ஒழுங்கான உறக்கமில்லாமலேயே அடுத்த நாளும் விடிந்தது. நல்ல கணவனாகக் கொழும்பு சென்று சேர்ந்துவிட்டதைத் தெரிவித்திருந்த நிலன், “நீ ஓகேயா?” என்றும் கேட்டிருந்தான்.
அவளுக்கு எழுந்து தயாராவதற்கே உடலில் தெம்பில்லை போன்ற நிலை. மனத்திலும் உற்சாகம் இல்லாததால் உண்மையிலேயே மிகவும் சிரமப்பட்டாள் இளவஞ்சி.
சோர்வுடன் எழுந்து, தொழிற்சாலை செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபோது, “அம்மாச்சி இளா!” என்று பரபரப்பாக அவளை அழைத்துக்கொண்டு வந்தார் ஜெயந்தி.
இப்படிக் காலை நேரத்தில் வரமாட்டாரே என்று எண்ணியபடி வெளியே வந்தவள் கண்டது, பூரிப்பும் பரபரப்புமாக நின்ற ஜெயந்தி, சந்திரமதி, கீர்த்தனா மூவரையும்தான்.
“குழந்தை வந்ததைப் பற்றி ஒரு வார்த்த அம்மாட்ட சொல்லேல்லையேம்மா நீங்க?” என்று அவளைக் கண்டதும் கண்ணீர் சிந்தினார் ஜெயந்தி.
அப்போதுதான் சந்திரமதி கீர்த்தனா இருவரும் ஏன் வந்திருக்கிறார்கள் என்று புரிய, “சொல்லாம் இருக்க நினைக்கேல்ல அம்மா.” என்றாள் தன் தவறு தெரிந்தவளாக.
“பிறகும் ஏன் சொல்லேல்ல?” தன் மகிழ்வைக் காட்டுகிறவராக அவளை அணைத்து உச்சி முகர்ந்தால் குழந்தைக்கு கோபத்தோடு கேட்டார்.
அவள் நினைத்திருந்தால் சொல்லியிருக்கலாம். சொன்னால் கணவனோடு போ என்று வீட்டினர் வற்புறுத்துவார்கள் என்பது ஒரு காரணமென்றால், தான் செய்த காரியத்தால் கணவன் வீட்டுக்கும் வைத்தியசாலைக்குமாக அலைந்துகொண்டிருக்கையில் சொல்ல மனம் வரவில்லை.
இதையெல்லாம் ஜெயந்தியிடம் சொல்லாமல், “சொல்லாம விட்டது பிழைதான் அம்மா. ஆனா, மறைக்க நினைக்கேல்ல. எப்பிடியும் சொல்லித்தான் இருப்பன்.” என்று சமாதானம் செய்தார்.
அவருக்கு அதுவே போதுமாயிற்று. அதைவிட அவள் தாய்மை உற்றிருக்கிறாள் என்கிற விடயம் மற்ற எதையும் விடப் பெரு மகிழ்வாகத் தெரிந்தது.
கண்ணீர் அரும்ப நின்றிருந்த சந்திரமதியும் நிலையம் அதேதான். தானும் அவளை உச்சி முகர்ந்துவிட்டு, “சந்தோசமாச்சி. பிள்ளை வாற நேரம் எல்லாமே நல்லதா நடக்கும். அதால ஒண்டுக்கும் யோசிக்க கூடாது, என்னம்மா?” என்று அவளை அணைத்துக்கொண்டார்.
கண்ணில் அரும்பிய நீருடன் நின்ற கீர்த்தனாவை பார்த்து, “நீ ஏன் அழுறாய்?” என்று அவளைத் தான் அரவணைத்துக்கொண்டாள் இளவஞ்சி.
என்னவோ கீர்த்தனாவிற்கு இன்னும் கண்ணீர் பெருகிற்று. “எனக்கு எந்தப் பங்கும் வேணாம் அண்ணி. அத நீங்களே எடுங்கோ. அதுக்குப் பதிலா அண்ணாவோட காலத்துக்கும் நீங்க சநதோசமா இருக்கோணும்.” என்று கண்ணீர் உகுத்தாள் அவள்.
