இந்தக் கடை பிடிக்கும். இதன்மூலம் கிடைத்த செல்வாக்கும், ராஜநாயகத்தின் மருமகன் என்கிற பெயரும் கூடப் பிடிக்கும்தான். தன் சொந்தக் கடையைப் போல் அவன் உணர ஆரம்பித்ததும் உண்மைதான்.
அதற்கென்று அவனைச் சொத்துக்கு ஆசைப்பட்டவன் என்று நினைத்தானா? விருந்தாளியாக வந்து போகிற வீடு, நெடுநாள் பழக்கத்தின் பின் சொந்த வீடுபோல் மாறிவிடுவதில்லையா? அப்படியானதொரு பந்தம்தான் ரஜீவனுக்கும் அந்தக் கடைக்குமானது. அந்தத் தெளிவு அவனுக்குள் வந்ததும் நிமிர்ந்து அமர்ந்தான்.
அதற்குள் மொறுமொறுப்பான முட்டை அப்பமும் சம்பலும் தேநீரும் வந்து சேர்ந்தன. அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த குட்டி மேசைக்கு ரஜீவனையும் அழைத்துக்கொண்டு போனான் மோகனன். தானே அவனுக்கு அப்பமும் சம்பலும் பரிமாறினான்.
இருவரும் உண்ண ஆரம்பித்ததும், “பிறகு ரஜீவன்? இனி என்ன செய்றதா பிளான்?” என்றான் மோகனன்.
அந்தக் கேள்வியின் பொருள் புரியாமல் புருவம் சுருக்கிப் பார்த்தான் அவன்.
“உங்களுக்கும் ஒரு தங்கச்சி இருக்கு எண்டு கேள்விப்பட்டன். அந்தக் கடமையால என்ர தங்கச்சியக் கணக்குப்பாத்து வாழுற வாழ்க்கை வாழ வச்சிட மாட்டீங்களே?”
‘ஓ… தங்கச்சில அக்கறையாம். இவ்வளவு நாளா எங்க போச்சோ?’ ஏளனமாய் உதடு வளைய, “கட்டின பிறகு அவள் எனக்கு மனுசி. என்ர மனுசி என்ர வரவு செலவுக்கதான் வாழவேணும். வாழுவாள்!” என்றான் அழுத்தி.
“ம்கூம்!”
ரஜீவனுக்கு இன்னுமே ஏறியது. அவன் தன்னைச் சீண்டிவிட முயல்கிறான் என்று தெரிந்து தன்னை அடக்கினான்.
இருந்தும் அமைதி காக்க முடியாமல், “அத்தான்… அதுதான் உங்கட அண்ணாவக் கேட்டீங்க எண்டா என்னைப் பற்றிச் சொல்லுவார். நான் ஒண்டும் பொறுப்பில்லாதவனோ குணம் கெட்டவனோ இல்லை. என்ர மனுசிய எப்பிடி வாழவைக்க வேணும் எண்டு தெரியும்.” என்றான் நல்ல பிள்ளையின் குரலில்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த மோகனன் சிறு சிரிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தான். பின், அவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறவன் போன்று தலையை அசைத்தான். “அண்ணாவில இருக்கிற நம்பிக்கையிலதான் நான் உங்களப் பற்றி விசாரிக்கவே இல்ல. இது சும்மா கேட்டன். சரி, அத விடுங்க. தொழில் எப்பிடிப் போகுது? வருமானம் என்ன மாதிரி?”
“நாளைக்கு எனக்கு மனுசியா வரப்போற யாழி, இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கை முறையில இருந்து துளியளவு கூட இறங்காம வாழுறதுக்குத் தேவையான அளவு வருமானம் வருது.”
முகம் மலர்ந்த புன்னகையோடு, “சந்தோசம்!” என்றான் மோகனன்.
