“தேங்க்ஸ் அண்ணா. சும்மா ஒரு ஐடியாதான் இருந்தது. நீங்க முடிவே செய்ய வச்சிட்டிங்க. இனி வேலையில இறங்க வேண்டியதுதான்.” என்றான் உற்சாகமாக.
“போடா டேய்! போய் வேலையப் பாரு. வந்திட்டான் தேங்க்ஸ் சொல்லிக்கொண்டு!” என்றுவிட்டுப் போனான் கௌசிகன்.
அவன் சொன்னதுபோல, கிடைக்கிற நேரத்திலெல்லாம் ஊர் ஊராக வட்டமடித்தான் மோகனன். எங்காவது ஒரு கட்டடம் வளர்ந்துகொண்டிருந்தால் அவர்களிடம் சென்று பேசினான்.
தானும் இதே தொழில் தொடங்கப்போவதைச் சொல்லாமல், தான் கட்டப்போவதாகச் சொல்லி விலை விபரங்கள், பொருட்கள் கொள்வனவு செய்யவது எப்படி, வேலையாட்களை எப்படி, எங்கிருந்து எடுப்பார்கள் என்கிற விபரங்களை எல்லாம் திரட்டத் தொடங்கினான்.
ஒருபக்கம் அது நடந்துகொண்டிருந்தாலும், தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கையில்தான், கௌசிகனை எங்கே எப்படிச் சந்திக்கலாம் என்று கேட்டுக்கொண்டு அவனிடம் வந்து நின்றார், அவர்களின் நகைக்கடையில் வேலை பார்க்கும் சுந்தரம்.
ஏன் என்று விசாரித்தபொழுது, “மகளுக்குக் கலியாணம் தம்பி. ஒரு வீடு காணியோட இருக்கு. செலவுக்கும் சீதனத்துக்கும் அத விப்பம் எண்டு பாக்கிறன். கௌசிகன் தம்பிட்ட கேட்டா கொஞ்சம் வேகமா முடிச்சுத் தருவார். அதுதான்…” என்று, தன் தேவையைச் சொன்னார் அவர்.
“அத வித்துப்போட்டு இருக்க வீடில்லாம நீங்க என்ன செய்யப்போறீங்க?”
இப்படி உள்ளார்ந்த அக்கறையோடு அவன் விசாரிப்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கௌசிகனின் மாற்றத்தைப் பக்கத்தில் இருந்தே பார்த்தவர். இவன் அப்படியல்லன். அன்றைய இவனுடைய முகமும் நல்லதன்று.
சவுதிக்குப் போனபிறகு இவனைப் பற்றி அரசல் புரசலாக அறிந்தவையும் மிக மோசமானவை. வந்த பிறகும் அவன் தோற்றம் வேறு பயமுறுத்தும். அதனால் எப்போதும் தள்ளியேதான் நிற்பார். இன்று அவனுடைய கேள்வி அவன் மீதான நன்மதிப்பை உருவாக்கிவிட்டது.
“இப்ப நாங்க இருக்கிறதும் சொந்த வீடுதான் தம்பி. விக்க நினைக்கிறது மனுசின்ர பக்கத்தால கிடைச்சது. ஒரே ஒரு மகள்தான். எங்களுக்குப் பிறகு நாங்க இருக்கிற வீடு அவாவுக்குத்தான். அதுதான் இத வித்துக் காசா குடுத்தா, அவா தன்ர வாழ்க்கைக்கு ஏதாவது செய்வாதானே.” என்று சொன்னார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு என்ன தோன்றியதோ, “வாங்க, போய்ப் பாத்துக்கொண்டு வருவம்.” என்று அவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
இவன் என்ன அவரையும் தன்னுடனேயே அழைக்கிறானா? சுந்தரம் மயங்கி விழாத குறைதான். “தம்பி, நான் என்ர பைக்ல முன்னால போறன். நீங்க பின்னால வாங்கோ, என்ன.” என்றார் எதையும் காட்டிக்கொள்ளாமல்.
