ராதாவின் மறுப்பு மோகனனைக் கோபம்கொள்ள வைத்தது மெய். அவள் பிரயோகித்த வார்த்தைகளும், அதனை வெளியிட்ட தொனியும் சினம்கொள்ள வைத்ததும் மெய்தான். ஆனால், சீண்டவில்லை.
அவனை அறவே வெறுக்கிறாள் என்பதை அறிந்தே இருந்தவனுக்கு, அப்படி வெறுக்கிற ஒருவனை வாழ்க்கைத் துணையாக ஏற்க மாட்டேன் என்று அவள் மறுத்தது நியாயமாகத்தான் தெரிந்தது.
ஆனால் ரஜீவன்? அவனும் மறுத்திருந்தால் கூட இதேபோல அவனால் விளங்கிக்கொண்டிருக்க முடியும். அதற்கு மாறாக, அவன் பார்வையும் பேச்சும் சொன்னவை வேறாயிற்றே. யாழினியின் பேச்சுக்கான பதில் அல்ல அது.
நீ என்ன செய்தும் உன் தங்கையையே காதலித்து, கரம்பிடித்திருக்கிறேன். இதில் எதையாவது உன்னால் தடுத்துவிட முடிந்ததா என்று கேட்டது போலிருந்தது.
இல்லாமல், ‘யார் தலைகீழா நிண்டாலும் நடக்கிறதுதான் நடக்கும்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? ஆத்திரம் வந்தது. திருப்பிக்கொடுக்கும் வேகம் வந்தது.
யாழினியை எண்ணி அடக்கிக்கொண்டான். இருந்தாலும் மனம் அடங்காமல் கொந்தளித்தது. ‘எனக்கு வேண்டாம் எண்டு நினைக்கிற வரைக்கும்தான்டா அவள் உனக்குத் தங்கச்சி. வேணும் எண்டு நினைச்சனோ…’ தன் சிந்தனையின் போக்கை இதற்குமேல் அனுமதிக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தியவனின் விழிகள், அவன் அனுமதியை வேண்டாமலேயே ராதாவைத் தேடிக் கண்டுபிடித்து, அவளில் நிலைத்தன.
அழகாய்த் தெரிந்தாள். இன்றைக்கும் சேலைதான் கட்டியிருந்தாள். ஆசிரியை என்பதாலோ என்னவோ இதுவரைக்கும் அவளைச் சேலையில் மட்டும்தான் பார்த்திருக்கிறான்.
இவன் பார்ப்பது தெரிந்ததும் முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘இவளொருத்தி… மனுசன சும்மா இருக்க விடாம…’ உதட்டோரம் அரும்பிய சிரிப்பை மறைக்க, மீசையை நீவி விட்டவனின் பார்வை இன்னுமே அவளிடம்தான் இருந்தது.
அவன் மீதான வெறுப்பையும் தாண்டிய ஒரு கலக்கத்தை அவள் முகத்தில் கண்டான். பெண்களின் மானத்தோடு விளையாடிய கயவன் ஒருவனைத் தனக்கானவனாக நிச்சயித்துவிடுவார்களோ என்று பயப்படுகிறாளோ?
‘இல்லை! அது நடக்காது! நீ கவலைப்படாதே!’ என்று சொல்ல மனம் பரபரத்தது. சொல்லும் சூழ்நிலை அது இல்லை. வேறு வழியற்றுப் பேசாமல் இருந்தான்.
மனத்தில் மாத்திரம் அன்று ஒருநாள் இரவு தூக்கத்தைக் கெடுத்த பரிதவிப்பு மீண்டும் நமநமக்க ஆரம்பித்திருந்தது. இது என்ன புதுவிதமான அந்தரிப்பு? ஒன்றும் விளங்காமல் விழிகளை மூடி, ஒரு கையின் இரு விரல்களினால் புருவங்களை நீவிவிட ஆரம்பித்தான்.
பிரமிளாவின் பெற்றோர் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர். அப்படியே ராதாவும் புறப்படுவது தெரிந்தது.
மகனின் பின்னே திரிந்த கௌசிகனுக்கும், சமையலறையில் இருந்த பிரமிளாவுக்கும் அவர்கள் எல்லோரும் போன பிறகுதான் நடந்தது சொல்லப்பட்டது.
கௌசிகனுக்கு யாழினி மீதுதான் கோபம். “நீ சின்ன பிள்ளை இல்லை யாழி. பொறுப்பா நடக்கிறதுக்கு வயசு காணும். கலியாணமும் முடிஞ்சுது. இனியும் யோசிக்காம கதைக்கிற பழக்கத்தை நிப்பாட்டு. இப்ப பார் தேவையில்லாம எல்லாருக்கும் மனச்சஞ்சலம். உனக்கு அப்பிடி ஒரு விருப்பம் இருந்திருந்தா அத ரஜீவனோட கதைச்சு, ராதாக்குச் சொல்லி, அவளின்ர விருப்பம் என்ன எண்டு தெரிஞ்சுகொண்டுதான் பொது வெளிக்குக் கொண்டு வரோணும். அதை விட்டுட்டு… யோசிக்க மாட்டியா?” என்று அவன் அதட்டியதும், கண்கள் கலங்கி முகம் சிவந்து போயிற்று அவளுக்கு.