அதற்குள் இருவரும் சாப்பிட்டு, தேநீரையும் அருந்தி முடித்திருந்தனர். கையைக் கழுவி, துடைத்துக்கொண்டு வந்த மோகனன், “நேற்று உங்களோட கதைப்பம் எண்டு பாத்தன். நீங்க ஹலோ சொல்லக்கூட நேரமில்லாத அவசரத்தில் இருந்தீங்க. அதுதான் இப்ப இருத்திவச்சுக் கதைச்சனான்.” என்றபடி மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். அவன் முகத்தில் நன்றாகவே நகைப்பிருந்தது.
வெகுண்டுபோனான் ரஜீவன். அதை அடக்கி, “நீங்க என்ன புதுசா இந்தப் பக்கம்?” என்றான் உதடு வளைய.
“புதுசா? இடையில ஒரு எட்டு வருசம் வர இல்லையே தவிர, இது நான் பிறந்து வளந்த இடம் ரஜீவன். அதைவிட, உடையவன் பாராட்டி ஒரு முளம் கட்டையாம் எண்டு நீங்க கேள்விப்பட்டது இல்லையா? எட்டு வருசத்துக்கு முதல் நான் எப்பிடிப் பாத்தனோ அப்பிடியேதான் கடை இருக்கு. எந்த முன்னேற்றத்தையும் காணேல்ல. அதுதான், இனியும் மற்றவைய நம்பி விட்டா சரியா வராது எண்டு நானே களத்துல குதிச்சிட்டன்.” என்ற அவனின் பேச்சில் ரஜீவனின் இரத்த நாளங்கள் எல்லாம் புடைத்துக்கொண்டு வந்தன.
“அதைவிட, நீங்கதானாம் உங்கட வேலையையும் பாத்து, இந்தக் கடையையும் பாத்துச் சிரமப்படுறீங்களாம் எண்டு அண்ணா சொன்னார். இனி நீங்க குடும்பஸ்தன் வேற. நேரம் இருக்காது. சோ நான் பொறுப்பெடுத்தா நீங்க கொஞ்சம் ஃபிரியா இருப்பீங்க. நீங்க ஃபிரியா இருந்தா என்ர தங்கச்சி சந்தோசமா இருப்பாள்தானே.” என்று பெரிதாக விளக்கம் வேறு கொடுத்தான் அவன்.
அந்த விளக்கத்துக்குள் எத்தனை குத்தல்கள். ஆனால், புத்திசாலித்தனமாகக் கதைக்க அவனுக்கு மட்டும்தான் தெரியுமா?
“சந்தோசம் மோகனன்!” என்று நல்லபிள்ளையாக அவன் சொன்னவற்றை ஒத்துக்கொண்டுவிட்டு, “இனி நீங்க சொல்லுங்கோ உங்களைப் பற்றி. என்ன செய்யப் போறீங்க? எவ்வளவு காலத்துக்கு வெளிநாட்டிலேயே ஒளிஞ்சு வாழப்போறீங்க? இனி இங்கயே இருக்கிறதா இருந்தாலும், இன்னுமே எவ்வளவு காலத்துக்கு உங்கட அப்பப்பாவும் அப்பாவும் சேர்த்து வச்ச சொத்தில வாழப்போறீங்க? உங்களுக்கு எண்டு ஒரு வேல, வருமானம் வேணுமே. அது இல்லாம எப்பிடிக் கலியாணம் நடக்கும்? ஏற்கனவே பெயர் கெட்டுப்போச்சு. பிழைப்பும் இல்லை எண்டா…” என்று இழுத்து இடையிலேயே நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தான்.
நொடியில் மோகனனின் கையின் தசைக்கோளத்தில் ஏறிய புடைப்பு அவன் கோபத்தைச் சொல்லிவிட, குறிப்பாக அதை ஒருமுறை பார்த்துவிட்டுச் சிறு சிரிப்புடன் எழுந்துகொண்டான் ரஜீவன்.
“நேரமாயிற்றுது மோகனன். வரட்டா?” என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து வெளியேறினான்.


