவே சோடைபோன ஒருவனை நிச்சயமாக அவனுடைய தமையன் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான். ஆக, அவன் யாழினிக்கு ஏற்றவன்தான். பொருத்தமானவன்தான். நல்லவன்தான்.
அப்படியானால் ரஜீவனின் கோபம் அவனோடுதானா? அவனைச் சீண்டுவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கிறானா? சிறு சிரிப்புடன் தலையைச் சிலுப்பிக்கொண்டான்.
‘ஹீரோ நீயே வில்லன் வேல பாத்தா, நான் வில்லன்டா!’ மோகனனின் உதட்டோரம் வளைந்தது.
“யாழி!” இருந்த இடத்திலிருந்து அசையாமல் இருந்தபடியே அழைத்தான்.
“என்ன அண்ணா?” பட்டென்று நின்று திரும்பிக் கேட்டாள்.
‘இங்க வா’ என்று தலையை அசைத்தான்.
அவ்வளவுதான். ரஜீவனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்தாள் அவள்.
அவளைக் கனிவுடன் நோக்கி, “இவர்தான் உனக்கு மாப்பிள்ளை. இவருக்கும் உனக்கும்தான் கலியாணம் நடக்கப் போகுது. அதுவரைக்கும் உனக்கும் அவருக்குமான எல்லை என்ன எண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். அதத் தாண்டமாட்டாய் எண்டும் நம்புறன். கவனமா இரு!” என்றுவிட்டு, “மற்றும்படி உன்ர பேச்சுலர் பார்ட்டிய சந்தோசமா கொண்டாடு! ஓகே!” என்று, சிரிப்புடன் அவளின் தலையைப் பற்றி ஆட்டிவிட்டு எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.
அடுத்த நொடியே பெரும் ஆத்திரத்துடன் ரஜீவனிடம் சீறினாள் யாழினி. “நீங்க என்னோட வரவே வேண்டாம். நான் மட்டும் போயிட்டு வாறன். நீங்க உங்கட வேலையப் பாருங்க, போங்க!” என்றுவிட்டுத் தன் ஸ்கூட்டியை நோக்கி அவள் நடப்பது, வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்த மோகனனுக்கும் தெரிந்தது.
உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான். ‘ஆரிட்ட வந்து வாலாட்டுறான்?’ ஒற்றைக் கை உயர்ந்து பிடறிக் கேசத்தைச் சிலுப்பிவிட்டது.