“விடுங்கோ கௌசி. அவளும் அந்த நிமிசம் மனதில பட்டதக் கேட்டு இருக்கிறாள். இதுல என்ன பிழை இருக்கு? இது சரி வந்திருந்தா உண்மையாவே எல்லாருக்கும் சந்தோசமா இருந்திருக்கும்தானே? இஞ்ச இருந்ததும் வெளியாக்கள் இல்லையே. எங்கட குடும்பங்கள்தானே.” என்று பிரமிளா சமாளித்தாள்.
ஆனபோதிலும் எத்தனையோ நாட்களுக்குப் பிறகு தமையனிடமிருந்து வாங்கிய பேச்சு, யாழினியை மிகவுமே பாதித்தது. அதுவும் மணமான புதிது. அது இன்னும் அதிகமாகவே தாக்கியது. கண்ணீரை அடக்கியபடி அறை ஒன்றுக்குள் புகுந்துகொண்டாள்.
அதுவரை நேரமும் இந்தப் பெண் ஏன் யோசிக்காமல் பேசினாள் என்று கலங்கிப் போயிருந்தார் செல்வராணி. ஆனால், ‘இது சரி வந்தா எல்லாருக்கும் சந்தோசமா இருந்திருக்கும்தானே?’ என்ற பிரமிளாவின் கேள்வி அவரை மாற்றிச் சிந்திக்க வைத்தது.
மூத்தவனுக்கு ஒரு பிரமிளா போன்று சின்னவனுக்கு இந்த ராதா கிடைத்தால் நிறைவான வாழ்க்கை அவனுக்கும் அமைந்துவிடுமே.
அப்படி நினைத்த மாத்திரத்தில், அவளைத் தாண்டி இன்னொருத்தியைச் சின்னமகனுக்குத் துணையாக அவரால் எண்ண முடியாமலேயே போயிற்று.
அவருக்கும் ராதாவை நெடுநாட்களாகத் தெரியும். சோலி சுரட்டு இல்லாத அருமையான பெண். தான் உண்டு தன் வேலைகள் உண்டு என்று இருப்பவள். அதே நேரம் அழுத்தமானவள். தொடமுதலே ஷாக் அடிக்கும் குணமுள்ள சின்னவனுக்கு இவள்தான் சரி என்று அவரின் மனம் நொடியில் முடிவே செய்திருந்தது.
இனி இதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டுமே.
கணவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “இதுவரைக்கும் நானும் இப்பிடி யோசிக்கேல்ல தம்பி. ஆனா இப்ப யோசிச்சுப் பாத்தா உண்மையாவே நல்ல விசயமாத்தான் படுது. நீங்க ராதாக்கு வேற இடம் பாத்திட்டிங்களா? இல்லை எண்டால் மோகனனுக்கே கட்டி வைக்கலாமே.” என்று ரஜீவனிடம் கேட்டு முடிக்க முதலே,
“உங்களுக்கு வேற வேலையே இல்லையாம்மா? என்ன இது எப்ப பாத்தாலும் கலியாணமும் பொம்பிளையும் எண்டுகொண்டு. நான் இன்னும் பத்து நாள்தான் இஞ்ச இருப்பன். பிறகு திரும்பச் சவுதிக்கே போயிடுவன். எனக்கு என்னத்துக்கு ஒரு கலியாணம்?” என்று சினத்துடன் இடையிட்டான் மோகனன்.
திகைத்துப்போனார் செல்வராணி. “என்னது? திரும்பப் போகப்போறியோ? என்ன தம்பி சொல்லுறாய்?” என்று அதிர்ந்தவரின் விழிகள் கேள்வியோடு மூத்தமகனை நோக்கிற்று.
“என்னை ஏன் பாக்கிறீங்க? அவன் வந்த முதல் நாளே திரும்பிப் போகப்போறன் எண்டு சொல்லிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் கேக்கேல்ல.” என்றான் அவன்.
கொதித்து எழுந்துவிட்டார் செல்வராணி. “போவானாமோ? திரும்பப் போவானாமோ? போகட்டும்! எனக்குச் செத்தவீட்டைக் கொண்டாடிப்போட்டுப் போகட்டும்!” என்று அவர் சொல்லிமுடிக்க முதலே, “அம்மா!” என்று இரண்டு மகன்களும் ஒன்றாய் அதட்டினர்.