அதிலேயே அங்கே எல்லா விடயங்களும் அலசப்பட்டிருக்கிறது என்று புரிந்துபோயிற்று. ஒன்றும் விளங்காமல் ஜெயந்தி அவளைப் பார்த்தத்தைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “அப்பா எங்கயம்மா? அவருக்கும் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டு அவர்களோடு கீழே இறங்கி வந்தாள்.
இவளைக் கண்டதும் அங்கே சந்தோசக் கண்ணீரில் மிதந்தபடி அமர்ந்திருந்த குணாளன் தன் கைகளை விரித்தார். ஓடிப்போய் அவர் கரங்களுக்குள் புகுந்துவளின் விழிகளிலும் மெல்லிய நீர்ப் படலம்.
சுதாகருக்கோ கொண்டாட்டம். அப்ப நான் ரெண்டுபேருக்கு மாமா ஆகப்போறன் அக்கா என்று குதித்தான். இதற்குள் ஜெயந்தி இனிப்பாக எதையாவது செய்யச் சமையலறைக்கு ஓடினார்.
இப்படி அந்த வீட்டின் நெகிழ்வையும் மகிழ்வையும் பார்த்திருந்த சந்திரமதிக்கு இது போதாது. எல்லோருமாகச் சேர்ந்து காலை உணவை முடித்ததும், “அண்ணா…” என்று ஆரம்பித்து, முதல் நாள் தங்கள் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “வஞ்சி டிவோர்ஸ் கேட்டவாவாம் அண்ணா. அதால தம்பி தனியா போகப் போறானாம்.” என்று குணாளனிடம் போட்டுடைத்தார்.
அதிர்ந்துபோனார் குணாளன். “என்னம்மா இது?” என்றார் தன் மகள் அப்படிக் கேட்டிருப்பாள் என்று நம்ப முடியாது.
இப்படி மொத்தமாகப் போட்டுடைப்பார் என்று எதிர்பாராத இளவஞ்சி, “அப்பா!” என்றாள் தடுமாற்றமாக.
இது தவறு என்று சொல்வதுபோல் குறுக்காகத் தலையை அசைத்தார் குணாளன். “அப்பிடி உங்களைப் பாக்கவா நான் இன்னும் உயிரோட இருக்கிறன்? பிறக்கப்போற பிள்ளையைப் பற்றி யோசிக்கேல்லையாம்மா நீங்க? எனக்கு என்னவோ தொழில்ல இருக்கிற கெட்டித்தனத்தை நீங்க உங்கட வாழ்க்கையில காட்டேல்லையோ எண்டு இருக்கம்மா.” என்றார் இன்னுமே எதையும் நம்ப முடியாதவராக.
“நடந்த அநியாயம், அதால உங்களுக்கு இருக்கிற கோவம், அம்மாக்கு நீங்க நியாயம் செய்ய நினைக்கிறது எல்லாம் எனக்கும் விளங்குது. ஆனா, அம்மா எப்பிடி எல்லாத்தையும் சமாளிச்சு, வாழ்க்கையையும் தொழிலையும் சேர்த்துக் கொண்டு போனாவோ, அப்பிடி நீங்களும் போகோணும் தானே பிள்ளை? வாழ்க்கைல தோத்து தொழில்ல வெண்டு என்ன காணப்போறீங்க? முதல் அந்தத் தம்பி என்ன பிழை செய்தவர் எண்டு இந்த முடிவுக்கு வந்தனீங்க? உங்களிட்ட இத நான் எதிர்பாக்கேல்ல பிள்ளை.” என்றதும் அவள் முகம் இலேசாகக் கறுத்துப் போயிற்று.
“என்னால இப்பவும் அங்க போய் அவேன்ர முகங்களைப் பாக்கேலாது அப்பா. பாக்க பாக்க கோவம்தான் வரும். பிறகு அது பிரச்சினைளைத்தான் வந்து நிக்கும். வாழ்க்கையே நரகமாகிடும்.” சந்திரமதியைப் பாராது தன் நிலையைச் சொன்னாள்.
