யாழினியைச் சமாதானம் செய்து முடிப்பதற்குள் ரஜீவனுக்குப் போதும் போதும் என்றாயிற்று. மோகனனைக் கண்ட அந்த நொடி கொடுத்த சினத்தில் செய்தவைதான் அனைத்தும்.
தான் சற்றே எல்லை மீறுகிறோம் என்று அப்போதே தெரியாமல் இல்லை. இருந்தும், மோகனன் மீதான வெஞ்சினம் அவனைக் கட்டுப்படுத்த விடவில்லை. அவள் பதறி, விலகி, அண்ணா முன் என்ன காரியம் செய்கிறாய் என்று கண்ணால் தவித்தபோது, தன்னையே குட்டிக்கொண்டான்.
கோபமும் அழுகையுமாக ஸ்கூட்டியில் தனியாகப் புறப்பட்டவளின் பின்னாலேயே சென்று, பேச்சுலர் பார்ட்டியில் மற்றவர்களின் முன்னே எதையும் காட்டிக்கொள்ள முடியாமல் பார்வையாலேயே கெஞ்சி, அப்போதும் அசரமாட்டேன் என்று நின்றவளிடம் காலில் விழாத குறையாக மன்னிப்புக் கேட்டு மலையிறங்க வைத்திருந்தான்.
அது வேறு! அது அவளுக்கும் அவனுக்குமானது.
ஆனால், அந்த மோகனன்? அவனை நினைக்கும்போதே தகதக என்று நெஞ்சு எரிந்தது.
‘உனக்கும் அவருக்குமான எல்லை என்ன எண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். அதத் தாண்டமாட்டாய் எண்டும் நம்புறன்.’ என்றால், ‘அவன் தாண்டுவான், நீ கவனமாக இரு’ என்பதுதானே அதன் மறைபொருள்.
நினைக்கும்போதே முகம் அவமானத்தில் சிவந்தது. எத்தனை நாசுக்காகத் தங்கையின் மீது மிகுந்த பாசம் உள்ளவன் போன்று காட்டி, இவனைக் கேவலப்படுத்திவிட்டான். மனம் அடங்கவே இல்லை.
“அண்ணாக்கு முன்னால என்னைக் கேவலப்படுத்திப் போட்டீங்க என்ன? இப்ப சந்தோசமா உங்களுக்கு?” என்று கண்ணீருடன் யாழினி கேட்டதே அவனை வதைத்தது.
“அண்ணா நிதானமா நடந்தபடியா பிரச்சினை இல்லாம முடிஞ்சுது. இதுவே அவர் கோவப்பட்டிருந்தா அவருக்காக நிண்டிருப்பனா இல்ல உங்களுக்காக நிண்டிருப்பனா? நீங்க இப்பிடி நடப்பீங்க எண்டு நான் நினைச்சே பாக்கேல்லை ரஜீவன்.” என்று அவள் சொன்னபோது நொருங்கிப்போனான்.
அந்த அகங்காரம் பிடித்தவனுக்குப் பதிலடி கொடுக்கிறேன் என்று தன் உயிரானவளை நோகடித்துவிட்டானே.
இரவிரவாக உறக்கமின்றிக் கழித்தவன், எழுந்து செல்லமுத்து நகைமாடத்துக்குப் புறப்பட்டான்.
திருமணம் முடிகிறவரைக்கும் வர வேண்டாம் என்று ராஜநாயகம் சொல்லியிருந்தார். ஆனால், அவன் போனால், அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவார்.
அதோடு, அந்தக் கடை கடந்த நான்கு வருடங்களாக அவனுடைய வாழ்வின் ஒரு அங்கம்போல் மாறியிருந்தது. செல்லமுத்து நகைமாடத்தின் மருமகன் என்கிற செல்வாக்குடன் டவுனுக்குள் அடையாளம் காணப்பட்டிருந்தான்.
இன்ன நேரத்தில் போனால் ரஜீவனைச் செல்லமுத்து நகைமாடத்தில் பார்க்கலாம் என்கிற அளவுக்கு அவன் பிரபல்யம். அது ஒரு விதமான போதையை அவனுக்குள் ஊற்றியிருந்தது.
