வைத்தியசாலையில் இருந்த மூவரும் அடுத்த வாரத்தில் ஒவ்வொருவராக வீடு திரும்பினர்.
சந்திரமதிக்கு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அவர் இனி எடுக்க வேண்டிய உணவுமுறை, தற்போதைக்குத் தேவையான மருந்துமாத்திரைகளைக் கொடுத்து அனுப்பினார்கள்.
சக்திவேலருக்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. வயோதிபம் மட்டுமே காரணம். பாலகுமாரன்தான் கொஞ்சம் சிரமம் கொடுத்தார். வாழ்க்கை மீது பிடிப்பற்றுப் போனதில் தெரிவித்த வேண்டும் என்கிற விருப்பமே அவருக்கு இல்லை. ஆனாலும் மருத்துவத்தினால் கொஞ்சம் தெம்பாக்கி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.
இந்த ஒரு வாரத்தில் ஒரேயொரு முறை வைத்தியசாலைக்கு வந்து சக்திவேலரையும் சந்திரமதியையும் மட்டும் பார்த்துவிட்டு வந்தார் ஜானகி.
அது போதாது என்று வீடு வந்த பாலகுமாரனைத் திரும்பியும் பார்க்க மாட்டேன் என்று முகத்துக்கு நேராகவே சொன்னது மாத்திரமல்லாமல் தன் இருப்பை நிலன் வீட்டில் இருந்த விருந்தினர் அறை ஒன்றுக்கு மாற்றிக்கொண்டார்.
யாருக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. அதைவிட இன்னொரு சண்டை சச்சரவை எதிர்கொள்கிற அளவில் யாருக்கும் திராணியே இல்லை.
கடைசியில் பாலகுமாரனையும் இந்தப் பக்கமே வந்து இன்னொரு அறையில் தங்கச் சொல்லிக் கேட்டான் நிலன். அவர் மறுத்துவிட்டார். அவருக்கு என்னவோ ஜானகி இல்லாத அந்த அமைதியே விருப்பமாக இருந்தது.
பிரபாகரனும் வீட்டின் அமைதியைக் கருத்திற்கொண்டு அவரவரை அவரவர் பாட்டுக்கு விட்டுவிடும்படி சொன்னார். வைத்தியர் வேறு இரண்டு ஆண்களினதும் மனநிலையைக் கவனித்துக்கொள்ளும்படி சொல்லியிருந்தார்.
அதில் சக்திவேலரைக் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள ஒருவர் இருப்பதுபோல் பாலகுமாரனையும் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமித்தான் நிலன்.
கூடவே சுவாதியோடு மிதுனை இங்கே வந்து இருக்கச் சொன்னான். அவனும் வந்தான். அவனுக்குத் தாய் தந்தையர் பிரிந்து நிற்பதைக் கண்டு கவலை உண்டுதான். அதே நேரத்தில் சேர்ந்திருந்து சண்டை பிடிப்பதைக் காட்டிலும் இது பரவாயில்லை என்றும் நினைத்தான்.
கூடவே இந்த விடயத்தில் ஜானகியை முற்றிலுமாகக் குற்றவாளியாக்கவும் அவன் விரும்பவில்லை.
கிட்டத்தட்ட பத்து நாள்கள் கடந்திருந்தன. ஓரளவிற்கு தேறிவிட்ட சக்திவேலர் அன்று காலையிலேயே எழுந்து குளித்து, கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைகையிலேயே ஆரம்பித்தார் ஜானகி.
“ஆகமொத்தம் எல்லாருமா சேந்து என்ர தலைல மிளகாய் அரைச்சாச்சு என்னப்பா?”
பலகுமாரனைத் தவிர்த்துக் காலை நேர உணவிற்காக எல்லோருமே அங்குதான் இருந்தனர். பாலகுமாரன் முடிந்தவரையில் ஜானகியைச் சந்திப்பதைத் தவிர்த்துவிடுவார்.
மிதுனோடு அமர்ந்திருந்த சுவாதிக்கு ஜானகியின் அகங்காரக் குரலில் ஒருமுறை தூக்கிப்போட்டது. அதைக் கவனித்துவிட்டு மேசைக்குக் கீழால் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துத் தைரியம் கொடுத்தான் மிதுன்.
அப்படி ஒன்றுமில்லாமல் விட்டுவிடுவார்களா என்ன? சுள்ளென்று சொல்லப் போன நிலனைப் பிரபாகரனின் பார்வை அடக்கியது.
“சொல்லுங்க அப்பா. எனக்கு என்ன பதில்? ஆளாளுக்கு ஆஸ்பத்திரில போய்ப் படுத்திட்டீங்க. இப்ப அதைப் பற்றின ஒரு பேச்சும் இல்ல. என்ர வாழ்க்கைல மண்ணை அள்ளிப் போட்டது காணாது எண்டு மொத்தமா என்னையும் என்ர மகனையும் கைவிடுற பிளானா?” என்றவருக்குச் சக்திவேலர் பதில் சொல்லும் முன் இடையிட்டான் மிதுன்.
“அம்மா, போதும்! எனக்குத் தெரிஞ்சுதான் அக்கா சொத்தை மாத்தி எழுதினவா. அது மட்டுமில்ல. அவா ஆரம்பிக்கப்போற புது கார்மெண்ட்ஸ் முழுக்க முழுக்க என்ர பெயரிலதான் ரெஜிஸ்டர் ஆகப்போகுது.” என்று இத்தனை நாள்களும் இரகசியமாக இருந்ததை போட்டுடைத்தான்.
ஒரு கணம் எல்லோருமே அதிர்ந்து நின்றனர். நிலனுக்கு மனைவியை எண்ணி அத்தனை பெருமை. இதுதானே அவள். இந்த அவளிடம்தானே அவன் விழுந்து கிடப்பதும்.
