நாட்கள் கடுகி விரைய ஆரம்பித்திருந்தன. மோகனன் ராதா திருமணப் பேச்சு ஆரம்பித்த வேகத்திலேயே நின்றுபோனது. பிரமிளா மூலம் அனைத்தையும் அறிந்துகொண்டிருந்த கௌசிகன், இனி வேறு பெண்ணைப் பாருங்கள், ராதாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று செல்வராணியிடம் அழுத்திச் சொல்லியிருந்தான்.
அதில் செல்வராணிக்கு மிகுந்த மனவருத்தம். மோகனனுக்கு வேறு பெண்ணைப் பார்க்க மனம் வரவேயில்லை. அந்தப் பேச்சையே விட்டுவிட்டு இருந்தார்.
இப்படி ஒரு திருப்பத்தை ரஜீவன் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் கேட்டுவிட்டால் எப்படி மறுப்பது என்று அவன் யோசித்துக்கொண்டு இருக்க, அவர்களைக் கேட்கவிடாமலே செய்துவிட்டாள் ராதா.
இனி இந்தப் பேச்சை எடுக்கமாட்டார்கள் என்கிற நிம்மதியில் மெதுவாக யாழினியைச் சமாதானமும் செய்திருந்தான். முடிந்தவரையில் விரைவாக ராதாவின் திருமணத்தை முடித்துவிடுவதிலும் உறுதியாகவே இருந்தான்.
யாழினிக்கு ராதா சொன்ன விதமும், ரஜீவன் நடந்துகொண்ட முறையிலும் மனவருத்தம்தான். அதற்காக இந்தப் பிரச்னையைப் பிடித்துக்கொண்டு தொங்குவதிலும் அர்த்தம் இல்லை என்றும் விளங்கியது.
ராதா வேறு, ‘சொறி அண்ணி, அண்டைக்குக் கொஞ்சம் யோசிக்காம பட்டெண்டு கதைச்சிட்டன். குறை நினைக்காதீங்கோ. நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது.’ என்று நயமாக மன்னிப்பைக் கேட்டு, அவளின் மனச்சிணுக்கத்தைத் தீர்த்து வைத்திருந்தாள்.
ஆக, நாட்கள் சலசலப்பு இல்லாமல் நகர்ந்துகொண்டிருந்தன. செல்லமுத்து நகைமாடத்துக்குப் போய்வரத் தொடங்கியிருந்தான் மோகனன். ஆனாலும் அடுத்து என்ன என்கிற கேள்வி அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அவனும் எல்லோரும் படிக்கிறார்கள் என்று பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன்தான். அதற்குப் பிறகு அவன் போய் இன்னொருவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதா என்கிற கேள்வியோடு அது முடிந்துபோயிருந்தது.
ஆனால், சவுதியில் அதுதான் கைகொடுத்தது. கற்ற கல்விக்கான போதுமான அனுபவத்தை அங்கேதான் பெற்றுக்கொண்டிருந்தான்.
கௌசிகனின் வீடு கட்டிக்கொண்டு இருந்தபோது வந்து பார்த்த நேரம், தன் கைவண்ணத்தில் அதை இன்னும் மெருகேற்றிவிட அவன் கைகள் துருதுருத்தது உண்மை. இங்கே இருக்கப்போவதில்லை என்கிற முடிவு அதைப் பற்றி மேலே யோசிக்க விடவில்லை.
அதுவே, இனி இங்கே என்ன செய்வது என்று சிந்திக்கையில், இப்போதெல்லாம் புதிது புதிதாக முளைக்க ஆரம்பித்திருந்த கட்டடங்களும் அவனுடைய ஆர்வமும் அனுபவமும் சேர்ந்து, அதே கட்டுமானத்தையே தொழிலாக்கினால் என்ன என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டிருந்தன.
முதல் வேலையாக இரண்டாவது கையாக(second hand) ஒரு காரினை தன் சொந்தக் காசில் வாங்கிக்கொண்டான். அதை அறிந்த கௌசிகனுக்கு கோபம்தான் வந்தது.
“அண்டைக்கே, ‘புது கார் ஓடர் போடவா’ எண்டு கேட்டனான் எல்லாடா? என்னத்துக்குப் பழைய காரை வாங்கி இருக்கிறாய்? வாங்க முதல் ஒரு வார்த்த சொல்லமாட்டியா?” என்று அதட்டினான்.
“சொன்னா விடமாட்டீங்க எண்டுதான் சொல்லேல்லை அண்ணா.” என்று சிரித்துவிட்டு, “இப்போதைக்கு இது காணும். புதுக் காருக்கு என்ன அவசரம்? முதல் அதை வாங்கி நான் என்ன செய்யப்போறன்?” என்று கேட்டான் மோகனன்.
கௌசிகனுக்கு அதைச் சாதாரணமாக எடுக்க முடியவில்லை. “உனக்கு என்னடா பிரச்சினை? இல்ல என்னத்த மனதுக்க வச்சுக்கொண்டு இப்பிடியெல்லாம் நடக்கிறாய்?” என்று அவன் உள்ளத்தையே அலசுகிற கூர் பார்வையுடன் கேட்டான்.
“அப்பிடி நான் என்னத்த அண்ணா மனதுக்க வச்சிருக்க?”
கேள்விக்கு மீண்டும் ஒரு கேள்வியையே பதிலாக்கினான் அவன். ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான் கௌசிகன்.
சரியாகப் பதினெட்டாவது வயதில் டிரைவிங் பழகி, லைசென்ஸ் எடுத்து, அப்போதே புத்தம் புது கார்தான் வேண்டும் என்று வாங்கியவன்.