“என்னத்துக்கு வீணா ரெண்டு வாகனம்? என்னோடயே வாங்க.”
சுந்தரத்துக்கு உண்மையிலேயே பெரும் அதிர்ச்சிதான். காருக்கே வலிக்காமல் ஏறி அமர்ந்துகொண்டார். நடப்பதை நம்பவே முடியாமல் தங்களின் வீடு இருக்குமிடத்துக்கு அவனை அழைத்துச் சென்று காட்டினார்.
அந்த வீடு ஊருக்குள்ளே இருந்தபோதும், விசாலமான காணியில் மூன்று அறைகளோடு இருந்தது. உடைந்த நிலைகள், பழுதடைந்துபோயிருந்த கதவுகள், சரிவரப் பூட்டிக்கொள்ள முடியாத ஜன்னல்கள். நிலம் கூட ஆங்காங்கே உடைந்திருந்தது. ஆனால், தென்னை, வாழை, பலா என்று கிணற்றுடன் நல்ல சோலையாகக் காட்சி தந்தது.
அவரிடம் விலையையும் கேட்டுக்கொண்டான். ஒரு காணியுடன் சேர்ந்த வீட்டுக்கு அவர் சொன்ன தொகை பெறுமா, இல்லையா என்று கணிக்கும் அளவுக்கு, அவனிடம் இருந்த அனுபவங்கள் போதவில்லை.
“ஒரு ரெண்டுநாள் டைம் தாங்க. நான் அண்ணாவோடயும் கதைச்சிப்போட்டு என்ன எண்டு சொல்லுறன்.” அந்தக் காணியையும் வீட்டையும் வீடியோ எடுத்துக்கொண்டான். சேதம் அடைந்தவற்றை மிகத் தெளிவான புகைப்படங்களாக எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
அந்த ஊரையும் ஒருமுறை வட்டமடித்து, எந்த அமைவிடத்தில் அந்த வீடு இருக்கிறது என்பதையும் குறித்துக்கொண்டான்.
எதற்காக இதையெல்லாம் செய்தான் என்று கேட்டால் அதற்கான பதில் அவனிடம் இல்லை. ‘அண்ணாவோட கதைச்சா ஏதாவது ஐடியா கிடைக்கும்…’ அவரைக் கொண்டுவந்து கடையில் விட்டுவிட்டு, ஹோட்டல் மிருதுளாவில் கௌசிகன் இருப்பதை அறிந்துகொண்டு அவனிடம் சென்றான்.
“முதலும் ஒருக்கா என்னட்டச் சொன்னவர் தானடா. வாங்குறதுக்கு ஆக்களும் இருக்குத்தான். ஆனா, அந்த இடத்துக்கு அவர் சொல்லுற தொகை கூடமாதிரி இருக்கே…” தன் தாடையை யோசனையாகத் தடவியபடி சொன்னான் கௌசிகன்.
“எவ்வளவு பெறும் எண்டு நினைக்கிறீங்க, அண்ணா?”
“அவர் சொன்னதுல இருந்து ஒரு அஞ்சு குறைக்கலாம்.”
அதைத் தன் மனத்திலேயே குறித்துக்கொண்டு, “வெளியிலயும் விசாரிச்சுப் பாக்கப்போறன் அண்ணா. அந்த ஊர்லையே சும்மா விசாரிச்சாலும் இப்ப எவ்வளவு போகுது எண்டு அறியலாம். உங்கட வீடு கட்டித் தந்த ஆளோடயும் இப்ப வரேக்க கதைச்சனான். நாளைக்கு வந்து பாத்துச் சொல்லுறன் எண்டு சொன்னவர்.” என்று சொன்னவனை, ‘நீ ஏன் இதையெல்லாம் விசாரிக்கிறாய்?’ என்கிற கேள்வியோடு ஏறிட்டான் கௌசிகன்.