ஆனால் ஜானகிக்கு அது போதவில்லை. “ஒற்றப் பிள்ளை எண்டு உன்னச் செல்லமா வளத்தது பிழையா போச்சு. அதான் இப்பிடி ஏமாந்து நிக்கிறாய். சக்திவேல் எங்க இருக்கு. அவள் ஆரம்பிக்கப்போற கார்மெண்ட்ஸ் எங்கயடா இருக்கு? நாளைக்கு நட்டத்தில் போயிட்டுது எண்டு அவள் இழுத்து மூடினா தலைல துண்டைப் போட்டுக்கொண்டு இருப்பியா?” என்று சீறினார்.
“அவா அப்பிடி இல்ல. எனக்குத் தெரியும்.” அவர் முடிக்க முதலே சொன்னான் அவன்.
“உனக்கு ஒண்டும் தெரியாது. பேசாம இரு!” என்று அவனை அதட்டிவிட்டு, “நீங்க சொல்லுங்க அப்பா. உங்கட மகளுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்று திரும்பவும் சக்திவேலரிடம் வந்தார்.
என்ன சொல்வார் சக்திவேலர். இன்னுமே சக்திவேலின் பாதி இளவஞ்சியின் கையில். அதுவே அவர் நெஞ்சைப் பிய்த்துத் நின்றுகொண்டிருந்தது.
அது போதாது என்று ஆண்களின் ஆடை உற்பத்தி தொழிற்சாலையை மிதுனுக்கு கொடுத்து, என்றைக்கும் சக்திவேலின் பங்கைத் திருப்பித் தரமாட்டேன் என்று காட்டிவிட்டாள்.
சக்திவேல் சிதைந்துவிடுமோ, அதைத் தலையெடுக்க விடாமல் செய்யப்போகிறாளோ என்றெல்லாம் கலங்கினார் மனிதர்.
இப்போதும் பாலகுமாரன் மீது அப்படி சினமும் சீற்றமும் உண்டாயிற்று. ஆனால், இந்தமுறை வைத்தியசாலை சென்று வந்ததிலிருந்து அவர் உடல், மனம் இரண்டினதும் மொத்தத் தென்புமே அவரை விட்டுப் போயிருந்தது. மிகவுமே தளர்ந்திருந்தார்.
அவர் பதிலற்று நிற்க, தந்தையை ஒருமுறை பார்த்துவிட்டு, “எங்களுக்குச் சேர வேண்டிய பாதிய நான் மிதுனுக்கே குடுக்கிறன் அப்பப்பா. அப்ப சரிதானே.” என்றான் நிலன்.
அவனளவில் அவன் குடும்பத்துக்குச் சேரவேண்டிய பாதி அவனிடம் இருந்தாலும் ஒன்றுதான் அவன் வஞ்சியிடம் இருந்தாலும் ஒன்றுதான்.
“முதல் அத மாத்துங்க. முக்கியமா மிதுன் நினைச்சா கூட வேற ஆருக்கும் எழுதிக்கொடுக்கேலாது எண்டு அதுல இருக்கோணும்.” என்றார் ஜானகி.
ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு முதலில் அதைக் கைப்பற்றுவோம் என்று எண்ணினார்.
ஆனால், அவருக்குள் ஓடும் அந்தத் தந்திர புத்தியை மிக இலகுவாகவே கணித்தான் நிலன். அதில், “அத வாங்கின பிறகு வஞ்சி மிதுனுக்குக் குடுத்த தொழிலை வச்சு ஏதாவது விளையாட்டுக் காட்டலாம் எண்டு நினைக்காதீங்க. நானும் விடமாட்டன். தன்ர பிடியை உங்களிட்டத் தந்துபோட்டு இருக்கிற அளவுக்கு அவளும் லேசுப்பட்டவள் இல்ல.” என்று அவர் முகத்தைக் கறுக்கச் செய்துவிட்டு, “எப்பிடி அத உன்ர பெயருக்கு எழுதப்போறாளாம்.” என்று மிதுனை விசாரித்தான்.
“அந்த நிலம் அக்கான்ர பெயர்ல இருக்கு. கட்டப்போற தொழிற்சாலை என்ர பெயர்லதான் இருக்கும். ஆனா, தொழில்ல முடிவெடுக்கிறது, அத அடுத்த கட்டத்தை நோக்கி வளக்கிறது எல்லாத்துக்கும் அக்காதான் பொறுப்பு. தொழில்ல வாற லாபம் மொத்தமும் சுவாதி, நான், அக்கா, கீர்த்தனா எண்டு நாலா பிரியும். தப்பித்தவறி நாட்டம் வந்தா அத முழுக்க முழுக்க அக்காதான் ஏற்பா. மற்றும்படி அங்க நான் கூட எதிலயும் மூக்கை நுழைக்கேலாது.” என்றான் கடைசி வரியை அழுத்தி.
தனக்கு எதிராகப் பேசும் மகன் மீது அதிருப்தியானாலும் அப்படியானால் அதில் பாதி தன் மகனுக்கு வந்துவிடும், நாட்டமுண்டானால் அவள்தான் ஏற்பாள் என்கையில் இலேசில் நட்டமடைய விடமாட்டாள் என்று வேகமாகக் கணக்கிட்டது அவரின் குறுக்குப் புத்தி.
நிலன் வீட்டினர், குறிப்பாகச் சொல்லப்போனால் சந்திரமதி, கீர்த்தனா இருவருக்கும் விழிகளில் கண்ணீர் அரும்பிய போயிற்று.
கீர்த்தனாவுக்கும் ஒரு பங்கு தரவேண்டிய அவசியம் அவளுக்கு இல்லையே.