செல்லமுத்து நகைமாடத்தின் முன்னே தன் பைக்கை கொண்டுபோய் நிறுத்தினான். ஓங்கி உயர்ந்து நிற்கும் கட்டடம், இரு பக்கமும் செல்வம் கொழிக்க வைக்கும் லட்சுமியின் சிலைகள் அருபாலிக்க, விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னும் அந்த நகைக்கடையின் சீதேவித்தனத்தில் அவன் மனத்தில் இருந்த அத்தனை சஞ்சலங்களும் காணாமல் போயிற்று.
வழமையான துள்ளல் நடை திரும்பிவிட, “மாமா எங்க சுந்தரம் அண்ணா? உள்ளுக்கோ?” என்று, அங்கே இன்னும் கணக்காளராக இருக்கும் சுந்தரத்திடம் புன்னகை முகமாய்க் கேட்டபடி நடந்தான்.
அதே வேகத்தில் அலுவலக அறையைத் திறந்து, “வணக்கம், மாமா!” என்றவனின் உற்சாகக் குரல், அங்கே மேசைக்குப் பின்னால் வீற்றிருந்த மோகனனைக் கண்டு அப்படியே அடங்கிப்போனது.
திகைத்து நின்றான்.
அவனைக் கண்டுவிட்டு மிகுந்த ஆச்சரியத்தோடு புருவங்களை உயர்த்தினான் மோகனன்.
“எங்கட வீட்டு மருமகன் நீங்க. இந்த விடியக்காலம இஞ்ச வந்து இருக்கிறீங்க? ஏதும் அலுவலா? சொல்லியிருந்தா நானே உங்களத் தேடி வந்திருப்பனே?” என்றவனின் கையொன்று நீண்டுவந்து முன்னிருந்த இருக்கையை அவனுக்குக் காட்டியது.
எது கொடுத்த விசை என்று அறியாமல் சென்று அமர்ந்தான் ரஜீவன். புசு புசு என்று உள்ளே நெருப்பு எரிய ஆரம்பித்தது. ‘தேடி வந்திருப்பானாமே. அந்தளவுக்கு நல்லவனா இவன்?’
“சுந்தரம் அண்ணா!” என்று குரல் கொடுத்தான் மோகனன்.
“ஓம் தம்பி!” என்றபடி ஓடி வந்தார் அவர்.
“எங்கட வீட்டு வருங்கால மருமகன் வந்திருக்கிறார். கவனிக்காம நீங்க உங்கட வேலையப் பாத்தா, எப்பிடி? ரெண்டு தேத்தண்ணிக்குச் சொல்லுங்கோ. அப்பிடியே, அப்பம் இருந்தா நாலு சோடி முட்டை அப்பத்துக்கும் சொல்லுங்கோ. நல்ல காரமான சம்பலோட வேணும்.” என்று அவரை அனுப்பிவைத்தான்.
“பிறகு? நேற்று பேச்சுலர் பார்ட்டி எப்பிடிப் போச்சுது?” தன் இருக்கையில் மிக வசதியாகச் சாய்ந்துகொண்டு வினவினான் அவன்.
முகம் வெகு சாதாரணமாக இருந்தாலும் அவன் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறான் என்று ரஜீவனால் மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.
நேற்றைய தன் செய்கைக்கான பதிலடியின் தொடர்ச்சிதான் இது என்றும் கணிக்க முடிந்தது. மோகனனுக்குப் பதில் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தான்.
செல்லமுத்து நகைமாடம் என்று தமிழ் எழுத்துகள் பின் சுவரில் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்க, தங்கத்தை நிறுக்கும் தராசு, லட்சுமியின் சிலை, கணனி, கால்குலேட்டர் என்று ஒரு நகைக்கடைக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் ஒழுங்குமுறையில் தாங்கியிருந்த விசாலமான மேசையின் பின்னே இருந்த அந்த இருக்கை, இத்தனை நாட்களாக ரஜீவனை அலங்கரித்தது.
இன்றைக்கு அதை உரியவன் ஆக்கிரமித்திருக்க, உரியவனைப் போல நடமாடியவன் விருந்தாளியாகிப் போனான். இல்லை, விருந்தாளியாக்கப்பட்டிருக்கிறான்.
அதை எண்ணி உதட்டைப் பிதுக்கினான் ரஜீவன்.