“சும்மா ஒரு பிளான்தான் அண்ணா. நானே வாங்கிப்போட்டு, அந்த வீட்டைத் திருத்தி வித்தா என்ன எண்டு நினைச்சன். சுவர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பூச்சுப் பூசி, பெயிண்ட் அடிக்க வேணும். நிலத்துக்கு டைல்ஸ் போடலாம். அட்டாச் பாத்ரூம் வீட்டோட கட்டலாம். ஜன்னல், கதவு, நிலை எல்லாம் பிடுங்கிப்போட்டுப் புதுசு போடோணும். கிணறு நல்லாருக்கு. ஆனா ஒருக்கா இறைச்சு விடோணும். பைப் லைனிங் செய்து தண்ணிய வீடு வரைக்கும் கொண்டுவரலாம். சுத்திவர மதில் எழுப்பி, பெரிய கேட் போடலாம். ரெண்டு வாகனம் நிப்பாட்டினாலும் இடம் இருக்கிற அளவுக்கு முன்னுக்கு பெரிய முத்தம் இருக்கு. தேவை எண்டு சொன்னா கராஜ் அடிக்கலாம். இதையெல்லாம் செய்தா புதுவீடா மாறும்.” என்று கிடுகிடு என்று அடுக்கியவனை மலைத்துப்போய்ப் பார்த்திருந்தான் கௌசிகன்.
“ஊருக்குள்ள கொஞ்சம் உள்ளுக்குள்ளயா எண்டாலும் இப்ப அந்த இடத்திலேயே புதுப்புது வீடுகள் எழும்பிக்கொண்டுதான் இருக்கு. அதே ரோட்டுல ரெண்டு கடை வேற கட்டிக்கொண்டு இருக்கிறாங்கள். சோ இன்னும் அஞ்சு வருசத்தில அந்த இடத்தின்ர பெறுமதியே வேற. லாபம் கிடைக்கும் எண்டு நினைக்கிறன். நாளைக்கு அதைப் பற்றியும் கதைக்கப் போறன். தேவையான சாமான்களைக் கொழும்பில இருந்து நாங்களே இறக்கினா இன்னும் லாபம் கிடைக்கும். எல்லாமே ஒரு மேலோட்டமான பிளான்தான். எனக்கும் ஆரம்பமே புதுசா ஒண்டைக் கட்டுறதை விட இப்பிடி ஆரம்பிச்சா நல்லம் எண்டு நினைச்சன். கட்டின பிறகு யுடியூப்ல வீடியோ எடுத்துப் போடலாம். பேஸ்புக், இன்ஸ்டா எண்டு. நான் நினைக்கிறது சரியா இருந்தா, நடக்கிறதப் பாக்கிற அயலட்டை சனம் மூலம் கதை பரவிக் கட்டிமுடிக்க முதலே அந்த வீடு விலைபோகும்.” என்று தன் திட்டத்தை அவன் சொன்னபோது புருவத்தை உயர்த்தினான் கௌசிகன்.
“என்ன அண்ணா? ஒண்டுமே சொல்லாம இருக்கிறீங்க?”
“நான் இத யோசிக்க இல்ல. நீ கெட்டிக்காரன். பிழைச்சிடுவாய். நீயே வாங்கு. இந்தக் காலத்தில வீடுகளைச் சனம் நான் நீ எண்டு அடிபட்டு வாங்கும். வெளிநாட்டுக்காரர் இருக்கிற வரைக்கும் நாங்க பயப்படத் தேவையில்லை. இல்லாட்டியும் அது எங்களுக்கு ஒரு சொத்தா மிஞ்சும்தானே.” என்று அண்ணனும் தம்பியும் உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருக்கையில் குறுந்தகவல் ஒன்று கௌசிகனின் கைப்பேசிக்கு வந்து விழுந்தது.
“இவள் ஏன் எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறாள்?” புருவம் சுருங்க எடுத்துப் பார்த்தான் கௌசிகன்.
“ஆர் அண்ணா?”
“ராதா.”
‘சிட்டியா? அவளுக்கு என்ன?’ என்று சிந்தனை ஓடியது மோகனனுக்கு.