வாங்கிய மூன்றாவது மாதமே அதை வேகமாக ஓட்டி, மரத்தோடு மோதி, சுக்கு நூறாக்கி, அதன்பிறகும் புத்தம்புது காரில் மட்டும்தான் ஏறுவேன் என்று அடம் பிடித்து, இரண்டாவது முறையும் வாங்கியவன்.
இன்றைக்குப் பழசு வாங்கிக்கொண்டு வந்து நிக்கிறான்.
“இந்தச் சொத்துப்பத்தில இருந்து ஒரு ரூபாயும் தொடக் கூடாது எண்டு நினைக்கிறியோ?” நிதானமாகக் கேட்டான் கௌசிகன்.
ஒன்றும் சொல்லாமல் மெலிதாகச் சிரித்தான் மோகனன். அதில் கௌசிகனின் பார்வை கூர்மையாயிற்று.
அதைக் கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல், “அப்பிடியெல்லாம் இல்ல அண்ணா. கன்ஸ்ரக்க்ஷன் ஆரம்பிப்பமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன். அதுக்கே பெரிய தொகை நீங்களும் அப்பாவும்தான் கடனா தரவேண்டி வரும். பிறகு என்னத்துக்குச் சும்மா ஒரு காருக்காக காச வீணாக்குவான் எண்டு நினைச்சன்.” என்றான்.
கடனா? இதைவிட வேறென்ன வேண்டும் அவன் மனத்தைச் சொல்ல? ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தான்.
அவனுக்குள் இருக்கிற காயங்களையும் கோபங்களையும் வெளியே தெரிகிற இந்த முரட்டுத் தேகத்தைக் கொண்டு மறைக்கிறானோ? மனத்தைப் பெரும் பாரம் ஒன்று அழுத்தியது.
ஆனால், திரும்பவும் பாசத்தைக் காட்டுகிறேன் என்று எழ நினைக்கிறவனை முடக்க அவன் தயாராயில்லை. இந்த ரோசமும் கோபமும்தானே ஒவ்வொரு மனிதனையும் நிமிர வைப்பவை.
அண்ணா தன்னைக் கண்டுகொண்டார் என்று மோகனனுக்கும் விளங்காமல் இல்லை. ஆனால், இதில் மாற்றுவதற்கோ மாறுவதற்கோ எதுவும் இல்லை என்பதில் அமைதியாகவே இருந்தான்.
அவன் பார்வையை ஒரு கட்டத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல், “நான் வடிவா இருக்கிறனா அண்ணா? வச்ச கண் எடுக்காம பாக்கிறீங்க?” என்றான் இளஞ்சிரிப்புடன்.
கௌசிகனின் இறுக்கமும் சற்றே இளகியது. அவன் நோக்கமும் புரிந்தது.
“நீ முதல் அடிக்கடி வீட்ட வந்திட்டுப் போ. பள்ளிக்கூடத்தில் எக்ஸாம் நடக்கிறபடியா ரமிக்கு நேரம் இல்ல. எனக்கு எப்பவும் நேரம் கிடைக்கிறேல்ல. அங்க மிதுனா உன்னப் பாக்க வரப்போறன் எண்டு ஒரே கேட்டுக்கொண்டு இருக்கிறா.” என்றான் அவன்.
“இந்தக் கார் வாங்கிற அலுவலா அலஞ்சதில நேரம் இல்லாம போச்சு. நாளைக்கு வாறன்.” என்றவனிடம்,
“இப்ப இலங்கையில எந்தப் பக்கம் திரும்பினாலும் புதுப்புது கட்டடங்கள்தான் எழும்பிக்கொண்டு இருக்கு. நீயும் படிச்சிருக்கிறாய். வேலை பாத்திருக்கிறாய். அனுபவம் இருக்கு. தரமும், வேலையில நேர்மையும் இருந்தா பாத்துக்கொண்டு இருக்க மேல வந்திடலாம் மோகனன். என்ன ஹெல்ப் எண்டாலும் அப்பாவும் நானும் செய்வோம். காசைப் பற்றி யோசிக்காத. ஏதாவது பிராஜெக்ட் எடுத்துத் தரோணும் எண்டாலும் சொல்லு. முதல் கொஞ்சம் சின்னனா ஆரம்பி. அதுக்கு முதல், வேலைக்கு ஆட்களை எப்பிடி எங்க பிடிக்கலாம் எண்டு பார். பொருட்களை எங்க எப்பிடி வாங்கலாம் எண்டு டீடெயில்ஸ் எடு. இப்ப கட்டுப்பட்டுக்கொண்டு இருக்கிற கட்டடங்களைச் சும்மா போய்ப் பாரு. எனக்கு மிருதுளா ஹோட்டல் கட்டித் தந்த கன்ஸ்ரக்க்ஷன் வேற. வீடு கட்டினது வேற ஆக்கள். ரெண்டு இடமும் எனக்கு நல்ல திருப்தி. ஒரு நாளைக்கு வா. ரெண்டு இடத்திலயும் போய்க் கதைப்பம். கொஞ்ச நாளைக்கு அவேயோட நிண்டு பார். வீட்டில இருந்து பிளான் பண்ணுறது வேற. பீல்டுல இறங்கி வேலை பாக்கிறது வேற. இறங்கி வேலையப் பார். மிச்சம் எல்லாம் தானா நடக்கும்.” என்று தோளில் தட்டி ஊக்கமும் உற்சாகமும் தந்த தமையனை, நெகிழ்வுடன் கட்டிக்கொண்டான்.