“அதுக்குத் தீர்வு இதாம்மா?” என்றார் குணாளன் உடனேயே.
“இல்ல, இவ்வளவு கெட்டித்தனமா தொழில் நடத்திற ஒரு பிள்ளை இப்பிடித்தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு எடுப்பாவா?”
கணவன் மீதிருந்த கோபமும் காரணம் என்று சொல்ல முடியாமல் நின்றாள் இளவஞ்சி.
“அங்க இருக்கேலாட்டி நிலனோட இஞ்ச வந்து இருக்கலாம். இல்லை இப்ப தம்பி செய்ய நினைக்கிற மாதிரி தனியா போய் இருக்கலாம். அத விட்டுப்போட்டு இதெல்லாம் என்னம்மா? டிவோர்ஸ் எண்டுறது எல்லாம் எவ்வளவு பெரிய விசயம்? சொந்தக் கால்ல நிக்கிறீங்க எண்டதும் எல்லாத்தையும் துச்சமா பாக்கிறீங்களோ?”
பதில் சொல்ல இயலாமல் நின்றாள் அவள்.
“ஆனா ஒண்டம்மா, அப்பா இருக்கிற வரைக்கும் அப்பிடி ஒண்டு நடக்கக் கூடாது. நடந்தால் நான் இல்லை எண்டு அர்த்தம்.” என்றார் அவர் குரல் உடைந்திருந்தாலும் உறுதியாக.
“அப்பா!”, “குணா”, “அண்ணா!” என்று பல குரல்கள் ஒன்றாக ஒலித்தன.
அவர் எதற்கும் செவிமடுக்கவில்லை.
“நீங்க தம்பியோட சேர்ந்து சந்தோசமா வாழோணும். அத நான் பாக்கோணும். இப்பிடி நீங்க ஒரு பக்கம், தம்பி ஒரு பக்கம் எண்டு பிரிஞ்சு இருக்கவா அண்டைக்கு என்ர மனதைக் கல்லாக்கிக்கொண்டு உங்களிட்டக் கலியாணத்துக்குச் சம்மதம் வாங்கிக் கட்டி வச்சனான்? முதல் இத உங்கட அப்பம்மா விருப்பப்படுவாவா எண்டு யோசிங்க.” என்று அவர் விடவேயில்லை.
இதற்காகத்தான் சந்திரமதி மெனக்கெட்டு வந்து எல்லாவற்றையும் போட்டு உடைத்ததும். நினைத்தது நடந்த மகிழ்வில் அவளிடம் வந்து, “நேற்று தனியா போப்போறன் எண்டு தம்பி சொன்னதில இருந்து எனக்கு ஒரே அழுகை. ஆனா இப்ப நானே சொல்லுறன். அது பரவாயில்ல. நீங்க தனியாவே போய் இருங்கோ. குழந்தையும் வரப்போகுதாம்மா. அந்தக் குழந்தைய நல்ல அம்மாவும் அப்பாவுமா இருந்து நீங்க ரெண்டு பேரும் வளக்க வேண்டாமா? எப்பிடியும் ஒண்டரை மாதமாகும் எண்டு சொன்னவன். அவன் வரேக்க நீங்க ரெடியா இருக்கோணும்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
“என்ன அண்ணா, நான் சொல்லுறது சரிதானே?” என்றார் சந்திரமதி குணாளனிடம்.
“தம்பி வந்ததும் அவா வாருவாம்மா. கோவக்காரியா இருந்தாலும் பாசக்காரி என்ர மகள். நீங்க ஒன்றுக்கும் யோசிக்காம போயிற்று வாங்கோ.” என்று அவர்களை அனுப்பிவைத்தார் குணாளன்.
நேற்று அந்த நிமிடமே இங்கே அழைத்து, விடயத்தைச் சொல்லத் துடித்த சுவாதியை அடக்கிவிட்டு, எதற்காகப் புறப்பட்டு வந்தாரோ அது நல்லபடியாகவே முடிந்த சந்தோசத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டார் சந்திரமதி.


